பதினேழு ஆண்டுகளுக்கு முன் ஹூகோ
சாவேஸால் துவக்கி வைக்கப்பட்ட பொலிவேரியன் புரட்சிகர நடவடிக்கைகள் இப்போது முற்றுகைக்கு
உள்ளாகி இருக்கிறது. நிகோலாஸ் மதுரோ தலைமையில் நடைபெற்று வரும் இடதுசாரிக் கொள்கைகளை
உயர்த்திப்பிடிக்கும் அரசாங்கத்தின்மீது வலதுசாரிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பது
இப்போது லத்தீன் அமெரிக்காவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. 2016களின் முற்பகுதியில்
இடதுசாரிகளுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. அர்ஜெண்டினாவில் வலதுசாரி ஒருவர் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டமை, பொலிவியாவில் ஆட்சியின் காலத்தை நீட்டித்துக் கொள்ள நடைபெற்ற
வாக்கெடுப்பில் அதிபர் இவோ மொரேல்ஸ் தோல்வி அடைந்தமை, பிரேசில் மேல் சபை (செனட்)யில்
வலதுசாரி எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிபர்
டில்மா ரௌசெப் இடை நீக்கம் செய்யப்பட்டமை - ஆகிய அனைத்தும் இவ்வாறு வலதுசாரி திருப்பத்தின்
பகுதிகளாக அமைந்திருக்கின்றன.
இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும்
இடையே நடைபெறும் போராட்டத்தின் புவிமையமாக வெனிசுலா திகழ்கிறது. 2015 டிசம்பரில் தேசிய
சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியும் அதனுடன் இணைந்து போட்டியிட்ட
இடதுசாரிக் கூட்டணியினரும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வலதுசாரி சக்திகளும் மற்றும்
அமெரிக்காவின் அரவணைப்புடன் செயல்படும் முதலாளித்துவமும் தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கி
இருக்கின்றன. வெனிசுலாவின் பொருளாதாரம் ஆழமான நெருக்கடியில் இருக்கிறது. சர்வதேச சந்தையில்
எண்ணெய் விலைகளின் வீழ்ச்சி காரணமாக, வெனிசுலா அரசாங்கத்திற்கு எண்ணெய் மூலம் கிடைத்து
வந்த பிரதான வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
பொலிவேரியன் அரசாங்கம், கல்வி,
சுகாதாரப் பாதுகாப்பு, வீட்டுவசதி, உணவு மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றிற்கு தேசிய அளவிலான
திட்டங்கள் மூலமாக மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டிருந்தது. கடந்த பதினைந்து ஆண்டு
காலத்தில், வெனிசுலா மக்களுக்கு உணவு, கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகிய அடிப்படை
வசதிகளை அளிப்பதிலும், வறுமையைக்குறைப்பதிலும் பெரிய அளவிற்கு முன்னேற்றங்களைக் கண்டிருந்தது.
தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார
நெருக்கடியானது மக்கள் நலத் திட்டங்களுக்கு அரசு அளித்து வந்த உதவிகளைப் பாதித்துள்ளது.
இதனுடன் முதலாளித்துவ ஏகபோகங்களும், ஏகாதிபத்தியமும் ஒரு பொருளாதார யுத்தத்தையே நடத்திக்
கொண்டிருக்கின்றன. அங்கே ஏற்பட்டுள்ள மின் நெருக்கடி அடிக்கடி மின் வெட்டிற்குக் காரணமாகிறது.
இந்த சக்திகளின் பொருளாதார நாசவேலைகளின் காரணமாக வெனிசுலா மக்கள் கடும் உணவு மற்றும்
அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறைக்கு இலக்காகி இருக்கிறார்கள். பதுக்கல், கறுப்புச்
சந்தை மற்றும் செயற்கையான விலை உயர்வுகள் ஆகியவை மக்களைத் துன்பத்தில் ஆழ்த்த வேண்டும்
என்பதற்காகவும், அரசாங்கத்தின் மீதும் அது பின்பற்றும் மாற்று அரசியல் பாதையின் மீதும்
மக்களுக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் வேண்டும் என்றே திணிக்கப்பட்டிருக்கின்றன.
நெருக்கடியைப் பூதாகரமாக்கிட
இதுவே சரியான தருணம் என்று அமெரிக்காவும் இப்போது குதித்திருக்கிறது. மார்ச்சில், ஒபாமா
நிர்வாகம் ஒரு நிர்வாக உத்தரவின்கீழ், வெனிசுலாவால் அமெரிக்காவிற்கு தேசியப் பாதுகாப்பு
அச்சுறுத்தல் இருப்பதாகப் பிரகடனம் செய்து, வெனிசுலாவின் பல்வேறு செயல்பாடுகளின்கீழ்
பொருளாதாரத் தடை பிறப்பித்திருக்கிறது. மேலும் வெனிசுலாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்
வலதுசாரி எதிர்க்கட்சிகளுக்கும் நிதி உதவி செய்து, நிலோலாஸ் மதுரோ அரசாங்கத்தைத் தனிமைப்படுத்திட
லத்தீன் அமெரிக்காவில் இயங்கும் அனைத்து வலதுசாரி அரசாங்கங்களின் பின்னும் அணிதிரள
வைத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றம் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ்
இருப்பதால் ஊக்கமடைந்துள்ள வலதுசாரிக் கட்சிகள் அரசு வீட்டுவசதித் திட்டத்தைத் தனியாரிடம்
தாரை வார்த்திடவும், அரசாங்கத்தின் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளைக் கைவிடவும் சட்டங்களை
நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் உச்சநீதிமன்றம், வீட்டுவசதித் திட்டத்தைத்
தனியாரிடம் ஒப்படைத்திடும் சட்டத்தை செல்லாது என அடித்து எறிந்து விட்டது. நீதிமன்றத்தில்
பொலிவேரியன் சிந்தனைகளுக்கு உண்மையாகவுள்ள நீதிபதிகள் இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வலதுசாரி சக்திகள் நாடாளுமன்றத்தில்
தங்களுக்கு உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்திக் கொண்டு, வெனிசுலாவில் ஓர் இரட்டை ஆட்சியை
நிறுவிட முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. அதிபர் மதுரோவைத் திரும்ப அழைத்திட மக்களிடம்
வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக் கொண்டிருக்கின்றன. நாடு முழுதும் வீதிகளில்
இறங்கி வன்முறை வெறியாட்டங்களில் இறங்கி இருக்கின்றன. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருடனான மோதல்கள்
அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
அதிபர் மதுரோ, இத்தகைய வலதுசாரிகளின்
தாக்குதல்களுக்கு அரசாங்கம் அடிபணிந்திடாது என்று பிரகடனம் செய்திருக்கிறார். மே 16 அன்று, இரண்டு மாத காலத்திற்கு, அவசர நிலையை
புதுப்பித்து விரிவாக்கிட பிரகடனம் செய்து
ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலத்தில்
ஆயுதப் படையினர் குற்றங்களைக் கட்டுப்படுத்திடவும், உணவு மற்றும் மருந்துகளை மக்களுக்கு
விநியோகிப்பதில் உதவிடவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அரசாங்கம் பண வீக்கத்தைக்
கட்டுப்படுத்திடவும், குறைந்தபட்ச ஊதியங்களை அதிகரித்திடவும் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
ஆயினும்கூட, நெருக்கடியின் வெங்கொடுமை அதீதமாகஇருப்பதன் காரணமாக இந்த நடவடிக்கைகள்
அதிக அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதுதான்
மக்களை அணிதிரட்டவும், வலதுசாரிகளின் தாக்குதலை முறியடித்திடவும் முக்கியமாகும். இதற்கு அரசாங்கம், இரட்டை பரிவர்த்தனை
விதிகத்திற்கு முடிவு கட்டுதல், தற்போது தனியார்வசம் உள்ள உணவுப் பதப்படுத்தல் மற்றும்
விநியோக முறையை பறித்தெடுத்தல், பெரு முதலாளிகள் பொருளாதார நாசவேலைகளை தடுத்துநிறுத்தாவிட்டால்,
வங்கிகள் மற்றும் முக்கியமான துறைகளை அரசு கையகப்படுத்தத்தயங்காது என்று சமிக்ஞையை
வழங்குதல் உட்பட பல தைர்யமான நடவடிக்கைகளை
எடுத்திட வேண்டும்.
வெனிசுலா மற்றும் இதர லத்தீன்
அமெரிக்க நாடுகளில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் அங்கே நடைபெற்று வரும் புரட்சி கர போராட்டங்கள்
மற்றும் சமூச மாற்றங்களின் தன்மைகளை விளக்குகின்றன. இடதுசாரிகளைப் பொறுத்தவரை, தேர்தல் வெற்றிகளும்
முற்போக்கான நிகழ்ச்சிநிரலுடன் அரசாங்கங்களை அமைப்பதும் அரசியல் போராட்டம் மற்றும் புரட்சிகர இயக்கத்தின்
ஒரு பகுதியேயாகும். ஆனால், ஏகாதிபத்தியம் மற்றும் நவீன தாராளமய முதலாளித்துவம் உலகையும்
இந்தப் பிராந்தியத்தையும் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் பின்னணியில்தான் இவை நடந்து
கொண்டிருக்கின்றன. புரட்சிகர இயக்கத்தின் முன்னேற்றம் என்பது, ஏகாதிபத்தியம் மற்றும்
முதலாளித்துவத்திற்கு எதிராக வர்க்கப் போராட்டம் மற்றும் மக்கள் திரளின் செல்வாக்கான
இயக்கங்கள் வளர்ச்சி அடைவதைத்தான் இறுதியாக சார்ந்திருக்கின்றன.
நாசகரமான ஏகாதிபத்திய நவீன தாராளமயக்
கொள்கைகளுக்கு மாற்றத்தை விரும்பும் அனைத்துப் பகுதியினரும் மதுரோ அரசாங்கம் மற்றும்
போராடும் வெனிசுலா மக்களுக்கு முழுமனதுடன் ஒருமைப்பாட்டை அளித்திட முன்வரவேண்டும்.
(மே 24, 2016)
தமிழில்: ச. வீரமணி
No comments:
Post a Comment