Friday, March 3, 2017

இரண்டு நிகழ்வுகள் : கூறும் செய்தியோ ஒன்றுதான்



People's Democracy
தலையங்கம்

(குர்மேஹர் கவுர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிந்திருந்த புகைப்படத்தை மாற்றிவிட்டு, ‘நான் தில்லிப் பல்கலைக்கழக மாணவி. நான் ஏபிவிபிக்குப் பயப்படமாட்டேன். நான் தனியாக இல்லை. நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் என்னுடன் இருக்கிறார்கள்,’ என்ற பதாகையைப் பதிந்திருந்தார். குர்மேஹர் கவுரின் பதிவு, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விரிவான அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியது._)
நாட்டில் சென்ற வாரம் ஜனநாயகத்தின் மீதும், மதச்சார்பின்மையின் மீதும்தாக்குதல் தொடுத்த ஆர்எஸ்எஸ் குண்டர்களை இரண்டு இடங்களில் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். இரண்டு இடங்களுக்கும் இடையிலான தூரம் என்பது ஈராயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமாகும். முதலாவது, நாட்டின் தலைநகரான தில்லிப் பல்கலைக் கழகம். மற்றொன்று கர்நாடக மாநிலத்தில் மங்களூர் நகரம்
ஏபிவிபி தாக்குதலும் காவல்துறை தாக்குதலும்
தில்லிப் பல்கலைக் கழகத்தில், ஆர்எஸ்எஸ்-இன் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பின்கீழான மாணவர்கள், ராம்ஜாஸ் கல்லூரியில் நடைபெறவிருந்த கருத்தரங்கில் தாக்குதலைத் தொடுத்தார்கள். இதற்கு அவர்கள் கூறிய சாக்குப்போக்கு என்பது அந்தக் கருத்தரங்கிற்கு தேசவிரோதிகளை அழைத்திருந்தார்களாம். கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்த ஜேஎன்யு பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர் உமர் காலித் பங்கேற்கவில்லை என்ற போதிலும்கூட, ஏபிவிபி மாணவர்கள் அந்த கருத்தரங்கத்தை சீர்குலைத்தார்கள், கருத்தரங்கத்திற்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலரையும் அடித்து நொறுக்கினார்கள்.இத்தகைய குண்டாயிசத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் மாணவர்கள்பேரணி ஒன்றுக்கு பிப்ரவரி 22 அன்று ஏற்பாடாகி இருந்தது. அதுவும் ஏபிவிபி குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளானது. அடித்து நொறுக்கப்பட்டவர்களில் மாணவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிப்பதற்காக பங்கேற்றிருந்த ஆசிரியர்களும், பேராசிரியர்களும் இருந்தார்கள். தாக்குதலுக்கு உள்ளான பேராசிரியர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. இவ்வாறு ஏபிவிபி அமைப்பினர் போக்கிரித்தனத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில், கணிசமான அளவில் அங்கே பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த தில்லி காவல்துறையினர், ஏபிவிபி குண்டர்களின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட எதுவுமேசெய்யாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னர், இவர்களின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையைக் கண்டித்து, இந்தக்குண்டர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காவல்நிலையத்தின் முன் மாணவர்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்தபோது, அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களைக் காவல்துறையினர் அடித்து நொறுக்கினர்.
மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சி
ராம்ஜாஸ் நிகழ்வும், தில்லிப் பல்கலைக் கழக மாணவர்கள் - ஆசிரியர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவமும், பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தங்களின் இந்துத்துவா சித்தாந்தம் மற்றும் இவர்களின் இந்துத்துவா தேசியவாதத்தை எதிர்க்கிறவர்களை மிரட்டி, பணிய வைத்திட ஏபிவிபி மேற்கொண்டுள்ள முரட்டுத்தனமான முயற்சிகளின் ஒரு பகுதியேயாகும்.ஏபிவிபியின் குண்டாயிசமும், தில்லி போலீஸ் இவர்களுக்கு உள்கையாக இருந்து இவர்களின் ரவுடியிசத்திற்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதும், மாணவர் சமுதாயத்தின் மத்தியில் மிகவும் விரிவான அளவில் ஆத்திரத்தையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குர்மேஹர் கவுர் என்னும் இருபது வயது மாணவி, ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபியின் மிரட்டல்கள் மற்றும் வன்முறை நடவடிக்கைகளுக்கு மண்டியிட மாட்டோம் என்று விரிவான முறையில் தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.குர்மேஹர் கவுர் தன்னுடைய முகநூல்பக்கத்தில் பதிந்திருந்த புகைப்படத்தை மாற்றிவிட்டு, ‘நான் தில்லிப் பல்கலைக்கழகமாணவி. நான் ஏபிவிபிக்குப் பயப்படமாட்டேன். நான் தனியாக இல்லை. நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் என்னுடன் இருக்கிறார்கள்,’ என்ற பதாகையைப் பதிந்திருந்தார். குர்மேஹர் கவுரின் பதிவு,நாடு முழுதும் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விரிவான அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் அது அவருக்கு எதிரான வெறுப்பு மின் அஞ்சல்களையும் பெற்றது. வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவாய் என்றும் அவை மிரட்டின.
தியாகிகளை மதிக்கும் பாஜகவின் லட்சணம்
குர்மேஹர் கார்கில் போரின் போது கொல்லப்பட்டு தியாகியான ஒரு ராணுவ கேப்டனின் மகளாவார். சங் பரிவாரக் கும்பல், இந்திய ராணுவத்தில் இறந்ததியாகிகளைமதிப்பதாகக் கூறிக்கொள்கிறது. ஆனால், குர்மேஹர் இவர்களின் வெறுப்பு பிரச்சாரத்தின்மூலம் குறிவைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.இவர், இதற்கு முன்பு தன் சமூகவலைப் பக்கங்களில் பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் கூடாது என்றும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்திட அனைவரும் ஆதரவளிப்போம் என்றும் பதிந்திருந்தார். இவ்வாறு இவர் பதிவுகளுக்கு எதிராகமத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜி்ஜூ, வெங்கய்யா நாயுடு போன்றவர்கள் கூட தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் குர்மேஹர் கவுருக்கு எதிராகப் பதிவுகளை பதிவேற்றம் செய்திருந்தனர்.குர்மேஹர் கவுர் மீதான ஈனத்தனமான தாக்குதல் சங் பரிவாரம் கூறிவரும் தேசியவாதத்தின் குரூரமான சொரூபத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது.ஆர்எஸ்எஸ்-இன் மதவெறி மற்றும் அதன்மாணவர் அமைப்பான ஏபிவிபி ஆகியவற்றின்வகுப்புவாத வன்முறை வெறியாட்டங்களை எதிர்த்திடத் தான் தயாராயிருப்பதாக இளம்வீராங்கனையான குர்மேஹர் கவுர் உடனடியாக தைரியமாக சூளுரைத்துள்ளார்.
பிரம்மாண்ட மாணவர் பேரணி
தில்லிப் பல்கலைக் கழக மாணவர் சங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஏபிவிபி தலைவர்களும் பல்கலைக் கழக வளாகத்திற்குள் கம்யூனிஸ்ட்டுகளையும், தேச விரோதிகளையும் நுழையஅனுமதிக்க மாட்டோம் என்று அச்சுறுத்தல்களை விடுத்திருந்தார்கள். ஆனாலும்,இடதுசாரி மற்றும் ஜனநாயக மாணவர்அமைப்புகளின் பின்னால் அணிதிரண்டுள்ள சாதாரண மாணவர்கள் அனைவரும் கிளர்ந்தெழுந்து, ஏபிவிபியின் குண்டாயிசத்திற்கு எதிராகப் போராடுவது என்று தீர்மானித்தனர். பிப்ரவரி 28 அன்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான பேரணியை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஜனநாயக சக்திகள் பங்கேற்றஆர்ப்பாட்டமும் தில்லியில் நடைபெற்றுள்ளது.மற்றொரு நிகழ்வு, பிப்ரவரி 25 அன்று மங்களூரில் நடைபெற்ற மதநல்லிணக்கப் பேரணி/பொதுக்கூட்டமாகும். இந்தப் பேரணி/பொதுக்கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்திட ஏற்பாடாகி இருந்தது. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன்கீழ் இயங்கும் பல்வேறு இந்து மதவெறி அமைப்புகள் பினராயி விஜயன் பேரணி/பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவதை தடுத்திடுவோம் என்றும், அவரை இப்பேரணி/பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்றும் அறிவித்திருந்தனர். பேரணி/பொதுக்கூட்டம் நடைபெறும் நாளன்று கடையடைப்பு நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருந்தனர்.
அச்சுறுத்தலை மீறி...
மேலும் பல்வேறுவிதமான அச்சுறுத்தல்கள் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். உள்ளல் என்னுமிடத்திலிருந்த கட்சி அலுவலகத்தை தாக்கி அங்கிருந்த மேஜை, நாற்காலிகளுக்கு தீ வைத்தனர்.இவ்வளவு அச்சுறுத்தல்களையும் மீறி,பேரணி/பொதுக்கூட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. பினராயி விஜயன் பேரணியைத் துவக்கி வைத்தார். ஆர்எஸ்எஸ் குண்டர்களின் அச்சுறுத்தல்களை மீறி, பேரணியில் மக்கள் பெரும் திரளாகத் திரண்டிருந்ததும், அதில் பினராயி விஜயன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உண்மை சொரூபத்தைத் அம்பலப்படுத்தியதும், நாட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.தில்லிப் பல்கலைக் கழகத்திலும், மங்களூரிலும் நடைபெற்ற நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள செய்தி ஒன்றேதான். ஆர்எஸ்எஸ்கட்டவிழ்த்துவிட்டுள்ள அச்சுறுத்தல்களை ஒன்றுபட்டு நின்று, உறுதியுடன் எதிர்த்திடுவோம்.
(மார்ச் 1, 2017)
(தமிழில்: .வீரமணி)

No comments: