Sunday, May 29, 2016

பகாசுரன் - முதல் நாள்





முதல் நாள்

தில்லியில் உள்ள தன்னுடைய சகோதரரின் வீட்டிற்கு ஒருவார விடுமுறையைக் கழிப்பதற்காக சுமன் தன் மகன்களுடன் வந்திருந்தார்.
அவர்கள் தங்களுடைய டின்னரை முடித்துக்கொண்ட பின்னர், அவர்கள் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சுமன் தன் கையில் வைத்திருந்த ரிமோட் கன்ட்ரோல் மூலமாக எல்சிடி டிவி-யில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு வந்தபோது, மகா பாரதத்தின் சில காட்சிகளையும் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மாற்ற முயன்றார். அப்போது திடீரென்று பிரதீப் அவனுடைய அம்மாவிடம், ``அம்மா, அதை மாத்தாதீங்க. அது ரொம்பவும் விறுவிறுப்பா இருக்கு. நாம் அதைப் பார்க்கலாம்,’’ என்றான்.
எல்லோரும் அந்தக் காட்சியை மிகவும் ஆர்வத்துடன் பார்த்தார்கள். அரக்கால் உருவாக்கப்பட்ட ஓர் அழகான வீடு. கௌரவர்களால், அவர்களுடைய ஜன்மப் பகைவர்களாக விளங்கும் பாண்டவர்களுக்காகக் கட்டப்பட்டது.  அவர்கள் மத்தியில் மிகவும் விவேகமானவரும், பாண்டவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவருமான விதுரன்,  கௌரவர்கள் அம்மாளிகையை எரிக்க திட்டம் போட்டிருக்கும் இழி நோக்கங்களைச் சுட்டிக்காட்டினார். மேலும்,  அம் மாளிகை யிலிருந்து அவர்கள் தப்பித்துச் செல்வதற்காக ஒரு சுரங்கப் பாதையைத் தோண்டுவதற்கும் அவர்களுக்கு உதவி செய்தார். இதனைத் தொடர்ந்து அம்மாளிகையில் பாண்டவர்கள் வாழ்ந்து வந்த சமயத்தில் சுழல்முறையில் அவர்களில் ஒருவர் வீட்டை இரவுகளில் காவல் காத்து வந்தார்கள். ஒரு நாள், அம்மாளிகை தீ வைத்துக் கொளுத்தப்பட்டபோது,  பீமன் தன் தாயை தன் தோள்களில் சுமந்துகொள்ள பாண்டவர்கள் அனைவரும் அந்த சுரங்கப்பாதை வழியே தப்பிவிட்டார்கள்.
தொலைக்காட்சியில் இந்தப் படத்தைப் பார்ப்பதில் அனைவரும் முழுமையாக மூழ்கிவிட்டார்கள். சுரங்கம் முடியும் இடத்தில் பாண்டவர்கள் அனைவரும் ஒரு கிராமத்தைச் சென்று அடைந்தார்கள். அங்கே விதுரன் அவர்களுக்கான புதிய ஆடைகளுடன் அங்கே காத்துக் கொண்டிருந்தார். அதன்பின் தங்களை யார் என்று வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, பிராமணர்களைப்போல உடை தரித்துக்கொண்டு, மக்களுடன் மக்களாகத் தங்களை மாற்றிக்கொண்டு விட்டார்கள்.
அவர்கள் ஒரு பிராமணரின் வீட்டில் வசிக்கத் தொடங்கினார்கள். தாங்கள் ஜீவித்திருப்பதற்காக அங்கிருந்த வீடுகளில் ஒவ்வொரு நாளும் பிச்சை எடுத்தார்கள். பீமன் அவ்வாறு பிச்சை எடுத்துக் கொண்டுவரும் உணவில் பாதியை எடுத்துக்கொள்வார்.
 ஒருநாள் அவர்கள் வீட்டின் சொந்தக்காரர் மிகவும் வாட்டத்துடன் காணப்பட்டார். வீட்டில் இருந்த அனைவருமே புலம்பிக் கொண்டிருந்தார்கள். பகாசுரனுக்கு உணவாக அவர்கள் வீட்டிலிருந்து எவரையேனும் ஒருவரை அன்று அனுப்பி வைத்தாக வேண்டும். முன்பெல்லாம் ராட்சசன் கிராமத்திற்குள் புகுந்து எவரையேனும் பிடித்துக் கொன்று தின்பது வழக்கமாக இருந்தது.  அவனது பசி நான்கைந்து மனிதர்களைக் கொன்று தின்றாலும் அடங்காத அளவிற்கு அதிகமாக இருந்தது. பின்னர் கிராமத்தினர் அவனுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதன்படி ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் ஒரு மாட்டு வண்டியில் அந்த ராட்சசனிடம், கிராமத்தாரால் அளிக்கப்பட்ட அனைத்து உணவு வகைகளையும் எடுத்துக் கொண்டு காட்டிற்கு சென்றிட வேண்டும். ராட்சசன் அந்த உணவு வகைகள் அனைத்தையும், மாட்டையும் அவற்றைக் கொண்டு வந்தவனையும் சாப்பிட்டுவிடுவான்.
சம்பவத்தன்று பிராமணன் தானே அவ்வாறு காட்டிற்குச் செல்வதா அல்லது தன் இளம் மகனை அனுப்பி வைப்பதா என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது. இது தொடர்பாக விவாதித்து, குடும்பம் முழுவதுமே புலம்பி அழுதுகொண்டிருந்தது. கடைசியில், முதிய பிராமணர், தானே செல்வது என்றும், தன் இளம் மகன் தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வான் என்றும் முடிவு செய்யப்பட்டது.
நரமாமிசம் சாப்பிடும் வெறியனுடன் செய்துகொள்ளப் பட்டுள்ள இந்த விசித்திரமான ஏற்பாட்டைக் கேள்விப்பட்டு பாண்டவர்கள் திடுக்கிட்டார்கள். அவர்கள், அன்றைய தினம் குறித்து, தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக அந்த முதிய பிராமணரிடம் உறுதி அளித்தார்கள். ஆரம்பத்தில் அந்த பிராமணர் அவர்களது விருப்பத்தை ஏற்கத் தயங்கினார். தன் குடும்பத்திற்காக தன் விருந்தினர்கள் பலியாவதை அவர் விரும்பவில்லை. ஆயினும், பாண்டவர்கள் வற்புறுத்தியதை அடுத்து, கடைசியில் அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.
பீமன் அனுப்பி வைக்கப்பட்டார். மாட்டு வண்டியில் அவர் காட்டிற்குச் செல்கையில் அவருடன் கிராமத்தவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட உணவு அனைத்தையும் அவரே உண்டு தீர்த்தார். 
பகாசுரன் வண்டியில் உணவு எதுவும் இல்லாததைப் பார்த்த போது கடும் சீற்றம் கொண்டான். பசியுடனிருந்த ராட்சசன் பீமன் மீது பாய்ந்தான். அவர்களுக்கிடையே கடும் சண்டை நடந்தது. இறுதியில் பகாசுரன் மாண்டான், அவனது அட்டகாசங்கள் அவ்வாறு முடிவுக்கு வந்தன.
அப்போதே இரவு வெகுநேரமாகிவிட்டது. அன்றைய தினம் பயணத்தால் மிகவும் களைத்துப்போயிருந்த அவர்கள் படத்தின் மீதிக் காட்சிகளை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்தார்கள்.
……
அன்று மாலை, அந்திப்பொழுது மயங்கி இருள் கவியத் தொடங்கி ஒரு மணி நேரமாகிவிட்டது. அவர்கள் பயணம் செய்த ரயில் பரிதாபாத்தை விட்டு ஏற்கனவே புறப்பட்டுவிட்டது, அநேகமாக அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அவர்களது ரயில் தில்லியைச் சென்று அடைந்துவிடும். தாங்கள் பயணம் செய்த கம்பார்ட்மெண்ட்டில் வந்த பயணிகள் அனைவரும் தாங்கள் கொண்டுவந்த சூட்கேசுகளை அவசர அவசரமாக இறுக்கிக் கட்டுவதைப் பார்த்தபின் ரவி மற்றும் பிரதீப் சகோதரர்களின் ஆர்வம் அதிகமாகிவிட்டது. இதுதான் அவர்கள் வெகுதூரம் வந்த  முதல் பயணமாகும்.  எனவே மிகவும் ஆர்வத்துடன் ஜன்னலுக்கு வெளியே கண்மூடிக் கண்திறப்பதற்குள் மறையும் லைட் வெளிச்சத்தைப் பார்த்த வண்ணம் வந்தார்கள். அதைப் பார்க்கும்போது அவர்களுக்கு வானத்து இருளைப் போக்க வந்த மஞ்சள் ஒளியைப்போல அவர்களுக்குத் தோன்றியது.
உண்மையில், அவர்களது தில்லி பயணம் உறுதிப் படுத்தப்பட்ட கணமே, போபாலில் ரயில் ஏறிய உடனேயே அவர்களுடைய ஆர்வம் கொப்பழிக்கத் தொடங்கி விட்டது. மாபெரும் மெகா நகரமான தில்லி, அங்கேயுள்ள மால்கள், அங்கே தாங்கள் பார்க்க முடிவு செய்திருக்கிற சரித்திரப் புகழ்பெற்ற சின்னங்கள் ஆகியவை குறித்து முடிவே இல்லாமல் பேசிக்கொண்டே வந்தார்கள். அதேபோன்று அவர்கள் தங்கள் வயதையொத்த `எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு அனுமதி கிடைத்துள்ள அவர்களது மாமா பையன் அபியைப்  பற்றியும் பேசினார்கள். அவர்களது சேகர் மாமா குறித்தும் அவர்கள் எப்போதும் பேசிய வண்ணமே இருந்தார்கள். ஏனெனில் அவர்தான் அவர்களது எதிர்கால இலட்சியப் புருஷர். பல்வேறு ரகசிய செயல்கள் மூலம் பலவித இலஞ்ச  ஊழல்களை வெளிக் கொணர்ந்தவர் அவர். அதனால் ஊடகங்களால் வெகுவாகப் பாராட்டப் பட்டவர். அவரை அவர்கள் வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த சுமன், அவர்களுடைய பேச்சில் குறுக்கிட்டு, பிள்ளைகளா, எப்படி நீங்கள் உங்கள் மாமி, ரேகாவை, மறந்தீர்கள்? அவங்க அழகானவங்க மட்டுமில்லை, அவங்க ரொம்ப நல்ல மனசும் உடையவங்க. அவங்களும், அபியும் வீட்டில் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் சேகர் மட்டும் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்க முடியும் என்று நீங்க நினைக்கிறீர்களா?’’ என்று கேட்டார். அவர்களும் அதனை உணர்ந்தார்கள்.   
பொறுமையிழந்து அவர்கள் சுற்றிலும் பார்த்துக் கொண்டும் தங்கள் அம்மாவையும் அடிக்கொரு தடவை கவனித்துக் கொண்டும் வந்தார்கள். அவர், அவர்களது இருக்கைக்கு எதிரே அரைத் தூக்கத்துடன் அமர்ந்திருந்தார்.
