Friday, May 27, 2016

மேற்குவங்கம் : கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறை

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 72 சதவீத இடங்களைப் பெற்று தீர்மானகரமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆனால், இது மம்தா பானர்ஜிக்குப் போதுமானதாக இருந்திடவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி முன்னணியும் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதோடு, அவை ஓர் அரசியல் சக்தியாக இருப்பதையும் அழித்து ஒழித்திட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். எனவேதான் அவர், தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்தலுக்குப்பின் அங்குலம் அங்குலமாக பழிக்குப்பழி வாங்குவோம் என்று மிரட்டல் விடுத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணிக்கு எதிராக திரிணாமுல் ஆட்களால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. இதர எதிர்க்கட்சிகளும் கூட விட்டுவைக்கப்படவில்லை. மே 19 அன்று தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியதிலிருந்தே திரிணாமுல் கும்பல்களின் தாக்குதல்களும் மாநிலம் முழுவதும் நடைபெறத் துவங்கிவிட்டன. அவர்கள் தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள், முன்னணி ஊழியர்கள், ஆதரவாளர்கள், ஏன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர்களைக் கூட குறி வைத்துத் தாக்கினார்கள்.
முன்பெல்லாம் அவர்கள் மேற்கொள்வதைப்போலவே இப்போதும், கட்சி அலுவலகங்களைத் தீவைத்தார்கள், அடித்து நொறுக்கினார்கள், எதிர்க்கட்சியினரின் வீடுகளைத் தாக்கினார்கள், அவர்களின் உடைமைகளை அழித்தார்கள், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னணி ஊழியர்களையும், தொண்டர்களையும் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து தாக்கினார்கள், வீடுகளில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. பல இடங்களின் அவர்களின் வாழ்வாதாரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.இவர்களின் வன்முறைவெறியாட்டத்தில் மிகவும் கண்டிக்கத்தக்க அம்சம் என்னவெனில், இவர்கள் பெண் ஊழியர்களையும், ஆதரவாளர்களையும் குறிவைத்துத் தாக்குவதாகும். சென்றமுறை பஞ்சாயத்துத் தேர்தல்களின்போது வன்புணர்வுக்கு ஆளான பெண்களில் சிலர் நீதிமன்றங்களில் திரிணாமுல் ஆட்களுக்கு எதிராகத் தொடுத்திருக்கும் வழக்குகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்கு வங்கம் இன்று ஒரு சட்டம், ஒழுங்கு இல்லா மாநிலமாக மாறி இருக்கிறது. காவல்துறையினர் வெறுமனே பார்வையாளர்களாக நின்று கொண்டிருக்கிறார்கள், அல்லது, தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு எதிராகவே பொய் வழக்குகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் பரப்புரையின்போது, முதல்வர் சுதந்திரமாக செயல்படும் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் வஞ்சம் தீர்க்கப்படுவார்கள் என்று மிரட்டி இருந்தார்.
இடது முன்னணி தூதுக்குழு ஒன்று ஆளுநரைச் சந்தித்து, மாநிலத்தில் நடைபெற்றுவரும் வன்முறை வெறியாட்டங்களைப் பட்டியலிட்டு ஒரு மனு சமர்ப்பித்திருக்கிறது.மாநிலத்தில் வாழும் குடிமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய விதத்தில் தலையிட வேண்டியது உயர்ந்த நிலையிலுள்ள நீதிமன்றங்கள் உட்பட அரசமைப்புச் சட்ட அதிகார மையங்களின் அவசியக் கடமைகளாகும்.
கேரளாவில் பாஜகவிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டுவருகிறார்கள் என்று குய்யோ முறையோ என்று கத்தும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு, மேற்குவங்கத்தில் அவர்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உட்பட எதிர்க்கட்சியினர் மீது ஏவப்பட்டுள்ள கொலைபாதக வன்முறை வெறியாட்டங்கள் குறித்து எதுவுமே கூறாமல் மவுனமாக இருந்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மீதான, மக்களின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலாகும். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் அனைத்து அரசியல் கட்சிகளாலும், மக்களின் அனைத்துப் பிரிவினராலும் தடுக்கப்பட வேண்டியவை மற்றும் எதிர்க்கப்பட வேண்டியவைகளாகும். நாட்டிலுள்ள ஒட்டுமொத்த இடது மற்றும் ஜனநாயக சக்திகளும், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணிக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக அணிதிரளவேண்டும். வன்முறைவெறியாட்டங்கள் மூலமாக மேற்கு வங்கத்திலிருந்து இடதுசாரி இயக்க சித்தாந்தத்தையோ, அரசியலையோ அழித்து ஒழித்துவிட முடியாது.

தமிழில்: .வீரமணி

1 comment:

சிவகுமாரன் said...

மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த மார்க்சிஸ்ட் எப்படி இப்படி ஒரு வீழ்ச்சியை சந்தித்தது?