Monday, May 17, 2021

மோடி அரசாங்கம், கோவிட் நெருக்கடியிலிருந்து மீளமுடியாது இருட்டில் தடவிக்கொண்டிருப்பதால், நீதிமன்றங்கள் உதவ முன்வந்திருக்கின்றன.

 


மோடி அரசாங்கம், கோவிட் நெருக்கடியிலிருந்து மீளமுடியாது இருட்டில் தடவிக்கொண்டிருப்பதால், நீதிமன்றங்கள் உதவ முன்வந்திருக்கின்றன.

-சவெரா 

நீங்கள் மக்களை மரணத்தின் வாய்க்குள் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்.(“you are driving people into the jaws of death.”), நீங்கள், எதார்த்த உண்மைகளைத் தொடாமலேயே, ஒரு வண்ணச்சித்திரத்தைத் தீட்டிக் கொண்டிருக்கிறீர்கள். (you are painting a rosy picture, not in touch with ground reality.)உங்களை அநேகமாகக் கொலைக் குற்றச்சாட்டுக்களின்கீழ் பதிவு செய்திடணும்.” (“You should be booked on murder charges probably.”) நீங்கள் கடந்த 10-15 மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?, நீங்கள் என்ன செவ்வாய்க் கிரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா? “Are you living on Mars?”

கடந்த சில வாரங்களாக மத்திய அரசாங்கத்தையும் மற்றும் அதன் பல்வேறு அதிகாரக்குழுமங்களையும் நோக்கி நாட்டிலுள்ள பல உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கூற்றுகள்தான் மேலே உள்ளவைகளாகும். மிகவும் பயங்கரமான முறையில் பரவிக்கொண்டிருக்கும் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை குறித்து சுமார் 14 உயர்நீதிமன்றங்கள் இவ்வாறு கருத்துக்களைக் கூறியிருக்கின்றன. 2021 ஏப்ரல் 1க்குப்பின்னர் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இத்தகு நிலையில்தான் நீதிபதிகள் மேற்கண்டவாறு தங்கள் கோபத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். அரசின் கீழான ஸ்தாபனங்கள் மூலமாக இதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக தங்களாலான முயற்சிகளை மேற்கொண்டிருக் கிறார்கள்.

நாட்டிலுள்ள பல உயர்நீதிமன்றங்கள் இது தொடர்பாக என்ன கூறியிருக்கின்றன எனக் கீழே சுருக்கமாகப் பார்ப்போம். ஆனால், அதற்கு முன்பு, நாம் சில விஷயங்களைக் குறித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலைக்கு எதிராக எவ்விதத் தயாரிப்பு வேலைகளிலும் இறங்காதிருந்ததற்கு, நீதித்துறையின் பல்வேறு மட்டங்களில் உள்ள நீதிமன்றங்களும் முதலாவதும், முதன்மையானதுமான காரணமாகும். இந்திய மற்றும் உலக அறிவியலாளர்கள் இரண்டாவது அலையின் ஆபத்து குறித்துத் திரும்பத்திரும்ப எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் மத்தியில் உள்ள மோடி அரசாங்கமும், பல்வேறு மாநில பாஜக அரசாங்கங்களும் தங்களின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து துதிபாடுவோர்களின் பேச்சுக்களைக் கேட்டு மதிமயக்கத்திலிருந்தன. டாவோஸில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உலகத்திற்கே இந்தியா வழிகாட்டுவதாகப் பீற்றிக் கொண்டார். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்த விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது என்றார். பல்வேறு மாநில முதலமைச்சர்கள் அல்லது முக்கியமான தலைவர்கள் இனி முகக்கவசங்களே தேவைப்படாது என்றும், கங்கை நதி அனைத்து வைரஸ்களையும் அடித்துச் சென்றுவிட்டது என்றெல்லாம்  கூறிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், அறிவியலார்கள் ஊகித்துக்கூறியபடி, இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கியபோது, ஏற்கனவே முடமாகிப் போயிருந்த பொது சுகாதார அமைப்புமுறை மேலும் நொறுங்கியது, அதன் சங்கிலிப் பிணைப்புகள் அனைத்தும் அறுந்துவிட்டன. தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்குப் போதிய மருத்துவ ஆக்சிஜன் இல்லை, உயிர்காக்கும் மருந்துகள் இல்லை, சுகாதாரப் பாதுகாப்பு ஊழியர்கள் அளவுக்குமீறி வந்து குவிந்துகொண்டிருக்கும் நோயாளிகளைக் கவனிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றின் காரணமாக நாட்டு மக்கள்   ஆயிரக்கணக்கானவர்கள் மரணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

இத்தகைய இக்கட்டான விரக்தி நிலையில்தான் பலர் உச்ச நீதிமன்றத்தை அல்லது உயர்நீதிமன்றங்களை அணுகியிருக்கிறார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் பெரிதாக ஒன்றும் கோரவில்லை. பாதிக்கப்பட்டு வருவோருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கை அளியுங்கள் என்றுதான் கோருகிறார்கள். சிலர் உயிர்காக்கும் மருந்துகளை நியாயமான விலையில் அளிக்குமாறு கோருகிறார்கள். சிலர் அரசாங்கங்கள் செய்துள்ள தவறுகளுக்குப் பரிகாரம் காண்பதற்காகப் பெரிய அளவில் தலையிடுமாறு கோரி இருக்கிறார்கள். 

இரண்டாவதாக, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் பேரழிவு ஏற்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய இன்றைய நிலையில் உச்சநீதிமன்றத்தைக் காட்டிலும், நாட்டிலுள்ள பல உயர்நீதிமன்றங்கள் இதற்கு எதிராக மிகவும் சுறுசுறுப்புடன் தலையிட்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. உயர்நீதிமன்றங்கள் நிலைமையை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன, என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து கூறிக்கொண்டிருக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலை குறித்து அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்று அவை விரும்புகின்றன. மேலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் அவை விரும்புகின்றன. இவ்வாறு உயர்நீதிமன்றங்கள் கூறியபோதிலும், அவை கேட்டுக்கொண்டதுபோல் எல்லாம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும், நீதிமன்றங்களின் தலையீடுகளை அடுத்து, பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அரசாங்கங்களின் தரப்பில் ஏதோ கொஞ்சம் நிவாரணம் அளிக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவதாக, இந்தப்பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தலையிட, வெகுநாட்களாகத் தவிர்த்து வந்தது, தயங்கி வந்தது, மெத்தனப்போக்கையே கடைப்பிடித்து வந்தது போன்றே தோன்றியது. 2021 ஏப்ரல் 21 அன்றுதான் கோவிட் நெருக்கடி தொடர்பாக அது விசாரணையைத் தொடங்கியது. நான்கு பிரச்சனைகளின்மீது பல்வேறு தலையீடுகளை மேற்கொள்ளுமாறு அது கேட்டுக் கொண்டது. ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசி மற்றும் சமூகமுடக்கத்தைப் பிரகடனம் செய்திட அரசாங்கங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்துதல் ஆகிய நான்கு பிரச்சனைகள் மீதும் தலையீடுகளைக் கோரியது. சென்ற ஆண்டு இப்பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே ஒரு தேசியத் திட்டம் இருப்பதாக மத்திய அரசு ஏமாற்றும் விதத்தில் கூறியதை அப்படியே  உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும்,   இப்போது இதற்கு எதிராக ஒரு ‘தேசியத் திட்டம்’ அமைத்திடக் கோரி இருக்கிறது. உண்மையில், உச்சநீதிமன்றம் சென்ற ஆண்டு மத்திய அரசாங்கம் அளித்திட்ட பொய் அறிக்கைகளின் அடிப்படையிலேயே செயல்பட்டது. மத்திய அரசாங்கம், புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை எதுவும் கிடையாது என்று கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆனால் பின்னர் எதார்த்த உண்மை நிலவரங்கள் உலகம் முழுவதும் பரவியபின்னர்தான், அது ஏதோ கொஞ்சம் எதிர்வினை ஆற்ற முயற்சித்தது. கடந்த சில வாரங்களுக்குப்பின்புதான்--சிலர் தலைமை நீதிபதி பாப்டே ஓய்வுபெற்றபின்னர் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்--உச்சநீதிமன்றம் இந்தியாவின் வரலாற்றில் மிகவும் துயரார்ந்த அத்தியாயங்களாக இருக்கக்கூடிய இன்றைய நிலை குறித்து ஏதேனும் செய்திடவேண்டும் என்ற நிலைக்கு உண்மையில் வந்திருக்கிறது.