கடைசியில், அவர்களது ரயில் புதுதில்லி ரயில் நிலையத்தை அடைந்தபோது அவர்கள், கதவு அருகே விரைந்தார்கள். பிளாட்பாரத்தில் நூற்றுக்கணக்கானோர் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள். ஒருவர்க்கொருவர் நெருக்கிக் கொண்டும், மேலேயும் கீழேயும் இயங்கிக் கொண்டும், தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் தேடிக்கொண்டும் இருந்தார்கள். பத்திரிகைகள் விற்பவர்கள், டீ விற்பவர்கள், இனிப்புப் பலகாரங்கள் விற்பவர்கள் என அனைத்துத்தரப்பினரும் தங்கள் பொருள்களைத் தங்கள் உரத்தக் குரலில் கூவிக் கொண்டிருந்தனர். பயணிகள் ஒலிபெருக்கி மூலம் வந்து கொண்டிருந்த அறிவிப்புகளைப் புரிந்துகொள்வதற்காக அதனை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். தாங்கள் அதிகமாகக் கொண்டு வந்த பொருள்களை ஏற்றிவந்த டிராலிகள்  கடகட என்று சத்தமிட்டுக்கொண்டே வர, போர்ட்டர்கள் ’வழி’ ’வழி’ என்று சத்தமிட்டு கூட்டத்தினரிடையே வழியேற்படுத்திக் கொண்டும், மக்கள் திட்டுவது குறித்துப் பொருட்படுத்தாமலும் வெளிவந்து கொண்டிருந்தார்கள். எல்லாமே சத்தமாகவும், அசுத்தமாகவும் இருந்தது.
தங்கள் மாமாவும், மாமா பையன் அபியும் வந்திருக்கிறார்களா என்று அவர்கள் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.   சிறிது தூரத்தில் அவர்களது மாமாவும், அவர்களது கம்பார்ட்மெண்ட்டை நோக்கி வழியேற்படுத்திக் கொண்டு வந்துகொண்டிருப்பதையும், அவருக்கு சில அடி தூரத்திற்குப்பின்னே அபியும் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்ததையும் அவர்கள் பார்த்துவிட்டார்கள். அபி கூட்டத்தினரிடையே சத்தமிட்டுக்கொண்டே வந்து கொண்டிருந்தான். சுமனும்  ஜன்னல் வழியே அவர்களைப் பார்த்து விட்டார்.
``மாமா..., சேகர் மாமா..., அபி..., அபி..., அவர்களை நோக்கித் தங்கள் கைகளை ஆட்டிய வண்ணம், அவர்கள் ஸ்டேஷனில் இருந்த சத்தத்தையும் தாண்டி, அவர்களுக்குக்  கேட்கும் வண்ணம் சத்தமிட்டார்கள். சேகர் அவர்களைப் பார்த்து விட்டார். ``ஹை...,’’ அவரும் தன் கைகளை அசைத்துக் காண்பித்து அவர்கள் பயணம் செய்த பெட்டியின் கதவருகே வந்தார். அதே சமயத்தில் அபியும் அவர்களைப் பார்த்துவிட்டான். சந்தோஷத்துடன் ``ஹல்லோ...’’ சொன்னான்.
வலைகளிலிருந்து வெளியே வரும் எலிகளைப் போல பயணிகள் வெளியே வருகையில் நூற்றுக்கணக்கான கூலிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களையெல்லாம் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி தவிர்த்துக்கொண்டே பயணிகள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சிவப்புச் சட்டை அணிந்தும், கையில் போர்ட்டர்களுக்கு வழங்கப்படும் உலோக வில்லையை அணிந்து பறட்டைத்தலையுடனும் சவரம் செய்யாத முகத்துடனும் காணப்பட்ட ஒருவன் அவர்களது லக்கேஜுகளை எடுக்க முயற்சித்தான். அவனையும் மற்ற கூலிகளையும் முரட்டுத்தனமாக தள்ளிவிட்டு, சேகரும் அபியும்  லக்கேஜுகளை வெளியே எடுக்க உதவினார்கள்.
அவர்கள் ஒருவர்க்கொருவர் வரவேற்று வணக்கம் சொல்லிக் கொண்ட பின்னர், சுமனும் அவளுடைய பையன்களும் சேகரின் காலில் விழுந்து வணங்கினார்கள். அதேபோன்று அபியும் அவரது அத்தையின் காலில் விழுந்து வணங்கினான்.
``தில்லிக்கு உங்களை வரவேற்கிறோம், பையன்களா...,’’ என்று சேகர் அன்புடன் அவர்களை வரவேற்றார்.
``நன்றி மாமா, உங்களோடு இருக்கும்போது,  விடுமுறையை நாங்கள் சந்தோஷமாகக் கழிப்போம் என்பது நிச்சயம்.’’ என்று ஒரே குரலில் அவர்கள் கூறினார்கள். அவர்களின் முகங்களில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. அவர்களது அம்மாவும் கண்களில் ஒளி மின்ன அன்புடன் அவர்களைப் பார்த்தார்.
``துரதிர்ஷ்டவசமாக உங்க அப்பா அவருடைய டிக்கெட்டுகளை கடைசி நேரத்தில் கான்சல் செய்ய வேண்டியதாய் போய்விட்டது. மிக முக்கியமான ஆபிஸ் வேலை ஒன்று வந்துவிட்டதாக அவர் எங்கிட்டே கூறினார். அவரும் வந்திருந்தார்னா ரொம்பவும் நல்லா இருந்திருக்கும். என்ன செய்வது? அவருக்கு நிறைய வேலைகள், இல்லையா? நான்தான் அவரை மிஸ் பண்ணிவிட்டேன்,’’ என்று சேகர் கூறினார். பையன்களும், அவர் சொன்னதை ஆமோதிப்பதைப்போலத் தலையாட்டினார்கள். சுமன் தன் அண்ணனின் தலைமுடியைப் பார்த்துவிட்டு, ``உன் முடியில் பாதி நரைத்துவிட்டதே’’என்று கூறி சிரித்தார். ``அப்புறம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்தாய்? ஏற்கனவே எனக்கு நாற்பத்தைந்து ஆகிவிட்டது. மேலும் இங்கே தண்ணீரும், காற்றும் ரொம்ப மோசம்,’’ சேகர் சிரித்துக்கொண்டே அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டார்.
பின்னர் சேகரும் சுமனும் முன்னே செல்ல அவர்களைத் தொடர்ந்து பின்னே பையன்கள் பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் டிராலி பைகளை இழுத்துக்கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்தார்கள். பின்னர் ஸ்டேஷனுக்கு வெளியே அவர்கள் கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து காருக்குள் லக்கேஜ்களை வைத்து விட்டு காரில் ஏறிக் கொண்டார்கள். கார் சிவில் லைன்ஸில் உள்ள உயரமான பகுதியை நோக்கி வேகமாகப் பறந்தது. காரில் சென்று கொண்டிருக்கும்போதே சகோதரர்கள் இருவரும் மாமாவைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்துவிட்டார்கள். ``மாமா, இந்நாட்களில் பெரிய மீன் எதையாவது பிடித்தீர்களா?’’, ``லஞ்சம் வாங்கும் கும்பல் எதையாவது கைது செய்திருக்கிறீர்களா?’’ என்று கேட்ட வண்ணம் வந்தார்கள். மிகவும் புத்திகூர்மையும், ஆர்வமும் மிகுந்த ரவிக்கு 18 வயது ஆகிறது. இன்ஜினியரிங் முதலாம் ஆண்டை முடித்திருக்கிறான். அவனைவிட ஓராண்டு இளையவனும் எப்போதும் குதூகலத்துடன் காணப்படும் கண்ணாடி அணிந்த பிரதீப் 12ஆம் வகுப்பை முடித்து இன்ஜினியரிங் கல்லூரியில் சேரும் நிலையில் இருக்கிறான்.
சுமன் தன் பிள்ளைகளிடம் ``இங்கே பாருங்க, மாமாவை ரொம்பவும் தொல்லைப்படுத்தாதீங்க. அவர் காரை ஓட்டிக்கிட்டிருக்கார். மேலும், நாம் இங்கே ஒரு வாரம் பூரா இருக்கப் போகிறோம். உங்க விசாரணைகளை எல்லாம் அந்த சமயத்தில் வச்சுக்குங்க. இப்போது ஏன் அவரைத் தொந்தரவு செய்றீங்க?’’ என்று கடிந்து கொண்டதைப் பார்த்து, சேகருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அபி சிரித்துக் கொண்டான். சுமன் சொல்வதைக் கேட்டுக்கொண்ட வந்த சேகர், சிரித்துக்கொண்டே பையன்களிடம், ``நிச்சயமா நான் உங்களுக்கு நிறைய கதைகள் சொல்வேன். ஏகப்பட்ட கதைகள் என்னிடம் இருக்கு,’’ என்று கூறிக்கொண்டு காரை ஓட்டும்போதே,  இவர்களை வரவேற்கத் தயாராய் தன் வீட்டில் காத்துக்கொண்டிருக்கும் தன் மனைவி ரேகாவை நினைத்தார். 
ரேகா ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார். அபியின் பெரிய படுக்கையை இரு பையன்களும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். சுமன் விருந்தினர் அறையில் தங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அவர்கள் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அவளுக்கு அருகில் அவளது வளர்ப்பு நாய்க்குட்டிகளான புஜ்ஜி, ஃப்ரூட்டி, பாப்லு தரை விரிப்பின்மீது அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தன.
அவர்களுடைய கார் வரும் சத்தத்தைக் கேட்டவுடனேயே நாய்க்குட்டிகள் மூன்றும் எழுந்து காரை நோக்கி மிகுந்த மகிழ்ச்சியுடன் தாவிச் சென்றன. அவர்கள் வீட்டிற்குள் வருவதற்கு முன்பே அவர்களை சந்தோஷத்துடன் வரவேற்றன.  சேகர் நாய்க்குட்டிகளைத் தட்டிக்கொடுக்கத் தொடங்கிய அதே சமயத்தில், ரேகா சுமனையும், குழந்தைகளையும் வணங்கி வரவேற்றார். அபி அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு லக்கேஜ்களை எடுத்துச் சென்றான்.
பின்னர் அனைவரும் விரைந்து தங்கள் முகம், கை, கால்களை கழுவிக்கொண்டு அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று தங்கிவிட்டனர்.
வெகுநாட்கள் பிரிந்திருந்தவர்கள் கூடிய சந்தோஷத்தில் பெரியவர்கள் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந் தார்கள். ஆண்டுக்கணக்கில் பிரிந்திருந்த அவர்களுக்குப் பேசுவதற்கு நிறையவே விஷயங்கள் இருந்தன.
