Tuesday, May 25, 2021

பாஜக-விற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்திடவேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள் சீத்தாராம் யெச்சூரி

 


பாஜக-விற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்திடவேண்டும்

என்றே மக்கள் விரும்புகிறார்கள்

சீத்தாராம் யெச்சூரி

[கோவிட் 19 மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். இது தொடர்பாக தி இந்து நாளிதழ் செய்தியாளர் ஷோபனா கே.நாயருக்கு அவர் அளித்த நேர்காணல் வருமாறு:]

கேள்வி: கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டாக கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து அறிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் அனைத்து எதிர்க்கட்சியினரையும் இணைப்பதற்கான முயற்சிகள் குறித்துத் தங்களால் சொல்ல முடியுமா?

சீத்தாராம் யெச்சூரி: கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது அலை காலத்தின்போது 21 கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டோம். அதில் அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரைத்திருந்தோம். நேரடியாக ரொக்க மாற்று, அடித்தட்டு மக்களுக்கு இலவசமாக உணவு அளித்தல் உட்பட பல கோரிக்கைகள் அதில் இடம் பெற்றன. ஆனாலும் அரசாங்கம் நாங்கள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ அனுப்பிய எந்தக் கடிதத்திற்கும் பதிலளிக்கவில்லை.

சென்ற ஆண்டு முதலாவது அலை வந்தபோது உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காததற்கான விலையை இப்போது நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடையே ஒரு பொதுத்துன்மை இருக்கிறது. இன்றைய பெருந்தொற்றுக் காலத்தில் ஒவ்வொருவரும் நேரடியாகக் கலந்தாலோசனைகள் மேற்கொள்வது சாத்தியம் இல்லை. ஒவ்வொருவரையும் தொலைபேசிவாயிலாகவோ அல்லது இணையம் மூலமாக சந்திப்பதிற்குச் சற்றே கால அவகாசம் தேவைப்படுகிறது.  ஆனாலும், இந்தப் பிரச்சனை மீது அரசாங்கத்தைப் பதில்சொல்ல வைப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்த ஒரு மேடை அவசியம் தேவை என்றே நான் நினைக்கிறேன். மே 2 அன்று அரசாங்கம் மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் எழுதியிருந்த கடிதத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் நாங்கள் கூட்டாக எழுதி அனுப்பியுள்ள கடைசி இரு கடிதத்திலும் அது கையெழுத்திடவில்லை. ஒன்றுபட்ட எதிர்க்கட்சி முன்னணி அமைப்பதில் அதன் பங்களிப்பு ஒழுங்கற்று இருந்துவருகிறது.

கேள்வி: இத்தகைய உங்களின் முயற்சிகளில் ஆம் ஆத்மி கட்சி எப்போதுமே ஓர் அங்கமாக இருந்ததில்லை. இவ்வாறு ஆம் ஆத்மி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணையத் தயங்குகின்றனவா அல்லது இதர எதிர்க்கட்சிகள் அக்கட்சிகளை இணைத்துக்கொள்ள தயங்குகின்றனவா?  

சீத்தாராம் யெச்சூரி: இதற்கு ஆம் ஆத்மி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும்தான் பதில் சொல்ல வேண்டும். மே 2 கடிதத்தில் பகுஜன் சமாஜ் கட்சி கையெழுத்திட்டது. பின்னர் உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் வந்தன. அதன்பின்னர் வெளியிடப்பட்ட இரு கடிதங்களிலும் அது கையெழுத்திடவில்லை. இவ்வாறு கையெழுத்திடாமல் ஒதுங்கிக்கொண்டதற்கான காரணத்தை அக்கட்சிதான் சொல்ல வேண்டும். இதே போன்றதே ஆம் ஆத்மி கட்சியுமாகும். உண்மையில், ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களும் இத்தகைய முயற்சிகளில் எப்போதும் தங்களை இணைத்துக் கொண்டதில்லை.  

கோவிட்-19 பேரழிவு நாட்டை சீர்குலைத்துக்கொண்டிருக்கக்கூடிய நேரத்தில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டைப் பீடிப்பதற்கு முன்பே நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்திருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  இத்துடன் பெருந்தொற்றும் சேர்ந்துகொண்டபின்னர் மக்களின் வாழ்வாதாரங்களில் கடும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு, அரசாங்கம் மக்களுக்கு நேரடி ரொக்க மாற்று, இலவச உணவு போன்றவற்றைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இதனைச் செய்திருக்கின்றன.

கேள்வி:  எதிர்க்கட்சிகளை இணைத்திடும் இத்தகைய முயற்சிகள் கூட்டுக் கடிதங்கள் அனுப்புவதுடன் வரையறுத்துக்கொள்ளப்படுமா? அல்லது அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமையக்கூடிய விதத்தில் இருந்திடுமா?

சீத்தாராம் யெச்சூரி: உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது. அதற்குள் கங்கை நதியில் அதிக அளவில் தண்ணீர் ஓடும். துரதிர்ஷ்டவசமாக கங்கையில் சடலங்கள் மிதந்து சென்றகொண்டிருக்கின்றன. இதற்கு மோடி அரசாங்கம் மற்றும் மாநில யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஆகியவற்றின் தவறான நிர்வாக நடைமுறைகளே காரணங்களாகும். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளிலிருந்தும் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே பாஜகவிற்கும் இதர மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் மிகவும் குறைவான விதத்தில் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பாஜக-விற்கு பலத்த அடி விழுந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகளையும் பாருங்கள். பாஜக-விற்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றே மக்கள் சுவர்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: கேரளாவில் கொள்கை முடிவின்படி பினராயி விஜயன் தலைமையிலிருந்த முதல் அமைச்சரவையில் அங்கம் வகித்த அனைத்து அமைச்சர்களும் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜாவிற்கு விதிவிலக்கு கொடுத்திருக்க முடியாதா?

சீத்தாராம் யெச்சூரி: அமைச்சரவையில் யாரைச் சேர்ப்பது என்பதும், யாரை விடுவிப்பது என்பதும் கட்சியின் மாநிலக்குழு எடுக்கும் முடிவாகும். அது அங்கே ஒருமனதாக எடுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றை சமாளித்ததில் கே.கே.ஷைலஜாவின் பங்களிப்பு கேரளாவில் மட்டுமல்ல, நாடு முழுதும் மற்றும் உலகம் முழுதும விரிவான அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, பாராட்டுக்களைப் பெற்றது. சென்ற அமைச்சரவையில் அவர் முதல்முறையாகத்தான் அமைச்சராக இருந்தார் என்பதையும் நினைவுகூர்ந்திடுவோம். இரண்டு காரணங்களால் விதிவிலக்கு அளிக்க முடியவில்லை. முதலாவது, நீங்கள் ஷைலஜாவிற்கு விதிவிலக்கு அளிக்கிறீர்கள் என்றால், பின் மிகவும் சிறப்பாகச் செயல்பட்ட நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் குறித்து என்ன சொல்வீர்கள்? அவரும் கேரளாவில் மாற்றுப் பொருளாதாரத் திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக அமல்படுத்தியவர். அதேபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் அவருக்கு இணையாக திறம்படச் செயலாற்றியவர். இதேபோன்று ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். மாநிலங்களவையில் இருதடவைகள் அங்கம் வகித்தேன். மூன்றாவது தடவை எனக்கு அளிக்கவில்லை என்பதற்காக ஏகப்பட்ட கூச்சல். எங்கேயாவது ஒரு விதிவிலக்கை நீங்கள் ஏற்படுத்திவிட்டீர்கள் என்றால் பின் அதுவே விதியாக மாறிவிடும். பெண் தலைவர்களை மேலேகொண்டுவர வேண்டும் என்பதைப் பொறுத்தவரை முன்பிருந்த அமைச்சரவையில் இரு பெண்கள் இடம்பெற்றார்கள். இப்போது மூவர் இடம் பெற்றிருக்கிறார்கள்.  

கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பினராயி விஜயன் அனைவரையும் உந்தித்தள்ளிவிட்டு மேலே வந்துவிடுவார் என்று ஒரு பயம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே, உங்கள் விமர்சனங்கள் என்ன?

சீத்தாராம் யெச்சூரி: இத்தகைய சிந்தனையோட்டங்கள் மேலேயிருந்து கட்டளையிடும் தலைவர்களைக்கொண்ட கட்சியில்தான் காணப்படும். பல அரசியல் கட்சிகளில் இது உண்மைதான். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வித்தியாசமான கட்சியாகும். அது செயல்படும் விதமும் முறையும் அலாதியானதாகும். ஒரு வீர்யம் மிகுந்த உள்கட்சி ஜனநாயகத்தைக் கொண்டுள்ள கட்சி எங்கள் கட்சியாகும்.  எங்களைப் பொறுத்தவரை, கூட்டுத்தலைமையின் முடிவு என்பதே எப்போதும் தனிநபர் முடிவைவிட மேலோங்கியிருக்கும். எவ்வளவோ தடவைகள் பொதுச் செயலாளரின் முடிவுகள் நிராகரிக்கப்பட்டு, கூட்டுத்தலைமையின் முடிவு செயல்படுத்தப் பட்டிருக்கின்றன. என் விஷயத்தில் மட்டுமல்ல, எனக்கு முன்பும் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ஜோதிபாசு பிரதமராக வேண்டும் என்பதற்கு பொதுச் செயலாளர் தோழர் சுர்ஜித்தும் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆயினும் கட்சியின் கூட்டுத்தலைமை தவறு என்று கூறி அதனை நிராகரித்தது. எங்கள் கட்சியின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் இத்தகைய கேள்விகளை எழுப்புவார்கள்.

கேள்வி: மேற்கு வங்கத்தில் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்ட பின்னர் கட்சியின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

சீத்தாராம் யெச்சூரி: மேற்கு வங்க வாக்காளர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய உணர்வு, அங்கே பாஜக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும். ஏனெனில் அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரமே வங்கத்தின் மாண்புகளுக்கும் கலாச்சாரத்திற்கும் எதிரானவைகளாக இருந்தது. வங்கத்தில் வாக்காளர்கள் மத்தியில் பிரதானமாக முன்வந்த கேள்வி, யாரால் பாஜக-வைத் தோற்கடிக்க முடியும் என்பதேயாகும். இத்தகைய உணர்வு வங்கத்தில் மட்டும் இல்லை. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்த மக்கள் மத்தியிலும் இந்த உணர்வு மேலோங்கியிருந்தது. நிர்வாகத்திலிருந்து பாஜக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்கிற உணர்வு அவர்கள் மத்தியிலும் இருந்தது. கேரளாவில் பாஜக-விற்கு முன்பிருந்த ஓரிடம் கூட இப்போது அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. வங்கத்தில் பாஜக-விற்கு எதிரான வாக்கு என்பது திரிணாமுலுக்கு ஆதரவான வாக்கு என்பதைவிட கூடுதலாகச் செயல்பட்டிருக்கிறது.  

பிரிட்டிஷாரிடமிருந்து நாம் பெற்றுள்ள பாரம்பர்யமான தேர்தல் அமைப்புமுறை என்பது இரு கட்சிகளுக்கான போட்டி என்பதேயாகும். இங்கே ஒரு மூன்றாவது கட்சி போட்டியிட்டால்  அது நசுக்கப்பட்டுவிடும்.

ஓர் உண்மையான அரசியல் யுத்தம் இப்போதுதான் தொடங்கி யிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய முகங்கள் பலவற்றைத் தேர்தல் களத்தில் நிறுத்தியது. கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சப்பட்டிருக்கிறது. இப்போது இவர்கள்தான் கட்சியின் எதிர்காலம்.

கேள்வி: ஃபர்புரா ஷேக் மதகுரு அப்பாஸ் சித்திக் தலைமையிலான இந்தியன் மதச்சார்பற்ற முன்னணியுடன் கூட்டணி வைத்தது தவறில்லையா? கட்சி இதுகுறித்து மறுஆய்வு செய்துகொண்டிருக்கிறதா?

சீத்தாராம் யெச்சூரி: தேர்தல் முடிவுகள் குறித்து வங்கத்தில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் மறுஆய்வு மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.  வங்கத்தில் எங்கள் குறிக்கோள் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணிதிரட்ட வேண்டும் என்பதாகும். இந்தியன் மதச்சார்பற்ற முன்னணியில் அங்கம் வகித்திட்ட தலைவர்களில் சிலர் கடந்த காலம் எப்படியிருந்தபோதிலும் அதன் தலைமையில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை மக்கள் இடம்பெற்றிருந்தார்கள். எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவோ அதன்படி நாங்கள் சென்றுகொண்டிருப்போம்.

(நன்றி: தி இந்து (ஆங்கிலம்), 25.5.21)

தமிழில்: ச.வீரமணி

Thursday, May 20, 2021

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை சீனா ஏன் தோல்வியுறவில்லை? -மருத்துவர் மாத்யு வர்கீஸ்

 


கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை

சீனா ஏன் தோல்வியுறவில்லை?

-மருத்துவர் மாத்யு வர்கீஸ்

தமிழில்: ச.வீரமணி

[தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்தாலும், நாட்டில் பொது சுகாதார அமைப்புமுறையை வலுப்படுத்த வேண்டும் அதற்கு அரசாங்கத்தின் தரப்பில் மிகப்பெரிய அளவில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்று கருதும் மருத்துவர்கள் ஒருசிலரேயாகும். அதில் மருத்துவர் மாத்யு வர்கீஸ் ஒருவர். மருத்துவர் மாத்யு வர்கீஸ், பொது சுகாதார வல்லுநரும், புதுதில்லி, செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியின் முன்னாள் இயக்குநருமாவார். இப்போது நாட்டில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை தொடர்பாக ஃப்ரண்ட்லைன் செய்தியாளர், டி.கே.ராஜலட்சுமி அவர்களிடம் அவர் அளித்த நேர்காணல்:]

கேள்வி: கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நிலைமை கட்டுப்பாட்டை மீறி ஏன் மற்றும் எப்படிப் போனது? சென்ற ஆண்டு செப்டம்பரின் மத்தியிலேயே இத்தொற்று மிகவும் வேகமாகப் பரவியதிலிருந்தே இதன்மீது அரசாங்கம் செயல்படுவதற்கு நேரம் இருந்ததே!

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: நாட்டில் எவரேனும் ஒருவர் அரசாங்கத்தின் கொள்கையை அல்லது அரசாங்கத்தின்மீது குறைகாண முயற்சித்தார் என்றால், பின்னர் அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சிலர், அரசாங்கத்தின்மீது குறை சொல்லும் அளவிற்குச் சென்றால், பின்னர் அவர் அரசாங்கத்திற்கு வேண்டப்படாத நபராக மாறிவிடுகிறார். உண்மையான ஜனநாயகம் என்பது இதில் எதுவும் கிடையாது. சிந்தனைகள் வெளிப்படைத்தன்மையுடனும், துல்லியமாகவும், நேர்மையாகவும் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட வேண்டும். ஆனால் நம் நாட்டில் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்ப்பவர்கள் மீது அரசாங்கம் பாயக்கூடிய விதத்தில் நம் நாட்டின் ஜனநாயக அமைப்புமுறை இருந்து வருகிறது. நம்மைப்போன்ற ஒரு நாட்டில் மக்களை எப்படி சௌகரியமாக வைத்திருப்பது என்றும், அவர்களின் துன்ப துயரங்களை எப்படிக் குறைப்பது என்றும் நாம் சிந்திக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில்தான் நான் இதனைப் பார்க்கிறேன்.

நள்ளிரவில் 1.30 மணிக்கு எனக்கு ஒரு சிறுவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அவருடைய அம்மாவைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். என் தொலைபேசி எண் அவனுக்கு எப்படித்தெரிந்தது என எனக்குத் தெரியவில்லை. அவன், அவனுடைய அம்மாவிடம் சாய்ந்துகொண்டு மூச்சை இழுத்து விடுமாறு கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான். இதுபோன்ற நிலைமைகள் மிகவும் கொடியது. ஒரு குழந்தை தன் தாய் தன் கண் முன்னாலேயே இறப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள். என்னே கொடுமையான விஷயம்! உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்ட எங்களால், என்ன செய்ய முடியும்? நோயுற்றிருப்பவர்களைக் கவனித்தக்கொள்பவர்கள் கையறுநிலையில் இருக்கிறார்கள். நிலைமைகள் மிகவும் மனதைக் கசக்கிப் பிழிகின்றன. எந்த அரசாங்கமாக இருந்தாலும், அதன் சித்தாந்த நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், இதுபோன்ற நிலைமை நடக்கக்கூடாது என்பதை நாம் உத்தரவாதம் செய்திட வேண்டும். சுகாதார அமைப்புமுறை உரியவிதத்தில் இருக்க வேண்டும். நோய்க்கு ஆளாகி வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் துன்பதுயரங்களைத் தணிக்கும் விதத்தில் வசதிகள் அமைந்திருக்க வேண்டும். இப்போது இதுபோன்ற நிலைமை இல்லை. எனவே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிந்து, இந்த அமைப்புமுறையைச் சரிசெய்வதில் இருக்கின்ற குறைகள் என்ன என்று ஆராய்ந்து  அதனைக் களைந்திட வேண்டும்.

கேள்வி: பல ஆண்டு காலம் ஒரு மருத்துவராக இருந்து அனுபவப்பட்டுள்ள நீங்கள், இதுபோன்று முன்னெப்போதும் இருந்ததில்லை என்று ஏன் நினைக்கிறீர்கள்?

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: இதற்கு முன் இதுபோன்றதொரு நிலைமையை நாம் எப்போதும் சந்தித்ததில்லை. ஒரு நோயாளியின் மனைவி என்னைத் தொலைபேசியில் அழைத்து, தன்னுடைய கணவரின் ஆக்சிஜன் செறிவூட்டல் அளவு வீழ்ச்சியடைந்துகொண்டிருப்பதாகக் கூறினார். அவர்கள் ஆக்சிஜன் செறிவூட்டல்கள் (concentrators) வைத்திருக்கிறார்கள். அவர் மேலும் தன் கணவரின் செறிவூட்டல் அளவு 83 என்றும் கூறினார். நான் உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்றேன். ஆனால் ஆம்புலன்ஸ் வண்டிகளே கிடைக்கவில்லை. அது நள்ளிரவு. ஆக்சிஜன் செறிவூட்டல்கள் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்கள் அமைப்பது குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது செயல்படவில்லை. அந்த நோயாளியின் உறவினர் ஒருவர் அவருடைய காரில் அவரை ஏற்றிக்கொண்டு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு (ICU) படுக்கை கிடைக்கவில்லை. இதுபோன்று நெஞ்சைப் பிழிந்திடும் நிகழ்வுகள் பலவற்றை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். 

ஒரு 30 வயது பெண்மணி. அவர் கருவுற்று 32 வாரங்கள் ஆகின்றன. அவருடைய ஆக்சிஜன் செறிவூட்டல் அளவு 80ஆக இருக்கிறது. எனவே அவரை ஏதேனும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது அவசியம். ஆனால் எந்த மருத்துவமனையும் அவரை அனுமதித்திடவில்லை. காரணம் அவரை அனுமதிப்பதற்குத் தேவையான ஐசியு படுக்கைகள் அவர்களிடம் இல்லை. அந்தக் குடும்பம் ஒரு ஆம்புலன்சிலேயே காத்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்த ஆக்சிஜன் தீர்ந்துவிட்டது. பின்னர் அவர் வேறொரு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். அப்போது பானிபட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐசியு படுக்கை காலியாக இருப்பதாக செய்தி வந்து அங்கே அவரை கொண்டு சென்றார்கள். அதற்குள் செறிவூட்டல் அளவு 70க்கு வந்துவிட்டது. பின்னர் அவர் வயிற்றில் உள்ள சிசுவுடன் இறந்துவிட்டார். இதுபோன்று ஒவ்வொரு நாளும் ஏராளமான கதைகளுடன் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கேள்வி: ஏன் இந்த அளவுக்கு நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன? தில்லி இந்த அளவுக்கு மோசமான நிலையை எதிர்கொள்ளாது என்று அனைத்துத்தரப்பினர்களும் கருதினார்களா?

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: ப்போது வந்துள்ள அலை மிகவும் வேகமாகப் பரவும் தொற்று ஆகும். முன்பு வந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அந்தக் குடும்பத்தில் ஒருவர்தான் தொற்றுக்கு ஆளானார். ஆனால் இப்போது வந்திருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் தாக்குகிறது. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக வருபவர்களையும் அது தொற்றிக்கொள்கிறது. வைரஸானது அதீதமான தொற்றோடு இல்லாதிருந்தால் இது நடக்காது. இத்தொற்று 80 சதவீதம் லேசான அறிகுறிகளுடன் காணப்படுகிறது. ஆனால் 20 சதவீதம் மிகவும் சீரியசான அறிகுறிகளுடன் காணப்படுகிறது. இவ்வாறு பீடிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அவசியம். நோய்த்தொற்று வெளியே தெரியாது இருப்பவர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆகையால் ஒரு குடும்பத்தில் அனைவரும் ‘பாசிடிவ்’ எனக் கண்டறியப்பட்டால், ஒருவர் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார். 

முன்பு வந்த முதல் அலையின்போது தொற்றால் பாதிக்கப்பட்டவரின் நிலை மோசமாவதற்கு ஏழு நாட்களாயின. ஆனால் இரண்டாவது அலை தொற்றிக்கொண்டால், நான்கைந்து நாட்களிலேயே நிலைமை மோசமடைந்து விடுகின்றன. மிகக்குறுகிய காலத்தில் நிறைய பேர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சென்ற முறை மருத்துவமனைகளில் இவ்வளவு நெருக்கடி இல்லை. இந்தத்தடவை வசதிபடைத்தவர்களுக்குக்கூட மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்கவில்லை.

கேள்வி: மருத்துவமனைகளில் உள்ள சாதாரண படுக்கைகளுக்கும், ஐசியு படுக்கைகளுக்கும் என்ன வித்தியாசம்? இப்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துவிட்டால் என்ன செய்வது?

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: நான், செயிண்ட் ஸ்டீபன்ஸ் மருத்துவமனையில் இயக்குநராக இருந்த காலத்தில் எனக்கு மிகவும் சிரமமாக இருந்த விஷயங்களில் ஒன்று, நோயுற்றிருப்பவரிடம் எங்கள் மருத்துவமனையில் ஒரு வெண்டிலேட்டர் இல்லை என்று கூறுவதாகும். இதற்கு எப்போதும் பற்றாக்குறை இருக்கும். எந்தவொரு மருத்துவமனையாக இருந்தாலும், 10-15 சதவீதப் படுக்கைகள்தான் ஐசியு-க்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இவற்றிலும் சிலவற்றில்தான் வெண்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும். அடுத்து, வெண்டிலேட்டர்கள் இயக்கும் ஊழியர்கள் கிடைப்பது என்பதும் அரிது. வழக்கமான மருத்துவர் ஒருவரால் அதனை இயக்கிட முடியாது. நான் கணிசமாக சில ஆண்டுகள் பயிற்சி பெற்று மருத்துவராக இருந்தவன்தான். ஆனால் எனக்கும் ஒரு வெண்டிலேட்டரை இயக்கத் தெரியாது.  எனவே ஒரு மருத்துவமனையில் வெண்டிலேட்டர்கள் வாங்க முன்வந்தாலும், அவற்றை இயக்கும் ஊழியர்களை அவ்வளவு எளிதாகப் பெற்றுவிட முடியாது.

இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றே காரணமாகும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அவர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வைத்திருப்பதனை எதிர்பார்த்துத் திட்டமிட்டிருக்க முடியும். ஏற்கனவே இவை மிகவும் குறைவாக இருந்தன. மேலும் நோய்த்தொற்றாளர்களைக் கவனித்துக்கொள்வதற்குத் தேவையான ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பயிற்சிபெற்ற ஊழியர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் பற்றாக்குறையுடன் காணப்படுகிறது.

வெண்டிலேட்டர்கள் உயர்தொழில்நுட்பக் கருவியாகும். இதன் விலை சுமார் 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய் வரைக்கும் இருந்திடும். சாதாரணமாக அடிப்படையான வெண்டிலேட்டரை 7 லட்சம் ரூபாய்க்குப் பெற்றிடலாம். ஆனால், உயர்தொழில்நுட்ப வெண்டிலேட்டர்தான் இப்போது நமக்கு மிகவும் தேவையாகும். அநேகமாக இப்போது பல மருத்துவ மனைகளில் உள்ள வெண்டிலேட்டர்களால் பயனேதும் இல்லை.  உயர்தொழில்நுட்ப வெண்டிலேட்டர்களின் தேவை ஒவ்வொரு நகரத்திற்கும் தேவைப்படுகிறது. மேலும் அதனை இயக்கிடும் ஊழியர்களும் மிகப் பெரிய அளவில் தேவைப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ் முதல் அலை வந்தபோதே நாம் வெண்டிலேட்டர்களின்றி சிரமப்பட்டோம். அப்போதும் ஐசியு படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் பெரிய பிரச்சனையாகத்தான் இருந்தது. ‘வெண்டிலேட்டர்களில் வைக்கப்பட்டவர்கள் எப்போது சாவார்கள், நமக்கு இடம் கிடைக்கும்’ என்று மற்றவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். 

நாளை எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனாலும் அரசாங்கம் இதற்குத் திட்டமிட வேண்டும். இதற்குத் தேவையான அளவிற்கு தொழில்நுட்பப் பயிற்சியாளர்களை உருவாக்குவதற்கான நிறுவனங்களை ஏற்படுத்திட வேண்டும். அவ்வாறெல்லாம் செய்தாலும்கூட இப்போதிருந்திடும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானவை அல்ல.  தனிமைப்படுத்தப்பட வேண்டிய நோயாளிகள், லேசான பாதிப்புகளுடன் வரக்கூடிய நோயாளிகள் மற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரையும் எப்படி நாம் கையாளப் போகிறோம்? இப்போது எவரேனும் ஒருவரின் நோய்த்தொற்று சீரியசாகிவிட்டதென்றால், அவரை வைப்பதற்கு வெண்டிலேட்டர் இல்லை என்றால், அவருடன் வந்திருக்கும் உறவினர்களிடம் வெண்டிலேட்டர்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்கிறோம். ஏழையாக உள்ள உறவினர்கள் இங்குமங்கும் ஓடுவதைத் தவிர அவர்களால் என்ன செய்ய முடியும்?

சிகிச்சையளித்திடும் நெறிமுறைகளே பேரிடர்க்கு ஆளாகியிருக்கிறது.  சிசிச்சை முறைகள் லேசாகப் பாதிக்கப்பட்ட நபருக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும், மிதமாகப் பாதிக்கப்பட்ட நபருக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும், கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுகின்றன.  ஒருவரின் நிலை, லேசானதா, மிதமானதா அல்லது கடினமானதா என்பதற்கு அவருக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் செறிவு அளவை வைத்து நிர்ணயித்திட வேண்டும்.

இப்போது நாம் என்ன பார்க்கிறோம்? அரசின் கொள்கை முடிவுகள் வலுவானவைகளாக இல்லை. உதாரணமாக, அனைத்து அரசாங்க மருத்துவமனைகளும் கோவிட் மருத்துவமனைகளாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே ஒருவர் அங்கே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவருக்கு கோவிட் தொற்று இருந்திட வேண்டும். பல இடங்களில் பல பேர் பொய்யாக ‘நெகடிவ்’ எனக் கூறப்பட்டிருக்கிறார்கள். எனவே உண்மையில் ‘பாசிடிவ்’ ஆகித் தொற்றுக்கு ஆளானவர்கள், சுதந்திரமாகச் சுற்றித்திரியும்போது தொற்றை அதிகப்பேருக்குப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் நிலைமைகள் கையை மீறிப் போய்விடுகின்றன.

எனக்கு உத்தர்காண்டில் ஒரு குடும்பத்தைத் தெரியும். அக்குடும்பத்தில் உள்ள அனைவரும் ‘பாசிடிவ்‘ என அறிவிக்கப்பட்டார்கள். பின்னர் உள்ளூரிலிருந்த நர்சிங் ஹோம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்கள். பின்னர் கடைசியாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்கள். குடும்பத்திலிருந்த அனைவருமே சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டதால் அவர்களைப் பார்த்துக்கொள்ள எவருமில்லை. எனவே தில்லியிலிருந்த அவர்களின் சகோதரர், தன்னுடைய மகனுடன் அங்கே விரைந்தார். அவர்களைச் சோதனை செய்தபோது அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு ‘பாசிடிவ்’ எனக் கண்டறியப்பட்டார்கள். கடைசியல் சகோதரர்கள் இருவருமே இறந்துவிட்டார்கள், ஒருவர் தில்லியிலும், ஒருவர் ரிஷிகேஷிலும் இறந்துவிட்டார்கள். இவர்களுக்கு சிகிச்சையளித்திடும் மருத்துவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போமோ என்று பயந்துகொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்குப் பர்சனல்  பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும், அவர்கள் நோயாளிகளைத் தொடுவதில்லை  என்ற போதிலும், இந்தப் பயம் அவர்களிடம் காணப்படுகிறது.

கேள்வி: கோவிட் சிகிச்சைக்கான நெறிமுறைகளுடன் நீங்கள் ஒத்துப்போகவில்லையா?

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: ஐவர்மெக்டின் (Ivermectin) எதற்கான மருந்து என்று பார்த்திருக்கிறீர்களா? இணைய தளத்தில் தேடிப்பாருங்கள். அது ஒட்டுண்ணி, உருளைப்புழு, நாக்குப்பூச்சி போன்ற ஒட்டுண்ணி தொடர்பான தொற்றுகளுக்கானதாகும். இது கோவிட்-19ஐக் குணப்படுத்தும் என்பதற்கு எந்த சாட்சியமும் கிடையாது. அந்த மருந்துகளே சந்தேகத்திற்குரியவை களாகும்.   

அதேபோன்றே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பிளாஸ்மா தெரபி (plasma therapy) சிகிச்சை, பிளாஸ்போ தெரபி (plasbo therapy) சிகிச்சையைவிட அதிக வலுவுள்ளது என்பதற்கும் எவ்விதமான சாட்சியமும் கிடையாது என்று கூறியிருக்கிறது. பின் ஏன் இந்த மருந்துகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்களைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை? பிரச்சனை என்னவென்றால் இப்போதுள்ள சிகிச்சை நெறிமுறைகளின்படி மருத்துவர்கள் இதைத்தான் பரிந்துரைப்பார்கள். ஒரு நோய் புதிதாக இருக்குமானால், அந்த நோய் குறித்து போதுமான புரிதல் மக்கள் பெற்றிருக்கமாட்டார்கள். இதுபோன்ற சமயங்களில் மக்களும் இதுதொடர்பாக ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியமாகும்.   

ஹார்வார்ட் மற்றும் ஸ்டான்போர்டு போன்ற நிறுவனங்களில் எலும்பியல் துறையில் 30 பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவருமே மருத்துவத்துறையைச் சார்ந்த எலும்பியல் மருத்துவர்களாக இருக்க மாட்டார்கள். இவர்களில் 15 பேர் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியர்களாக இருப்பார்கள். இதுபோன்று நம் மருத்துவக் கல்லூரிகளில் ஆராய்ச்சி மாணவர் குழுக்கள் கிடையாது. இங்கே இது மிதமிஞ்சிய ஒன்றாகக் கருதப்பட்டது. முன்பெல்லாம் வேலைகள் உத்தரவாதமாக இருந்தன. மத்திய அரசின் தேர்வாணையம் (UPSC) மூலம் நியமனம் செய்யப்படுபவர்கள் எல்லாம் நிரந்தரப்படுத்தப்பட்டனர். இன்றையதினம், அனைத்துப் புதிய நியமனங்களும் ஒப்பந்த அடிப்படையில் உள்ளன. ஓய்வூதியத்திற்கு வாய்ப்பு இல்லை. இந்த மருத்துவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் ஐந்தாண்டு காலம் வேலை பார்க்கிறார்கள். இவர்களில் யார் சிறந்த மருத்துவர்கள் என்று அநேகமாக அனைவருக்கும் தெரியும். பின்னர் அவர்களைத் தனியார் மருத்துவமனைகள் வேட்டையாடித் தங்கள் மருத்துவமனைகளுக்குள் இழுத்துக் கொள்கின்றன. இவ்வாறாக இப்போது நாட்டில் மருத்துவத்துறையில் கார்ப்பரேட்மயம் ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  ஒருவருக்கு ஓய்வூதியம் இல்லை என்கிற பட்சத்தில், அவர் கார்ப்பரேட் துறைகளில் வேலைக்குச் சேர்ந்து எந்த அளவிற்கு சம்பாதிக்க முடியுமோ அந்த அளவிற்கு சம்பாதிப்பதில் குறியாக இருக்கிறார்.

கேள்வி: உலகில் நன்கு வளர்ந்த முதலாளித்துவ நாடுகளே சுகாதார அமைப்பில் நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது என்றும், எனவே இந்தியா இதற்கு விதிவிலக்கு அல்ல என்றும் அரசாங்கத்தின் தரப்பில் கூறப்படுகிறதே!

மருத்தவர் மாத்யு வர்கீஸ்: ஆம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றைப்பொறுத்தவரை அதுதான் நடந்திருக்கிறது. சுகாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறதுதான். ஆனாலும், அவர்கள் ஆக்சிஜன் இல்லாமல் திண்டாடுகிறார்களா? இல்லை. பெரிய மருத்துவமனைகள் அனைத்தும் தங்கள் சொந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இங்கே என்ன நிலைமை? தில்லியில் நஜாப்கர் சாலையில் செயல்பட்டுவந்த பெரிய இந்தியன் ஆக்சிஜன் லிமிடெட் ஆலை மூடப்பட்டுவிட்டது. அங்கேயிருந்த மாசு உண்டாக்கும் அனைத்துத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுவிட்டதால், அதுவும் மூடப்பட்டுவிட்டது.

500 படுக்கைகளுக்கு  மேல் உள்ள மருத்துவமனைகள் ஆக்சிஜன் ஆலைகளைப் பெற்றிருக்க வேண்டும். இதனைக் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயமாக அரசாங்கம் அறிவித்திட வேண்டும். 

இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையில் சீனா ஏன் தோல்வியுறவில்லை. அவர்களிடம் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது என்றோ பர்சனல் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றோ எவரும் கூறமுடியாது. அங்கே பெரிய அளவில் மக்கள் புலம்பெயர்ந்து செல்லவில்லை. அவர்கள் எந்த நோயாளியையும் சிகிச்சை செய்யாமல் துரத்தி அனுப்பிடவில்லை.  மேற்கத்திய நாடுகள் ஒருவரை சிகிச்சைக்காக அனுமதித்திட சில நிபந்தனைகளை வைத்திருக்கின்றன. அவற்றைப் பூர்த்தி செய்துவிட்டால் அவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்தியாவில் டிராலிகளிலும், ஆம்புலன்ஸ்களிலும் நோயாளிகள் இறந்துகொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சுகாதார அமைப்புமுறை எக்காரணம் கொண்டும் தனியார்மயமாகக்கூடாது.

(நன்றி: ஃப்ரண்ட்லைன்)

 

Tuesday, May 18, 2021

முக்கியமான பிரச்சனைகள் மீது இணையம் வழி பொதுக்கூட்டம் -அசோக் தாவ்லே

 


முக்கியமான பிரச்சனைகள் மீது இணையம் வழி பொதுக்கூட்டம்

-அசோக் தாவ்லே

நாட்டில் நம் மக்கள் எதிர்கொள்ளும் எரிகிற பிரச்சனைகள் மீது இணையம் வழி பொதுக்கூட்டம் ஒன்றை நடத்திட 2021 மே 8 அன்று சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டது. நாடு முழுதும் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

இப்பொதுக்கூட்டத்தில் சிஐடியு-வின் பொதுச் செயலாளர் தபன்சென், அகில இந்திய விவசசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.வெங்கட் சிறப்புரையாற்றினார்கள். இப்பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு-வின் தலைவர் கே. ஹேமலதா, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ.விஜயராகவன் தலைமைக்குழுவாக இருந்து கூட்டத்தை வழிநடத்தினார்கள்.

முதலில் கோவிட் பெருந்தொற்றின் பயங்கரமான இரண்டாவது அலைக்குப் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆக்சிஜன், வெண்டிலேடர்கள், மருந்துகள், மருத்துவமனைப் படுக்கைகள் கிடைக்காது மரணித்திருக்கிறார்கள். இந்தச் சாவுகள் தடுக்கப்பட்டிருக்கக்கூடிய சாவுகளாகும்.

இதனை எழுதும் இன்றைய தினம் (மே 12), இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.3 கோடியைத் தாண்டி விட்டது. கோவிட் மரணங்கள் 2.5 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இவ்விரண்டு இலக்கங்கள், உலகில் உச்ச அளவில் இரண்டாவதாக (second highest) இருப்பதாகும். (முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது.) ஆனால், கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், பலியாகிறவர்கள் எண்ணிக்கையும் சராசரியாக நான்காயிரத்தைத் தாண்டி இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய பின்னர் உலகில் இது மிகவும் உச்ச அளவிலான எண்ணிக்கைகளாகும். உண்மையில் இவைகூட குறைந்த மதிப்பீடுகளேயாகும். உண்மையான எண்ணிக்கைகள் அநேகமாக இதைப்போல் குறைந்தபட்சம் ஐந்து மடங்குக்கும் அதிகமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  

மே 10 அன்று தடுப்பூசியின் முதல் ஊசியைப் போட்டுக்கொண்டவர்கள் வெறும் 9.9 சதவீதத்தினர் மட்டுமே. முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் வெறும் 2.6 சதவீதத்தினர் மட்டுமேயாகும்.

இவ்வாறு நாட்டில் நிலைமைகள் மிகவும் மோசமாகச் சென்றிருப்பதற்கான குற்றப் பொறுப்பு (criminal liability) என்பது, நரேந்திர மோடி அமித் ஷா இரட்டையரால் தலைமை தாங்கப்படும் மத்திய பாஜக/ஆர்எஸ்எஸ் அரசாங்கத்தின் அறிவியல்பூர்வமற்ற அணுகுமுறை, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்திட எவ்விதமான திட்டமிடலும் இல்லாமை ஆகியவையே காரணங்களாகும் என்று இப்போது நாடு தழுவிய அளவிலும் உலக அளவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை இப்பொதுக்கூட்டத்தில் உரைநிகழ்த்திய அனைவரும் கூறினார்கள்.  இவ்வாறு நாட்டில் கொடூரமான முறையில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவிக்கொண்டிருக்கின்ற போதிலும்கூட ஆட்சியாளர்கள் இதனைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, மிகவும் அருவருக்கத்தக்கவிதத்தில் ஆடம்பரமான தங்களுடைய மத்திய விஷ்டா திட்டத்தின்கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தையும், பிரதமருக்கான இல்லத்தையும் கட்டுவதற்கான வேலைகளில் தீவிரமாக ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.

மறுபக்கத்தில் இந்த அரசாங்கம் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை, நாட்டில் செல்வாதாரங்களை உற்பத்தி செய்து தரும் அடிப்படை வர்க்கங்களான தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவதற்காகக் கேவலமான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. புதிய வேளாண் சட்டங்கள், புதிய தொழிலாளர் (விரோத) சட்டங்கள் மற்றும் மின்சார திருத்தச் சட்டமுன்வடிவு ஆகியவற்றைக் கொண்டுவந்திருப்பதன் மூலம் இதனைச் செய்திருக்கிறது. சென்ற ஆண்டு புலம்பெயர் தொழிலாளர்களிடம் எந்த அளவிற்கு இதயமற்றமுறையில் இது நடந்துகொண்டது என்பதைப் பார்த்தோம். நாட்டிலுள்ள பெரும் துறைகள் அனைத்தையும் தனியாரிடம் தாரைவார்த்திட கூச்சநாச்சமின்றி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. பசி-பட்டினி, வேலையின்மை, விலைவாசி உயர்வு அனைத்தும் மிகவும் உச்சத்தில் இருக்கின்றன. இவையனைத்துமே, ஆட்சியாளர்கள் அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டும் விதத்தில் திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவேயாகும்.

நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும், உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களிலும் பாஜக படுதோல்வியடைந்ததை பேசிய அனைவரும் வரவேற்றார்கள். குறிப்பாக கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றதை அவர்கள் புகழ்ந்தார்கள். இது மக்கள் ஆதரவு கொள்கைகள் மற்றும் செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றி என்று அவர்கள் பாராட்டினார்கள்.

நிறைவாக, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்களுக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவிட வேண்டும் என்றும் மோடி ஆட்சியைத் தோலுரித்துக்காட்டும் விதத்தில் நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்கள். இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள்:

(1)         தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்துக, ஆறு மாத காலத்திற்குள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுவதை உத்தரவாதப் படுத்துக.

(2)         மக்கள் விரோத, பாகுபாடு காட்டும், கார்ப்பரேட் ஆதரவு தடுப்பூசிக் கொள்கையைக் கிழித்தெறிக.

(3)         இணையம் வழி பதிவு என்பதைக் கைவிட்டு, கிராமப்புறங்களில் மொபைல் தடுப்பூசி மையங்களை அமைத்திடுக.

(4)         மருத்துவமனைப் படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் இதர மருத்துவ வசதிகளை  உத்தரவாதப்படுத்துக.

(5)         பொது சுகாதார உள்கட்டமைப்புவசதியை வலுப்படுத்துக, தேவையான அளவிற்கு சுகாதார ஊழியர்களை நியமனம் செய்திடுக.

(6)         கோவிட் தொற்றால் பாதிக்கப்படாத நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் வலுவானமுறையில் சிகிச்சை அளிப்பதை உத்தரவாதப்படுத்துக.

(7)         மக்கள் விரோத வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் (விரோத) சட்டங்களையும் மின்சார திருத்தச் சட்டமுன்வடிவையும் கிழித்தெறிக.

(8)         குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் கொள்முதலை உத்தரவாதப்படுத்திட மத்தியச் சட்டம் இயற்றிடுக.

(9)         பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்துக.

(10)       வருமான வரி செலுத்தாத குடும்பத்தினருக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்க மாற்று அளித்திடுக.

(11)       அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தான்யங்களை இலவசமாக அளித்திடுக.

(12)       மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், நாள் ஊதியம் 600 ரூபாயும் அளித்திடுக.

(13)       தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்படும் எந்த ஆணையாக இருந்தாலும் அதனைக் கறாராக அமல்படுத்துக.

(14)       ‘ஆஷா’ ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்துக. அவர்கள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டுத் திட்டங்களை உருவாக்கிடுக.

(15)       சென்ட்ரல் விஷ்டா திட்டத்தைக் கிழித்தெறிக. பிஎம்கேர்ஸ் என்னும் தனியார் அறக்கட்டளை மூலம் வசூலித்த தொகைகளுக்கு, வெளிப்படைத்தன்மையுடன் கணக்கு காட்டுக.  

இக்கோரிக்கைகளின் அடிப்படையில் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 16.05.21)

தமிழில்: ச.வீரமணி

Monday, May 17, 2021

மோடி அரசாங்கம், கோவிட் நெருக்கடியிலிருந்து மீளமுடியாது இருட்டில் தடவிக்கொண்டிருப்பதால், நீதிமன்றங்கள் உதவ முன்வந்திருக்கின்றன.

 


மோடி அரசாங்கம், கோவிட் நெருக்கடியிலிருந்து மீளமுடியாது இருட்டில் தடவிக்கொண்டிருப்பதால், நீதிமன்றங்கள் உதவ முன்வந்திருக்கின்றன.

-சவெரா 

நீங்கள் மக்களை மரணத்தின் வாய்க்குள் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்.(“you are driving people into the jaws of death.”), நீங்கள், எதார்த்த உண்மைகளைத் தொடாமலேயே, ஒரு வண்ணச்சித்திரத்தைத் தீட்டிக் கொண்டிருக்கிறீர்கள். (you are painting a rosy picture, not in touch with ground reality.)உங்களை அநேகமாகக் கொலைக் குற்றச்சாட்டுக்களின்கீழ் பதிவு செய்திடணும்.” (“You should be booked on murder charges probably.”) நீங்கள் கடந்த 10-15 மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?, நீங்கள் என்ன செவ்வாய்க் கிரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா? “Are you living on Mars?”

கடந்த சில வாரங்களாக மத்திய அரசாங்கத்தையும் மற்றும் அதன் பல்வேறு அதிகாரக்குழுமங்களையும் நோக்கி நாட்டிலுள்ள பல உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கூற்றுகள்தான் மேலே உள்ளவைகளாகும். மிகவும் பயங்கரமான முறையில் பரவிக்கொண்டிருக்கும் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை குறித்து சுமார் 14 உயர்நீதிமன்றங்கள் இவ்வாறு கருத்துக்களைக் கூறியிருக்கின்றன. 2021 ஏப்ரல் 1க்குப்பின்னர் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இத்தகு நிலையில்தான் நீதிபதிகள் மேற்கண்டவாறு தங்கள் கோபத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். அரசின் கீழான ஸ்தாபனங்கள் மூலமாக இதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக தங்களாலான முயற்சிகளை மேற்கொண்டிருக் கிறார்கள்.

நாட்டிலுள்ள பல உயர்நீதிமன்றங்கள் இது தொடர்பாக என்ன கூறியிருக்கின்றன எனக் கீழே சுருக்கமாகப் பார்ப்போம். ஆனால், அதற்கு முன்பு, நாம் சில விஷயங்களைக் குறித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலைக்கு எதிராக எவ்விதத் தயாரிப்பு வேலைகளிலும் இறங்காதிருந்ததற்கு, நீதித்துறையின் பல்வேறு மட்டங்களில் உள்ள நீதிமன்றங்களும் முதலாவதும், முதன்மையானதுமான காரணமாகும். இந்திய மற்றும் உலக அறிவியலாளர்கள் இரண்டாவது அலையின் ஆபத்து குறித்துத் திரும்பத்திரும்ப எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் மத்தியில் உள்ள மோடி அரசாங்கமும், பல்வேறு மாநில பாஜக அரசாங்கங்களும் தங்களின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து துதிபாடுவோர்களின் பேச்சுக்களைக் கேட்டு மதிமயக்கத்திலிருந்தன. டாவோஸில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலகத்திற்கே இந்தியா வழிகாட்டுவதாகப் பீற்றிக் கொண்டார். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்த விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது என்றார். பல்வேறு மாநில முதலமைச்சர்கள் அல்லது முக்கியமான தலைவர்கள் இனி முகக்கவசங்களே தேவைப்படாது என்றும், கங்கை நதி அனைத்து வைரஸ்களையும் அடித்துச் சென்றுவிட்டது என்றெல்லாம்  கூறிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், அறிவியலார்கள் ஊகித்துக்கூறியபடி, இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கியபோது, ஏற்கனவே முடமாகிப் போயிருந்த பொது சுகாதார அமைப்புமுறை மேலும் நொறுங்கியது, அதன் சங்கிலிப் பிணைப்புகள் அனைத்தும் அறுந்துவிட்டன. தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்குப் போதிய மருத்துவ ஆக்சிஜன் இல்லை, உயிர்காக்கும் மருந்துகள் இல்லை, சுகாதாரப் பாதுகாப்பு ஊழியர்கள் அளவுக்குமீறி வந்து குவிந்துகொண்டிருக்கும் நோயாளிகளைக் கவனிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றின் காரணமாக நாட்டு மக்கள்   ஆயிரக்கணக்கானவர்கள் மரணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

இத்தகைய இக்கட்டான விரக்தி நிலையில்தான் பலர் உச்ச நீதிமன்றத்தை அல்லது உயர்நீதிமன்றங்களை அணுகியிருக்கிறார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் பெரிதாக ஒன்றும் கோரவில்லை. பாதிக்கப்பட்டு வருவோருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கை அளியுங்கள் என்றுதான் கோருகிறார்கள். சிலர் உயிர்காக்கும் மருந்துகளை நியாயமான விலையில் அளிக்குமாறு கோருகிறார்கள். சிலர் அரசாங்கங்கள் செய்துள்ள தவறுகளுக்குப் பரிகாரம் காண்பதற்காகப் பெரிய அளவில் தலையிடுமாறு கோரி இருக்கிறார்கள். 

இரண்டாவதாக, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் பேரழிவு ஏற்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய இன்றைய நிலையில் உச்சநீதிமன்றத்தைக் காட்டிலும், நாட்டிலுள்ள பல உயர்நீதிமன்றங்கள் இதற்கு எதிராக மிகவும் சுறுசுறுப்புடன் தலையிட்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. உயர்நீதிமன்றங்கள் நிலைமையை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன, என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து கூறிக்கொண்டிருக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலை குறித்து அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்று அவை விரும்புகின்றன. மேலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் அவை விரும்புகின்றன. இவ்வாறு உயர்நீதிமன்றங்கள் கூறியபோதிலும், அவை கேட்டுக்கொண்டதுபோல் எல்லாம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும், நீதிமன்றங்களின் தலையீடுகளை அடுத்து, பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அரசாங்கங்களின் தரப்பில் ஏதோ கொஞ்சம் நிவாரணம் அளிக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவதாக, இந்தப்பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தலையிட, வெகுநாட்களாகத் தவிர்த்து வந்தது, தயங்கி வந்தது, மெத்தனப்போக்கையே கடைப்பிடித்து வந்தது போன்றே தோன்றியது. 2021 ஏப்ரல் 21 அன்றுதான் கோவிட் நெருக்கடி தொடர்பாக அது விசாரணையைத் தொடங்கியது. நான்கு பிரச்சனைகளின்மீது பல்வேறு தலையீடுகளை மேற்கொள்ளுமாறு அது கேட்டுக் கொண்டது. ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசி மற்றும் சமூகமுடக்கத்தைப் பிரகடனம் செய்திட அரசாங்கங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்துதல் ஆகிய நான்கு பிரச்சனைகள் மீதும் தலையீடுகளைக் கோரியது. சென்ற ஆண்டு இப்பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே ஒரு தேசியத் திட்டம் இருப்பதாக மத்திய அரசு ஏமாற்றும் விதத்தில் கூறியதை அப்படியே  உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும்,   இப்போது இதற்கு எதிராக ஒரு ‘தேசியத் திட்டம்’ அமைத்திடக் கோரி இருக்கிறது. உண்மையில், உச்சநீதிமன்றம் சென்ற ஆண்டு மத்திய அரசாங்கம் அளித்திட்ட பொய் அறிக்கைகளின் அடிப்படையிலேயே செயல்பட்டது. மத்திய அரசாங்கம், புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை எதுவும் கிடையாது என்று கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆனால் பின்னர் எதார்த்த உண்மை நிலவரங்கள் உலகம் முழுவதும் பரவியபின்னர்தான், அது ஏதோ கொஞ்சம் எதிர்வினை ஆற்ற முயற்சித்தது. கடந்த சில வாரங்களுக்குப்பின்புதான்--சிலர் தலைமை நீதிபதி பாப்டே ஓய்வுபெற்றபின்னர் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்--உச்சநீதிமன்றம் இந்தியாவின் வரலாற்றில் மிகவும் துயரார்ந்த அத்தியாயங்களாக இருக்கக்கூடிய இன்றைய நிலை குறித்து ஏதேனும் செய்திடவேண்டும் என்ற நிலைக்கு உண்மையில் வந்திருக்கிறது.

உச்சநீதிமன்றம், ஆக்சிஜன் சப்ளையை உத்தரவாதம் செய்வதற்கு ‘அதிரடிப் படை’ (‘task force’) அமைத்திட வேண்டும் என்றும், எந்தவொரு மருத்துவமனையும் அனுமதிகோரி வரும் நோயாளியை அனுமதித்திட மறுக்கக்கூடாது என்றும், உதவி கோரி வருபவர்களை, உத்தரப்பிரதேசத்தில் மிகவும் வினோதமான முறையில் நடந்ததைப்போல காவல்துறையினரோ அல்லது நிர்வாகத்தினரோ துன்புறுத்தக்கூடாது என்று கட்டளைகள் பிறப்பித்தது.

அதேசமயத்தில், பல உயர்நீதிமன்றங்கள் கடந்த சில மாதங்களாக செய்து வந்ததைப்போல, பல மாநிலங்களிலும் உள்ள அரசாங்கத்தின் கொள்கையை மேற்பார்வையிடும் பணியைத் தொடர்ந்தன.  மத்திய அரசாங்கம் மற்றும் இதர அதிகாரக் குழுமங்களின் மீதும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தன.

அவற்றின் முயற்சிகளைச் சுருக்கமாகக் கீழே தந்திருக்கிறோம்.

குஜராத்

நீதிமன்றங்களின் தலையீடுகளில் ஒன்று, ஏப்ரல் 11 அன்று குஜராத் உயர்நீதிமன்றம் கொரொனா வைரஸ் பெருந்தொற்று சம்பந்தமாக, மனதை உலுக்கும் கதைகள், துரதிரஷ்டவசமான மற்றும் கற்பனை செய்யமுடியாத அளவில் உள்ள சிரமங்கள், மிகவும் சிதிலமடைந்துள்ள நிலையில் உள்ள உள்கட்டமைப்புவசதிகள், பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்வது மட்டுமல்லாமல், போதிய அளவிற்கு படுக்கைகள் இன்மை, அவசர காலப் பிரிவுகள் செயல்படாமை, போதிய அளவிற்கு மருத்துவ ஆக்சிஜன் இன்மை, ரெம்டெசிவிர் போன்ற அடிப்படை மருந்துகள் இன்மை ஆகியவற்றையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. முன்னதாக நீதிமன்றம், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாது தடுப்பதற்காக சமூக முடக்கத்தை அறிவிக்க அரசாங்கம் பரிசீலனை செய்திட வேண்டும் என்றும் கேட்டிருந்தது.

மாநிலத்தில் கோவிட் நெருக்கடி வெடித்துச்சிதறியிருப்பதைப் பூசிமெழுகும் விதத்தில் அரசாங்கம் அறிக்கைகள் அளிப்பதைத் தொடர்வது குறித்து, நீதியரசர் கரியா, ஏப்ரல் 27 அன்று கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்: அரசாங்கத்தின் உறுதிவாக்குமூலம் ஓர் அழகான சித்திரத்தைத் தீட்டிக்கொண்டிருக்கிறது. அது நாட்டில் நிலவும் எதார்த்தத்தைத் தொடக்கூடியவிதத்தில் இல்லை. நாம் தந்தக் கோபரங்களின் மேல் அமர்ந்திருக்க முடியாது. இந்தக் தொற்றின் தொடர் கண்ணிகளை உடைத்தெறிய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் எவரும் சிகிச்சை அளிக்கப்படாமல் இல்லை என்ற உத்தரவாதத்தை மாநில அரசாங்கம் அளித்திட வேண்டும், என்று தலைமை நீதிபதி விக்ரம் சேத் கூறினார்.  

சென்னை

ஏப்ரல் 26 அன்று சென்னை உயர்நீதிமன்றமானது, மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில், தேர்தல் பேரணிகளில் முகக் கவசங்கள்,  தனிநபர் இடைவெளி மற்றும் சானிடைசர்கள் பயன்படுத்துவது போன்ற அடிப்படைப் பாதுகாப்புகளை வலியுறுத்தாததற்காகத் தலைமைத் தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தது. கோவிட்-19இன் இரண்டாவது அலை பரவுவதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று நீதிமன்றம் கூறியதுடன், தேர்தல் ஆணைய அதிகாரிகளை, அநேகமாகக் கொலைக் குற்றச்சாட்டின்கீழ்கூட விசாரணை செய்திட வேண்டும், என்ற அளவிற்குச் சென்றது. உடனடியாகத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்திற்கு விரைந்து, இத்தகைய கருத்துக்கள் அழிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. மேலும் இதுபோன்று நீதிமன்றங்களில் நீதிபதிகள் உதிர்த்திடும் வார்த்தைகளை ஊடகங்கள் பதிவு செய்வதற்குத் தடை விதித்திட வேண்டும் என்றும் கோரியது. எனினும் உச்சநீதிமன்றம் இந்தக் வேண்டுகோள்களை நிராகரித்துவிட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கடுமையான கருத்துக்கள், தூக்கத்திலிருப்பவர்களை எழுப்பக்கூடிய அளவிற்குப் பயன்பட்டிருப்பதாகக் கூறினார்கள்.  இந்தத் தடவை நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்களைத் தேர்தல் ஆணையம் நடத்திய விதம் குறித்து விமர்சனத்திற்கு உள்ளானதை இந்தத் தருணத்தில் நினைவுகூர்ந்திடலாம். பல இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அப்பட்டமாக மீறப்பட்டன. குறிப்பாக பிரதமர் மேற்கு வங்கத்தில் அசன்சால் தொகுதியில் திரட்டப்பட்ட மக்கள் திரளைப் பார்த்து, அவர் பாராட்டிக் கையசைத்ததைக் குறிப்பிடலாம்.

 அடுத்து சில தினங்களில் ஏப்ரல் 30 அன்று, தாமாகவே ஒரு மனுவின்மீது நடவடிக்கை எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், மோடி அரசாங்கத்தைப் பார்த்து, கொரோனா அதிகரித்துக் கொண்டிருப்பதற்காக, கடந்த 10-15 மாதங்களாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று இழுத்துப்பிடித்தது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கையாண்டிட தற்காலிகமான முறையில் நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. மத்திய அரசாங்கம் வல்லுநர்களின் அறிவுரைகளுடன் திட்டமிட்டமுறையில் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். … சமூக முடக்கம் அநேகமாக ஓராண்டு அமல்படுத்தப்பட்டபின்னரும், இப்போதுள்ள நிலைமையைப் பாருங்கள்… என்று அது கூறியிருக்கிறது.  

அலகாபாத்

ஏப்ரல் 19 அன்று, அலகாபாத் உயர்நீதிமன்றம், மாநிலத்தில் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்று வேகமாகப் பரவிக்கொண்டு வருவதால், மாநிலத்தில் உள்ள லக்னோ, கான்பூர், வாரணாசி, அலகாபாத் மற்றும் கோராக்பூர் ஆகிய ஐந்து பெரிய மாநகரங்களிலும் சமூக முடக்கத்தை அறிவிக்குமாறு, பாஜக தலைமையிலான உத்தரப்பிரதேச அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. போதுமான அளவிற்கு மருத்தவ உதவி இல்லாமல், கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றால்,  மக்கள் பெரிய எண்ணிக்கையில் மடிகிறார்கள் என்றால் அதற்கு அரசாங்கங்களைத்தான் குறைகூற வேண்டும். ஏனெனில் அவைதான் இது தொடர்பாக ஓராண்டு கால அனுபவம் மற்றும் படிப்பினையைப் பெற்றும் அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டன, என்று அரசாங்கங்களைக் கடுமையான முறையில் விமர்சனம் செய்தது.

மேலும், அப்போது நடந்துகொண்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைக் குறிப்பிட்டு உயர்நீதிமன்றம், நாம் தேர்தலுக்கு வேண்டுமானால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வோம், ஆனால் பொது சுகாதாரத்திற்கு என்றால் அநேகமாக எதுவும் செய்யமாட்டோம். இதைப்பார்ப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் நம்மைப் பார்த்து சிரிப்பார்கள், என்று மிகவும் எரிச்சலுடன் கூறியது.

மேலும், இரண்டாவது அலையின் பரிமாணம் குறித்து அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்தும் அதனைத் தடுப்பதற்கு முன்கூட்டியே அது எதுவும் திட்டமிடவில்லை என்பது மிகவும் வெட்கக்கேடு, என்றும் நீதிமன்றம் கூறியது.  

உயந்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி அடுத்த நாளே உத்தரப்பிரதேச அரசாங்கம் உச்சநீதிமன்றத்திற்கு விரைந்து கோரியது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பாப்டே தலைமையிலான அமர்வும் இதற்கு ஒப்புக்கொண்டது.

ஏப்ரல் 27 அன்று, உள்ளாட்சி அமைப்புகள் நடைபெற்ற சமயத்தில் அதற்காக தேர்தல் பணிக்காகச் சென்ற 135 பள்ளிக்கூட ஆசிரியர்கள் கோவிட் தொற்றால் இறந்துவிட்டார்கள் என்று ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில்,  அலகாபாத் உயர்நீதிமன்றம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அறிவிப்புகள் அனுப்பியது.  பின்னர் உத்தரப்பிரதேச ஆசிரியர்கள் சங்கம் இறந்தவர்களின் எண்ணிக்கை 800க்கும் மேலாக உயர்ந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தது.

கேரளம் 

மே 10 அன்று கேரள உயர்நீதிமன்றம், தனியார் மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சைக்காக வசூலித்திடும் கட்டணத்திற்கு உச்சவரம்பு விதித்த மாநில அரசாங்கத்தின் உத்தரவை ‘மிகவும் அருமை‘ (‘fantastic’) என்று பாராட்டியது. மாநிலத்தில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் அநியாயமாகக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஒருவர் மனு தாக்கல் செய்திருந்ததைத் தொடர்ந்து இது நடந்தது. நீதிமன்றம்,  அரசாங்கத்துடன் தங்களை இணைத்துக்கொள்ளாது இயங்கிடும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகளையும் மாநில அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைத்ததன் அடிப்படையில், கேரள அரசாங்கம் அந்த மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் 50 சதவீத படுக்கைகளை கோவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கி இருக்கிறது.

உத்தர்காண்ட்

உத்தர்காண்ட் உயர்நீதிமன்றம், எந்த அளவிற்கு மக்களைக் காப்பாற்ற முடியுமோ அந்த அளவிற்கு மக்களைக் காப்பாற்றுவதற்காக உத்தர்காண்ட் மாநில அரசாங்கத்திற்குப் பல்வேறு கட்டளைகளைப் பிறப்பித்தபின்னர், மே 10 அன்று, 2021 ஜனவரியிலேயே அறிவியல் சமூகம் கோவிட்-19இன் இரண்டாவது அலை குறித்து எச்சரித்திருந்தபோதிலும், மாநில அரசு அதனைக் கண்டுகொள்ளவே இல்லை, என்று கூறியிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் சில தவறுகள் செய்ததன் விளைவாகவும், கொஞ்சம் அலட்சியத்துடன் இருந்ததன் காரணமாகவும், மாநிலத்திலும், நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருக்கிறது,என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மேலும் மாநில அரசாங்கம் தங்கள் முன் அளித்துள்ள உறுதிவாக்குமூலத்தில், மருத்துவ மனைகளில் உள்ள படுக்கைகள், ஆக்சிஜன் சப்ளை மற்றும் மருந்துகளின் இருப்பு ஆகியவை சம்பந்தமாக நீதிமன்றம் அளித்திட்ட முந்தைய உத்தரவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக மூடி மறைத்திடவும் முயற்சித்திருக்கிறது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

பாட்னா

பாட்னா உயர்நீதிமன்றம் ஏப்ரல் 29 அன்று மாநில அரசாங்கத்தின் ‘செயல் திட்டத்தை’ ‘தவறானது’ என்று குறிப்பிட்டுவிட்டு, மக்களுக்காக ஒரு மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டு அதில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்துத் தங்கள் குறைகளை அனுப்பிவைக்குமாறு கேட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு ஒன்று, பாட்னாவில் உள்ள மூன்று பெரிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் அம்மருத்துவமனைகளில் உள்ள ஆயிரம் படுக்கைகளும் காலியாக இருக்கின்றன என்று அறிக்கை அளித்ததன் அடிப்படையில் நீதிமன்றம் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மேலும் மாநிலத்தில் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறையும் இருப்பதாக, மேற்படி மூவர் குழு சுட்டிக்காட்டி இருந்தது. மாநிலத்தில் சுகாதார ஊழியர்கள் பணியிடங்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் காலியாக இருப்பதை மத்திய தணிக்கைத்துறைத் தலைவர் அறிக்கை சுட்டிக்காட்டியபின்னரும் கூட அரசாங்கத்தால் அவை நிரப்பப்படா திருந்ததையும் நீதிமன்றம் விமர்சித்தது.

தில்லி

கடந்த சில வாரங்களாக தில்லியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நிலை மிகவும் மோசமாகச் சென்றிருப்பது சம்பந்தமாக எண்ணற்ற மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது. ஏப்ரல் 24 அன்று, கொரோனா வைரஸ் பெருந்தோற்றை, ஒரு சுனாமி என்றே அழைத்து, தில்லியில் உச்சத்திற்குச் சென்றுகொண்டிருக்கும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனைகள், மருத்துவ ஊழியர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் போதுமான அளவிற்கு தயாரானநிலையில் இருப்பது குறித்து மத்திய அரசாங்கத்தைக் கேட்டது. மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்படும் ஆக்சிஜனை எவரேனும் தடுத்தால் அவர் தூக்கிலிடப்படுவார் என்றும் எச்சரித்தது.  இது தொடர்பாக தில்லி மாநில அரசாங்கமும் தன் பணிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஏப்ரல் 27 அன்று நீதிமன்றம், திரவ ஆக்சிஜன் (liquid oxygen) மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ரம் போன்ற மாநில அரசுகள் கேட்டதைவிட அதிக அளவில் அளித்துள்ள அதே சமயத்தில் தில்லிக்கு மட்டும் அதன் தேவைக்கும் குறைவாக ஒதுக்கியது ஏன் என்றும் கேட்டது.

பம்பாய்

பம்பாய் உயர்நீதிமன்றத்தின் மும்பை, அவுரங்காபாத், நாக்பூர் ஆகிய இடங்களில் செயல்படும் மூன்று அமர்வாயங்களும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றை மேலாண்மை செய்வது தொடர்பாக எண்ணற்ற கட்டளைகளைப் பிறப்பித்திருக்கின்றன. கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் நடத்துவது தொடர்பான நடைமுறைகள், ரெம்டெசிவீர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுதல், ஆக்சிஜன் சப்ளையில் உள்ள பிரச்சனைகள் உட்பட பல பிரச்சனைகள் குறித்து இவ்வாறு நீதிமன்றம் கட்டளைகள் பிறப்பித்திருக்கிறது.

கல்கத்தா

கல்கத்தா உயர்நீதிமன்றம், ஏப்ரல் 20 அன்று, மேற்கு வங்கத்தில் எட்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில், கோவிட் தொடர்பான ஒழுங்கு விதிமுறைகளைக் கறாராக உத்தரவாதப்படுத்திட  மாநில அரசாங்க மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் அதிகாரக்குழுமங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குத் தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பித்து வந்தது. ஏப்ரல் 22 அன்று தேர்தல் அதிகாரிகள் பெயரளவில் சுற்றறிக்கைகளை விட்டுவிட்டு, அவற்றின் அமலாக்கம்பற்றிக் கவலைப்படாமல் இருந்ததற்காக விமர்சனம் செய்தது.

மே 10 அன்று திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்தபின்னர், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக தற்போதுள்ள நிலைமைகள் குறித்தும், அவற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், அளிக்கப்பட்டுள்ள மருந்துகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்களை வெளிப்படுத்தி ஓர் விவரமான உறுதிவாக்குமூலம் தாக்கல் செய்யுமாறு கோரியிருக்கிறது.

மத்தியப்பிரதேசம்

ஏப்ரல் 20 அன்று, மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம், மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் போதுமான அளவிற்கு இருப்பதை உத்தரவாதப்படுத்திட, பாஜக தலைமையிலான மாநில அரசாங்கத்திற்குப் பல்வேறு விதமான கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது. மேலும் அத ரெம்டெசிவீர் உற்பத்தியை அதிகரித்திடுக அல்லது அதனை இறக்குமதி செய்ய முயற்சித்திடுக என்று மத்திய அரசாங்கத்தையும் வலியுறுத்தி இருக்கிறது. மாநிலத்தில் மருந்துகளின் பற்றாக்குறை குறித்தும், அவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவது குறித்தும், கொரோனா வைரஸ் தொற்றால் எழுந்துள்ள மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் வந்த ஐந்து மனுக்களின் தொகுப்பில் இவ்வாறு நீதிமன்றம் கட்டளைகள் பிறப்பித்தது.  மே 11 அன்று, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அதிக நெரிசல் உள்ள சிறைகளில் கோவிட் தொற்று பரவும் அச்சுறுத்தல் இருப்பதால், சிறைகளில் உள்ள நெரிசலைக் குறைத்திடவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், ஏப்ரல் 30 அன்று, கோவிட் நோயாளிகளின் அவலநிலை தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவின் கீழ், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பிரபல்யமான வழக்குரைஞர்களைக் கொண்டு குழுக்கள் அமைத்து, பொது மக்களின் சிரமங்களைக் களைந்திட நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. இக்குழுக்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றன.

தெலங்கானா

ஏப்ரல் 30 அன்று தெலங்கானா உயர்நீதிமன்றம், மாநிலத் தேர்தல் ஆணையம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் வாரங்கல் மற்றும் கம்மம் மாநகராட்சிகளுக்கும் மற்றும் ஐந்து நகராட்சிகளுக்கும் தேர்தல்கள் நடத்துவது என்பது மக்களையும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களையும், டென்னிசன் தன் கவிதையில் கூறியுள்ளபடி, அவர்களை மரணத்தின் வாய்க்குள் தள்ளிவிடும் வேலையாகும் என்று வர்ணித்திருக்கிறது.

நம் நாடும் மற்றும் மாநிலமும் மட்டுமல்ல இந்தப் பூமிப்பந்து முழுவதுமே கொரோனா தொற்றுக் காரணமாக போர்க்கால நிலைமைகள் ஏற்பட்டிருப்பதை அறிந்திருக்கும்போது, தலைமைத் தேர்தல் ஆணையம் இந்தப் பூமிப்பந்தில் இல்லையா? நீங்கள் என்ன செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?  என்று நீதிமன்றம் கேட்டிருக்கிறது.

கர்நாடகம்

மாநிலத்தில் மருத்துவமனைகளில் படுக்கைகள் போதுமான அளவிற்கு இல்லை என்றும், மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் வந்துள்ள மனுக்களின்மீது ஏப்ரல் 28 அன்று உத்தரவு பிறப்பித்த கர்நாடக உயர்நீதிமன்றம், நிலைமைகள் மிகவும் அபாகரமானதாக இருக்கிறது என்று கூறி நகராட்சி அதிகாரிகளை விமர்சித்திருக்கிறது. ஊனமுற்றோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.

பெருந்தொற்று நாடு முழுதும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. கிராமப்பகுதிகளிலும் மிகவும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. எனினும் இது பிரதான ஊடகங்களில் காணப்படவில்லை. எனினும் மத்திய அரசு இதற்கெதிராக என்னசெய்வது என்று தெரியாது இருட்டில் தடவிக்கொண்டும், தத்தளித்துக் கொண்டுமிருக்கிறது. இதற்கெதிரான போராட்டத்தை வலுவாக எடுத்துச்செல்வதற்கு மாநில அரசாங்கங்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்ய மறுத்து வருகிறது. அவர்களுக்கு மிகவும் அற்ப அளவிலேயே நிதி உதவியினைச் செய்துகொண்டிருக்கிறது. தடுப்பூசிகளை, கொள்ளைலாபம் ஈட்டும் தனியாரிடமிருந்து வாங்கிக்கொள்ளுமாறு தள்ளிவிட்டிருக்கிறது.

இத்தகு நிலைமைகளில் நாட்டிலுள்ள நீதிமன்றங்கள் வரவிருக்கும் காலங்களில், மத்திய அரசை நிர்ப்பந்தித்திடும் விதத்தில் தன் பங்கினைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அவ்வாறே மேற்கொள்ளும் என்று நம்புவோம்.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 16.05.21)

(தமிழில்: ச.வீரமணி)