Saturday, December 3, 2016

ஊனமுற்றோருக்கான ஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து குறைத்திடாதே


ஊனமுற்றோருக்கான ஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து குறைத்திடாதே
தில்லியில் இன்று ஊனமுற்றோர்க்கான அமைப்புகளின் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டம்
புதுதில்லி, டிச. 3-
ஊனமுற்றோர் தினமான இன்று (சனிக்கிழமையன்று), ஊனமுற்றோர்க்கான பல்வேறு அமைப்புகளின் சார்பில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டம் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்றது. ஊனமுற்றோர் உரிமைகளுக்கான சட்டமுன்வடிவில் ஊனமுற்றோருக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பது 4 சதவீதம் என்று குறைத்திடக் கூடாது என்பதுடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு விதங்களில் ஊனமுற்றோர்கள் இப்போது ஸ்தாபன ரீதியாகத் திரண்டு, தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன் தாக்கத்தின் காரணமாக மத்திய அரசாங்கம் 2014ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் குறித்த சட்டமுன்வடிவைக் கொண்டு வந்தது. ஆனால் இதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை ஊனமுற்றோர் அமைப்புகள் சுட்டிக்காட்டி கடந்த ஈராண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதன் காரணமாக இப்போது அரசு இந்தச் சட்டமுன்வடிவில் 197 திருத்தங்களைக் கொண்டுவந்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்காக, சமர்ப்பித்துள்ளது. ஆயினும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் காரணமாக எழுந்துள்ள பிரச்சனை காரணமாக மாநிலங்களவை இன்னமும் தன் இயல்பான நடவடிக்கைகளைத் தொடரமுடியவில்லை. இந்தத் தருணத்தில் இப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டமுன்வடிவினைக் கண்ணுற்ற சமயத்தில் இதற்குமுன் ஊனமுற்றோருக்கு 5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்திட வேண்டும் என்பது 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதும், மேலும் வேலைநியமனம் செய்திடுவோர் வேலைக்குச் சேரும் நபரின் ஊனம் தங்கள் நிறுவனத்தின் வேலைக்குக் குந்தகம் விளைவிக்காது என்று திருப்தி கொள்ளவில்லையென்றால் அவரை வேலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பது போன்று ஒரு விலக்கக் கூறும் (proviso) இருப்பதையும் ஊனமுற்ற அமைப்புகள் கண்டுள்ளன. எனவே இந்த இரண்டும் கூடாது என்றும், முன்பு இருந்தது போலவே ஊனமுற்றோர் அனைவருக்கும் 5 சதவீதம் வேலைவாய்ப்பிலும், உயர் கல்வி நிலையங்களில் சேர்வதற்கு ஒதுக்கிட வேண்டும் என்றும், வேலையளிப்பவருக்குத் தந்துள்ள இத்தகைய சலுகையை ரத்து செய்திட வேண்டும் என்றும், இதனை அனுமதித்தால் இதனைப் பயன்படுத்திக்கொண்டு எந்தவொரு ஊனமுற்றோரும் வேலைக்குச் செல்ல முடியாது என்று தாங்கள் கருதுவதாகவும் ஊனமுற்ற அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் கருதுகிறார்கள்.
எனவே, நிறைவேற்றப்படவிருக்கும் சட்டமுன்வடிவில் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீடு 5 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதையும், வேலையளிப்பவர்களுக்குக் கொடுத்துள்ள விருப்புரிமையை ரத்து செய்திட வேண்டும் என்றும்  வலியுறுத்தி, சனிக்கிழமையன்று ஊனமுற்றோர் அமைப்புகளின் சார்பில் புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்ட நடைபெற்றது.
இப்பேரணி/ஆர்ப்பாட்டத்தில் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையைச் சேர்ந்த முரளிதரன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் பா. ஜான்ஸி ராணி உட்பட பலர் உரையாற்றினார்கள்.
(ந.நி.)

No comments: