Thursday, July 2, 2015

50 ஆண்டுகால தொடர் போராட்டம் : சீத்தாராம் யெச்சூரி


50 ஆண்டுகால தொடர் போராட்டம்
-சீத்தாராம் யெச்சூரி
இந்த (2015 ஜூன் 28) இதழுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவின் சார்பில் வெளியாகும் பீப்பிள்ஸ் டெமாக்ரசிக்கு, 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.  1965 ஜூன் 27இலிருந்து ஞாயிறு தேதியிட்டு ஒவ்வொரு வாரமும் பீப்பிள்ஸ் டெமாக்ரசி தொடர்ந்து முறையாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. (கட்சியின் அகில இந்திய மாநாடுகள் நடைபெறுவது போன்று அசாதாரணமான தருணங்கள் தவிர) மற்ற அனைத்து வாரங்களிலும் - அதாவது இதுவரை2600 வாரங்கள் - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தன் வாசகர்களைச் சென்று அடைந்திருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளும் ஏற்ற இறக்கம் இல்லாது எளிதாகச் சென்ற காலம் இல்லை.  பீப்பிள்ஸ் டெமாக்ரசி முறையாக வெளியாவதைத் தடுக்கக்கூடிய விதத்தில் ஏற்பட்ட பல்வேறு சவால்களை சமாளித்துத் தான் அதுவெளி வர வேண்டி இருந்தது. அதே சமயத்தில், பிற்போக்கு சக்திகளால் ஏவப்பட்ட பல்வேறு சவால்களையும் எதிர்த்து முறியடிக்க வேண்டிய நிலையில் அது இருந்தது. திருத்தல் வாதத்திற்கு எதிராக கடுமையான தத்துவார்த்தப் போராட்டங்களாக இருந்தாலும் சரி, அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள்ளேயே இருந்துவந்த வர்க்க சமரச(class collaboration) நிலைப்பாடாக இருந்தாலும் சரி அவற்றையெல்லாம் எதிர்த்து முறியடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபின்பு,  கட்சிக்குள்ளிருந்த நக்சலைட்டுகளின் இடது அதிதீவிர திரிபு (Left adventurist deviation)க்கு எதிராக கடுமையான போராட்டங் களை நடத்தித்தான் ஆரம்ப ஆண்டுகளில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி தொடர்ந்து வெளிவந்தது.
தத்துவார்த்தப் பிரச்சாரம்
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இந்திய ஆளும் வர்க்கங்களும் மற்றும் அவர்களின் கட்டளைப்படி செயல்பட்ட பிரம்மாண்டமான அரசு எந்திரமும் நம்மீது ஏவிய தாக்குதல்களை அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்தரீதியாகவும் எதிர்கொண்ட அதே சமயத்தில் அனைத்துத் தடைகளையும் மீறி பீப்பிள்ஸ் டெமாக்ரசி வெளிவந்தது என்பது பெரிய அளவில் திருப்தியை அளிக்கிறது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவிலிருந்து எழுந்த சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி தன்னுடைய முக்கியமான தத்துவார்த்தப் பொறுப்புகளை ஆற்ற வேண்டியிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், வலுவாக இருந்த சோவியத்  சோசலிஸ்ட் குடியரசு ஒன்றியம் (USSR) துண்டு துண்டாகி, சோவியத் யூனியனில் சோசலிசம் தகர்ந்தபோது, உலக அளவில் ஏகாதிபத்தியம்   சோசலிசத்திற்கு எதிரான தத்துவார்த்தத் தாக்குதலை மேலும் மூர்க்கத்தனமாகக் கட்டவிழ்த்துவிட்டது. உலகில் இருந்த சில கம்யூனிஸ்ட் கட்சிகள் நொறுங்கிவீழ்ந்தன. பல கட்சிகள் ஊசலாடின. அதன் காரணமாக அவை மார்க்சிசம் லெனினிசத்தின் மீது வைத்திருந்த உறுதியே நீர்த்துப் போயின. வலுவாக இருந்த இத்தாலியக் கட்சி செங்கொடியைக் கைவிட்டுவிட்டு, தன்னையும் கலைத்துக் கொண்டுவிட்டது. இக்காலக் கட்டத்தில், பீப்பிள்ஸ் டெமாக்ரசி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த நிலைப்பாடுகளை உறுதியுடன் பிரச்சாரம் செய்ததுடன் இந்திய நிலைமைகளின் கீழ் மார்க்சிசம் லெனினிசத்தின் புரட்சிகர சாராம்சத்தைப் பாதுகாத்து  வலுப்படுத்திடவேண்டும் என்றும் கோரியது. இவ்வாறு, பீப்பிள்ஸ் டெமாக்ரசி, இந்தியாவில் “துல்லியமான நிலைமைகளின் துல்லியமான ஆய்வு’’ என்னும் மார்க்சிசம்-லெனினிசத்தின் ஆக்கபூர்வமான அறிவியலைப் பிரயோகிக்கும் கடமைக்குத் தன் பங்களிப்பைச் செவ்வனே செய்து வந்திருக்கிறது.
அளப்பரிய தியாகம்
பீப்பிள்ஸ் டெமாக்ரசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுப் பதிவாளராக இருக்கும் அதே சமயத்தில் அதன் அதிகாரபூர்வமான செய்தியேடாகவும் செம்மையான முறையில் இருந்து வந்திருக்கிறது, வருகிறது. இந்தியாவில் புரட்சிக்கான ஜனநாயகக் கட்டத்தை நிறைவு செய்வதை நோக்கி வர்க்கப்போராட்டங்களைக் கூர்மைப்படுத்துவதிலும்,  அதனைத் தொடர்ந்து இந்திய அரசியலின் வளர்ச்சிப் போக்குகளில் அதன் செல்வாக்கும் அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகங்களே அடிப்படையாகும்.  சர்வதேச மற்றும் தேசிய அளவிலான வர்க்க எதிரிகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களிலும், வலது மற்றும் இடது திரிபுகளுக்கு எதிரான போராட்டங்களிலும்  ஆயிரக்கணக்கான தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். இன்றும் கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறர்கள், இதில் எண்ணற்றோர் தங்கள் உயிரைப் பலி கொடுத்திருக்கிறார்கள், எண்ணற்றோர் புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் இப்போது இது நடந்து கொண்டிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான காலத்திலிருந்த கொந்தளிப்பான  ஆண்டுகளில் மிகவும் உறுதியுடன் வர்க்கத் திரிபுகளுக்கு எதிராகப் போராடியபோதும், மேற்கு வங்கத்தில் அரைப் பாசிச அடக்குமுறை ஏவப்பட்ட காலத்தில் அவற்றை எதிர்த்து வெற்றிகரமாக முன்னேறியபோதும், 1970களில் உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனம் அரங்கேற்றப்பட்ட காலத்திலும், கூட்டணி அரசாங்கங்கள் ஆண்ட காலத்தில் இந்திய அரசியலில் மிக வேகமாக மாற்றங்கள் ஏற்பட்ட காலத்திலும், மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை ஆர்எஸ்எஸ் இயக்கம் ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்காகக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் இப்போதும் அத்தகைய மதவெறி சக்திகளுக்கு எதிராக விடாப்பிடியான போராட்டங்களை நடத்துவதிலும் மற்றும் வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் - இவ்வாறு அனைத்துச் சவால்களையும் சந்தித்து, எதிர்த்து முறியடித்து, முன்னேறிச் செல்வதில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி முக்கியமான பங்களிப்பினை ஆற்றியது, ஆற்றி வருகிறது.
அவசர நிலைக் காலத்தில் …
அவசரநிலைக் காலத்தில், பீப்பிள்ஸ் டெமாக்ரசி கடும் தணிக்கைக்குப் பலியானது. அந்த 18 மாதங்கள் வெளிவந்த பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் பத்திகளில் காணப்பட்ட வெற்றிடமானது, அவசரநிலையை உறுதியுடன் எதிர்த்துநின்று, நாட்டில் ஜனநாயகத்தை மீளவும் கொண்டுவருவதற்காகப் போராடி வந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணியினருக்கு மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்ற வீராவேசத்தைக் கொடுத்தது. “எங்களின் நிசப்தம் சமயங்களில் கொடுங்கோன்மையான வார்த்தைகளை விட மிகவும் வலுவானதாக இருக்கும்,’’ (`eloquence of silence is at times more powerful than the tyranny of words’) என்று பாரிஸ் கம்யூன் வீழ்ந்தபோது ஒரு புரட்சியாளன் கூறியதைப்போன்று, பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் வெற்றிடம் ஏராளமான விஷயங்களை ஊழியர்கள் மத்தியில் எடுத்துச்சென்றது.
உழைக்கும் மக்களின் குரலாக …
இவ்வாறு, இன்றைய தினம்,  வேறெந்த ஊடகமும் பிரதிநிதித்துவப்படுத்தாத - அது பத்திரிக்கைகளாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி அல்லது இணையதள ஊடகங்களாக இருந்தாலும் சரி அவை  எதுவும் பிரதிநிதித்துவப் படுத்தாத - இந்தியத் தொழிலாளி வர்க்கத்தையும், ஏழை விவசாயிகளையும் மற்றும் அனைத்துவிதமான சுரண்டப்படும் பிரிவினர்களையும் அவர்களது  வர்க்கக் கண்ணோட்டத்துடன் பிரதிநிதித்துவப்படுத்தும்  ஊடகமாக பீப்பிள்ஸ் டெமாக்ரசி  தன்னிகரற்ற முறையில் சிறப்பாக வெளிவந்துகொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தியப் புரட்சிகர சக்திகளின் கண்ணோட்டத்தைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது.
மிகவும் குறைந்த நிதியுடனும், ஊழியர்களுடனும் கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்ட பீப்பிள்ஸ் டெமாக்ரசி நம்முடைய காலத்திலும் நமக்கு எவ்வளவோ சிரமங்கள் மற்றும் வரம்புகளுக்கிடையே  தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.  நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் மூர்க்கத்தனமான தாக்குதல்களும் மற்றும் அதன் எடுபிடி ஊடகங்களின் தத்துவார்த்தத் தாக்குதல்களும் மக்களின், குறிப்பாக இளைஞர்களின்,  சமூக உணர்விலும் செல்வாக்கினை செலுத்திக் கொண்டிருக்கிறது. மதவெறிசக்திகள் வரலாற்றைத் தங்கள் இஷ்டத்திற்குத் திரித்துக் கூறுவதுடன், தற்போது மத்தியில் ஆட்சியில் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு தத்துவார்த்த ரீதியான தாக்குதல்களையும் அதிகரித்துள்ளது.  இந்திய ஆளும் வர்க்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்  எடுபிடியாக மாறியுள்ள சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பீப்பிள்ஸ் டெமாக்ரசியும் தற்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக முன்வந்துள்ளன. பீப்பிள்ஸ் டெமாக்ரசி, இத்தகைய சவால்களை எதிர்த்து முறியடித்திட  கம்யூனிஸ்ட்டுகளின் குரலையும், நாட்டிலுள்ள இதர முற்போக்குப் பிரிவினரின் குரலையும் பிரதிபலிப்பது தொடரும்.  
சிறப்பு இதழ்கள்
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி எண்ணற்ற சிறப்பு இதழ்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இவற்றை நம் தோழர்களில் பலர் மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், அவற்றைத் திரும்பத் திரும்பப் படித்தும் வருகிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில்  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 50ஆம் ஆண்டு, அக்டோபர் புரட்சியின் முக்கிய ஆண்டுக் கொண்டாட்டங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் கட்டவிழ்த்துவிடப்பட்ட முக்கிய பிரச்சாரங்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள், அவசர நிலை அல்லது பாபர் மசூதி இடிப்பு  போன்று மக்கள் விரோத, ஜனநாயக விரோத வெளிப்பாடுகளுக்கு எதிராக மக்களை எச்சரித்தல் ஆகிய பல பிரச்சனைகள் தொடர்பாக எண்ணற்ற சிறப்பு இதழ்கள் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இவற்றில் மறைந்த பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி, வி.பி. சிங் போன்ற  நாட்டில் உள்ள தலைசிறந்த அறிஞர் பெருமக்கள் தங்கள் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள்.  அதிலும் குறிப்பாக, இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் தொடர்ந்து ஓராண்டு அதுதொடர்பாக சிறப்புக் கட்டுரைகள் - மக்கள் போராட்டங்களின் நாட்குறிப்பு (இந்திய வரலாற்று ஏடுகளில்  வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்பட்ட பல்வேறு இந்திய சுதந்திரப் போராட்டங்கள், கம்யூனிஸ்ட் விடுதலைபோராட்ட வீரர்களின் பங்களிப்புகள்  இதில் வெளிக் கொண்டுவரப் பட்டன) வெளியிட்டதைச் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.  ஆளும் வர்க்கங்களும் மதவெறி சக்திகளும் `கம்யூனிஸ்ட்டுகள் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள்’ என்று பொய் மூட்டைகள் அவிழ்த்துவிட்டிருப்பதை இக்கட்டுரைகள்  தவிடுபொடியாக்கின.  மேலும் 1857இல் முதல் சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர் களுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு நடத்திய உன்னதமான போராட்டங்களை இக்கட்டுரைகளில் நினைவுகூர்ந்தோம். இக்கட்டுரைகள் அனைத்தும் நாட்டிலுள்ள முக்கியமான நூலகங்களில் பீப்பிள்ஸ் டெமாக்ரசி பதிப்பகத்தால் கொண்டுவரப்பட்ட புத்தகங்கள் என்று தனியே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் ஆசிரியர் குழு தன் கடமைகளைச் செவ்வனே ஆற்றாமலிருந்திருந்தால் இத்தகைய இமலாயப் பொறுப்புக்களை அதனால் தொடர்ந்து நிறைவேற்றி வந்திருக்க முடியாது. அதுமட்டுமல்ல, ஆசிரியர் குழுவிற்கு தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாது எண்ணற்ற படைப்பாளிகள் உதவியிருக்காவிட்டாலும் மிகவும் சலிப்பு தட்டுகிற இப்பணியை மிகவும் வெற்றிகரமாக சாத்தியமாக்கி இருக்க முடியாது.
முதல் ஆசிரியர் ஜோதி பாசு
பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் முதல் ஆசிரியர், தோழர் ஜோதி பாசு. அவரைத் தொடர்ந்து தோழர்கள் இஎம்எஸ் நம்பூதிரிபாட், பி.டி.ரணதிவே, எம். பசவபுன்னையா, சுனில் மைத்ரா மற்றம் இதரர்கள் இதழை வளர்த்துச் செம்மையாக்கினார்கள். ஒவ்வொரு வாரமும் இதழ் அச்சடிப்பதற்காகச் சென்றுவிடும். ஆரம்ப நாட்களில், நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு, கட்டுரைகள் அனைத்தும் அச்சுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கே கையால் அச்சுக்கோர்க்கப்பட்டு, சரிபார்ப்புக்காக மீண்டும் தலைவர்களிடம் வரும். அவர்கள் சரிபார்த்து மீளவும் அச்சுக்கோர்க்கப்பட்டு, காலத்தே இதழ் வெளியாகி விடும்.  தோழர்களின் கம்யூனிஸ்ட் அர்ப்பணிப்பின் விளைவாகத்தான்  தொழிலையே வாழ்க்கையாகக் கொண்டிருப்பவர்களுக்கு இணையாக பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழை நம்மால் கொண்டுவர முடிந்தது. தோழர் சென்குப்தா, நம் அச்சகத்தின் முதல் நிர்வாகி, கட்சி மையம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்குப் மாற்றப்பட்ட வந்தபோது, பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டபோதும், காலத்தே இதழை வெளிக்கொண்டுவந்து விடுவார். தோழர் ராம்தாஸ், மத்தியக்குழு உறுப்பினர், கல்கத்தாவிலும் பின்னர் தில்லியிலும் பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் முதுகெலும்பாக இருந்து செயல்பட்டார்.  பீப்பிள்ஸ் டெமாக்ரசி தில்லிக்கு வந்தபின்னர் தோழர் ராஜனும் அவருடன் இணைந்து கொண்டார். பின்னர், தோழர் சுர்ஜித்தை ஆசிரியராகக் கொண்டு லோக் லஹர் (இந்தி) இதழும் வெளியாகத் தொடங்கி, கட்சியின் சார்பில் இந்தி இதழ் கொண்டுவரப்பட வேண்டும் என்கிற சால்கியா பிளீனத்தின் கட்டளையும் நிறைவேற்றப் பட்டது.  தில்லிப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்த தோழர் கிட்டி மேனன் ஓய்வுபெற்றபின்னர் பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியர் குழுவில் இணைந்து இதழை எவ்வித இடையூறுமின்றி வெளிவருவதை உத்தரவாதப்படுத்தினார். ஆசிரியர் குழுவின் கூட்டுச் செயல்பாட்டின் காரணமாக, இதழின் உள்ளடக்கம் மற்றும் இதழ் காலத்தே வெளிவருவது கடந்த அரை நூற்றாண்டு காலமாக உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதழ் எவ்விதத் தளர்ச்சியோ, தடையோயின்றி தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது.
விரிவுபடுத்த வேண்டும்
பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழைத் தொடர்ந்து எவ்விதத் தளர்ச்சியுமின்றி வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லக்கூடிய அதே சமயத்தில், அதன் உள்ளடக்கம் குறித்தும் நமக்கு விமர்சனம் உண்டு. அதனைத் தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம். கடந்த ஐம்பதாண்டுகளில் இதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. மேலும் பல செய்ய வேண்டிய நிலையிலும் இருக்கிறோம். ஆசிரியர் குழுவை உடனடியாக வலுப்படுத்தியாக வேண்டும். இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஆளும் வர்க்கங்களின் ஊதுகுழல்களாக வெளிவரும் ஊடகங்கள் கட்டவிழ்த்துவிடும் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கக்கூடிய விதத்தில் நம் கட்சி ஊழியர்களுக்கு நம் குரலை முழுமையாகக் கொண்டு செல்ல வேண்டுமானால் இதழை மேலும் விரிவுபடுத்திட வேண்டும்.
போராட்டங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி
பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழின் நிறுவன ஆசிரியரான ஜோதிபாசு கையெழுத்திட்டு எழுதிய முதல் தலையங்கத்தில் கூறியதாவது: “நாம் நம் கட்சியின் மத்தியக் குழுவின் அதிகாரபூர்வ ஏடாக பீப்பிள்ஸ் டெமாக்ரசியை வெளிக்கொண்டுவருவதில் பெருமை கொள்கிறோம்.’’ தலையங்கத்தில் `நம் குறிக்கோள் மற்றும் கடமைகள்’ என்று தலைப்பிட்டு அதன்கீழ் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “நாம் ஒரு முக்கியமான சமுதாயப் பணியை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். ... நம் வார இதழ், நம் மக்களின் வாழ்க்கை நிலைமைகளையும், அவர்கள் படும் துன்பதுயரங்களையும் அவற்றுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டங்களையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்க வேண்டும். ... பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் மக்களின் உண்மையான நலன்களைப் பிரதிபலித்திட வேண்டும். ... நம் வார இதழ் நமக்கு எதிராக ஆளும் வர்க்கங்களும் அவர்களுக்கு அடிமை சேவகம் செய்யும் பத்திரிகைகளும் கட்டவிழ்த்துவிட்டுள்ள அவதூறுகள் மற்றும் பொய்களுக்கு எதிராக நாம் நம்மைப் பற்றியும் நம் கொள்கைகள் பற்றியும் மக்கள் முன் விளக்கிட வேண்டும்.’’
அரை நூற்றாண்டுக்கு முன் அவர் கூறியவை இன்றைக்கும் பொருத்தம் உடையதாகவே இருக்கின்றன. உண்மையில், இன்றையதினம் அன்றைய தினத்தைவிட மிகவும் பொருத்தம் உடையதாக அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சிகரமான வளர்ச்சி கார்ப்பரேட்டுகள் ஊடகங்களைத் தங்கள் கைகளுக்குள் போட்டுக்கொண்டு மக்களின் கவனத்தை, தாங்கள் சொல்கிறபடி தலையாட்டக்கூடிய விதத்தில் மாற்றும் வல்லமையைப் பெற்றிருக்கிறார்கள். மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து அவர்களது கவனத்தை மிக எளிதாகத் திருப்பிவிட்டுவிடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், இன்றைய தினம் மக்களின் உண்மையான பிரச்சனைகளை அவர்கள் முன்கொண்டுசென்று அவர்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய  முக்கியமான கடமையை பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆற்ற வேண்டிய நிலையில் இருக்கிறது. 
சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவோம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய 21ஆவது அகில இந்திய மாநாட்டில் குறிப்பிட்டிருப்பதைப் போல புதிய சவால்கள் முன்வந்துள்ளன. (1) நம் மக்கள் மீது சொல்லொண்ணா சுமைகளை ஏற்றியுள்ள பொருளாதாரக் கொள்கைகள், (2) நம் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அச்சுறுத்தக்கூடிய விதத்தில் ஆட்சியாளர்கள் மதவெறியை கூர்மைப் படுத்திக்கொண்டிருப்பது,  (3) எதேச்சாதிகாரப் போக்கு அதிகரித்துக் கொண்டிருப்பது என்னும் ஒரு புதிய மும்மூர்த்தி, மோடி தலைமையில் இயங்கும் தற்போதைய பாஜக அரசாங்கத்தால் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இவ்வாறு இன்றைய சூழ்நிலையை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடு தீர்மானித்துள்ளபடி, கடமைகளை நிறைவேற்றிட பீப்பிள்ஸ் டெமாக்ரசி தன் பொறுப்புக்களை மேலும் விரிவாக்கிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மற்றும் அணியினரையும் நாட்டு மக்களையும் வலுவான போராட்டங்களை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவேண்டிய கடமையை பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆற்ற வேண்டியிருக்கிறது.
தோழர் லெனின், கட்சிப் பத்திரிக்கை என்பது “ஒரு கூட்டுப் பிரச்சாரகன், ஒரு கூட்டு கிளர்ச்சியாளன், ஒரு கூட்டு அமைப்பாளன்’’ என்று சொல்லியிருப்பதற்கு இணங்க, பீப்பிள்ஸ் டெமாக்ரசி தன் கடமையைத் தன்னால் இயன்ற அளவிற்குச் செவ்வனே செய்து வந்திருக்கிறது. எதிர்காலத்தில் பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் பொறுப்புகளும் தற்போது நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை எதிர்த்துநின்று முறியடித்து முன்னேறக்கூடிய விதத்தில் வரையறுக்கப் பட்டிருக்கின்றன.
(தமிழில்: ச.வீரமணி)


  

No comments: