Wednesday, March 29, 2017

விவசாயக் கடன்களை ரத்து செய்யுங்கள்! தமிழக விவசாயிகளுக்காக நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி ஆவேசம்



விவசாயக் கடன்களை ரத்து செய்யுங்கள்!
தமிழக விவசாயிகளுக்காக நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி ஆவேசம்
புதுதில்லி, மார்ச் 29-
நமக்கெல்லாம் உணவு அளித்திடும் விவசாயிகளின் நிலைமை மிகவும் துயரமாக இருக்கிறது. கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன்களை ரத்து செய்திடும் இந்த அரசு அதில் ஒரு சிறு பகுதி அளவேஉள்ள விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்திட வேண்டும். அதன்மூலம் விவசாயிகள் வாழ வழிவகுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்றுகாலை மாநிலங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில், தலைநகர் தில்லியில் கடந்த பதினைந்து நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் பிரச்சனை எழுப்பப்பட்டது. அப்போது சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

தில்லியில் ஜந்தர்மந்தரில் போராட்டத் தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளை நான் சந்தித்தேன். துரதிர்ஷ்டவசமாக நமது நாடு விவசாயிகளின் தற் கொலைகள் தொடர்ந்து நடைபெறும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது. இப்போது அவர்களைச் சென்று பார்த்தபோது நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதுஎன்பதைக் காண முடிந்தது. அவர்கள் தங்களுடன் உயிருள்ள எலிகளைப் பிடித்து வைத்திருந்தார்கள். கேட்டபோது, “இதுதான் இப்போது எங்களுக்கு உணவுஎன்கிறார்கள். இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை. நமக்கு உணவு அளித்த உழவர்களின் நிலை இன்றைய தினம் எலிகளைச் சாப்பிடக்கூடிய அளவிற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. “எங்களுக்கு வாழ்வதற்கு வேறு வழியேதெரியவில்லைஎன்கிறார்கள்.

நான் இந்த அரசாங்கத்தைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் வங்கிகளில் பணக்கார கார்ப்பரேட்டுகள் வாங்கிய பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை வராக்கடன்கள் என்ற பெயரில் மாற்றி அவற்றைத் தள்ளுபடி செய்கிறீர்கள். ஆனால் தற்கொலை செய்துகொள்ளும் ஏழை விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய மறுக்கிறீர்கள். இது ஏற்க முடியாத ஒன்றாகும். பணக்கார பெருமுதலாளிகளுக்கு ரத்து செய்திடக்கூடிய தொகையுடன் ஒப் பிட்டால் விவசாயிகளின் கடன் தொகை என்பது மிகவும் சிறிய அளவேயாகும். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்திடுங்கள். அதன்மூலம் இந்திய விவசாயத்தையும், இந்திய விவசாயிகளையும் காப்பாற்றுங்கள். இல்லையேல், நம் நாட்டிற்கு எதிர்காலமே கிடையாது.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

டி.கே.ரங்கராஜன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இப்பிரச் சனை மீது பேசியதாவது:தமிழ்நாட்டு விவசாயிகள் மிகவும் மோசமான நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். விவசாயிகளின் பிரச்சனை 140 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இப்போது தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில குருத்வாராக்கள் அவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்றன. தில்லி மக்கள் தமிழக விவசாயிகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, உள்துறையும், காவல்துறையினரும் அவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அங்கிருந்து காலிசெய்துவிட்டுப் போய்விட வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனைச் செய்யாதீர்கள் என்று உள்துறை அமைச்சகத்தை நான் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் போராட்டம் மிகவும் நியாயமானதொரு போராட்டமாகும். தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று இங்கே வந்திருக்கிறார்கள். ஏன் காவல் துறை தலையிடுகிறது? அந்தப் பகுதி போராட்டங்கள் நடத்துவதற்கு என்று நாடாளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட பகுதியாகும். அங்கே அவர்கள் போராடுவதை உள்துறை அமைச்சகம் தடுக்கக் கூடாது. அவர்களது கோரிக்கை மிகவும் நியாயமானவை. பிபிசி அவற்றை ஒளிபரப்பியது. உலகில் லட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்தார்கள்

தமிழ்நாட்டில் குடிதண்ணீர் இல்லை, கால்நடைகளுக்குத் தீவனங்கள் இல்லை, இந்த நிலைமை தொடரக் கூடாது. நானும் சீத்தாராம் யெச்சூரியும் நிதிஅமைச்சரை சந்தித்தோம். விவசாயிகளின் பிரதிநிதிகளும் அவரை சந்தித் தார்கள். ஆனாலும் பலன் எதுவும் கிடைக்கவில்லை. மத்திய அரசு விவசாயிகளின் பிரச்சனையில் ஏதாவது செய்திட வேண்டும். இல்லையேல் மத்திய அரசுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் போராடும். மத்திய அரசு, தமிழகத்திற்கு உதவவேண்டும். அவர்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்திடுங்கள். குடிதண்ணீர் கிடைத்திட நடவடிக்கை எடுத்திடுங்கள். இவற்றைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டிட வேண்டும். இல்லையேல் நிலைமைகள் மேலும் மோசமாகிடும்.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் கூறினார்.

இப்பிரச்சனையில் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், (திமுக) து.ராஜா (சிபிஐ) ஆகியோரும் பேசினர்.
(.நி)

Tuesday, March 28, 2017

சர்வாதிகாரப் பாதையில் மோடி அரசு: சீத்தாராம் யெச்சூரி



சர்வாதிகாரப் பாதையில் மோடி அரசு
அரசமைப்புச் சட்டத்தை வெட்டி சாய்த்திட அனுமதியோம்
நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி கடும் குற்றச்சாட்டு
(புதுதில்லியில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் (27/3/17) திங்கள் கிழமை அன்று சீத்தாராம் யெச்சூரி, நிதிச் சட்டமுன்வடிவின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை:)
"இந்த நிதிச் சட்டமுன்வடிவு மீதான விவாதம் குறித்து உண்மையில் நான் மிகவும் சங்கடத்திற்குள்ளாகி இருக்கிறேன். ஏனென்றால், உண்மையில் இதனை  நிதிச் சட்டமுன்வடிவு என்று என்னால் கருத முடியவில்லை.  சில உறுப்பினர்கள் சொன்னதைப்போல இது நிதிச் சட்டமுன்வடிவு அல்ல மாறாக இது நிதி அடாவடித்தனமாகும். அரசாங்கத்தால் மக்களவையில் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டு அவசரகதியில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  
இந்தச் சட்டமுன்வடிவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 189 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றில் 129 வரி முன்மொழிவுகள் சம்பந்தப்பட்டவைகளாகும். இவற்றில் 60 ‘பல்வேறு வகைப்பட்டவை’ என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் 14 முதல் 17 வரையிலானவை எந்தவிதத்திலும் நிதிச் சட்டமுன்வடிவின் வரையறைக்குள் வராதவைகளாகும்.
நான் இதன்மீது விவாதிக்கும்போது ஏன் மிகவும் சங்கடத்திற்குள்ளாகி இருக்கிறேன், மன வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் என்றால், இவ்வாறு இந்த சட்,டமுன்வடிவை இந்த அவையில் தாக்கல் செய்திருக்கும் நடவடிக்கையானது, நம் நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்பாக விளங்கும் நாடாளுமன்றத்தையே தங்கள் மறைசூழ்ச்சியால் அழித்து ஒழிக்கும் வேளையில் இவர்கள் இறங்கியிருக்கிறார்களே என்று நான் கருதுவதால்தான்.
 நம் அரசைமைப்புச் சட்டம் மிகவும் தெளிவான ஒன்று. நம் அரசமைப்புச் சட்டத்தின்கீழ், மக்களின் இறையாண்மைதான் உச்சபச்ச நிலையில் உள்ளதாகும். "மக்களாகிய நாம்" என்றுதான் அரசமைப்புச் சட்டம் துவங்கும். அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளாகிய நமக்கு, ஆட்சியாளர்கள் பதில் சொல்லக்  கடமைப்பட்டவர்களாவார்கள். இவ்வாறு ஆட்சியாளர்கள், நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.  இவ்வாறு நம் அரசமைப்புச்சட்டத்தின்படி மக்களின் இறையாண்மைதான் உச்சத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.  ஆனால், நிதிக்கு சம்பந்தம் இல்லாத சங்கதிகளை, வரி விதிப்பதற்கு சம்பந்தம் இல்லாத சங்கதிகளை யெல்லாம், நிதிச் சட்டமுன்வடிவுக்குள் கடத்திக்கொண்டு சென்றிருப்பதன்மூலம், இந்த  சட்டமுன்வடிவை நிதிச் சட்டமுன்வடிவு என்று கூறுவதன் மூலம், மாநிலங்களவையில் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒட்டுமொத்த அரசமைப்புச்சட்டமே அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறது. எனவே இதனை அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான ஒரு சட்டமுன்வடிவு என்றே நான் கருதுகிறேன்.
எனவே இது குறித்து இந்த அவை மிகவும் ஆழமாகப் பரிசீலனை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருக்கும் சூழ்ச்சிக்கு இந்த அவை ஒருபோதும் இரையாகிவிடக்கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியாளர்களின் இந்த சூழ்ச்சிக்கு இரையாகிட நான் விரும்பவில்லை.
துணைத் தலைவர்: நீங்கள் ஏற்கிறீர்களோ, இல்லையோ, இது நாட்டின் சட்டமாகப் போகிறது.
சீத்தாராம் யெச்சூரி: அதனால்தான் இதற்கு ஒரு பார்ட்டியாக நான் இருந்திடவில்லை என்று பிரகடனம் செய்கிறேன். நாம் அனைவரும் அவ்வாறு பிரகடனம் செய்திட வேண்டும். இந்தச் சட்டமுன்வடிவின் ஷரத்துக்களைப் பார்த்தீர்களானால் நாம் எந்த அளவிற்கு ஓரங்கட்டப்பட்டிருக்கிறோம் என்பதைப் பார்க்க முடியும். இது மிகவும் ஆழமான விஷயம்.
வருமான வரிச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ள அரக்கத்தனமான திருத்தங்கள் குறித்து மாண்புமிகு உறுப்பினர் கபில்சிபல் கூறினார். இது நிறைவேற்றப்பட்டுவிட்டால், எந்தவொரு வருமானவரி அலுவலரும் உங்கள் வீட்டுக்குள் வந்து, "நீங்கள் ஏதோ மறைத்துவைத்திருக்கிறீர்கள் என்று நம்புவதற்கான காரணங்கள்" இருப்பதாகக் கூறி உங்களையும் உங்கள் வீட்டையும் சோதனையிடலாம். நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இங்கே இந்த அவையில் உங்களை நாங்கள் பாதுகாக்க முடியும். ஆனால் உங்கள் வீட்டில் அப்படி செய்ய முடியாது. இவ்வாறு இன்ஸ்பெக்டர்கள் ஆட்சி மீளவும் மிகவும் மோசமான வடிவத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நாம் அனைவரும் மிகவும் வடுப்படத்தக்க நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
இதேபோன்று மேலும் மூன்று அம்சங்கள் குறித்தும் நான் தொட விரும்புகிறேன்.
நாட்டின் அரசமைப்புச்சட்ட ஜனநாயகத்தை வெட்டிச் சுருக்குவது என்பது ஒரு பாசிஸ்ட் போக்காகும். இந்த அவையில் விவாதங்களின் போது பலமுறை நாம் கோயபல்ஸ், ஹிம்லர் ஆகியோரின் பெயர்களைக் கேட்டிருக்கிறோம். ஆனால் இப்போதைய  அரசாங்கம் தங்கள் குறிக்கோளை எய்துவதற்காக, நாடாளுமன்ற ஜனநாயகத்தை முழுமையாகத் தூக்கி எரிவதற்கு முன்பு, கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சுருக்கிட வெட்கமேதுமின்றி முயற்சித்துக் கொண்டிருக்கிறது.  இந்தக் காரணத்திற்காகத்தான், இந்த அவையும், ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் நிதிச் சட்டமுன்வடிவின் வரையறை குறித்து ஆழமானமுறையில் விவாதித்திட முன்வர வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறேன்.
இதுகுறித்து நான் இதற்கு முன்பும் கூறியிருக்கிறேன். அரசமைப்புச் சட்டத்தின் 110(3)ஆவது பிரிவு என்ன கூறுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை ஆழமாகப் பரிசீலனை செய்திட வேண்டும். எந்தவொரு சட்டமுன்வடிவாவது நிதிச் சட்டமுன்வடிவா இல்லையா என்பது குறித்து மக்களவை சபாநாயகர் முடிவு செய்வார் என்று அது கூறுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 110(1)ஆவது பிரிவானது, நிதிச் சட்டமுன்வடிவு என்றால் என்ன என்றும், 110(2) நிதிச்சட்டமுன்வடிவு அல்லாதவை எவை என்றும் கூறுகின்றன. 110(3)ஆவது பிரிவு நிதிச்சட்டமுன்வடிவு குறித்து முடிவு செய்வதற்கான உரிமையைக் கூறுகிறது. ஆனால் அந்த உரிமையானது, 110(1) மற்றும் 110(2) ஆகியவற்றில் கூறியுள்ளவைகளை மறுதலித்திடவில்லை. ஆனால் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு மறுதலிப்பதன்மூலம் நிதிக்குச் சம்பந்தம் இல்லாதவைகள் எல்லாம் நிதிச் சட்டமுன்வடிவுக்குள் கடத்தச்செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவேதான் இதனை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கை என்றும் இதனை இந்த அவை அனுமதிக்கக் கூடாது என்றும் இதனை மிகவும் ஆழ்ந்த கவலையுடன் மக்களவைக்குத் திருப்பி அனுப்பிட வேண்டும் என்றும்  கேட்டுக்கொள்கிறேன்.
இதில் உள்ள வரிவிதிப்பு முன்மொழிவுகள் முன்னெப்போதும் இல்லாதவைகளாகும். அதேபோன்று இதில் காணப்படும் வரி விதிப்பு அல்லாத அம்சங்கள் எல்லாம் இதிலிருந்து நீக்கப்பட வேண்டியவைகளாகும். அது நம்முடைய அடிப்படைக் கடமையாகும். நான் ஏன் இதளைன் கூறுகிறேன்?
இதற்குள் சுமார் 40 புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டபின்னரும்கூட இவற்றில் ஏராளமான திருத்தங்கள் கொண்டுவரப்படலாம். இவற்றின் மீது விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதேகூட திருத்தங்கள் கொண்டுவரப்படலாம்.
நேரமின்மை கருதி இவற்றில் இரண்டை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். முதலாவதாக ‘ஆதார்’. இன்றைய தினம் உச்சநீதிமன்றம், ‘ஆதார்’  நலத்திட்டங்களுக்கு கட்டாயம் இல்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது.
நான் ஆதார் அட்டை  பெற்றிருக்கவில்லை.  "நாடாளுமன்ற வளாகத்திலேயே உங்களுக்கு எல்லாம் ஆதார் அட்டை பெறுவதற்கு வசதி செய்து தரப்படும்" என்று இந்த அரசாங்கத்தால் நமக்கு உறுதி அளிக்கப்பட்டது. இதுநாள்வரையிலும் அது திறக்கப்படவில்லை. இன்றுவரை அவர்கள் அதைச் செய்யவில்லை. இப்போது, ஆதார் இதுநாள்வரைக்கும் கட்டாயமாக்கப்படவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
‘ஆதார்’ அட்டையை கட்டாயமாக்கிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்காக ஒரு சட்டமுன்வடிவினைக் கொண்டுவாருங்கள். அவ்வாறு இல்லாமல் ஏன் இவ்வாறான தந்திரங்களைச் செய்துகொண்டிருக்கிறீர்கள்? ஏன் அதனை ஒரு நிதிச் சட்டமுன்வடிவிற்குள் கடத்தி இருக்கிறீர்கள்? நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயம் என்று நேரடியாகவே ஒரு சட்டமுன்வடிவைக் கொண்டுவர வேண்டியதுதானே. அதற்கான தைரியத்தைப் பெற்றிடுங்கள். அவ்வாறு செய்வதற்குப் பதிலாக, கொல்லைப்புறமாக நுழையும் வழியை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். என்னுடைய  வருமான வரி விவர அறிக்கையை நான் தாக்கல் செய்ய எனக்கு ஆதார் தேவை என்று ஏன் கூறிக்கொண்டிருக்கிறீர்கள்? என்னுடைய ‘பான் அட்டை’ (‘pan card’) ஏன் சட்டவிரோதமாக மாறியது? பின் நான் ஏன் பான் அட்டையை எப்போதும் பெற்றிருக்க வேண்டும்? ஏன் நான் பான் எண் பெற்றிருக்க வேண்டும்? 
ஆதார் கட்டாயப்படுத்தப்படுவது என்பது நாட்டில் ஆட்சியாளர்கள் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின்  தனிப்பட்ட வாழ்க்கையிலும் மூக்கை நுழைப்பதாகும். இது அரசமைப்புச்சட்டம் எனக்கு அளித்துள்ள சுதந்திரம் (liberty) என்னும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும். இந்த ஆதார் மூலம் என்னுடைய அந்தரங்கம் பறிக்கப்படுகிறது. என்னுடைய  ஆதார் எண்ணை வைத்திருக்கும் எவராக இருந்தாலும், என்னுடைய நிதி நிலைமைகள், என்னுடைய தனிப்பட்ட சொந்த விவரங்கள், நான் என் விடுப்பு காலங்களில் எங்கே இருக்கிறேன், எங்கே நான் எவ்வளவு செலவழிக்கிறேன் போன்ற என்னுடைய சமூக நடவடிக்கைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.    இவை அனைத்தையும் ஆட்சியாளர்கள் அறிந்துகொள்ள முடியும்.
யார், யாரெல்லாம் குடிமக்களாக இருக்கமுடியும், யார் யாரெல்லாம் குடிமக்களாக இருக்க முடியாது என்று தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்? நம்முடைய அவையைச் சேர்ந்த நம் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர்  அதிர்ஷ்டவசமானவர்.  நல்லவேளை அவர் மக்களவையில் இல்லை. அவர் இங்கே தொடர வேண்டும் என்று நாம் அனைவருமே அவரை வாழ்த்துவோம். அவர் ஒரு நல்ல நண்பர். ஆனால், இந்த ஆட்சியாளர்கள்  யார் குடிமகனாகஇருக்க முடியும்? யார் குடிமகனாக இருக்க முடியாது என்று வரையறுத்துக்கொண்டிருக்கிறார்கள்? இவ்வாறு ஒரு சர்வாதிகார ஆட்சிமுறையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள். நான் ••••••••••• என்ற வார்த்தைய உபயோகப்படுத்தினால் அதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிடுவீர்கள். (….) அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.) எனவேதான் சர்வாதிகார ஆட்சி என்று கூறுகிறேன்.  அதைவிட மோசமான முறையில் இந்த ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது.
ஆதாரைப் பொறுத்தவரை அதுமிகவும் குறைபாடுகளுடையது என்பது நம் அனைவருக்கும் தெரியும். மானிய உணவைப் பெறுவதற்காக பதிவு செய்துள்ள பல லட்சக்கணக்கான மக்களால் அவர்களின் கைரேகைகள் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக அல்லது வேலைசெய்யவில்லை என்பதற்காக மான்ய் விலையில் உணவுப் பொருள்கள்  மறுக்கப்பட்டனர்.  ஆனாலும் அது தேவைஎன்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.
‘தி மாட்ரிக்ஸ்’ என்று ஒரு படம் வந்தது. அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த எண்களைக் கட்டுப்படுத்திடும் வகையில் ஒரு கட்டுப்பாட்டாளர் இருப்பார். உங்களுக்கு என்ன தேவை என்பதையும் எனக்கு என்ன தேவை என்பதையும் அவர் தீர்மானிப்பார். அவர் கூறுவதை நாம் மீறினால் நாம் தூக்கி எறியப்படுவோம்.   உங்களுக்கு கொடுத்த எண் மறைந்துவிடும்.
அதேபோன்றுதான் இந்த ஆதார் எண்களையும் மறைந்து போகச் செய்துவிட முடியும். இதன்பொருள் நீங்கள் இந்நாட்டின் குடிமகனாக நீடிக்க முடியாது. இந்தியக் குடியரசை ஏன் இவ்வாறு குறைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? இதற்காகத்தான் மக்களாகிய நாம், நமக்காக இந்தக் குடியரசை, அரசமைப்புச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமா? இங்கே நீங்கள் ஓர் அரசாங்கத்தைப் பெற்றிருக்கிறீர்கள். எதையும் வெளிப்படையாகச் சொல்லும் தைர்யம் அதற்கு இல்லை. "நாங்கள் இந்த அரசமைப்புச் சட்டத்தைக் கைகழுவிக்கொண்டிருக்கிறோம்.  சர்வாதிகார அமைப்புமுறையையே நாங்கள் விரும்புகிறோம். எனவே இவற்றை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்," என்று வெளிப்படையாக இந்த அரசாங்கம் சொல்வது இல்லை. எனவே இதனைக் கொல்லைப்புற வழியாகக் கொண்டுவர அவர்கள் விரும்புகிறார்கள். இதனை நாம் ஒருபோதும் ஏற்கமுடியாது. இதனை அனுமதிக்க முடியாது.
இது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்  சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பவர்கள். உச்சநீதிமன்றம் என்பது அதற்கு வியாக்கியானம் அளித்திடும், அவ்வளவுதான். எனவே, தைர்யம் இருந்தால் சட்டத்தை உருவாக்குங்கள். நேரடியாக அதனைச் செய்திடுங்கள்.
ஆதார் தரவுகள் அனைத்தையும் நிர்வகிப்பது யார்? உண்மையில் ஆதார் தயாரிப்பதற்கு எந்த எந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன? உண்மையில் அந்தத் தரவுகளை சேகரிப்பது யார்?  அவை அனைத்தும் அமெரிக்க நிறுவனங்கள். உங்கள் அரசாங்கத்திடம் கேளுங்கள். அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.
நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தொடர்புகளையும் அவர்கள் சேகரிக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில் அவர்கள் தங்கள் பிரச்சாரத்தின் மூலம் அனைத்தையும் தகர்த்திட முடியும்.   இவ்வாறு ஒரு சர்வாதிகாரே அரசை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானதாகும்.
‘தி மாட்ரிக்ஸ்’ படத்தின் கட்டுப்பாட்டாளர் போல தங்களுடைய சர்வாதிகார அரசின் தலைமையில் அமர்ந்திருக்கும் மாஸ்டர் இந்திய சமூகத்தில் யார் குடிமகனாக இருக்க வேண்டும், யார் குடிமகனாக இருக்க முடியாது என்று தீர்மானிப்பார். அதுதான் இப்போது நம்முன் உள்ள நிதிச் சட்டமுன்வடிவில் அடக்கி இருக்கிறது, இதனை ஏற்க முடியாது.
நான் இதுகுறித்து சரியான வார்த்தைகளை பிரயோகிக்க விரும்பவில்லை. எனினும் நாம் எந்தக்காலத்திலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு  இது மிகவும் மோசமான சூழ்ச்சியாகும்.
அவர்களுக்குத் தைர்யமிருந்தால் அவர்கள் நேரடியாக வரட்டும். இவ்வாறு செய்திடக் கூடாது. மாநிலங்களவையை இவ்வாறு சூழ்ச்சிசெய்து ஓரங்கட்டாமல் நேரடியாக வரட்டும். எனவே இது ஒரு நிதிச்சட்டமுன்வடிவு என்ற வடிவத்தில் வந்துள்ள சூழ்ச்சியாகும்.
தீர்ப்பாயங்கள்
அடுத்து இரண்டாவதாக தீர்ப்பாயங்கள் குறித்து பேச விரும்புகிறேன். இன்றையதினம் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிதிச் சட்டமுன்வடிவு உங்களுக்கு என்ன கூறுகிறது? தயவுசெய்து அதன் வரையறையைப் பாருங்கள். "2017-18ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசாங்கத்தின் நிதி முன்மொழிவுகளுக்கு செயலுருவாக்கம் கொடுப்பதற்காக," என்று 2017 நிதிச் சட்டமுன்வடிவு கூறுகிறது. இப்போது,  தீர்ப்பாயங்களில் நிதி முன்மொழிவுகளின் நிலை என்ன? தயவுசெய்து எனக்குக் கற்றுக்கொடுங்கள். இந்தச் சட்டமுன்வடிவின் வரையறை என்பது அனைத்துக்குமானது என்பதாக இருக்கிறது. இங்கே அறிவிற்சிறந்த சட்டவல்லுநர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும். நம் நாட்டின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகளில் கட்டமைப்பு மாற்றங்களை இதன்மூலம் செய்திருக்கிறீர்கள். இவை முழுமையாக இந்த நிதிச் சட்டமுன்வடிவின் உள்ளீட்டெல்லை (purview) க்கு வெளியேயுள்ளவைகளாகும்.இவ்வாறு கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்திட எப்படி அனுமதிக்கப் போகிறீர்கள்? இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டுவிட்டால், தீர்ப்பாயங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியவர்களின் நியமனங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு, புதிதாக தலைவர்களையும், உறுப்பினர்களையும், புதிய ‘விதிகள்’ மூலமாக நியமிக்க இருக்கிறார்கள்.  நாட்டிலுள்ள நிறுவனங்கள் அனைத்திற்குமான கட்டமைப்பு மாற்றங்கள் குறித்து அவற்றின் துறை சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மூலமாக நம்மால் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு ஏற்படுத்தப்பட்டவைகளாகும். விதிகள் குறித்து விவாதிப்பதற்காக சிறப்பு தீர்மானம் நம்மால் கொண்டுவராவிட்டால், புதிய விதிகளை உருவாக்க முடியாது. ஆனால் இந்த அரசாங்கம் நம் உரிமைகள் அனைத்தையும் இந்த விதிகள் மூலமாக கையகப்படுத்த விரும்புகிறது. அவர்கள் விதிகளைக் கட்டுப்படுத்தி, அதன்மூலம் இந்த நியமனங்கள் அனைத்தையும் ஏற்படுத்திடவும், தீர்ப்பாயங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், சாமானியர் எவரும் தீர்ப்பாயங்களுக்கு தங்கள் குறைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகச் சென்றால் அவ்வாறு செல்லவிடாமல் அவர்களுக்கு இருக்கும் பாதையை அடைப்பதற்கும் திட்டமிட்டிருக்கிறார்கள். அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.
ஒரு சட்டம் நிறைவேற்றப்பட  வேண்டுமானால்  அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. ஆனால் விதிகளுக்கு அப்படியில்லை. இவ்வாறான சூழ்ச்சி மூலமாக இதனை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்ச்சித் திட்டங்கள் மூலமாக தீர்ப்பாயங்களின் நடுவர்கள், உறுப்பினர்களை நீக்கிவிட்டு தாங்கள் விரும்பும் விதத்தில் நடுவர்கள், உறுப்பினர்களை மறுநியமனம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.  இதற்கு இந்த அவை ஒப்புதல் அளிக்கும் என்று நான் கருதிடவில்லை. எனவே தீர்ப்பாயங்கள் தொடர்பான சூழ்ச்சித்திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும், அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.  இது நிதிச்சட்டமுன் வடிவின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்கிற நம் பரிந்துரையுடன் மீளவும் மக்களவைக்கு இது அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியலில் ஊழல்
அடுத்து அரசியலில் ஊழல் குறித்து பேச வந்துள்ளேன். இந்தப்பிரச்சனை குறித்து நாம் ஏற்கனவே விவாதித்து, பிரதமரும் பதிலளித்திருக்கிறார். பின்னர் எப்படி காங்கிரஸ் கட்சி கோவாவிலிலும், மணிப்பூரிலும் அதிக அளவில் இடங்களைப் பிடித்தும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது? ஆளும் கட்சியினரின் பண பலத்திற்கு முன்னால் அவர்களால் நிற்க முடியவில்லை என்பதே காரணம் என்று சாமானியர்களும் பேசுவதைப் பார்க்கிறோம். அதை மறந்துவிடுவோம். நான் சொல்ல விரும்புவது என்னவெனில், இது தொடர்பாக இந்த பட்ஜெட்டில் மந்திரவாதிகள் செய்வதுபோல் சில தந்திரவேலைகளை இந்த அரசு கொண்டுவந்திருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கலாம் என்பதை 2 ஆயிரம் ரூபாயாகக் குறைத்திருக்கிறது. இது தொடர்பாக சென்றமுறை நான் பேசியபோது ஒரு நபரின் பெயர் உள்ள இடத்தில் பத்து நபர்களின் பெயர்கள் இருக்கப் போகின்றன, வேறென்ன மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது என்று கேட்டேன்.
அடுத்த, தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் ஆட்சியில் உள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் அந்தப் பத்திரங்.களை யார் வாங்கியிருப்பது, யாரிடம் போய்ச் சேர்ந்திருக்கும் என்பது வேறெவருக்கும் தெரியாது என்று கூறினேன். இப்போது என்ன நடந்திருக்கிறது?
கம்பெனி சட்டத்தைத் திருத்தி இருக்கிறீர்கள்.  நிதிச் சட்டமுன்வடிவில், கம்பெனிகள் சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. எதற்காகத் தெரியுமா? இரண்டு விஷயங்களுக்காக இத்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தற்போதுள்ள சட்டப்படி எந்தவொரு கம்பெனியும் தங்கள் நிகர லாபத்தில் 7.5 சதவீதம் அளவிற்குத்தான் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நன்கொடை அளித்திடலாம். இதுதான் உச்சவரம்பு. இப்போது இந்தத் திருத்தத்தின்மூலம் இந்த வரம்பை நீக்கிவிட்டீர்கள். எந்தவொரு கம்பெனியும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும், லாபத்தில் 100 சதவீதத்திற்கும் மேலாகவும் கூட, நன்கொடையாகக் கொடுக்கலாம்.  இதன்மூலம் நீங்கள் ஏராளமான பினாமி கம்பெனிகள் உருவாவதற்கான வாய்ப்பு வாசலுக்கு வழிவகுத்துத்தந்திருக்கிறீர்கள். அரசியலை நெறிப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு இவ்வாறு அறநெறி பிறழ்ந்த நடவடிக்கைகளுக்கு பாதை அமைத்துத் தந்திருக்கிறீர்கள்.
இதில் மேலும் இரண்டாவதாக என்ன செய்திருக்கிறீர்கள். அவ்வாறு கம்பெனிகள் நன்கொடை அளிக்கும்போது அவர்கள் யாருக்கு அவ்வாறு நன்கொடை அளித்தார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். இது அநாமதேயமானதாகும். இவ்வாறு நன்கொடையைப் பெற்றுக் கொண்ட கட்சியைத் தவிர வேறெவருக்கும் இது தெரியப் போவது இல்லை. இதன் பொருள் என்ன? இங்கே உள்ள உறுப்பினர்களின் முகங்களில் தெரிகிற புன்னகைகளிலிருந்து இதன் பொருள் என்ன என்பதை அனைவரும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
தேர்தல் பத்திரங்களை எடுத்துக் கொள்வோம். இந்தப் பத்திரங்களை யார் வாங்குவார்கள். நமக்குத் தெரியாது. அவர்கள் யாரிடம் கொடுப்பார்கள். அதுவும் நமக்குத் தெரியாது. வங்கிகளுக்கு மட்டும் அவை தெரியும். அரசாங்கம் மட்டும் ஆதார் மூலமாக அதனைத் தெரிந்து கொள்ளும். அரசியலில் ஊழலை ஒழிப்பதற்குப் பதிலாக, உண்மையில் நீங்கள் அரசியலில் ‘அருவருப்பான விதத்தில் உயர்மட்ட அளவில்’ ஊழலை வளர்ப்பதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறீர்கள்.  ‘அருவருப்பான விதத்தில் உயர்மட்ட அளவில்’ என்ற வார்த்தைகளை நான் வேண்டும் என்றேதான் பயன்படுத்தி இருக்கிறேன். ஏனெனில், இத்தகு பணத்தை ஆளும் கட்சி இன்றைய தினம் ஒவ்வொரு தனித்தனி தேர்தலின்போதும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இவ்வாறு ஆட்சியில் உள்ளவர்கள் பணபலத்தின் மூலமாக, நம்முடைய ஜனநாயக நடைமுறை என்னும் ஆணிவேரையே அரித்துத் தின்று கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு நான் மேலே குறிப்பிட்ட மூன்று அம்சங்களும் நம் இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான மூன்று அடித்தளங்களையே அறுத்துக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு,  நாட்டில் உள்ள அந்நிய பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தில் திருத்தத்தை, முன்தேதியிட்டு,  கொண்டுவந்து 2010இலிருந்தே ஒரு அந்நிய நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதைக் குற்றமில்லை என்று கொண்டுவந்தீர்கள். இன்று கம்பெனி சட்டத்தையும் ஆளும் கட்சியினருக்கு நன்கொடை அளித்திடுவதற்காக மிரட்டும் விதத்தில் மாற்றி அமைத்திருக்கிறீர்கள். 
நாம் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பேசி இருக்கிறோம். தேர்தல்களில் பணபலத்தை ஒழிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு அரசியலில் ஊழலை ஒழிப்பதற்குப் பதிலாக அதனை ஆளும் கட்சியினருக்கு சார்பாக அதிகரிக்கக்கூடிய விதத்தில் நேர்மாறான நடவடிக்கைகளைச் செய்திருக்கிறீர்கள்.
இதேபோன்று இச்சட்டமுன்வடிவில் உள்ள 14 பிரிவுகளுமே அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவைகளாகும். 
 அரசமைப்புச் சட்டம் 110(3) பிரிவு குறித்து நாம் மிகவும் ஆழமானமுறையில் மறு பரிசீலனை செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட  வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இரண்டாவதாக, ஆதாரைத் திணிப்பதன் மூலம் மக்களின் சுதந்திரம் (liberty) என்கிற அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது என்றும் எனவே இதனை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தவகையில் இச்சட்டமுன்வடிவு மக்களவைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக, கம்பெனிகள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்திருப்பதை ரத்து செய்திட வேண்டும்.
இறுதியாக, இச்சட்டமுன்வடிவிற்குள் காணப்படும் 40க்கும் மேலான சட்டமுன்வடிவுகள் நிதிச்சட்டமுன்வடிவின் கீழ் வராது. எனவே அவற்றை இதிலிருந்து நீக்கிவிட்டு தனியே கொண்டுவர வேண்டும். மற்ற அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும். 
இவற்றை செய்திட நாம் தவறினோமால் அரசமைப்புச் சட்டம் நமக்கு வகுத்துத்தந்திருக்கிற அரசமைப்புச்சட்டக் கடமைகளை நாம் செய்யத் தவறியவர்களாவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நாம் நம் கடமையைச் செய்திட மாநிலங்களவை நம்மைக் காத்திட வேண்டும். எனவே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் மிகவும் வெட்கங்கெட்டமுறையில் மீறப்படுவதிலிருநது, அதன் புனிதத்தைப் பாதுகாத்திட மாண்புமிகு தலைவர் அவர்கள் வசதிசெய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."
(தமிழில்: ச.வீரமணி)