முக்கியமான
பிரச்சனைகள் மீது இணையம் வழி பொதுக்கூட்டம்
-அசோக் தாவ்லே
நாட்டில் நம் மக்கள் எதிர்கொள்ளும் எரிகிற பிரச்சனைகள் மீது
இணையம் வழி பொதுக்கூட்டம் ஒன்றை நடத்திட 2021 மே 8 அன்று சிஐடியு, அகில இந்திய
விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து ஒரு
புதிய முயற்சியை மேற்கொண்டது. நாடு முழுதும் உள்ள பல்லாயிரக்கணக்கான
தொழிலாளர்களும் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இப்பொதுக்கூட்டத்தில் சிஐடியு-வின் பொதுச் செயலாளர் தபன்சென்,
அகில இந்திய விவசசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா, அகில இந்திய
விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.வெங்கட்
சிறப்புரையாற்றினார்கள். இப்பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு-வின் தலைவர் கே. ஹேமலதா,
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, அகில இந்திய விவசாயத்
தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ.விஜயராகவன் தலைமைக்குழுவாக இருந்து கூட்டத்தை
வழிநடத்தினார்கள்.
முதலில் கோவிட் பெருந்தொற்றின் பயங்கரமான இரண்டாவது அலைக்குப்
பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள்
ஆக்சிஜன், வெண்டிலேடர்கள், மருந்துகள், மருத்துவமனைப் படுக்கைகள் கிடைக்காது மரணித்திருக்கிறார்கள்.
இந்தச் சாவுகள் தடுக்கப்பட்டிருக்கக்கூடிய சாவுகளாகும்.
இதனை எழுதும் இன்றைய தினம் (மே 12), இந்தியாவில் கோவிட்
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.3 கோடியைத் தாண்டி விட்டது. கோவிட்
மரணங்கள் 2.5 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இவ்விரண்டு இலக்கங்கள், உலகில் உச்ச
அளவில் இரண்டாவதாக (second highest) இருப்பதாகும். (முதலிடத்தில் அமெரிக்கா
இருக்கிறது.) ஆனால், கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் இதனால் பாதிக்கப்படுபவர்கள்
எண்ணிக்கையும், பலியாகிறவர்கள் எண்ணிக்கையும் சராசரியாக நான்காயிரத்தைத் தாண்டி
இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய பின்னர் உலகில் இது மிகவும் உச்ச
அளவிலான எண்ணிக்கைகளாகும். உண்மையில் இவைகூட குறைந்த மதிப்பீடுகளேயாகும். உண்மையான
எண்ணிக்கைகள் அநேகமாக இதைப்போல் குறைந்தபட்சம் ஐந்து மடங்குக்கும் அதிகமாக
இருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
மே 10 அன்று தடுப்பூசியின் முதல் ஊசியைப் போட்டுக்கொண்டவர்கள்
வெறும் 9.9 சதவீதத்தினர் மட்டுமே. முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள்
வெறும் 2.6 சதவீதத்தினர் மட்டுமேயாகும்.
இவ்வாறு நாட்டில் நிலைமைகள் மிகவும் மோசமாகச்
சென்றிருப்பதற்கான குற்றப் பொறுப்பு (criminal liability) என்பது, நரேந்திர மோடி
அமித் ஷா இரட்டையரால் தலைமை தாங்கப்படும் மத்திய பாஜக/ஆர்எஸ்எஸ் அரசாங்கத்தின்
அறிவியல்பூர்வமற்ற அணுகுமுறை, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்திட எவ்விதமான திட்டமிடலும்
இல்லாமை ஆகியவையே காரணங்களாகும் என்று இப்போது நாடு தழுவிய அளவிலும் உலக அளவிலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை இப்பொதுக்கூட்டத்தில் உரைநிகழ்த்திய அனைவரும்
கூறினார்கள். இவ்வாறு நாட்டில் கொடூரமான
முறையில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவிக்கொண்டிருக்கின்ற போதிலும்கூட
ஆட்சியாளர்கள் இதனைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, மிகவும்
அருவருக்கத்தக்கவிதத்தில் ஆடம்பரமான தங்களுடைய மத்திய விஷ்டா திட்டத்தின்கீழ்
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தையும், பிரதமருக்கான இல்லத்தையும் கட்டுவதற்கான வேலைகளில்
தீவிரமாக ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.
மறுபக்கத்தில் இந்த அரசாங்கம் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை,
நாட்டில் செல்வாதாரங்களை உற்பத்தி செய்து தரும் அடிப்படை வர்க்கங்களான தொழிலாளர்
வர்க்கம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவதற்காகக் கேவலமான
முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. புதிய வேளாண் சட்டங்கள், புதிய தொழிலாளர்
(விரோத) சட்டங்கள் மற்றும் மின்சார திருத்தச் சட்டமுன்வடிவு ஆகியவற்றைக்
கொண்டுவந்திருப்பதன் மூலம் இதனைச் செய்திருக்கிறது. சென்ற ஆண்டு புலம்பெயர்
தொழிலாளர்களிடம் எந்த அளவிற்கு இதயமற்றமுறையில் இது நடந்துகொண்டது என்பதைப்
பார்த்தோம். நாட்டிலுள்ள பெரும் துறைகள் அனைத்தையும் தனியாரிடம் தாரைவார்த்திட
கூச்சநாச்சமின்றி நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. பசி-பட்டினி, வேலையின்மை,
விலைவாசி உயர்வு அனைத்தும் மிகவும் உச்சத்தில் இருக்கின்றன. இவையனைத்துமே,
ஆட்சியாளர்கள் அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டும்
விதத்தில் திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவேயாகும்.
நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும்,
உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களிலும் பாஜக
படுதோல்வியடைந்ததை பேசிய அனைவரும் வரவேற்றார்கள். குறிப்பாக கேரளாவில் இடது ஜனநாயக
முன்னணி வெற்றி பெற்றதை அவர்கள் புகழ்ந்தார்கள். இது மக்கள் ஆதரவு கொள்கைகள்
மற்றும் செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றி என்று அவர்கள் பாராட்டினார்கள்.
நிறைவாக, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு
உள்ளாகியிருப்பவர்களுக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் சாத்தியமான அனைத்து
வழிகளிலும் உதவிட வேண்டும் என்றும் மோடி ஆட்சியைத் தோலுரித்துக்காட்டும் விதத்தில்
நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறைகூவல்
விடுத்தார்கள். இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கீழ்க்கண்ட கோரிக்கைகளை
வைத்திருக்கிறார்கள்:
(1)
தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்துக,
ஆறு மாத காலத்திற்குள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுவதை உத்தரவாதப் படுத்துக.
(2)
மக்கள் விரோத,
பாகுபாடு காட்டும், கார்ப்பரேட் ஆதரவு தடுப்பூசிக் கொள்கையைக் கிழித்தெறிக.
(3)
இணையம் வழி பதிவு
என்பதைக் கைவிட்டு, கிராமப்புறங்களில் மொபைல் தடுப்பூசி மையங்களை அமைத்திடுக.
(4)
மருத்துவமனைப்
படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் இதர மருத்துவ வசதிகளை உத்தரவாதப்படுத்துக.
(5)
பொது சுகாதார
உள்கட்டமைப்புவசதியை வலுப்படுத்துக, தேவையான அளவிற்கு சுகாதார ஊழியர்களை நியமனம்
செய்திடுக.
(6)
கோவிட் தொற்றால்
பாதிக்கப்படாத நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் வலுவானமுறையில் சிகிச்சை
அளிப்பதை உத்தரவாதப்படுத்துக.
(7)
மக்கள் விரோத
வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் (விரோத) சட்டங்களையும் மின்சார திருத்தச்
சட்டமுன்வடிவையும் கிழித்தெறிக.
(8)
குறைந்தபட்ச ஆதார
விலை மற்றும் கொள்முதலை உத்தரவாதப்படுத்திட மத்தியச் சட்டம் இயற்றிடுக.
(9)
பொதுத்துறைகளைத்
தனியாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்துக.
(10)
வருமான வரி
செலுத்தாத குடும்பத்தினருக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்க மாற்று அளித்திடுக.
(11)
அடுத்த ஆறு
மாதங்களுக்கு ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தான்யங்களை இலவசமாக
அளித்திடுக.
(12)
மகாத்மா காந்தி
கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 200 நாட்கள்
வேலையும், நாள் ஊதியம் 600 ரூபாயும் அளித்திடுக.
(13)
தேசியப் பேரிடர்
மேலாண்மைச் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்படும் எந்த ஆணையாக இருந்தாலும் அதனைக்
கறாராக அமல்படுத்துக.
(14)
‘ஆஷா’ ஊழியர்கள்,
அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு
பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்துக. அவர்கள் அனைவருக்கும்
உரிய இழப்பீட்டுத் திட்டங்களை உருவாக்கிடுக.
(15)
சென்ட்ரல் விஷ்டா
திட்டத்தைக் கிழித்தெறிக. பிஎம்கேர்ஸ் என்னும் தனியார் அறக்கட்டளை மூலம் வசூலித்த
தொகைகளுக்கு, வெளிப்படைத்தன்மையுடன் கணக்கு காட்டுக.
இக்கோரிக்கைகளின் அடிப்படையில் பிரச்சாரத்தை முன்னெடுத்துச்
செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
(பீப்பிள்ஸ்
டெமாக்ரசி, 16.05.21)
தமிழில்:
ச.வீரமணி
No comments:
Post a Comment