உச்சநீதிமன்றம், ஆக்சிஜன் சப்ளையை உத்தரவாதம் செய்வதற்கு ‘அதிரடிப் படை’ (‘task force’) அமைத்திட வேண்டும் என்றும், எந்தவொரு மருத்துவமனையும் அனுமதிகோரி வரும் நோயாளியை அனுமதித்திட மறுக்கக்கூடாது என்றும், உதவி கோரி வருபவர்களை, உத்தரப்பிரதேசத்தில் மிகவும் வினோதமான முறையில் நடந்ததைப்போல காவல்துறையினரோ அல்லது நிர்வாகத்தினரோ துன்புறுத்தக்கூடாது என்று கட்டளைகள் பிறப்பித்தது.

அதேசமயத்தில், பல உயர்நீதிமன்றங்கள் கடந்த சில மாதங்களாக செய்து வந்ததைப்போல, பல மாநிலங்களிலும் உள்ள அரசாங்கத்தின் கொள்கையை மேற்பார்வையிடும் பணியைத் தொடர்ந்தன.  மத்திய அரசாங்கம் மற்றும் இதர அதிகாரக் குழுமங்களின் மீதும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தன.

அவற்றின் முயற்சிகளைச் சுருக்கமாகக் கீழே தந்திருக்கிறோம்.

குஜராத்

நீதிமன்றங்களின் தலையீடுகளில் ஒன்று, ஏப்ரல் 11 அன்று குஜராத் உயர்நீதிமன்றம் கொரொனா வைரஸ் பெருந்தொற்று சம்பந்தமாக, மனதை உலுக்கும் கதைகள், துரதிரஷ்டவசமான மற்றும் கற்பனை செய்யமுடியாத அளவில் உள்ள சிரமங்கள், மிகவும் சிதிலமடைந்துள்ள நிலையில் உள்ள உள்கட்டமைப்புவசதிகள், பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்வது மட்டுமல்லாமல், போதிய அளவிற்கு படுக்கைகள் இன்மை, அவசர காலப் பிரிவுகள் செயல்படாமை, போதிய அளவிற்கு மருத்துவ ஆக்சிஜன் இன்மை, ரெம்டெசிவிர் போன்ற அடிப்படை மருந்துகள் இன்மை ஆகியவற்றையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. முன்னதாக நீதிமன்றம், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாது தடுப்பதற்காக சமூக முடக்கத்தை அறிவிக்க அரசாங்கம் பரிசீலனை செய்திட வேண்டும் என்றும் கேட்டிருந்தது.

மாநிலத்தில் கோவிட் நெருக்கடி வெடித்துச்சிதறியிருப்பதைப் பூசிமெழுகும் விதத்தில் அரசாங்கம் அறிக்கைகள் அளிப்பதைத் தொடர்வது குறித்து, நீதியரசர் கரியா, ஏப்ரல் 27 அன்று கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்: அரசாங்கத்தின் உறுதிவாக்குமூலம் ஓர் அழகான சித்திரத்தைத் தீட்டிக்கொண்டிருக்கிறது. அது நாட்டில் நிலவும் எதார்த்தத்தைத் தொடக்கூடியவிதத்தில் இல்லை. நாம் தந்தக் கோபரங்களின் மேல் அமர்ந்திருக்க முடியாது. இந்தக் தொற்றின் தொடர் கண்ணிகளை உடைத்தெறிய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் எவரும் சிகிச்சை அளிக்கப்படாமல் இல்லை என்ற உத்தரவாதத்தை மாநில அரசாங்கம் அளித்திட வேண்டும், என்று தலைமை நீதிபதி விக்ரம் சேத் கூறினார்.  

சென்னை

ஏப்ரல் 26 அன்று சென்னை உயர்நீதிமன்றமானது, மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில், தேர்தல் பேரணிகளில் முகக் கவசங்கள்,  தனிநபர் இடைவெளி மற்றும் சானிடைசர்கள் பயன்படுத்துவது போன்ற அடிப்படைப் பாதுகாப்புகளை வலியுறுத்தாததற்காகத் தலைமைத் தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தது. கோவிட்-19இன் இரண்டாவது அலை பரவுவதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று நீதிமன்றம் கூறியதுடன், தேர்தல் ஆணைய அதிகாரிகளை, அநேகமாகக் கொலைக் குற்றச்சாட்டின்கீழ்கூட விசாரணை செய்திட வேண்டும், என்ற அளவிற்குச் சென்றது. உடனடியாகத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்திற்கு விரைந்து, இத்தகைய கருத்துக்கள் அழிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. மேலும் இதுபோன்று நீதிமன்றங்களில் நீதிபதிகள் உதிர்த்திடும் வார்த்தைகளை ஊடகங்கள் பதிவு செய்வதற்குத் தடை விதித்திட வேண்டும் என்றும் கோரியது. எனினும் உச்சநீதிமன்றம் இந்தக் வேண்டுகோள்களை நிராகரித்துவிட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கடுமையான கருத்துக்கள், தூக்கத்திலிருப்பவர்களை எழுப்பக்கூடிய அளவிற்குப் பயன்பட்டிருப்பதாகக் கூறினார்கள்.  இந்தத் தடவை நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்களைத் தேர்தல் ஆணையம் நடத்திய விதம் குறித்து விமர்சனத்திற்கு உள்ளானதை இந்தத் தருணத்தில் நினைவுகூர்ந்திடலாம். பல இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அப்பட்டமாக மீறப்பட்டன. குறிப்பாக பிரதமர் மேற்கு வங்கத்தில் அசன்சால் தொகுதியில் திரட்டப்பட்ட மக்கள் திரளைப் பார்த்து, அவர் பாராட்டிக் கையசைத்ததைக் குறிப்பிடலாம்.

 அடுத்து சில தினங்களில் ஏப்ரல் 30 அன்று, தாமாகவே ஒரு மனுவின்மீது நடவடிக்கை எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், மோடி அரசாங்கத்தைப் பார்த்து, கொரோனா அதிகரித்துக் கொண்டிருப்பதற்காக, கடந்த 10-15 மாதங்களாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று இழுத்துப்பிடித்தது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கையாண்டிட தற்காலிகமான முறையில் நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. மத்திய அரசாங்கம் வல்லுநர்களின் அறிவுரைகளுடன் திட்டமிட்டமுறையில் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். … சமூக முடக்கம் அநேகமாக ஓராண்டு அமல்படுத்தப்பட்டபின்னரும், இப்போதுள்ள நிலைமையைப் பாருங்கள்… என்று அது கூறியிருக்கிறது.  

அலகாபாத்

ஏப்ரல் 19 அன்று, அலகாபாத் உயர்நீதிமன்றம், மாநிலத்தில் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்று வேகமாகப் பரவிக்கொண்டு வருவதால், மாநிலத்தில் உள்ள லக்னோ, கான்பூர், வாரணாசி, அலகாபாத் மற்றும் கோராக்பூர் ஆகிய ஐந்து பெரிய மாநகரங்களிலும் சமூக முடக்கத்தை அறிவிக்குமாறு, பாஜக தலைமையிலான உத்தரப்பிரதேச அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. போதுமான அளவிற்கு மருத்தவ உதவி இல்லாமல், கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றால்,  மக்கள் பெரிய எண்ணிக்கையில் மடிகிறார்கள் என்றால் அதற்கு அரசாங்கங்களைத்தான் குறைகூற வேண்டும். ஏனெனில் அவைதான் இது தொடர்பாக ஓராண்டு கால அனுபவம் மற்றும் படிப்பினையைப் பெற்றும் அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டன, என்று அரசாங்கங்களைக் கடுமையான முறையில் விமர்சனம் செய்தது.

மேலும், அப்போது நடந்துகொண்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைக் குறிப்பிட்டு உயர்நீதிமன்றம், நாம் தேர்தலுக்கு வேண்டுமானால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வோம், ஆனால் பொது சுகாதாரத்திற்கு என்றால் அநேகமாக எதுவும் செய்யமாட்டோம். இதைப்பார்ப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் நம்மைப் பார்த்து சிரிப்பார்கள், என்று மிகவும் எரிச்சலுடன் கூறியது.

மேலும், இரண்டாவது அலையின் பரிமாணம் குறித்து அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்தும் அதனைத் தடுப்பதற்கு முன்கூட்டியே அது எதுவும் திட்டமிடவில்லை என்பது மிகவும் வெட்கக்கேடு, என்றும் நீதிமன்றம் கூறியது.  

உயந்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி அடுத்த நாளே உத்தரப்பிரதேச அரசாங்கம் உச்சநீதிமன்றத்திற்கு விரைந்து கோரியது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பாப்டே தலைமையிலான அமர்வும் இதற்கு ஒப்புக்கொண்டது.

ஏப்ரல் 27 அன்று, உள்ளாட்சி அமைப்புகள் நடைபெற்ற சமயத்தில் அதற்காக தேர்தல் பணிக்காகச் சென்ற 135 பள்ளிக்கூட ஆசிரியர்கள் கோவிட் தொற்றால் இறந்துவிட்டார்கள் என்று ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில்,  அலகாபாத் உயர்நீதிமன்றம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அறிவிப்புகள் அனுப்பியது.  பின்னர் உத்தரப்பிரதேச ஆசிரியர்கள் சங்கம் இறந்தவர்களின் எண்ணிக்கை 800க்கும் மேலாக உயர்ந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தது.

கேரளம் 

மே 10 அன்று கேரள உயர்நீதிமன்றம், தனியார் மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சைக்காக வசூலித்திடும் கட்டணத்திற்கு உச்சவரம்பு விதித்த மாநில அரசாங்கத்தின் உத்தரவை ‘மிகவும் அருமை‘ (‘fantastic’) என்று பாராட்டியது. மாநிலத்தில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் அநியாயமாகக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஒருவர் மனு தாக்கல் செய்திருந்ததைத் தொடர்ந்து இது நடந்தது. நீதிமன்றம்,  அரசாங்கத்துடன் தங்களை இணைத்துக்கொள்ளாது இயங்கிடும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகளையும் மாநில அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைத்ததன் அடிப்படையில், கேரள அரசாங்கம் அந்த மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் 50 சதவீத படுக்கைகளை கோவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கி இருக்கிறது.

உத்தர்காண்ட்

உத்தர்காண்ட் உயர்நீதிமன்றம், எந்த அளவிற்கு மக்களைக் காப்பாற்ற முடியுமோ அந்த அளவிற்கு மக்களைக் காப்பாற்றுவதற்காக உத்தர்காண்ட் மாநில அரசாங்கத்திற்குப் பல்வேறு கட்டளைகளைப் பிறப்பித்தபின்னர், மே 10 அன்று, 2021 ஜனவரியிலேயே அறிவியல் சமூகம் கோவிட்-19இன் இரண்டாவது அலை குறித்து எச்சரித்திருந்தபோதிலும், மாநில அரசு அதனைக் கண்டுகொள்ளவே இல்லை, என்று கூறியிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் சில தவறுகள் செய்ததன் விளைவாகவும், கொஞ்சம் அலட்சியத்துடன் இருந்ததன் காரணமாகவும், மாநிலத்திலும், நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருக்கிறது,என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மேலும் மாநில அரசாங்கம் தங்கள் முன் அளித்துள்ள உறுதிவாக்குமூலத்தில், மருத்துவ மனைகளில் உள்ள படுக்கைகள், ஆக்சிஜன் சப்ளை மற்றும் மருந்துகளின் இருப்பு ஆகியவை சம்பந்தமாக நீதிமன்றம் அளித்திட்ட முந்தைய உத்தரவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக மூடி மறைத்திடவும் முயற்சித்திருக்கிறது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

பாட்னா

பாட்னா உயர்நீதிமன்றம் ஏப்ரல் 29 அன்று மாநில அரசாங்கத்தின் ‘செயல் திட்டத்தை’ ‘தவறானது’ என்று குறிப்பிட்டுவிட்டு, மக்களுக்காக ஒரு மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டு அதில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்துத் தங்கள் குறைகளை அனுப்பிவைக்குமாறு கேட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு ஒன்று, பாட்னாவில் உள்ள மூன்று பெரிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் அம்மருத்துவமனைகளில் உள்ள ஆயிரம் படுக்கைகளும் காலியாக இருக்கின்றன என்று அறிக்கை அளித்ததன் அடிப்படையில் நீதிமன்றம் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மேலும் மாநிலத்தில் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறையும் இருப்பதாக, மேற்படி மூவர் குழு சுட்டிக்காட்டி இருந்தது. மாநிலத்தில் சுகாதார ஊழியர்கள் பணியிடங்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் காலியாக இருப்பதை மத்திய தணிக்கைத்துறைத் தலைவர் அறிக்கை சுட்டிக்காட்டியபின்னரும் கூட அரசாங்கத்தால் அவை நிரப்பப்படா திருந்ததையும் நீதிமன்றம் விமர்சித்தது.

தில்லி

கடந்த சில வாரங்களாக தில்லியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நிலை மிகவும் மோசமாகச் சென்றிருப்பது சம்பந்தமாக எண்ணற்ற மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது. ஏப்ரல் 24 அன்று, கொரோனா வைரஸ் பெருந்தோற்றை, ஒரு சுனாமி என்றே அழைத்து, தில்லியில் உச்சத்திற்குச் சென்றுகொண்டிருக்கும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனைகள், மருத்துவ ஊழியர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் போதுமான அளவிற்கு தயாரானநிலையில் இருப்பது குறித்து மத்திய அரசாங்கத்தைக் கேட்டது. மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்படும் ஆக்சிஜனை எவரேனும் தடுத்தால் அவர் தூக்கிலிடப்படுவார் என்றும் எச்சரித்தது.  இது தொடர்பாக தில்லி மாநில அரசாங்கமும் தன் பணிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஏப்ரல் 27 அன்று நீதிமன்றம், திரவ ஆக்சிஜன் (liquid oxygen) மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ரம் போன்ற மாநில அரசுகள் கேட்டதைவிட அதிக அளவில் அளித்துள்ள அதே சமயத்தில் தில்லிக்கு மட்டும் அதன் தேவைக்கும் குறைவாக ஒதுக்கியது ஏன் என்றும் கேட்டது.

பம்பாய்

பம்பாய் உயர்நீதிமன்றத்தின் மும்பை, அவுரங்காபாத், நாக்பூர் ஆகிய இடங்களில் செயல்படும் மூன்று அமர்வாயங்களும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றை மேலாண்மை செய்வது தொடர்பாக எண்ணற்ற கட்டளைகளைப் பிறப்பித்திருக்கின்றன. கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் நடத்துவது தொடர்பான நடைமுறைகள், ரெம்டெசிவீர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுதல், ஆக்சிஜன் சப்ளையில் உள்ள பிரச்சனைகள் உட்பட பல பிரச்சனைகள் குறித்து இவ்வாறு நீதிமன்றம் கட்டளைகள் பிறப்பித்திருக்கிறது.

கல்கத்தா

கல்கத்தா உயர்நீதிமன்றம், ஏப்ரல் 20 அன்று, மேற்கு வங்கத்தில் எட்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில், கோவிட் தொடர்பான ஒழுங்கு விதிமுறைகளைக் கறாராக உத்தரவாதப்படுத்திட  மாநில அரசாங்க மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் அதிகாரக்குழுமங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குத் தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பித்து வந்தது. ஏப்ரல் 22 அன்று தேர்தல் அதிகாரிகள் பெயரளவில் சுற்றறிக்கைகளை விட்டுவிட்டு, அவற்றின் அமலாக்கம்பற்றிக் கவலைப்படாமல் இருந்ததற்காக விமர்சனம் செய்தது.

மே 10 அன்று திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்தபின்னர், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக தற்போதுள்ள நிலைமைகள் குறித்தும், அவற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், அளிக்கப்பட்டுள்ள மருந்துகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்களை வெளிப்படுத்தி ஓர் விவரமான உறுதிவாக்குமூலம் தாக்கல் செய்யுமாறு கோரியிருக்கிறது.

மத்தியப்பிரதேசம்

ஏப்ரல் 20 அன்று, மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம், மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் போதுமான அளவிற்கு இருப்பதை உத்தரவாதப்படுத்திட, பாஜக தலைமையிலான மாநில அரசாங்கத்திற்குப் பல்வேறு விதமான கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது. மேலும் அத ரெம்டெசிவீர் உற்பத்தியை அதிகரித்திடுக அல்லது அதனை இறக்குமதி செய்ய முயற்சித்திடுக என்று மத்திய அரசாங்கத்தையும் வலியுறுத்தி இருக்கிறது. மாநிலத்தில் மருந்துகளின் பற்றாக்குறை குறித்தும், அவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவது குறித்தும், கொரோனா வைரஸ் தொற்றால் எழுந்துள்ள மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் வந்த ஐந்து மனுக்களின் தொகுப்பில் இவ்வாறு நீதிமன்றம் கட்டளைகள் பிறப்பித்தது.  மே 11 அன்று, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அதிக நெரிசல் உள்ள சிறைகளில் கோவிட் தொற்று பரவும் அச்சுறுத்தல் இருப்பதால், சிறைகளில் உள்ள நெரிசலைக் குறைத்திடவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், ஏப்ரல் 30 அன்று, கோவிட் நோயாளிகளின் அவலநிலை தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவின் கீழ், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பிரபல்யமான வழக்குரைஞர்களைக் கொண்டு குழுக்கள் அமைத்து, பொது மக்களின் சிரமங்களைக் களைந்திட நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. இக்குழுக்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றன.

தெலங்கானா

ஏப்ரல் 30 அன்று தெலங்கானா உயர்நீதிமன்றம், மாநிலத் தேர்தல் ஆணையம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் வாரங்கல் மற்றும் கம்மம் மாநகராட்சிகளுக்கும் மற்றும் ஐந்து நகராட்சிகளுக்கும் தேர்தல்கள் நடத்துவது என்பது மக்களையும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களையும், டென்னிசன் தன் கவிதையில் கூறியுள்ளபடி, அவர்களை மரணத்தின் வாய்க்குள் தள்ளிவிடும் வேலையாகும் என்று வர்ணித்திருக்கிறது.

நம் நாடும் மற்றும் மாநிலமும் மட்டுமல்ல இந்தப் பூமிப்பந்து முழுவதுமே கொரோனா தொற்றுக் காரணமாக போர்க்கால நிலைமைகள் ஏற்பட்டிருப்பதை அறிந்திருக்கும்போது, தலைமைத் தேர்தல் ஆணையம் இந்தப் பூமிப்பந்தில் இல்லையா? நீங்கள் என்ன செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?  என்று நீதிமன்றம் கேட்டிருக்கிறது.

கர்நாடகம்

மாநிலத்தில் மருத்துவமனைகளில் படுக்கைகள் போதுமான அளவிற்கு இல்லை என்றும், மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் வந்துள்ள மனுக்களின்மீது ஏப்ரல் 28 அன்று உத்தரவு பிறப்பித்த கர்நாடக உயர்நீதிமன்றம், நிலைமைகள் மிகவும் அபாகரமானதாக இருக்கிறது என்று கூறி நகராட்சி அதிகாரிகளை விமர்சித்திருக்கிறது. ஊனமுற்றோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.

பெருந்தொற்று நாடு முழுதும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. கிராமப்பகுதிகளிலும் மிகவும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. எனினும் இது பிரதான ஊடகங்களில் காணப்படவில்லை. எனினும் மத்திய அரசு இதற்கெதிராக என்னசெய்வது என்று தெரியாது இருட்டில் தடவிக்கொண்டும், தத்தளித்துக் கொண்டுமிருக்கிறது. இதற்கெதிரான போராட்டத்தை வலுவாக எடுத்துச்செல்வதற்கு மாநில அரசாங்கங்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்ய மறுத்து வருகிறது. அவர்களுக்கு மிகவும் அற்ப அளவிலேயே நிதி உதவியினைச் செய்துகொண்டிருக்கிறது. தடுப்பூசிகளை, கொள்ளைலாபம் ஈட்டும் தனியாரிடமிருந்து வாங்கிக்கொள்ளுமாறு தள்ளிவிட்டிருக்கிறது.

இத்தகு நிலைமைகளில் நாட்டிலுள்ள நீதிமன்றங்கள் வரவிருக்கும் காலங்களில், மத்திய அரசை நிர்ப்பந்தித்திடும் விதத்தில் தன் பங்கினைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அவ்வாறே மேற்கொள்ளும் என்று நம்புவோம்.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 16.05.21)

(தமிழில்: ச.வீரமணி)

 

No comments: