Saturday, December 10, 2016

வீரம் விளைந்தது




(‘பாவெல் இடைவிடாமல் உழைத்தான். அவன் நிம்மதியாக வாழ்வதில் நாட்டம் கொண்டவன் அல்ல; ஆர அமரக்கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்திருப்பதையும், மணி பத்து அடித்தவுடன் நித்திரையின் அணைப்பை நாடுவதையும் அவன் விரும்பியவனல்ல. தானோ, பிறரோ, ஒரு வினாடியைக் கூட விரயம் செய்யக்கூடாது என்பது அவன் கருத்து’’)

‘‘மனிதனது மதிக்க முடியாத உடைமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலம் எல்லாம் குறிக்கோள் இல்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும்.
உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக, மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக, நான் என் வாழ்வு முழுவதையும், சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமை பெறும் வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
’’நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி எழுதிய ‘‘வீரம் விளைந்தது’’ நாவலின் கதாநாயகன் பாவல் கர்ச்சாகின் சிந்தனையோட்டம் இது. இந்த நாவல் அநேகமாக நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின் சுய வரலாறுதான். அதனை ஒரு நாவலாக அவர் வடித்துத் தந்திருப்பார். அதுவும் எப்போது? தனக்குக் கண் தெரியாமல் போன பிறகு, பக்கத்து வீட்டிலிருந்த பெண்ணின் உதவியுடன் அக்கதையினை எழுதியிருப்பார்.இந்த நாவல் புரட்சி இயக்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கு மட்டுமல்ல, புரட்சி இயக்கம் குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கும் ஓர் அருமையான நாவலாகும்.இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே வாசகர்களின் குணநலனின் தன்மைக்கேற்ப அவர்களுடன் ஒன்றிவிடுவார்கள் என்பது உறுதி.
தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் எப்படித் திருக்குறளின் பாதிப்பு இருக்குமோ அதேபோன்று, சோவியத் இலக்கியங்கள் அனைத்திலும், வீரம் விளைந்தது நாவலின் பாதிப்பு நிச்சயமாக இருக்கும்.உண்மை மனிதனின் கதை நாவலின் கதாநாயகன், செஞ்சேனையில் விமானப் படைவீரனாக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தவன், போரில் எதிரிகளின் விமானத்தால் ஏற்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டு தன் இரு கால்களையும் இழந்துவிடுவான். அவனுக்குத் தைரியம் ஊட்டுவதற்கு அக்கதையில் வரும் மேஜர் வீரம் விளைந்தது நாவலின் பாவல் கர்ச்சாகினைத்தான் உதாரணம் காட்டுவார்.
அதிகாலையின் அமைதியின் வரும் மங்கையர்களில் ஒருத்தி பயந்த சுபாவத்துடன் இருப்பாள். அவளுக்கு தைரியம் ஊட்டுவதற்காக அக்கதையின் நாயகன், அவளிடம் பாவல் கர்ச்சாகினைத்தான் உதாரணம் காட்டுவான்.இப்படி புரட்சி இயக்கத்தில் ஈடுபடும் ஊழியர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், அவர்களுக்கு ஓர் உந்து சக்தியாக இந்த நாவல் இருந்தது, இருந்திடும்.ஒரு புரட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக பாவெல் வாழ்ந்தான்.
‘‘பாவெல் இடைவிடாமல் உழைத்தான். அவன் நிம்மதியாக வாழ்வதில் நாட்டம் கொண்டவன் அல்ல; ஆர அமரக்கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்திருப்பதையும், மணி பத்து அடித்தவுடன் நித்திரையின் அணைப்பை நாடுவதையும் அவன் விரும்பியவனல்ல. தானோ, பிறரோ, ஒரு வினாடியைக் கூட விரயம் செய்யக்கூடாது என்பது அவன் கருத்து.
’’How the steel was tempered?” என்பது இதன் ஆங்கில மொழியாக்கத்தின் பெயராகும்.
இருப்புப்பாதை அமைத்துக் கொண்டிருந்த பாவெல் போன்று அர்ப்பணிப்பு மிகுந்த இளம் தோழர்களைக் குறித்த சொற்றொடர்தான் அது. ‘‘தோக்கரெவ், இந்த இளைஞர்கள் பத்தரை மாற்றுத் தங்கமென்று நீங்கள் கூறியது முற்றிலும் உண்மைதான். இங்குதான் எஃகு பதம் பெறுகிறது.!’’
அதேபோல நாவலில் ஒரு பகுதியில் ஒரு தொழிற்சாலையில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவு செய்திருப்பார். அந்த தொழிற்சாலையில் கட்சியில், வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களும் வேலை செய்வார்கள், அல்லாதவர்களும் வேலை செய்வார்கள்.
கட்சி, வாலிபர் சங்க உறுப்பினர்கள் இதர உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக இல்லாமல், அசட்டையாக வேலைக்கு வருவது, பொருள்களைக் கையாள்வது, உடைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். இதனைக் கண்டித்து பாவெல் ஆற்றும் உரையானது அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவைகளாகும்.
‘‘…. நான் இங்கு உணர்ச்சியூட்டும் பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. ஆனால் இந்த அஜாக்கிரதைக்கும் உதாசீனத்துக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும். இப்பொழுது வேலை செய்வதைவிடக் கவனமாகவும் கூடுதலாகவும் முதலாளிக்கு வேலை செய்ததாகப் பழைய தொழிலாளர்கள் ஒளிவுமறைவு இல்லாமல் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இப்பொழுது, நாமே எஜமானர்களாக இருக்கிறோம். எனவே மோசமாக வேலை செய்வதற்கு நியாயமே இல்லை.பீதின் அல்லது வேறொரு தொழிலாளியை மட்டும் குற்றம் கூறுவதில் பயனில்லை. நாம் அனைவருமே குற்றவாளிகள்தான். ஏனென்றால் இந்தக் கேட்டை முறையாக எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக சில சந்தர்ப்பங்களில் நாமே ஏதாவது ஒரு நொண்டிக் காரணம் கூறி, பீதின் போன்றவர்களை ஆதரித்து வாதாடுகிறோம்.’’
இதேபோல் நாவலைப் படிப்பவர் எவராக இருந்தாலும் அவர்கள் இன்புறுவதற்கும் அதே சமயத்தில் தங்களைச் சரிப்படுத்திக் கொள்வதற்கும், தங்களை உருக்கு போன்று பதப்படுத்திக் கொள்வதற்கும் இந்நாவல் துணை நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.இந்த நாவலில் எனக்குப் பிடித்தமான வரிகளில் முதன்மையான ஒன்றை இக்கட்டுரையின் முதல் பத்தியில் தந்துவிட்டேன். மற்றொன்று இயக்கத்தில் பலர் தன் உடல்நலம் குறித்து சிறிதும் கவலைப்படாது இயக்கத்திற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் குறித்து நி. ஒஸ்திரோவ்ஸ்க்கிய எழுதியுள்ள வரிகளுடன் இதனை நிறைவுசெய்கிறேன்.
‘‘… ஆனால் சில சமயங்களில் நாம் நமது சக்தியை விரயம் செய்யும் குற்றத்தைப் புரிகிறோம். பயனுறுதி யின்மையும் பொறுப்பற்ற போக்கும் எப்படி வீரத்தின் லட்சணங்களாக இருக்க முடியாதோ, அதேபோல சக்தியை வீண்செய்வதும் வீரலட்சணமாக இருக்க முடியாது. என் தேகாரோக்கியத்தைப் பற்றியே நான் அஜாக்கிரதையாக இருந்தேன்; அந்த முட்டாள்தனத்தை எண்ணி நான் என்னைக் கடிந்து கொள்கிறேன். அந்த அஜாக்கிரதைப் போக்கில் ஒரு வீரமும் இல்லை என்பதை இப்பொழுது உணர்கிறேன். அந்தக் கண்மூடித்தனம் இருக்காதிருந்தால், நான் மேலும் சில ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்க முடியும். வேறுவிதமாகச் சொல்வதென்றால், இடதுசாரி வாதம் என்ற இளம்பருவ வியாதி, நம்முன் உள்ள பேராபத்துக்களில் ஒன்று.’’
ச. வீரமணி



No comments: