Sunday, February 5, 2017

டிரம்ப் ஆட்சியின் முதல் பத்து நாட்கள்




People’s Democracy தலையங்கம்

டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டபின், முதல் பத்து நாட்களில் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை ஆராய்ந்தோமானால் அவர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளிப்படுத்திய வெறித்தனமான பேச்சிற்கு உண்மையாக இருக்கிறார் என்பதைக் காணமுடியும். டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள நிர்வாக உத்தரவுகள் அவர் எந்த அளவுக்கு அமெரிக்காவில் குடியேறி யிருப்பவர்களுக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு எதிராக, பெரும்வர்த்தகப் புள்ளிகளுக்கு ஆதரவாகஇருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். அவர் பிறப்பித்த நிர்வாக உத்தரவுகளில் முதலாவது, மெக்சிகோவுடனான எல்லையில் சுவர் கட்டி எழுப்புவது தொடர்பானதாகும். சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுத்திட இது தேவை என்று டிரம்ப் கூறுகிறார். மேலும் டிரம்ப், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல, இவ்வாறு கட்டி எழுப்பப்படும்சுவருக்கான செலவையும் மெக்சிகோவேஏற்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். மெக்சிகோ ஜனாதிபதி இதனைச் செய்யமுடியாது என்று கூறி மறுத்திருக்கிறார். தற்போது டிரம்ப் நிர்வாகம் மெக்சிகோவிலிருந்து வரும் பொருள்களுக்கு 20 சதவீதம்கூடுதல் வரி விதித்து அதன்மூலம் சுவர் கட்டுவதற்கான செலவுத் தொகையை எடுத்துக் கொள்வோம் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது. டிரம்ப் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு குழாய்வழி திட்டங்களை ((the Keystone XL and the Dakota Access pipeline projects)) மறு ஆய்வுக்கு உட்படுத்திடவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதனை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அமெரிக்க பழங்குடியின மக்களும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இந்தக் குழாய் வழி திட்டங்களுக்கான தடையை நீக்குவதன் மூலம் டிரம்ப் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் வலுவான முறையில் ஈடுபட்டிருப்பவர்களின் நலன்களுக்கு சேவகம் செய்திட முன்வந்தி ருக்கிறார். டிரம்ப் பிறப்பித்த உத்தரவுகளிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய உத்தரவு எதுவெனில் ஏழு முஸ்லிம் நாடுகளிலிருந்து மக்கள் எவரும் அமெரிக்காவிற்குள் வர தடை விதித்திருப்பதாகும். ஈரான், இராக், சிரியா, சூடான், லிபியா, ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளிலிருந்து 90 நாட்களுக்கு மக்கள் எவரும்அவர்களிடம் உரிய விசா இருந்தாலும் கூடஅமெரிக்காவிற்குள் வரத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அகதிகள் கூட 120 நாட்களுக்கு வருவதற்கான அனுமதி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. சிரியாவிலிருந்து நிரந்தரமாகவே அகதிகள் வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், இராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் அகதிகளில் கிறித்தவர்கள் இருந்தால் அவர்கள் மட்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. இவற்றின் காரணமாக உரிய விசாக்களுடன் இந்நாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவின் விமானநிலையங்களில் தரை இறங்கிய நூற்றுக்கணக்கான மக்கள் விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான அப்பட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள வெறித்தனமான நடவடிக்கைக்கு உலகம் முழுதுமிருந்து கண்டனம் எழுப்பப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டணி நாடுகளான ஜெர்மனியும், பிரான்சும் இந்த நடவடிக்கையை விமர்சித்திருக்கின்றன. அமெரிக்காவிற்குள்ளும் கூட, பெரிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு வெளியே மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டு இவ்வாறு தடை விதித்திருப்பது, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், அமெரிக்கனின் குணத்திற்கு எதிரானது என்றும் கண்டன முழக்கங்கள் எழுப்பி இருக்கிறார்கள். இதில் வேடிக்கையான வினோதம் என்னவென்றால், இத்தகைய வெறித்தனமான நடவடிக்கையை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வரவேற்றிருப்பதாகும். தங்கள் நாட்டில் முஸ்லிம்கள் வாழ்வதை அமெரிக்காவால் சகித்துக்கொள்ள முடியாது என்று தாங்கள்கூறி வந்ததை இந்த நடவடிக்கை நிரூபித் திருக்கிறது என்று அது கூறியுள்ளது. அமெரிக்க அதிபரின் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு, ஜிஹாதி மற்றும் தீவிரவாத சக்திகளுக்கே ஊக்கம் அளிக்க உதவிடும். மேலும் டிரம்ப் தன்னு டைய ‘‘அமெரிக்கா முதலில்’’ (“America first”)) கொள்கையையும் செயல்படுத்த முன்வந்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதியளித்தபடி டிரம்ப், பசிபிக் நாடுகளுக்கிடை யிலான கூட்டமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஆசியன் நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கிடையே முன்மொழியப்பட்ட 12 நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் ஒபாமா நிர்வாகத்தால் சீனாவைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும். பசிபிக் நாடுகளுக்கிடையிலான கூட்டமைப்பு (டிபிபி) என்பதும், ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான அட்லாண்டிக் நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் மூலதனக் கூட்டமைப்பு என்பதும் சம்பந்தப்பட்ட நாடுகளின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கக்கூடிய விதத்தில் அந்தந்த நாடுகளில் உள்ள கார்ப்பரேட்டுகளின் அதிகாரத்தை வலுப் படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டவைகளாகும். இந்த ஒப்பந்தங்களின் மூலம் கார்ப்பரேட்டுகள் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள ஆட்சியாளர்கள் தங்கள் நலன்கள் காப்பாற்றப்பட என்ன என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். டிபிபியை ரத்து செய்வது அமெரிக்க கார்ப்பரேட்டுகளில் ஒருசில பிரிவினருக்கு ஏற்புடை யதல்ல என்ற போதிலும், டிரம்ப் அவர்களுக்கு வரிச்சலுகைகள் மற்றும் பல்வேறு சலுகைகள் அளிப்பதாக உறுதிமொழி அளித்திருக்கிறார். கார்ப்பரேட் வரியை 35 சதவீதத்திலிருந்து 15 முதல் 20 சதவீதத்திற்கு வெட்டிக் குறைப்பதாக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவேன் என்று கூறியிருக்கிறார்.
டிரம்ப் இவ்வாறு ஏராளமாக உத்தரவுகள் பிறப்பித்திருக்கக்கூடிய சூழ்நிலையில், மோடி அரசாங்கம் இவற்றையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்க்கக்கூடிய நிலையைத்தான் எடுக்க முடிந்திருக்கிறது. டிரம்பின் வெற்றி, நரேந்திர மோடியாலும், பாஜகவாலும் வரவேற்கப்பட்டது. ஏனெனில் அவரை அரசியல்ரீதியாகவும், சித்தாந்தரீதியாகவும் தங்கள் உடன்பிறப்பு என்றே பார்க்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான அவரு டைய நிலைப்பாடு அவர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கிறது.
ஆயினும், டிரம்ப் நிர்வாகத்தின் சமீபத்திய நடவடிக்கை, இந்தியாவில் பலரதுகண்டனத்திற்கும், கவலைக்கும் ஆளாகியுள்ளது. இந்தியர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்திட அமெரிக்காவிற்கு செல்வதற்கான எச்-1பி விசாக்கள் வழங்குவ தற்கான விதிமுறைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர டிரம்ப் உத்தேசித்திருக்கிறார். ஐந்து உயர் நிறுவனங்கள், தங்களுடைய .டி. இருப்பில் சந்தை மதிப்பில் 33 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பினை அடைந்திருக்கின்றன.
மோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அது அமெரிக்காவின் போர்த்தந்திர நட வடிக்கைகளுக்கு இளைய பங்காளியாகி யுள்ள சூழ்நிலையில் டிரம்பின் இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக என்னசெய்வ தென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் கவலைகள் பற்றியெல்லாம் அதிதீவிர வெறித்தனத்துடன் செயல்படும் டிரம்ப் நிர்வாகம் கவலைப்படப் போவதில்லை. இந்தியா தன்னுடைய அயல்துறைக் கொள்கையை பன்முக வடிவமைப்புகளுடன் மாற்றியமைத்துக்கொண்டு தீவிரமாகச் செயல்படக்கூடிய வல்லமையுடன்தான் இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் அதனை செயல்படுத்திட அது முன்வர வேண்டும். இவற்றில் மிகவும் பிரதானமானது ஆசியன் நாடுகள், ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மண்டல ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தம் ஆகும். இந்த உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கிடையாது. அதேபோன்று இந்தியா பிரிக்ஸ் நாடுகளில் கூட்டமைப்பிலும், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பிலும் தன்னுடைய பங்களிப்பினை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சீனா துவங்கியுள்ளஒரு பகுதி, ஒரு சாலை’ (`One Belt, One Road’)  திட்டம் குறித்த தன்னுடைய எதிர்மறையான அணுகுமுறையைக் கைவிட வேண்டும். இவ்வாறு இந்தியா பொருளாதார மற்றும் போர்த்தந்திர உறவுகளை மாற்றி யமைத்துக் கொள்வதன் மூலமும், பல்வகைப்பட்ட அமைப்புகளில் தீவிரமாகப் பங்கேற்றுச் செயல்படுவதன் மூலமும் மட்டுமே, இழந்துவிட்ட போர்த்தந்திர சுயாட்சித்தன்மையை மீண்டும் பெற்று, அயல்துறைக் கொள்கையை சுதந்திரமான அடிப்படையில் அமைத்துக்கொள்ள முடியும். ஆனால், அமெரிக்காவிடம்அதீதமாகபாசம் வைத்துள்ள மோடி அதனைக் கைவிட்டு, தன்னுடைய அணுகுமுறையை மாற்றி அமைத்துக் கொள்வாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியேயாகும்.
(பிப்ரவரி 1, 2017)
(தமிழில்: .வீரமணி)


No comments: