பிஎஸ்என்எல் நிறுவனத்தை தகர்த்திட மத்திய அரசின் இழிமுயற்சிகளைக் கண்டித்து
பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்
புதுதில்லி, டிச. 2-
மத்திய அரசு, தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் மொபைல் டவர்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட மேற்கொண்டுள்ள இழிமுயற்சிகளை கண்டிக்கும் விதத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின்கீழ் இயங்கிடும் அலுவலர்களும், ஊழியர்களும் வரும் 2016 டிசம்பர் 15 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. அபிமன்யு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் கூறப்பட்டிருப்பதாவது:
“2016 டிசம்பர் 15 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் ஒட்டுமொத்த ஊழியர்களும், அலுவலர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளார்கள். அரசாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தகர்த்திட மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 65 ஆயிரம் மொபைல் டவர்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக ஒரு குறிப்பினை அனுப்பி இருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கையை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் செயல்படும் அனைத்து ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்களும் எதிர்த்துள்ளன.
பிஎஸ்என்எல் நிறுவனம்தான் பொதுத்துறை நிறுவனத்தில் முழுக்க முழுக்க 100 சதவீதம் அரசு நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விஎஸ்என்எல் ஏற்கனவே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. எம்டிஎன்எல் நிறுவனத்தில் 46.5 சதவீதப் பங்குகள் ஏற்கனவே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இப்போது அதேபோன்று பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் தனியாரிடம் வாரை வார்த்திட அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. மொபைல் டவர்களுக்கு என்று ஒரு துணை அமைப்பு ஏற்படுத்த இருப்பது, பின்னர் அதனைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான சூழ்ச்சியே தவிர வேறல்ல.
இதுதொடர்பாக அரசாங்கத்தின் இனிப்பு கலந்த வார்த்தைகளைக் கேட்க ஊழியர்கள் தயாரில்லை. பொதுத்துறை நிறுவனங்களை எப்படி எப்படியெல்லாம் தனியாரிடம் தாரை வார்த்திடலாம் என்பதற்காக நிட்டி ஆயோக் ஒரு வரைவினை தயார்செய்து அரசாங்கத்திற்குத் தந்திருப்பது ஊரறிந்த ரகசியம். இன்றைய நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பொறுத்தவரை மொபைல் டவர்கள் அதன் உயிர்நாடியாகும். அதனை பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து பறித்துவிட்டால், பின் பிஎஸ்என்எல் இயற்கையாகவே மரணித்துவிடும். எனவே, அரசின் இந்நடவடிக்கையை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்துத் தொழிற் சங்கங்களும் எதிர்த்திடத் தீர்மானித்திருக்கின்றன.
எனவேதான் அரசின் இந்த சூழ்ச்சியான நடவடிக்கையை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்திட அனைத்து சங்கங்களும் தீர்மானித்துள்ளன.”
இவ்வாறு பி.அபிமன்யு அறிக்கையில் கூறியுள்ளார்.
(ந.நி.)
“
1 comment:
all staffs are fit for nothing , their services are utter worse, the salary they get is waste , sack them and privatise BSNL
Post a Comment