இவ்வாறு பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்த அதே சமயத்தில், அபி சுமனுக்கும் பிரதீப்புக்கும் அவர்களுடைய வீட்டைச் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றான். அவன் தந்தை வேலை பார்த்த இடங்களில் சேகரிக்கப்பட்ட அற்புதமான கலைப்பொருட்களும் கைவினைப் பொருட்களும்  வீட்டை அலங்கரித்திருந்தன. அவனது தந்தையே பல கைவினைப் பொருட்களை உருவாக்கி அமைத்திருந்தார். அனைத்தையும் அவர்கள் மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொண்டே வந்தார்கள்.
வீட்டின் சுவரில் சீருடையுடன் அவர் மாமாவின் புகைப்படம் மாட்டியிருந்ததைப் பார்த்தபின், பிரதீப் தன் மாமா குறித்து அவன் அம்மாவிடம் மிகவும் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தான். பின்னர் சேகரிடமும், ``மாமா, சீருடையில் நீங்க மிகவும் மிடுக்கா இருக்கீங்க மாமா’’ என்றும் புகழ்ந்தான். ``ஓ, அந்தப் படம் கொஞ்ச காலத்திற்கு முன்பு எடுத்தது,’’ என்று சிரித்துக்கொண்டே சேகர் கூறினார். அப்போதெல்லாம் நான் எப்போதும் சீருடையில்தான் இருப்பது வழக்கம். ஒருநாள் ஒரு வேடிக்கை நடந்தது. நாங்கள் எங்களைவிட மூத்த அதிகாரியைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அவர் உட்கார்ந்திருப்பதற்கு முன்னால் இருக்கும் மேசையில் எங்கள் குல்லாய்களை கழட்டி வைத்தவிட்டு எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்த அவருடன் பேசுவோம். பின் எழுந்து செல்லும்போது குல்லாயை எடுத்து அணிந்து கொண்ட சல்யூட் அடித்துவீட்டுத் திரும்புவோம். ஒரு நாள் வழக்கமாக அவ்வாறு அவரிடம் பேசிவிட்டுத் திரும்பும்போது எழுந்து மேசையில் இருந்த குல்லாயை எடுத்து அணிந்த கொண்டபோது அங்கே இருந்த எல்லோரும் சிரித்து விட்டார்கள். ஏனென்றால் அது என்னுடைய குல்லாய் இல்லை, என் சக ஊழியருடைய குல்லாய்.  நான் அன்று சீருடையுடன் அவரைச் சந்திக்க வரவில்லை,’’ என்று சேகர் சொல்லிவிட்டு மிகவும் சிரித்தார். 
இவ்வாறு சிரித்துக் கொண்டே அவர்கள் அந்த இடத்திலிருந்து நகர்ந்தபோது, அவர்களுடைய வளர்ப்பு நாய்க் குட்டிகள் தங்கள் வால்களை ஆட்டிக்கொண்டு, அவர்களுடைய பாதுகாவலர்களைப் போலவும், அவர்களுடைய ஒவ்வொரு இயக்கத்தையும் சந்தேகிப்பதைப் போலவும்,  அவர்களையே தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.   நாய்க்குட்டிகளைப் பார்த்து ரவி கூச்சப்பட்டுக்கொண்டு ஒதுங்குவதையும் ஆனால் அதே சமயத்தில் பிரதீப் நட்புடன் அவற்றை மிகவும் தைர்யமாக நெருங்கி அவற்றுடன் இருப்பதையும் அபி பார்த்தான். பின்னர் ஒவ்வொரு நாய்க் குட்டியையும் அவர்களுக்கு அறிமுகப் படுத்தினான்.
இது புஜ்ஜி. எங்களுடைய தங்க வேட்டைநாய். மிகவும் நல்ல விதமாகவும் நட்புடனும் நடந்து கொள்ளும். பார்ப்பதற்கு மிகவும் பயமாக இருந்தாலும் அது நம்மிடம் காட்டும் அன்பிற்கும் பாசத்திற்கும் அடிபணியாமல் இருப்பது சிரமம். காதை உயர்த்திக் கொண்டிருக்கும் இந்த ஃப்ரூட்டியைப் பாருங்கள். இது பென்குவின் போன்று மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது மட்டுமல்ல, ஒரு பொறுப்புமிக்க அன்புடைய தாய் போன்று ஒவ்வொரு நாள் காலையிலும் தன் முதல் கடமையாக தன் குட்டியான பாப்லுவின் கண்களையும், காதுகளையும் நக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இதுதான் அதனுடைய அன்பு மகன் பாப்லு. பாப்லு செய்யும் சேட்டைகளால் புஜ்ஜி கூட இப்போதெல்லாம் குறும்புகள் செய்யத் தொடங்கிவிட்டது. இவை மூன்றும் சேர்ந்து முடிவே இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றன. சோபாவிலிருந்து அடுத்த சோபாவிற்குத் தாவுவதும், ஒன்றை ஒன்று மோதி சண்டையிட்டுக்கொள்வது போல் விளையாடுவதும், பார்த்துக்கொண்டே இருக்கலாம். எங்க அம்மா அவற்றை சத்தமிட்டு அடக்கும்வரை அந்த விளையாட்டுகள் தொடரும். மற்றபடி, புஜ்ஜி மிகவும் அறிவுக்கூர்மை படைத்தது. சோபாவிற்கு அடியில் தன் தலையை வைத்துக்கொண்டு இருளில் தூங்கும். அதே சமயத்தில் வீட்டில் ஒரு சிறிய சத்தம் எங்காவது கேட்டாலும் எழுந்து என்ன என்று பார்க்கும்.
ஒரு பென்குவின் போலவே ஃப்ரூட்டி அமர்ந்திருப்பதை மிகவும் வியப்புடன் பார்த்தவண்ணம் பிரதீப், ஒரு விடுகதையைச் சொன்னான். ``கருப்பாகவும் வெள்ளையாகவும், கருப்பாகவும் வெள்ளையாகவும், கருப்பாகவும் வெள்ளையாகவும் போகிறதே, அது என்ன?’’  பிரதீப் ஃரூட்டியைப் பார்த்த வண்ணமே இதைச் சொன்னதும் அபிக்குத் துப்புக் கிடைத்துவிட்டது. ``ஒரு பென்குவின் பறவை மலை மேலிருந்து உருண்டு கொண்டிருக்கிறது,’’ என்று பதிலளித்தான்.  ``ஓ, நீங்க ரொம்பவும் அறிவுக்கூர்மை உள்ளவர்,’’ என்று பிரதீப் கூறினான்.
அபி பின்னர் வீட்டைச் சுற்றிலும் அழகுபடுத்தப்பட்டிருந்த புல்வெளிக்கு அவர்களை அழைத்துச் சென்றான். அதன் மத்தியில்  பல்வேறுவிதமான ரோஜா செடிகளும் மற்றும் பலவிதமான பூச் செடிகளும் வைக்கப்பட்டிருந்ததையும் மூலையிலிருந்து நாவல் பழ மரத்தையும் காட்டினான். இவர்களைச் சுற்றியே துள்ளித் துள்ளி வந்துகொண்டிருந்த பாப்லுவைப் பார்த்து மிகவும் பிரியத்துடன், ``பாப்லு, இன்றைக்கு நீ ரொம்பவும்தான் ஆடிக்கிட்டு இருக்கே. சும்மா இரு,’’ என்று அதட்டினான். பின்னர் அவனுடைய மைத்துனர்களிடம்,  ``உங்களுக்குத் தெரியுமா, இவன் ரொம்ப குறும்புக்காரன் மட்டுமில்லே, விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மிகவும் ஆர்வத்துடன் இருப்பான். ஒருதடவை, பெரிய நிலைக்கண்ணாடி முன்னே நின்று தன்னைப் பார்த்திருக்கிறான். அதில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்து மிகவும் குழம்பிப் போய்விட்டான். கண்ணாடி கிட்டே சென்றும், எட்டி சென்றும் தன் உருவத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அடிக்கடி கண்ணாடியை விட்டு சென்றுவிட்டு மறுபடியும் திரும்பி வந்து கண்ணாடியைப் பார்ப்பான். பின்னர் தன் உருவத்தைப் பார்த்தே ஒளிந்து விளையாட ஆரம்பித்தான். இவனுடைய இக்கட்டு நிலையைப் புரிந்துகொண்ட ஃப்ரூட்டி, இவனுடைய காதுகளை நக்கிக் கொடுத்தது.  பின்னர், இரண்டுமே சேர்ந்து கண்ணாடி முன் வந்து நின்றபோதுதான், பாப்லு பெரியவங்க மாதிரி தைர்யமாக நின்றது. அப்போது தன் உருவத்தைப் பற்றிய ரகசியம் அதற்குப் புரிந்திருக்கும்போல் தெரிகிறது.’’
``ஓ, எப்படியோ, சரி. உங்கள் நாவல் மரத்திற்கும் இந்த உங்க செல்ல நாய்க்குட்டிகளுக்கும் இடையே உள்ள பொதுவான ஒற்றுமை என்ன?’’ என்று பிரதீப் கேட்டான். ``ம்ம்ம்..., அதுவா? அது இரண்டுக்கும் இடையிலான கறுப்பான ``தோல்’’தான். தன் நாய்க்குட்டிகள் குறித்து இவ்வாறு பதிலளித்தான் அபி.
``அப்படியா?’’ தன்னுடைய பிரிய மைத்துனனைப் பார்த்துக்கொண்டே பிரதீப் புன்னகைத்தான். அப்போது உள்ளுக்குள்ளிருந்து ரேகா சத்தமிடுவது கேட்டது. ``அபி, இப்போதே வெகு நேரமாகிவிட்டது. உன் செல்ல நாய்க்குட்டிகள் புராணம் குறித்து நீ பேச ஆரம்பித்தாய் என்றால் காலம் பூரா பேசிக்கிட்டிருப்பாய். பையன்களா, சீக்கிரம் வாங்க. நாங்க எல்லாம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். சாப்பாடு ஆறிக் கொண்டிருக்கிறது.’’
இரவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதும் அவர்கள் அனைவரும் பேசிக் கொண்டே இருந்தார்கள். கடைசியில் சேகர் கேட்டார்: ``அபி, நாளைக்கு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறாய்?’’
அபி பேசுவதற்கு முன்பே, சுமன், கூறினார்: ``எந்தத் திட்டமாக இருந்தாலும் சரி, முதலில் நான் புனித யமுனை மாதாவைப் பார்க்க விரும்புகிறேன்.’’ அபி சிரித்துக் கொண்டே, ``அத்தை, நாம் எல்லாரும் நிச்சயமாக வாசிராபாத் பாலத்திற்குப் போகிறோம். அங்கே காலை உணவை முடித்ததற்குப்பிறகு, நீங்கள் உங்கள் புனித யமுனை மாதாவைப் பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்னாடி, காலையில் நாம் எல்லாரும் நடைப்பயிற்சிக்குப் போவோம்.’’ சுமனும் சிரித்துவிட்டார். மற்றவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.
சுமன் தன் அண்ணியிடம் பார்க்கிற மாதிரி ஏதேனும் நல்ல பக்திப் படம் இருக்கிறதா என்று கேட்டார். ரேகா மகாபாரதத்தைப் பார்க்கலாமே என்று கூறினார்.
……
அந்தப் படத்தைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்த பின்னர் அனைவரும் படுக்கைக்குச் சென்று ஓய்வு எடுத்துக் கொண்டார்கள்.
தூக்கம் வருவதுபோல இருந்தாலும், படுக்கையில் படுத்துக் கொண்டே, பையன்கள் தில்லியிலும் போபாலிலும் உள்ள பல விதமான விஷயங்களைப்பற்றியும், கல்லூரிகள் மற்றும் நண்பர்கள் இடையே நடைபெற்ற பல விஷயங்கள் பற்றியும்,  ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருந்தார்கள். 
ரவி தங்கள் கல்லூரியில் மிகவும் பெரிய அளவில் நடைபெற்ற கலை விழா குறித்து விவரித்தான். ஆனால் அந்த சமயத்தில் கல்லூரியில் செலவு செய்யப்படாது இருந்த  தொகையை மாணவர்களின் பொது நலனுக்குச் செலவு செய்திட வேண்டும் என்று ரவி வலியுறுத்தியபோதிலும், அதனைக் கலை விழாவை நடத்திய அமைப்புக் குழுவில் இருந்த சீனியர் மாணவர்கள் கேட்காததை பிரதீப் சுட்டிக்காட்டினான். இறுதியாக, அத் தொகைகளை பல நாட்கள் நடைபெற்ற ஆடம்பரமான பார்ட்டிகளில் மிகவும் ஊதாரித்தனமாக செலவு செய்ததையும் வருத்தத்துடன் கூறினான். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அபி பல கல்லூரிகளிலும் இதுதான் பொதுவாக நடைபெறுகிறது என்பதால் தான் இதைக் கேட்டு எந்தவிதமான ஆச்சர்யமும் படவில்லை என்று கூறினான்.
ரவி பின்னர் அபியிடம், ``அபி, உன்னுடைய மருத்துவப் படிப்பு மிகவும் செலவு பிடிக்குமே, உன்னுடைய ஆசிரியர்களும் வகுப்பறைகளில் மிகவும் சீரியசாக இருப்பார்கள், இல்லையா?’’ என்று கேட்டான்.
``இல்லை, எப்போதும் அப்படி இல்லை. சில பேராசிரியர்கள் வகுப்பறை உயிர்த்துடிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக, நகைச்சுவை ஜோக்குகள் எல்லாம் சொல்வார்கள். உனக்குத் தெரியுமா? ஆரம்பத்தில் நடைபெற்ற வகுப்பு ஒன்றில், ஒரு பேராசிரியர் எங்களுக்கு ஒரு சம்பவத்தை சொன்னார்.  ஒரு வயதானவர், காதுமூக்குதொண்டை டாக்டர் ஒருவரிடம் வந்து ஒரு பிரச்சனையை சொல்லி இருக்கிறார். அதாவது, அவருடைய மனைவிக்கு காது கேட்க மாட்டேன் என்கிறதாம். அதற்காக டாக்டரை வந்து பார்க்கவும் மறுக்கிறாராம். அந்த டாக்டர் ரொம்ப நல்லவர். அவரிடம் ஓர் ஆலோசனையை சொல்லி இருக்கிறார். அதேபோன்று அந்த வயதானவர் திரும்ப வீட்டுக்குச் சென்று, அவர் மனைவிகிட்டேயிருந்து 20 அடி தூரம் தள்ளி நின்று  கொண்டு இன்றைக்கு டின்னருக்கு என்ன செய்திருக்கிறாய் என்று கேட்டிருக்கிறார். அவருக்குப் பதில் எதுவும் வரவில்லை. பின்னர் அதே கேள்வியை 15 அடி தூரத்தில் நின்று கேட்டிருக்கிறார். அப்போதும் பதில் இல்லை. பின்னர் 10 அடி தூரத்தில் நின்று கேட்டிருக்கிறார். அப்போதும் பதிலேதும் இல்லை. கடைசியாக, 5 அடி தூரத்திற்குச் சென்று கத்தியிருக்கிறார். அந்த அம்மா பொறுமை இழந்து கோபத்துடன் என்ன சொன்னார் தெரியுமா? ``புரோட்டோவும் சிக்கன் குருமாவும் செய்திருக்கிறேன் என்று நான்தான் ஏற்கனவே 3 தடவை உங்ககிட்டே சொன்னேனே!’’
மாணவர்கள் குபீர் என்று சிரித்தபோது அபி மேலும் ஒரு கதை சொன்னான். ``மற்றொரு பேராசிரியர் இன்னொரு நல்ல கதை எங்களுக்கு சொன்னார்.   கிறித்துவர் ஒருவர் மரணப் படுக்கையில் இருந்திருக்கிறார். அவரைப் பார்க்க, பாதிரியார் ஒருவர் போயிருக்கிறார். பக்கத்தில் நின்ற பாதிரியாரிடம்  படுத்திருந்தவர், ஒரு பேனாவும், பேப்பரும் கொண்டுவரும்படி சைகை மூலம் கேட்டிருக்கிறார். பாதிரியாரும் கொடுத்திருக்கிறார். அவர் அதில் ஏதோ எழுதி இவரிடம் கொடுக்கும்போதே அவர் மூச்சு நின்றுவிட்டது. இவரும் அதை வாங்கி அதில் என்ன எழுதியிருக்கிறது என்று படிக்காமலேயே தன் சட்டைப் பையில் வைத்துவிட்டார். பின்னர் இறந்தவரை புதைப்பதற்காகக் கல்லறைக்குக் கொண்டு சென்று அடக்கம் வைத்த சமயத்தில்,  பாதிரியாருக்கு ஞாபகம் வந்து தன் சட்டைப்பையில் இருந்த அந்த பேப்பரை எடுத்து, உரக்கப் படித்திருக்கிறார்:  ``ஹே, ஃபாதர்,  நீங்க என் ஆக்சிஜன் டியூப் மேலே நின்றுகொண்டிருக்கீங்க’’.   இதைக் கேட்டபின் தனக்கு வந்த சிரிப்பை அடக்க எவ்வளவோ முயற்சி செய்தபின்னும் சிரிப்பை அடக்கமுடியாது கடைசியில் பிரதீப் சொன்னான்: ``அப்படி என்றால் உங்க வகுப்பறைகளும் எப்போதும் சலிப்புத்தட்டுகிற மாதிரி இருக்காதுன்னு சொல்றீங்க, இல்லையா?’’
பின்னர், அபி இவர்களுடைய ஆசிரியர்கள் எப்படி என்று விசாரித்தான். ரவி கூறினான்: ``நாங்கள் ஒரு நல்ல பேராசிரியரைப்பற்றிக் கேள்விப்படும்போது, ஒரு சிறுமியின் மினி-ஸ்கர்ட் போன்றே  அது இருப்பதாக நாங்கள் உணர்வோம். அதாவது, விஷயங்களை மறைக்கக்கூடிய அளவுக்குப் பெரிதாகவும் இருக்கணும். ஆர்வத்தைத் தூண்டக்கூடிய விதத்தில் சிறிதாகவும் இருக்கணும்.’’ அபி சிரிப்பதைப் பார்த்தபின் பிரதீப் கூறினான்: ``சில சமயங்களில் நாங்களும் மோசமான நகைச்சுவைகளைக் கேட்டிருக்கிறோம்.’’ ``ஒரு சமயம், ஒரு  பொறியியல் கல்லூரின் அனைத்துப் பேராசிரியர்களும் ஒரு புதிய விமானத்தில் ஏற்றப்பட்டு பறக்கக்கூடிய நிலையில் இருந்தார்கள். அப்போது  ``இந்த விமானம் உங்களுடைய மாணவர்களால் வடிவமைக்கப்பட்டது’’ என்று ஓர் அறிவிப்பு வந்தது. இதைக் கேட்டதும் எல்லாப் பேராசிரியர்களும் ஆடிப் போய்விட்டார்கள். அவசர அவசரமாக கீழே இறங்கி விட்டார்கள்.  ஆனால் முதல்வர் மட்டும் பயமேதுமின்றி உட்கார்ந்திருந்தார். அவருக்குத் தன் மாணவர்கள் மீது முழு நம்பிக்கை இருந்தது. நிச்சயம் இது ஸ்டார்ட் ஆகாது என்று அவர் கூறினார். அவர் மேலும் தொடர்ந்தார்: ``சில ஆசிரியர்கள் உண்மையில் ரொம்பவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். ஒரு சமயம் நாங்கள் ஓர் ஆசிரியரை விசாரித்தோம். எல்லா ஆசிரியர்களும் ஒரு மாணவனைப்பற்றி மோசமாகக் கூறிக்கொண்டிருக்கையில் அவர் மட்டும் அவனை அவ்வாறு கூற மாட்டார். ஏன் என்று அவரிடம் கேட்டோம். அவர் ரொம்பவும் சர்வசாதாரணமாகப் பதிலளித்தார். உலகத்தில் உபயோகமற்றவன் என்று எவனுமில்லை. ``மற்ற மாணவர்களுக்கு ஒரு மோசமான எடுத்துக்காட்டைக் காட்டுவதற்கு நான் இந்த மாணவனைத்தான் பயன்படுத்திக்கொள்வேன்’’ என்று அவர் சொன்னார்.
``உண்மைதான்,’’ ரவியும் உறுதிசெய்தான். பின்னர் மேலும்,  ``அவன் அப்படி நகைச்சுவை உணர்வுடன் உள்ள புத்திசாலிதான். ஒரு சமயம் ஒரு பையனிடம் அவன், ``இருட்டாக இருக்கும்போது நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்’’ என்று கூறினான். வகுப்பிலிருந்த மாணவர்கள் அனைவரும் குபீர் என்று சிரித்தவுடன், ஏற்கனவே சங்கடத்திற்குள்ளாகியிருந்த அந்த மாணவனிடம் அவன், ``ஒருநாள் நீ உன் முடிகளை இழந்து விடலாம், உன் பற்களையும் இழந்து விடலாம், உன் பணத்தை, உன் நினைவைக்கூட இழந்துவிடலாம். ஆனாலும், ஒன்றை மட்டும் நீ இழக்கவே மாட்டாய், அதுதான் உன் நல்ல தோற்றம். ஏனெனில், நீ இதுவரை பெறாத எதையும் எப்போதும் நீ இழக்கப் போவதில்லை.’’ மற்றொரு சமயம் அவன் எங்களிடம் கூறினான்: ``ஒளி, ஒலியைவிட வேகமாகப் பயணம் செய்யும்.  இது ஏன்? ஏனென்றால், சிலர் பார்க்கும்போது மிகவும் பிரகாசமாக இருப்பார்கள். இது அவர்கள் பேசுவதைக் கேட்கும் வரைக்கும்தான்.’’
இதைக்கேட்டபின்னர் எல்லோரும் சிரித்துவிட்டனர். பின்னர் தூக்கம் கண்ணைச் சொருகவே, அனைவரும் தூங்க ஆரம்பித்தனர்.

……

No comments: