Showing posts with label Budget. Show all posts
Showing posts with label Budget. Show all posts

Friday, March 17, 2017

பொது பட்ஜெட்டில் திட்டச் செலவினம் - திட்டமில்லா செலவினம் ஒழித்துக்கட்டியதற்கான காரணம் என்ன?




பொது பட்ஜெட்டில் திட்டச் செலவினம் - திட்டமில்லா செலவினம்
ஒழித்துக்கட்டியதற்கான காரணம் என்ன?
மாநிலங்களவையில் தபன்சென் கேள்வி
புதுதில்லி, மார்ச் 17-
திட்டச் செலவினம் - திட்டமில்லா செலவினம் என்னும்  ஒதுக்கீடுகளை பொதுப் பட்ஜெட்டில் ஒழித்துக் கட்டியிருப்பதன் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பது எது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியுவின் பொதுச் செயலாளருமான தபன்சென் கோரினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வியாழன் அன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் தபன்சென் பேசியதாவது:
"மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். பட்ஜெட் மீதான விவாதத்தில் சென்ற அமர்வின்போது நான்  பேசிய அம்சங்கள்மீது அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவாக அவர் பதிலளிக்கும்போது நான் எழுப்பும் பல விஷயங்கள் குறித்து எதுவும் பேசாமல் விட்டுவிடுவார். அவ்வாறு இந்த தடவையும் அவர் செய்திடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
முதலாவதாக, நிதிஅமைச்சர் அவர்கள் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது இந்த அவையில் ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், "இன்றைய சூழ்நிலையில் பொருளாதார நடவடிக்கையில் செலவினத்தைக் குறைப்போமானால், அது மேலும் பொருளாதார மந்த நிலைக்கு இட்டுச்செல்லும் என்றும், எனவே பொருளாதார நடவடிக்கைகளை சுருக்கக் கூடாது. எனவே இதர நடவடிக்கைகள் எதுவும்எடுக்காவிட்டால் இந்த பட்ஜெட், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பருமனில் வீழ்ச்சியை ஏற்படுத்திவிடும்," என்று கூறியிருந்தார்.
இது சம்பந்தமாக என் கேள்வி இதுதான். ஒவ்வோராண்டும் நேரடி வரியில் மிகப்பெரிய தொகையை வசூலிக்காமல் விட்டுவிடுவதற்குக் காரணம் என்ன? அதே சமயத்தில் ஒவ்வோராண்டும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வரியை உயர்த்துவதாக அறிவிக்கிறீர்கள், ஆனால் வசூலிப்பதில்லை. இது ஏன்? அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நடப்பு ஆண்டில், இவ்வாறு வசூலிக்காமல் இருக்கும் தொகை 6.59 லட்சம் கோடி ரூபாயாகும். வளங்கள் குறைவாக இருப்பதாகக் கூறும்  அரசாங்கம் இந்த அளவிற்கு மிகப் பெரிய அளவிற்கு தொகையை வசூலிக்காமல் விடுவதற்குக் காரணம் என்ன?
இந்த ஆண்டும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரியில் வசூலிக்காமல் கைவிடப்பட்டிருக்கும் அதேசமயத்தில், மறைமுக வரி மூலமாக கூடுதலாக 75 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்திடவும் குறிவைத்திருக்கிறீர்கள். இது ஏன்? ஏன் இத்தகு தாறுமாறான நிலைமை? குறிப்பாக, பொருளாதாரம் மிகவும் விசனத்திற்குரிய நிலையில் இருக்கும்போது, சாமானிய மக்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகள் குறைக்கப்பட்டு அவர்களுக்கு ஓரளவுக்காவது நிவாரணம் அளித்திட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஓரளவுக்காவது வாங்கும் சக்தி ஏற்பட்டு, அதன்மூலம் சந்தையிலும் வியாபாரத்தைப் பெருக்கிட முடியும். அதன்மூலமாக சந்தையில் அதிக முதலீட்டுக்கான உகந்ததொரு சூழ்நிலையை உருவாக்கிட முடியும். ஏனெனில் முதலீடு என்பது அவர்கள் போடும் முதலீட்டின் காரணமாக அவர்கள் திரும்ப எடுக்கும் தொகையைப் பொறுத்தே இருக்கிறது. மாறாக அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளால் அல்ல. மாண்புமிகு அமைச்சர் பதிலளிக்கும்போது இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்ததாக, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திட்டச் செலவினம் - திட்டமில்லா செலவினம் (plan expenditure and non-plan expenditure) என்பதை ஒழித்துக்கட்டியதன் பின்னணியில் ஒளிந்துகொண்டிருப்பது எது என்பதைத் தெரிந்து கொள்ளவிரும்புகிறேன். இப்போது நீங்கள் அனைத்து செலவினத்தையும் ஒரே கூடைக்குள் போட்டு வைத்திருக்கிறீர்கள்.
திட்டச் செலவினம், திட்டமில்லா செலவினம் என்பதன் முக்கியத்துவம், நான் புரிந்துகொண்டிருப்பது, எந்தவொரு ஒதுக்கீடாக இருந்தாலும், முதலாவது, அதற்கென்று ஒருவிதமான நிர்வாகச் செலவினம் இருந்திடும், இரண்டாவது, அத்திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியைச் சார்ந்ததாக இருந்திடும். இது இரண்டையும் ஒன்றாக இணைக்கும்போது, எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு, நீங்கள் ஏன்  இவ்வாறு செய்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்பட்டுவிடும். எனவே இதற்குப் பின்னணியில் ஒளிந்துகொண்டிருப்பது எது என்பதை விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதன் காரணமாக தலித்/பழங்குடியினருக்கான அமைச்சகம், தொழிலாளர் நல அமைச்சகம் போன்று மக்கள் நலன் காக்கும் கூருணர்வுமிக்க (sensitive) அமைச்சகங்களின் கதி என்னாயிற்று என்றும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக, பட்ஜெட்டை நான் பரிசீலித்தபோது, மொத்த ஒதுக்கீட்டில் 88 சதவீதம் பொதுக் கணக்கிற்கும், தலித்/பழங்குடியினருக்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்கீழ் வெறும் 12 சதவீதம் மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
அடுத்த, தற்போது பல்வேறு தரப்பினரின் நலன்களுக்காகவும் பல 'செஸ்' ('cess') வரிகள் வசூலிக்கப்பட்டு வந்தது. தொழிலாளர் நலம், பீடித் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளள்கள் என்று பல தொழிலாளர்களுக்கும் பல 'செஸ்' ('cess') வரிகள் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் வசூலிக்கப்பட்டு வந்தன. இதில் பீடித் தொழிலாளர்களுக்கான 'செஸ்' வரி மட்டும் தொடர்வதாக அறிகிறேன். மற்ற அனைத்தும் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டதாக எனக்குக் கூறப்பட்டது. குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கான 'செஸ்' வரி ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. ஏன் இப்படிச் செய்திருக்கிறீர்கள்? ஏன் இந்த 'செஸ்' வரிகள் எல்லாம் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டன. இவ்வாறு அனைத்து 'செஸ்' வரிகளும் 2017 ஏப்ரல் 1க்குப்பின் ஒழித்தக்கட்டப்படும் என்று எனக்குக் கூறப்பட்டிருக்கிறது. தொழிலாளர் பிரிவில்மிகவும் அடித்தட்டில் இருக்கக்கூடிய இப்பிரிவினருக்கு ஓரளவுக்கு பயன் அளித்து வந்த இந்த முறையினை ஏன் ஒழித்துக் கட்டுகிறீர்கள்?
இந்தப் பிரச்சனைகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விளக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தபன்சென் கூறினார்.
(ந,நி.

Wednesday, March 16, 2011

மக்களைப்பற்றிக் கவலைப்படாத மிகவும் கொடூரமான பட்ஜெட்: ப்ரண்ட்லைன் தலையங்கம்

தொடர்ந்து மெகா ஊழல்களில் சிக்கிக் கறைபடித்துள்ளதோர் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2011-12ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட், நாட்டின் முன் பெரும் சவாலாக உருவாகியுள்ள பண வீக்கத்தைக் கட்டுப்படுத்திடுவதிலோ, பெரும்பகுதி மக்கள் வறிய நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்திடவோ முற்றிலுமாகத் தவறிவிட்டது. வருவாய் தொடர்பான முன்மொழிவுகளில் அரசு, வசதி படைத்தோருக்கு, குறிப்பாக கார்பரேட் துறையினருக்கு, குறிப்பிடத்தக்க அளவில் வரிச் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பைச் சரிசெய்வதற்காக, பணவீக்கம் என்னும் தீயை மேலும் கொழுந்துவிட்டெரியச் செய்திடும் வகையில், மறைமுக வரிகளை அதிகரித்திருக்கிறது. நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு, உரங்கள் மற்றும் எரிபொருள்கள் மீது அளித்து வந்த மான்யங்களை வெட்டிக் குறைத் திருக்கிறது. மேலும் அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்கள் அளவிற்குத் தனியாருக்குத் தாரை வார்த்திடவும் வகைசெய்துள்ளது. இத்துடன் 2009 ஏப்ரலுக்கும் 2011 மார்ச்சுக்கும் இடையே தனியாருக்குத் தாரை வார்த்த பங்குகளையும் சேர்த்தால் சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு வரும். மேலும் 2010-11 ஆம் ஆண்டுடன் 2011-12 ஆம் ஆண்டின் பட்ஜெட்டை ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்காக இருக்கக்கூடிய நாட்டுப்புற ஏழை மக்களின் வளர்ச்சிக்காக விவசாயம், பாசனவசதி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்து வந்த மத்தியத் திட்டச் செலவினங்கள் உண்மையான ரூபாயின் மதிப்பில் குறைந்திருப்பதையும் காண முடியும்.
பட்ஜெட் மதிப்பீடுகளின்படி 2011-12ஆம் ஆண்டுக்கான அரசின் மொத்த செலவினம் 12 லட்சத்து 57 ஆயிரத்து 729 கோடி ரூபாய்களாகும். சென்ற 2010-11ஆம் ஆண்டில் இது 12 லட்சத்து 16 ஆயிரத்து 576 கோடி ரூபாய்கள். இவ்வாறு வெறும் 3.3 விழுக்காடு அளவிற்கே உயர்வு. 2011-12ஆம் ஆண்டிற்கான திட்டமில்லா செலவினங்களுக்கான பட்ஜெட் தொகை 8 லட்சத்து 16 ஆயிரத்து 182 கோடி ரூபாய்கள். இது 2010-11ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட்டின் செலவினத் தொகையை விட 5 ஆயிரத்து 370 கோடி ரூபாய்கள் குறைவு. முக்கியமான மான்யங்கள் பலவற்றைப் பெருமளவில் வெட்டிக் குறைத்ததன் காரணமாகவே இந்தக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. 2010-11ஆம் ஆண்டின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில், பெட்ரோலியப் பொருட்களுக்குக் கொடுத்து வந்த மான்யம் 14 ஆயிரத்து 746 கோடி ரூபாய் அளவிற்கும், உரங்களுக்கான மான்யத் தொகை 4 ஆயிரத்து 979 கோடி ரூபாய் அளவிற்கும், உணவு மான்யங்கள் 27 கோடி ரூபாய் அளவிற்கும் வெட்டிக் குறைக்கப் பட்டிருக்கின்றன. ராணுவத்திற்கு ஒதுக்கியது தவிர திட்டமில்லா மூலதனச் செலவினம் 14 ஆயிரத்து 484 கோடி ரூபாய்கள் வெட்டப்பட்டிருக்கிறது. இது 2010-11 ஆம் ஆண்டிற்கான வருவாய் செலவினத்தைவிட 50 விழுக்காட்டிற்கும் அதிகமான தொகையாகும்.

அதேபோன்று விவசாயிகள் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையும் 50 விழுக்காடு அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. அதாவது 2010-11ஆம் ஆண்டிலிருந்த வருவாய் செலவினத்தில் 2010-11ஆம் ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 2011-12இல் அது 6 ஆயிரம் கோடி ரூபாய்களாக வெட்டப்பட்டிருக்கிறது. 2011-12ஆம் ஆண்டிற்கான திட்டச் செலவினத்தில், 2010-11ஆம் ஆண்டைக் காட்டிலும் 12.36 விழுக்காடு உயர்வு காணப்பட்டபோதிலும்கூட, இன்றைய பணவீக்கத்தின் காரணமாக ரூபாயின் உண்மை மதிப்பு குறைந்துள்ள நிலையில் இந்த உயர்வு என்பதும் உண்மையில் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில், அரசின் ஒட்டுமொத்த செலவினம் என்பது 2010-11ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படியான 15.4 விழுக்காட்டிலிருந்து, 2011-12ஆம் ஆண்டின் பட்ஜெட் மதீப்பீட்டில் 13.7 விழுக்காட்டிற்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது.

விவசாயத் துறைக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் தனிக் கவனம் செலுத்தப் பட்டிருப்பதாக சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இது மிகவும் விந்தையாக இருக்கிறது. உண்மையில் மத்தியத் திட்டச் செலவினங்களில் கிராமப்புற வளர்ச்சி, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கும் மற்றும் பாசனவசதிக்கும் மிகச் சிறிய அளவிலேயே தொகை அதிகரிக்கப் பட்டிருக்கிறது. 2010-11ஆம் ஆண்டின் வருவாய் செலவினத்தில் 70 ஆயிரத்து 213 கோடி ரூபாய்களாக இருந்தது, இப்போது 2011-12ஆம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டில் 70 ஆயிரத்து 597 கோடி ரூபாய்களாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரூபாயின் உண்மை மதிப்பில் இது கணிசமான அளவிற்கு குறைவானதாகும். எனவே விவசாயத் துறைக்கு குறிப்பிடத்தக்க அளவிற்குக் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறுவதில் பொருளேதுமில்லை. நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையை, அவர் சமர்ப்பித்துள்ள 2011-12ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை (எகனாமிக் சர்வே)யுடன் சேர்த்துப் பார்த்தோமானால், கிடைத்திடும் முடிவு வேறாக இருக்கிறது. உணவுப் பொருள்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்திருப்பதற்கு உணவுப் பொருள்களின் விநியோகத்திலும் சந்தை அமைப்பிலும் உள்ள குறைபாடுகளுக்குக் கவனத்தை ஈர்த்துள்ள நிதி அமைச்சர், இதற்குப் பிரதான காரணம் சில்லரை வர்த்தக வலைப் பின்னல்தான் என்றும்கூறி, இதற்குத் தீர்வு பன்னாட்டு நிதிநிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீட்டை சில்லரை வர்த்தகத்தில் அனுமதிப்பதே வழி என்கிற வரைக்கும் சென்றிருக்கிறார். கார்பரேட் நிறுவனங்களுக்குப் பிரியமான நிகழ்ச்சிநிரலை இவ்வாறு நிதி அமைச்சர் கூறியிருப்பதால்தான் கார்பரேட் நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் ஊடகங்களும் பட்ஜெட்டை வெகுவாகப் புகழ்ந்து தள்ளியுள்ளன.

மேலும் நிதி அமைச்சர் அவர்கள், ‘‘...மக்களின் வருமானம் அதிகரித்திருப்பதன் காரணமாக அவர்கள் வாங்கும் உணவுப் பொருள்களின் தேவைகளும் வளர்ந்து கொண்டிருப்பதால்’’ என்றும் குறிப் பிட்டிருக்கிறார். மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்ற அரசின் திட்டங்களால் கிராமத்தில் வாழும் பெரும்பான்மை மக்களின் வருமானம் அதிகரித்து விட்டதாகவும், அதனால்தான் உணவுப் பணவீக்கத்தின் விகிதமும் உயர்ந்துவிட்டதாகவும் எந்தவிதக் கூச்சநாச்சமுமின்றிக்கூறி வரும் அரசின் குரலையே நிதி அமைச்சர் அவர்களும் இவ்வாறு பிரதிபலிக்கிறார். மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததால்தான் பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்ற கூற்றுக்கு அனுபவரீதியாக அர்த்தமேதுமில்லை. இவர்கள் பொருள்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதையே பார்க்க மறுக்கிறார்கள். அரசாங்கமானது விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கும், உற்பத்தியாகும் பொருள்களை சேமித்து வைத்திட, பதப்படுத்திட, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து வசதிகளைச் செய்துதருதல் உட்பட கிராமப்புறத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். ஆனால் அரசாங்கம் இவ்வேலைகளை எல்லாம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்பரேட் துறையிடம் அளித்திட முடிவு செய்திருப்பதாகவே தெரிகிறது. இதற்காக அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தொகைகளை அளித்திட உரிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரவும் யோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் பட்ஜெட் உரையில், உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமான ஊக வர்த்தகம் குறித்து எதுவும் கூறாது மவுனம் சாதித்திருக்கிறது.

தற்போதைய மக்களவை 2009இல் அமைக்கப்பட்டதை அடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, தற்போதையக் குடியரசுத் தலைவர் அவர்கள், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு குறித்து ஓர் உறுதிமொழியினை அளித்தார். இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்த உறுதிமொழி இன்னமும் உறுதிமொழியாகவே நீடிக்கிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு குளிர்பதன அறையில் வைக்கப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது. 2010-11 வருவாய் செலவினத்துடன் 2011-12 பட்ஜெட் மதிப்பீட்டை ஒப்பிடுகையில் உணவு மான்யத்தில் கடுமையான அளவிற்கு குறைவு காணப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில் கார்பரேட் முதலாளிகளுக்கு 2008-09ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. அரசாங்கத்தில் சில குரல்கள் இதற்கெதிராக எழுந்துள்ள போதிலும் இந்நடவடிக்கைகள் தொடர்கின்றன. இவ்வாறு வசதிபடைத்தோருக்கு அளிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகைகள் 2009-10ஆம் ஆண்டில் 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய்களாக இருந்தது, 2010-11ஆம் ஆண்டிற்கு 5 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய்களாக உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் ஏழை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மான்யங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை என்பது மிகச் சிறிய அளவிற்கே உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு நாயைக் கொன்று தொங்கவிடுவதற்கு முன் அது குறித்து மோசமாகக் கூறிடவேண்டும் என்பது ஒரு தந்திரம். அதேபோன்று வசதிபடைத்தோருக்கு அளித்தால் அது ஊக்குவிப்பு நடவடிக்கைகள். ஆனால் உணவுக்காகவும், எரிபொருள் களுக்காகவும் ஏழைகளுக்கு அளித்தால் அதன்பெயர் மான்யங்கள்.

நிறைவாக, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. வரி வருவாயில் கணிசமான அளவிற்கு உயர்வு இருக்கும் என்றும், 2010-11ஆம் ஆண்டைவிட 2011-12ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்றும் உற்சாகத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். நிதி அமைச்சரின் மகிழ்ச்சியை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ள முடியாது. ஏனெனில் கச்சா எண்ணெய்யின் விலைகள் மேலும் கூர்மையாக உயர இருக்கின்றன. இதனால் முன்னெப்போதையும்விட கடுமையாகப் பாதிக்கப்படப்போவது பாமர மக்கள்தான். இவ்வாறு மத்திய பட்ஜெட்டானது நாட்டில் வறிய நிலையில் வாடும் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரப் போவதில்லை.

(தமிழில்: ச.வீரமணி)