Saturday, February 11, 2017

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சீத்தாராம் யெச்சூரி



சீத்தாராம் யெச்சூரி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் கடந்த திங்கள் அன்று(பிப்.6) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது கலந்துகொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை
குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தும்போது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியம் நான்கு ‘D’-க்கள் என்று கூறி, debate, discussion, decision and not destruction என்று குறிப்பிட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த நான்கு ‘D’க்களும் இப்போது இல்லை.
மாறாக, துரதிர்ஷ்டவசமாக மோடியின் அரசாங்கத்தின்கீழ் வேறு நான்கு D-க்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவை, ‘deception’(வஞ்சகம்) , ‘disruption’ (சீர்குலைவு), ‘diversion’ (திசைதிருப்புதல்) மற்றும் ‘diabolic agenda’(பேய்த்தனமான அல்லது கொடிய நிகழ்ச்சிநிரல்) ஆகியவைகளாகும்.
இராமானுஜரும் குரு கோவிந்த் சிங்கும்
குடியரசுத் தலைவரின் உரைக்குள் செல்வதற்கு முன்பு, இந்தியக் கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் செல்வாக்கு செலுத்திய இரு துறவிகளைப் பற்றி அவர் கூறியிருப்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒருவர் ராமானுஜர். ராமானுஜரின் சிந்தனைகள்தான் இந்தியாவில் பக்தி இயக்கத்திற்கு அடித்தளமிட்டதாகும். அவரது சிந்தனைகள்தான் மக்களிடம் இருந்த பக்தி உணர்வை சடங்குகளாக மாற்றியதாகும். அவர் என்ன கூறுகிறார்? இறுதியான மெய்ப்பொருளைக் கண்டிடுவதற்கான மனிதகுலத் தேடலில் ஆய்வு முறை அவசியம் என்கிறார் அவர்.
அவர் தன்னுடைய கடவுள் விஷ்ணு என்று காட்டுகிறார். அப்போது மன்னராக இருந்த குலோத்துங்க சோழன் அவரை நாடுகடத்திவிடுகிறார். ஏனெனில் குலோத்துங்கன் சைவ சமயத்தைச் சேர்ந்தவர். ராமானுஜர் வைஷ்ணவத்தையும், விஷ்ணுவையும் தேர்ந்தெடுத்ததால் அவர் நாடு கடத்தப்படுகிறார். நாடு கடத்தப்படுவது அன்றைய தினம் ஒரு முக்கியமான அம்சமாக இருந்திருக்கிறது. நாடாள்வோரின் மத சிந்தனைக்கு ஒருவர் மாறுபட்டவராக இருந்தால், அவர் அந்த நாட்டிலிருந்து கடத்தப்படுவார்.
இன்றையதினம் நம் நாட்டில் நாம் துல்லியமாக என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோம்? நீங்கள் என் கடவுளை நம்பவில்லை என்றால், நீங்கள் இந்தியரே அல்லர் என்று கூறப்படுவதைப் பார்க்கிறோம்.
குடியரசுத் தலைவர் குறிப்பிட்டது உண்மையில் ராமானுஜரை அல்ல; அது குலோத்துங்கனாக இருந்திருக்க வேண்டும்.
முரண்தொகை
அடுத்து, குடியரசுத் தலைவர் குறிப்பிட்டிருப்பது குரு கோவிந்த் சிங். குரு கோவிந்த் சிங், சீக்கிய மதத்தின் மிகவும் வணக்கத்திற்குரிய தலைவர்களில் ஒருவர். நம் அனைவருக்கும் இது தெரியும். அவர் போதித்தது என்ன?
அவர் ஐந்துகே’-க்களை போதித்தார். கேஷ், கரா, கங்கா, கெச்செரா, கிர்பான் (Kesh, Kara, Kangha, Kechera and Kirpan).
இந்திய தத்துவஞானம் மற்றும் வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான வளர்ச்சிப் போக்காகும்.
குருகோவிந்த் சிங் கூறியகிர்பான்என்றால் என்ன?
சீக்கியர்கள் அணிந்துகொள்ளும் புனிதக் குத்துவாள் ஆகும். இது எதற்கு?
நான் அவர்கூறியதை மேற்கோளாகக் கூறுகிறேன்:
‘‘தன்னையும், ஏழைகளையும், நலிவடைந்தவர்களையும், அனைத்து மதங்கள், சாதிகள் மற்றும் நிறத்திலும் ஒடுக்கப்பட்டவர்களையும் பாதுகாத்திட…!’’
அனைத்துவிதமான மத ரீதியான ஒடுக்குமுறையிலிருந்தும், அனைத்து விதமான சாதிய ஒடுக்குமுறையிலிருந்தும், இந்த நாட்டில் நாம் பார்த்துவரும் அனைத்து விதமான ஒடுக்குமுறை வடிவங்களிலிருந்தும், பாதுகாப்பதற்கான அடையாளமாக அணியும் கருவிதான் புனிதக் கிர்பான் (குத்துவாள்) ஆகும்.
எனவேதான் குரு கோவிந்த்சிங்கை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டிருப்பது முரண்தொகை (irony) என்று நான் கூறுகிறேன். அவர் ஏழைகளைக் காத்திட, மதரீதியாகத் தண்டிப்பவர்களிடமிருந்து ஒடுக்கப்படுவோரைக் காத்திட, கிர்பான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னவர்.
ஆனால் நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்கேரோமியோஎதிர்ப்புக் குழுக்கள் என்ற பெயரில் ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கே என் மூத்த நண்பர் சரத் யாதவ் அவர்கள், நாட்டில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பேசியதைக் கேட்டோம். ஒடுக்கப்பட்டோரைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன. ஆட்சியாளர்களின் முழு அரவணைப்புடன் அட்டூழியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்த அட்டூழியங்களைப் பார்க்கும்போது, மேற்கண்ட இரு தத்துவமேதைகளின் பெயர்களைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டிருப்பதுதான் முரண்தொகை.
•••
பொருளாதார வீழ்ச்சியை தீவிரப்படுத்தும் பட்ஜெட்
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததானது, நாட்டில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் சீர்குலைவு (disruption) நடவடிக்கையாகும். இது, நம் வாழ்க்கையை, நம் பொருளாதாரத்தை கடுமையாக சீர்குலைத்துள்ள நடவடிக்கையாகும். நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையையே சீர்குலைத்த நடவடிக்கையாகும்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பதற்கு பிரதமர் கூறிய நான்கு காரணங்களும் எய்தப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவற்றில் பல விஷயங்கள் சட்டரீதியாக மாற்றப்பட்டிருக்கின்றன.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை விட அதிகமான அளவில் ரூபாய் நோட்டுகள், வங்கிகளுக்கு வந்திருக்கின்றன. இதன் பொருள், கறுப்புப் பணம் எல்லாம் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டுவிட்டது. கள்ள நோட்டுகள் அனைத்தும் சட்டரீதியாக மாற்றப்பட்டுவிட்டது என்பதுதான்.
பயங்கரவாதிகளுக்குப் பணம் செல்வதைத் தடுப்பதற்காக என்று கூறினீர்கள். கடந்த மூன்று மாதங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு இரையான பாதுகாப்புவீரர்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய மூன்று மாதங்களில் இரையானவர்களின் எண்ணிக்கையைவிட, இரு மடங்காகி இருக்கிறது.
இரட்டிப்பான ஊழல்
ஊழல் குறித்த நிலை என்ன? ஊழல்புரிவோர் முன்பு ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி வந்தார்கள். இப்போது அவர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஊழலின் தொகை இரட்டிப்பாகிவிட்டது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் மக்களின் வேதனைகள்தான் அதிகரித்துவிட்டன. தங்கள் பணத்தை வங்கிகளிலிருந்து எடுப்பதற்காக நின்றுகொண்டிருந்த மக்களில் நூற்றுக்கும் மேலானவர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். அவர்கள்குறித்து ஒரு வரி கூட குடியரசுத் தலைவர் உரையில் இல்லை.
நம்முடைய அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் சொத்துரிமையை அளித்திருக்கிறது. வங்கிகளில் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகை தனிப்பட்ட ஒருவரின் சொத்து. அந்த உரிமை இப்போது பறிக்கப்பட்டிருக்கிறது. தங்கள் உரிமையைப் பயன்படுத்த விரும்பியவர்கள் உயிரைப் பலி கொடுத்திருக்கிறார்கள். இது குறித்து ஒருவரி கூட குடியரசுத் தலைவர் உரையில் இல்லை.
நம்முடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் 45 சதவீதம் முறைசாராத் தொழில்துறைகள் மூலமாகத்தான் பங்களிப்பு செலுத்தப்பட்டு வந்தது. நம்முடைய வேலைவாய்ப்பில் சுமார் 80 சதவீதம் முறைசாராத் தொழில்களில்தான் உள்ளன. முறைசாராத் தொழில்களில் முழுக்க முழுக்க – 100 சதவீதம் அளவிற்கு ரொக்கப் பணப் பரிவர்த்தனை மூலம்தான் நடைபெற்று வருகின்றன. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் இந்தத் தொழில்கள் முற்றாக சீர்குலைந்தன. கோடானுகோடி மக்கள் தேவையில்லாமல் அவதிக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
டாக்டர் மன்மோகன் சிங் நம்முடைய முன்னாள் பிரதமர், முன்னாள் நிதி அமைச்சர், முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்இந்தியாவில் இவர் ஒருவர் மட்டும்தான் இந்த மூன்று பொறுப்புகளையும் வகித்தவர்தன்னுடைய அறிவுக்கூர்மை மூலமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்நடவடிக்கை மூலம் 2 சதவீதம் வீழ்ச்சி ஏற்படும் என்று கூறியிருக்கிறார். பொருளாதார மந்தம் ஏற்பட்டிருப்பதை நாம் அனைவருமே நன்கு உணர்கிறோம். அரசு தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வு அறிக்கையே அதனை ஒப்புக்கொண்டிருக்கிறது.
வெங்காயம் இலவசம்; தக்காளி பாதிவிலை
கடந்த இரு மாதங்களில் சில்லரை வர்த்தகத்துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுமார் 75 சதவீத அளவிற்கு சில்லரை வர்த்தகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது.
நான் நேரடியாகவே சில காட்சிகளைக் கண்டேன். தில்லியில் நாம் அனைவருமே கண்ணால் கண்டிருக்க முடியும். பக்கத்து மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெங்காயத்தை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வந்து கிலோ பத்து ரூபாய்க்கு விற்க முடியாதவற்றை அப்படியே குவியலாக போட்டுவிட்டுச் சென்றார்கள். ரெய்ப்பூருக்கு ஒரு கூட்டத்திற்கு நான் சென்றிருந்தபோது, அங்கே விவசாயிகள் தக்காளிகளை இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘ஏன் இலவசமாகக் கொடுக்கிறீர்கள்?’ என்று ஒருவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர், ‘இதனை அழிக்க வேண்டுமானால் அதற்கு நான் ஏதேனும் செலவு செய்தால்தான் முடியும். எனவே இலவசமாகக் கொடுப்பது அதை விடச் சிறந்த வழிஎன்றார்.
அறுவடை நடைபெற்ற இடங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை, அரசாங்கம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட பாதி விலைக்கு விற்றதைப் பார்க்கிறோம்.
மீனவர்கள் நிலையும் இதேபோன்றதுதான். ரொக்கப் பரிவர்த்தனை இல்லாததன் காரணமாக, மீனவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டது என்று உங்களுக்குத் தெரியும். ரொக்கப் பரிவர்த்தனை இல்லாததால் அவர்கள் தாங்கள் பிடித்துவந்த மீன்களை விற்க முடியவில்லை. பிடித்து வரப்பட்ட மீன்களும் விற்பனையாகாமல் அழுகும் நிலை ஏற்பட்டது.
பிற மாநிலங்களிலிருந்து பிழைப்பு தேடி புலம்பெயர்ந்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு வந்த விவசாயத் தொழிலாளர்கள், வேலையில்லாததால் மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கே திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
உற்பத்தித் தொழிலிலும் (manufacturing industry) விற்பனை மற்றும் உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இரு சக்கர வாகனங்கள் விற்பனை சுமார் 35 சதவீதம் வீழ்ச்சி.
பரிதவிக்கும் பனாரஸ்
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி, பட்டுப் புடவைகளுக்குப் புகழ் பெற்ற தொகுதியாகும். வாங்குவாரில்லாமல் பனாரஸ் பட்டுப்புடவைகள் இப்போது பாதி விலைக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் அவற்றை வாங்கிச் செல்ல வணிகர்கள் வரவில்லை.
எல்லாவற்றையும்விட மோசமான விஷயம் என்ன தெரியுமா? பிரதமர் சமீபத்தில் மீரட் சென்றிருந்தார். அங்கே அவர் பேசும்போது, மீரட்டில் தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருள்கள் குறித்துப் பேசி இருக்கிறார். ‘‘நீங்கள் உற்பத்தி செய்திடும் விளையாட்டுப் பொருள்கள் காரணமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் நம் வீரர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள்’’ என்று கூறியிருக்கிறார்.
தீவிரமாகும் வேலையின்மை
ஆனால் அங்கிருந்து வரும் அறிக்கை என்ன தெரியுமா? விளையாட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்திடும் தொழிற்சாலைகளில் 20 சதவீதம் வர்த்தகம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அங்கே பணியாற்றும் தொழிலாளர்களில் பாதிப் பேருக்கு வேலையில்லை என்று கூறி கட்டாய விடுப்பு (lay off) கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் எந்தெந்த தொழில்கள் எல்லாம் எந்த அளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன என்ற பட்டியல் என்னிடம் இருக்கிறது.
இவற்றின் ஒட்டுமொத்த பாதிப்புகள் என்ன? மிகப்பெரிய அளவில் வேலையில்லாத் திண்டாட்டம். கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில் 2015ஆம் ஆண்டு முக்கியமான எட்டு தொழில்களில் 1.35 லட்சம் கோடி வேலைகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது என்று கூறப்பட்டது. இப்போது தொழிலாளர் ஆணையம், இந்த எட்டு துறைகளில் 55 ஆயிரம் வேலைகள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
முறைசாராத் தொழில்கள் மட்டுமல்ல, அமைப்புரீதியான தொழில்களும்கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றின் அடிப்படையில்தான் பொருளாதார ஆய்வு அறிக்கையில், உள்நாட்டில் பொருட்களுக்கான கிராக்கியை (demand) விரிவாக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதன் பொருள் மக்களின் வாங்கும் சக்தியை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதாகும். அதாவது, பொதுமுதலீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இதுதான் பொருளாதார ஆய்வு அறிக்கை அளித்திடும் பரிந்துரையாகும்.
ஆனால், பட்ஜெட் என்ன செய்திருக்கிறது? பொது முதலீட்டை விரிவாக்குவதற்குப் பதிலாக, அது இந்தியப் பொருளாதாரத்தை மேலும் சுருக்குவதற்கான வேலையைச் செய்திருக்கிறது.
பணக்காரர்களுக்கு நிவாரணம்
சாதாரண மக்களுக்குச் சுமை
பட்ஜெட்டின் அளவானது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சுருங்கியிருக்கிறது. சென்ற ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 12.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
மூலதனச் செலவினத்தின் நிலை என்ன? சென்ற ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.86 சதவீதமாக இருந்தது, இந்த ஆண்டு 1.84 சதவீதமாகக்குறைந்துவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீத அடிப்படையில் வேளாண் துறைக்கான ஒதுக்கீடு 1.98 சதவீதத்திலிருந்து, 1.95 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
தயவுசெய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதம் என்பது ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்களாகும். எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 புள்ளிகள் குறைவு எனில் அது பண மதிப்பில் மிகப் பெரிய தொகையாகும். இதுதான் நடந்திருக்கிறது.
பொருளாதார ஆய்வு அறிக்கை, ‘‘மக்களின் வாங்கும் சக்தியையும், உள்நாட்டு கிராக்கியையும் அதிகப்படுத்திடுவோம்’’ என்று கூறுகிறது. ஆனால் நேரடி வரி வருவாயிலிருந்து 20 ஆயிரம் கோடி ரூபாயை குறைத்திருக்கிறீர்கள். இதன் பொருள் பணக்காரர்களுக்கு நிவாரணம் அளித்திருக்கிறீர்கள் என்பதேயாகும். அதேசமயத்தில் மறைமுக வரியை 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்திருக்கிறீர்கள். அதாவது சாமானிய மக்கள் மீது சுமைகளை ஏற்றியிருக்கிறீர்கள்.
பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதற்கு நேரெதிராக, சாமானிய மக்களின் வாங்கும்சக்தியை மேலும் வெட்டிச்சுருக்கி இருக்கிறீர்கள். ஏற்கனவே ரூபாய் நோட்டுகளை செல்லாதுஎன்று அறிவித்ததன் மூலம் நொந்து நூலாகிப் போயிருக்கும் சாமானிய மக்களின் துன்ப துயரங்கள் மேலும் அதிகமாகும்.
மோடியும் ஊழலும்
அடுத்து உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுகையில் பிரதமர் மோடி, ஊழலுக்கு (SCAMக்கு எதிராக) போராடுவதாகப் பேசியிருக்கிறார். அவர் ‘SCAM’ என்று கூறுவது அங்குள்ள அரசியல் கட்சிகளை. ஆனால், உண்மையில் அவர் நாட்டுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றால், வேறுவிதமான ‘SCAM’-க்குஎதிராக யுத்தத்தைத் தொடுத்திருக்கிறார். எஸ்சி (SC) என்றால் தலித்துகள். ‘M’ (எம்) என்றால் சிறுபான்மையினர் (Minorities).
இவ்வாறு மோடி அரசாங்கம் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு (SC and Minorities) எதிராகத்தான் யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது.
பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பாருங்கள். பட்ஜெட்டில் வெறும் 1.48 சதவீதம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அல்ல) தலித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2.44 சதவீதம் பழங்குடியினர் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினர் நலம் தொடர்பாக பல விஷயங்கள் கூறப்பட்டிருந்தாலும், சச்சார் குழு மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழு ஆகியவை அளித்திட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் கணிசமான அளவிற்கு ஒதுக்கீடு அதிகப்படுத்தப்படவில்லை.
பெண்களுக்கான நலத் திட்டங்களுக்கு வெறும் 5.3 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதமாகஇருக்கும் பெண்களுக்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் 40 வயதுக்குக் கீழேயுள்ளவர்கள். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்றவற்றை அளித்து அவர்களை நாட்டின் சொத்தாக (asset) மாற்றுவதற்குப் பதிலாக, அவர்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக (liability) மாற்றும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். இதனை எந்தவிதத்திலும் ஏற்க முடியாது.
• • •
பத்தாயிரம் பேருந்துகளும் ஹெலிகாப்டர்களும்!
தேர்தலில் அரசியல்கட்சிகளுக்கு நிதி அளிப்பது குறித்து ஒரு நிலைப்பாட்டினை எடுத்திருக்கிறீர்கள். அரசியல் கட்சிகள் நிதி பெறுவதை ‘‘20ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக குறைப்பதாகக்’’ கூறுகிறீர்கள். நீங்கள் யாரை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? தயவுசெய்து கூறுங்கள்.
பிரதமரும், பாஜக தலைவரும் பங்கேற்ற ஒரு பேரணிக்கு பத்து லட்சம் மக்கள் வந்தார்கள் என்று அக்கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதற்காக அவர்கள் பத்தாயிரம் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தியதாகவும் அதுமட்டுமின்றி ஹெலிகாப்டர்கள் மற்றும் பல்வேறு செலவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்கூட அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது?
உங்களுக்குத் தெரியாது. எனக்கும் தெரியாது. ஏனெனில் அரசியல் கட்சிகள் தாங்கள் செய்கின்ற செலவினங்களுக்கு எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை. வேட்பாளர்களின் செலவினங்களுக்கு மட்டும்தான் வரம்பு விதித்திருக்கிறீர்கள். ஆனால், அரசியல் கட்சிகள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்திடலாம். அதுதான் .இன்றைய நிலை.
எனவே, உண்மையிலேயே அரசியலில் ஊழலை ஒழிக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அரசியல் கட்சிகளின் செலவினங்களையும் வரம்பிற்குள் கொண்டுவாருங்கள். ஏன் அதை செய்யத் தயங்குகிறீர்கள்? உண்மையிலேயே அரசியலில் ஊழலைத் தடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதைத் தடை செய்யுங்கள். தேவைப்பட்டால் இதற்காக சட்டம் கொண்டுவாருங்கள். கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்பு என்பதைப்போல, ஜனநாயகத்தைக் காப்பதற்கான கார்ப்பரேட்டுகள் நிதி என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வாருங்கள். அதனை தேர்தல் ஆணையம் நிர்வகிக்கட்டும். அல்லது அரசாங்கம் நிர்வகிக்கட்டும். இது தொடர்பாக நாம் பலமுறை விவாதித்திருக்கிறோம். உலகில் பல நாடுகள் இதனைச் செய்துவருகின்றன. எனவே அதைச் செய்யுங்கள். அப்படிப்பட்ட நடவடிக்கை எதையும் எடுக்காதவரை, தேர்தலில் பண பலம் செல்வாக்கு செலுத்துவதை எந்தவிதத்திலும் தடுத்திட முடியாது.
• • •
வெறும் 100 ரூபாய் 2.5லட்சமாக மாறும் கதை
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்காக நீங்கள் கூறிய அனைத்துக் காரணங்களுமே பரிதாபகரமான முறையில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இப்போது, டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து அறிவித்திருக்கிறீர்கள்.
ஏன்?
டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். அந்தக் கட்டணம் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு அல்லது இந்திய கார்ப்பரேட்டுகளுக்குச் செல்லும்.
ஒரு 100 ரூபாய் நோட்டு லட்சம் கைகள் மாறினாலும் அதன் மதிப்பு மாறாது. அதே100 ரூபாய் என்ற அளவில்தான் அதன் மதிப்பு இருக்கும். ஆனால் அதற்குப் பதிலாக 100 ரூபாய் நோட்டுக்கான மதிப்பில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு அது லட்சம் தடவைகள் நடக்குமானால் அதன் மதிப்பு 2.5 லட்சம் ரூபாய்களாகும். இவ்வாறு அதனை செயல்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்து கொடுக்கிறீர்கள். இவற்றில் பல, அந்நிய நிறுவனங்களாகும். சர்வதேச அளவில் இன்றைய தினம் மூன்று நிறுவனங்கள்தான் நம்முடைய கிரெடிட் கார்டுகளையும், டெபிட் கார்டுகளையும் கையாண்டு வருகின்றன. விசா கார்டு, மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் என்னும் இந்த மூன்று நிறுவனங்கள்தான் இதன் காரணமாக பயனடைந்திடும்.
• • •
மோடி ஆட்சியின் குதூகலமும், டிரம்ப் வெற்றியும்
பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபிறகு, இந்தியாவை, அமெரிக்காவின் ராணுவச் சூழ்ச்சித் திட்டங்களின் இளைய பங்காளியாக்கிவிட்டது. இப்போது டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகி இருக்கிறார். அவரது தேர்வால், இந்திய அரசாங்கம் மிகவும் குதூகலம் அடைந்திருப்பதுபோல் தெரிகிறது. தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் வாழ்த்துவது மரபுதான். ஆனால் அவ்வாறு வாழ்த்துவது என்பது, மிகவும் பரவசமான ஒன்றாக இருந்திடக்கூடாது.
டிரம்ப் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், அங்குள்ள நம் இந்தியர்கள் தொடர்பான பிரச்சனைகளில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அமெரிக்காவில் சுமார் ஐந்து லட்சம் இந்திய இளைஞர்கள் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிரதானமாக தகவல் தொழில்நுட்பத் துறை (I.T.)யில் அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கே எச்.1பி விசா மூலமாகவே தங்கியிருக்கிறார்கள். இப்போது அவர்கள் அங்கே வேலையைத் தொடர்வதுஎன்பது நிச்சயமற்ற ஒன்றாக மாறி இருக்கிறது.
அங்கே வேலை பார்க்கும் இந்திய இளைஞர்களைப் பாதுகாத்திடுவோம் என்று ஒரு வார்த்தைகூட நம் ஆட்சியாளர்களின் வாயிலிருந்து வரவில்லை. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியிருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் துன்புறுத்தப்படும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
நம் இளைஞர்கள் துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் அதே அமெரிக்க அரசாங்கத்தின் ராணுவச் சூழ்ச்சிக் கூட்டாளியாக மாறி கூட்டாக கடல்வழி மற்றும் வான்வழி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறீர்கள். இதன்மூலம் உலகத்திற்கு நீங்கள் விடுத்துக்கொண்டிருக்கும் சமிக்ஞை என்ன? இது எந்த அளவிற்கு இந்தியாவின் நலன்களுக்குப் பயன் அளித்திடும்?
• • •
தேசம் காத்த ஏழைகளும் தின்று தீர்த்த கார்ப்பரேட்டுகளும்
நம் நாட்டின் வங்கிகளில் கடன் வாங்கிய கார்ப்பரேட்டுகள் கடன்களை திருப்பிச் செலுத்தாமல், வராக்கடன் (NPAs) வழியாக அந்த வங்கிகளை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாங்கிய கடன் தொகையை, வட்டியுடன் சேர்த்தால் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய்களாகும். மறுபுறத்தில் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் நீங்கள் சுமார் 15 லட்சம் கோடி ரூபாயை உள்ளே வர வைத்து, வங்கிகளுக்கு ரொக்க உபரி (cash surplus)யாகக் கொடுத்திருக்கிறீர்கள். அதாவது வராக்கடன்களைத் தள்ளுபடி செய்ததன் மூலம் திவாலாக இருந்த வங்கிகளை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலமாக, பொதுமக்களின் பணத்தைச் சேர்த்து சொந்தக் கால்களில் நிற்க வைத்திருக்கிறீர்கள்.
ஆனால் கடன்களை கட்டாமல் சூறையாடியவர்கள் குறித்து உங்கள் நிலை என்ன? அவர்களை சுதந்திரமாக போவதற்கு அனுமதித்திருக்கிறீர்கள்!
அதே சமயத்தில் சிறிய விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடன்களைக் கட்டவில்லை என்றால், அவர்களது கால்நடைகளைப் பறிமுதல் செய்கிறீர்கள், அவர்களது நிலத்தைப் பறிமுதல் செய்கிறீர்கள். கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனுக்காக அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யத் தயாரா?
இதற்கு முன்பு வராக்கடன்கள் (NPAs) மதிப்பு 1.12 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் நிதி அமைச்சரும் இங்கே அமர்ந்திருக்கிறார். அப்போது விவசாயிகளின் கடன் தொகை 78 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்தோம். பத்தாண்டுகளுக்கு முன் இவ்வாறு செய்தோம்.
இப்போது விவசாயிகளின் தற்கொலை 26 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து விவசாயிகள் நிலைமைகள் மேலும் மோசமாகி இருக்கின்றன. அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்திடுங்கள். பணக்காரர்களின் கடன்களை ரத்து செய்வதற்குப் பதிலாக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யுங்கள்.
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வங்கிகள் திவாலானபோது அங்குள்ள அரசாங்கங்கள் நிதி உதவி அளித்து அவற்றைக் காப்பாற்றின. அதேபோல் இந்தியாவிலும், ஏழைகளின் பணத்தைக் கொடுத்து வங்கிகளை நீங்கள் காப்பாற்றி இருக்கிறீர்கள். சாமானிய மக்கள் தாங்கள் வங்கிகளில் சேமித்து வைத்த பணத்தை எடுப்பதற்குத் தடை விதித்திருப்பதன் மூலம் வங்கிகளைக் காப்பாற்றி இருக்கிறீர்கள். அந்த வங்கிகளை சூறையாடிய கார்ப்பரேட்டுகளையும் முழுமையாக விடுவித்திருக்கிறீர்கள்.
குடியரசுத் தலைவர் உரையானது, இதுபோன்ற எதார்த்தநிலைகள் எதையுமேபிரதிபலிக்கவில்லை.
தமிழில்: . வீரமணி


No comments: