Friday, March 17, 2017

பொது பட்ஜெட்டில் திட்டச் செலவினம் - திட்டமில்லா செலவினம் ஒழித்துக்கட்டியதற்கான காரணம் என்ன?




பொது பட்ஜெட்டில் திட்டச் செலவினம் - திட்டமில்லா செலவினம்
ஒழித்துக்கட்டியதற்கான காரணம் என்ன?
மாநிலங்களவையில் தபன்சென் கேள்வி
புதுதில்லி, மார்ச் 17-
திட்டச் செலவினம் - திட்டமில்லா செலவினம் என்னும்  ஒதுக்கீடுகளை பொதுப் பட்ஜெட்டில் ஒழித்துக் கட்டியிருப்பதன் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பது எது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியுவின் பொதுச் செயலாளருமான தபன்சென் கோரினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வியாழன் அன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் தபன்சென் பேசியதாவது:
"மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். பட்ஜெட் மீதான விவாதத்தில் சென்ற அமர்வின்போது நான்  பேசிய அம்சங்கள்மீது அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவாக அவர் பதிலளிக்கும்போது நான் எழுப்பும் பல விஷயங்கள் குறித்து எதுவும் பேசாமல் விட்டுவிடுவார். அவ்வாறு இந்த தடவையும் அவர் செய்திடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
முதலாவதாக, நிதிஅமைச்சர் அவர்கள் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது இந்த அவையில் ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், "இன்றைய சூழ்நிலையில் பொருளாதார நடவடிக்கையில் செலவினத்தைக் குறைப்போமானால், அது மேலும் பொருளாதார மந்த நிலைக்கு இட்டுச்செல்லும் என்றும், எனவே பொருளாதார நடவடிக்கைகளை சுருக்கக் கூடாது. எனவே இதர நடவடிக்கைகள் எதுவும்எடுக்காவிட்டால் இந்த பட்ஜெட், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பருமனில் வீழ்ச்சியை ஏற்படுத்திவிடும்," என்று கூறியிருந்தார்.
இது சம்பந்தமாக என் கேள்வி இதுதான். ஒவ்வோராண்டும் நேரடி வரியில் மிகப்பெரிய தொகையை வசூலிக்காமல் விட்டுவிடுவதற்குக் காரணம் என்ன? அதே சமயத்தில் ஒவ்வோராண்டும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வரியை உயர்த்துவதாக அறிவிக்கிறீர்கள், ஆனால் வசூலிப்பதில்லை. இது ஏன்? அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நடப்பு ஆண்டில், இவ்வாறு வசூலிக்காமல் இருக்கும் தொகை 6.59 லட்சம் கோடி ரூபாயாகும். வளங்கள் குறைவாக இருப்பதாகக் கூறும்  அரசாங்கம் இந்த அளவிற்கு மிகப் பெரிய அளவிற்கு தொகையை வசூலிக்காமல் விடுவதற்குக் காரணம் என்ன?
இந்த ஆண்டும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரியில் வசூலிக்காமல் கைவிடப்பட்டிருக்கும் அதேசமயத்தில், மறைமுக வரி மூலமாக கூடுதலாக 75 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்திடவும் குறிவைத்திருக்கிறீர்கள். இது ஏன்? ஏன் இத்தகு தாறுமாறான நிலைமை? குறிப்பாக, பொருளாதாரம் மிகவும் விசனத்திற்குரிய நிலையில் இருக்கும்போது, சாமானிய மக்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகள் குறைக்கப்பட்டு அவர்களுக்கு ஓரளவுக்காவது நிவாரணம் அளித்திட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஓரளவுக்காவது வாங்கும் சக்தி ஏற்பட்டு, அதன்மூலம் சந்தையிலும் வியாபாரத்தைப் பெருக்கிட முடியும். அதன்மூலமாக சந்தையில் அதிக முதலீட்டுக்கான உகந்ததொரு சூழ்நிலையை உருவாக்கிட முடியும். ஏனெனில் முதலீடு என்பது அவர்கள் போடும் முதலீட்டின் காரணமாக அவர்கள் திரும்ப எடுக்கும் தொகையைப் பொறுத்தே இருக்கிறது. மாறாக அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளால் அல்ல. மாண்புமிகு அமைச்சர் பதிலளிக்கும்போது இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்ததாக, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திட்டச் செலவினம் - திட்டமில்லா செலவினம் (plan expenditure and non-plan expenditure) என்பதை ஒழித்துக்கட்டியதன் பின்னணியில் ஒளிந்துகொண்டிருப்பது எது என்பதைத் தெரிந்து கொள்ளவிரும்புகிறேன். இப்போது நீங்கள் அனைத்து செலவினத்தையும் ஒரே கூடைக்குள் போட்டு வைத்திருக்கிறீர்கள்.
திட்டச் செலவினம், திட்டமில்லா செலவினம் என்பதன் முக்கியத்துவம், நான் புரிந்துகொண்டிருப்பது, எந்தவொரு ஒதுக்கீடாக இருந்தாலும், முதலாவது, அதற்கென்று ஒருவிதமான நிர்வாகச் செலவினம் இருந்திடும், இரண்டாவது, அத்திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியைச் சார்ந்ததாக இருந்திடும். இது இரண்டையும் ஒன்றாக இணைக்கும்போது, எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு, நீங்கள் ஏன்  இவ்வாறு செய்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்பட்டுவிடும். எனவே இதற்குப் பின்னணியில் ஒளிந்துகொண்டிருப்பது எது என்பதை விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதன் காரணமாக தலித்/பழங்குடியினருக்கான அமைச்சகம், தொழிலாளர் நல அமைச்சகம் போன்று மக்கள் நலன் காக்கும் கூருணர்வுமிக்க (sensitive) அமைச்சகங்களின் கதி என்னாயிற்று என்றும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக, பட்ஜெட்டை நான் பரிசீலித்தபோது, மொத்த ஒதுக்கீட்டில் 88 சதவீதம் பொதுக் கணக்கிற்கும், தலித்/பழங்குடியினருக்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்கீழ் வெறும் 12 சதவீதம் மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
அடுத்த, தற்போது பல்வேறு தரப்பினரின் நலன்களுக்காகவும் பல 'செஸ்' ('cess') வரிகள் வசூலிக்கப்பட்டு வந்தது. தொழிலாளர் நலம், பீடித் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளள்கள் என்று பல தொழிலாளர்களுக்கும் பல 'செஸ்' ('cess') வரிகள் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் வசூலிக்கப்பட்டு வந்தன. இதில் பீடித் தொழிலாளர்களுக்கான 'செஸ்' வரி மட்டும் தொடர்வதாக அறிகிறேன். மற்ற அனைத்தும் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டதாக எனக்குக் கூறப்பட்டது. குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கான 'செஸ்' வரி ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. ஏன் இப்படிச் செய்திருக்கிறீர்கள்? ஏன் இந்த 'செஸ்' வரிகள் எல்லாம் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டன. இவ்வாறு அனைத்து 'செஸ்' வரிகளும் 2017 ஏப்ரல் 1க்குப்பின் ஒழித்தக்கட்டப்படும் என்று எனக்குக் கூறப்பட்டிருக்கிறது. தொழிலாளர் பிரிவில்மிகவும் அடித்தட்டில் இருக்கக்கூடிய இப்பிரிவினருக்கு ஓரளவுக்கு பயன் அளித்து வந்த இந்த முறையினை ஏன் ஒழித்துக் கட்டுகிறீர்கள்?
இந்தப் பிரச்சனைகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விளக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தபன்சென் கூறினார்.
(ந,நி.

No comments: