Tuesday, March 21, 2017

கைது செய்யப்பட்ட நான்கு மாணவிகளிடம் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டுள்ளனர் ஜர்னாதாஸ் பைத்யா மாநிலங்களவையில் கண்டனம்



புதுதில்லி, மார்ச் 21-
மேற்கு வங்க காவல்துறையினர், கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவிகளிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜர்னா தாஸ் பைத்யா கோரினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் அவசரப்பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் ஜர்னா தாஸ் பைத்யா கூறியதாவது:
மேற்கு வங்க காவல்துறையினர் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகளிடம் கடந்த மார்ச் 10 ஆம் தேதியன்று கொல்கத்தாவில், 
மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்துகொண்டுள்ள சம்பவம் குறித்து தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். மஞ்சுளா சென் ராய், அஹனா கங்குலி, ரூப்சா சஹா மற்றும் அனன்யா நியோகி ஆகிய மாணவிகள்தான் அவர்கள். அவர்கள் காவல்துறையினரால் மார்ச் 9 ஆம் தேதி மேலும் பலருடன் கைது செய்யப்பட்டார்கள். ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனங்கள் தொடர்பாக ஊழல் நடைபெறுவதைக் கண்டித்து நடைபெற்ற கிளர்ச்சிப் பேரணியில் அவர்கள் பங்கேற்றிருந்தார்கள். இவ்வாறு இவர்கள் பேரணி வந்தபோது காவல்துறையினர் பெண்கள் என்றும் பாராமல் அவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். இதில் பலர் காயங்கள் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலேகூறிய நான்கு மாணவிகளையும் காவல்துறையினர் கைது செய்து லாக்கப்பில் அடைத்துள்ளனர். மார்ச் 14 வரை போலீஸ் காவலிலேயே அவர்கள் இருந்துள்ளனர். ஊழலுக்கு எதிராக எவர் கிளர்ச்சி செய்தாலும் அரசாங்கத்தாலும், காவல்துறையினராலும் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.
இதன்பின்னர் மேலும் மோசமான முறையில் அவர்கள் நடத்தப்பட்டுள்ளனர். அம்மாணவிகள் அனைவரும் அலிப்பூர் பெண்f;s சீர்திருத்தச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டுள்ளனர். அவர்களை அரசியல் போராளிகளாகவே அவர்கள் கருதிடவில்லை. மாறாக கிரிமினல்களை நடத்துவதைப்போல சட்டவிரோதமானமுறையில் துன்புறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களை சோதனை அறைக்கு அழைத்துச்சென்று அவர்களின் துணிகளை உருவி அவர்களின் உடம்பில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இது மிகவும் ஆட்சேபணைக்குரியதாகும்.
(இத்துடன் நேரம்முடிந்துவிட்டதால், தொடர்ந்து அவர் பேசியது கேட்கவில்லை)
இவ்வாறு ஜர்னாதாஸ் பைத்யா பேசினார்.
இவரது கோரிக்கையுடன் டி.கே.ரெங்கராஜன், தபன்சென் மற்றும் பல உறுப்பினர்கள் தங்களை இணைத்துக்கொண்டனர்.
(ந,நி.)

No comments: