Tuesday, July 21, 2015

கிரீஸ் அரசு நம்பிக்கைத் துரோகம்

கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் மற்றும் கிரீஸ் சிரிசா அரசாங்கம் யூரோ மண்டலம் - சர்வதேச நிதியம் எஜமானர்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்து மிகவும் இழிவான முறையில் சரணடைந்துவிட்டது.
கிரேக்கமக்களுக்கு இது மிகவும் பேரிடர் அவலமா கும். சிரிசா அரசாங்கம் அமைந்தது மக்கள் மத்தியில் நம்பிக்கை விதைகளை விதைத்திருந் தது. ‘டிராய்காஎனப்படும் ஐரோப்பிய மத்தியவங்கி, ஐரோப்பிய ஆணையம் மற்றும் சர்வதேச நிதியம் ஆகிய மூன்று அமைப்புகளாலும் திணிக்கப்பட்ட வெறுக்கத்தக்க சிக்கன நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்றும், தேசத்தின் இறையாண்மை பாதுகாக்கப்படும் என்றும் மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் மக்களின் நம்பிக்கை களை கிரீஸ் அரசாங்கம் தன்னுடைய ஆறுமாதஆட்சிக் காலத்திற்குள்ளேயே மிகவும் கொடூர மான முறையில் தகர்த்தெறிந்துவிட்டது.
சரணாகதி சமிக்ஞை
கடனில் மூழ்கிக்கொண்டிருக்கும் கிரீஸின் பொருளாதாரத்தை மூன்றாவது முறையாக மீட்பதற்காகக் கடன் தருவதற்குடிராய்காமிகவும்கடுமையான நிபந்தனைகளை விதித்திருந்தது. அவற்றை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து சிப்ராஸ் மக்களின் கருத்துக் கணிப்பைக் கோரியிருந்தார். ஜூலை 5 அன்று நடைபெற்ற மக்களின் கருத்துக்கணிப்புக்கான தேர்தலில்டிராய்கா’-வின் சிக்கன நடவடிக்கைகளைஏற்க மாட்டோம்என்று கூறி 61.3சதவீத மக்கள் உரத்த குரலில் பதில் அளித்தனர். ஆயினும் மக்கள் கருத்துக் கணிப்பில் வாக்களிக்கச் செல்வதற்கு முன்னாலேயே, யூரோ மண்டல நாடுகளின் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தான் அவர்களிடம் (‘டிராய்கா’-விடம்) சரணாகதி அடைந்து கொண்டிருப்பதை சமிக்ஞை மூலம் தெரிவித்து விட்டார். ‘டிராய்காஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டிட சிப்ராஸ் முன்வந்துள்ளார்.
மக்கள் மத்தியில் மகத்தான ஆதரவு இருக்கக்கூடிய நிலையில் சிரிசா அரசாங்கம் கிரேக்கமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் சென்றிருக்க முடியும். ஆயினும் மாற்றுப்பாதைக்கான திட்டம் எதுவும் வரையப்படவில்லை. யூரோவை விட்டு வெளியேறுவதற்கோ அல்லது ரஷ்யா, சீனா அல்லது பிரிக்ஸ் நாடுகளிடம் ஆதரவைக் கோருவதற்கோ எவ்விதமான தயாரிப்பு வேலைகளும் நடைபெற வில்லை. மாறாக, சிப்ராஸ் நாடாளுமன்றத்தில் பல்வேறு முன்மொழிவுகளைத் தாக்கல் செய்திருக்கிறார். இவை அனைத்தும் மக்களின் கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு முற்றிலும் எதிரானவைகளாகும். ஓய்வூதியதாரர்களின் சுகாதாரப் பாதுகாப்புப் பயன்பாடுகள் மேலும் அதிகமான அளவில் வெட்டப்படும்,
பொதுத்துறை ஊழியர்களின் ஊதியம் வெட்டப்படும், ஓய்வு பெறுவோர் 2019ல் ஓய்வுபெறக்கூடிய விதத்தில் அவர்களின் ஓய்வூதிய வயது 67ஆக உயர்த்தப்படும், கிரேக்கத் தீவுகளில் மதிப்புக் கூட்டு வரி (VAT)அதிகரிக்கப்படும், மண்டல அளவிலான விமான நிலையங்களும், துறைமுகங்களும் தனியாரிடம் தாரை வார்க்கப்படும் போன்றவையே இந்த முன்மொழிவுகளாகும். இந்தவகையில் சிப்ராஸ் 4 பில்லியன் யூரோக்கள் வெட்டப்படவும், வரிகளை அதிகரித்திடவும் திட்டமிட்டிருக்கிறார். இவை மக்களின் கருத்துக்கணிப்புக்கு முன்புடிராய்காகோரியதைவிட அதிகமானவைகளாகும்.
ஏளனமாய் பார்க்கும்...
யூரோ மண்டல நிதி அமைச்சர்கள் இம்முன்மொழிவுகளையே கூட மிகவும் ஏளனத்துடன் பார்க்கின்றனர். ஜெர்மனியின் தலைமையின்கீழ் இயங்கிடும் அவர்கள் மேலும் அரக்கத்தனமான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அவர்கள் கிரேக்க ஜனநாயகத்தையும் கிரேக்க மக்களையுமே எள்ளி நகையாடுகின்றனர். கிரேக்கத்திற்கு கடன் மீட்பு உதவிகள் தொடங்குவதற்கு முன்பாகவே - அதாவது ஜூலை 15ஆம் தேதியிலிருந்தே - ஓய்வூதியங்கள் மற்றும் ஊதியங்கள் வெட்டப்படுவதும், மதிப்புக்கூட்டு வரி அதிகரிக்கப்படுவதும் தொடங்கிவிடக்கூடிய விதத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, மற்றுமோர் மோசமான நிபந்தனை ஒன்றையும் அவர்கள் விதித்திருக்கின்றனர். அதாவது, கிரேக்க அரசாங்கம் 50 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான சொத்துக்களை பிணைத்தொகையாக (collateral) அளித்திட வேண்டுமாம். இதற்காக அவை தனியார் கிரேக்க வங்கிகளின் ஒரு பகுதியை விற்று மூலதனமாக்கிட வேண்டியிருக்கும். மீதம் இருப்பவையும் கடன்திருப்பித் தரும்வரை பிணையமாக வைக்கப்பட் டிருக்கும். இவற்றின் காரணமாக அவர்கள் அளித்திடும் தொகையில் ஒரு யூரோ கூட மக்களின் நலத்திட்டங்களுக்காக செலவு செய்யப்பட மாட்டாது. சிப்ராஸ் அரசாங்கமும், சிரிசா தலைவர்களும் யூரோ மண்டலத்திலிருந்தும், ஐரோப்பிய யூனியனிலிருந்தும் நீக்கப்படும் கிரேக்கத்திற்குத் தங்களால் உடன்பாடு தெரிவித்திட முடியாது என்று கூறி, இவ்வாறு முழுமையாக சரணாகதி அடைந்து விட்டதை நியாயப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் கருத்துக்கணிப்பின் முடிவு என்பது ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்குஅல்ல என்று சிப்ராஸ் கூறிக்கொண்டிருக் கிறார். ஐரோப்பிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கும் ஐரோப்பிய யூனியனில் முழுமையாகத் தொடர்வதற்கே ஐரோப்பிய இடதுசாரிகள் உறுதிபூண்டிருக்கிறார்கள் என்றும் அத்தகைய இடதுசாரி நீரோட்டத்தின் ஓர் அங்கம்தான் சிரிசா என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
கம்யூனிஸ்ட்டுகளின் எச்சரிக்கை
கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியும் (KKE) ஐரோப்பாவில் இயங்கும் இதர கம்யூனிஸ்ட் சக்திகளும், “ஐரோப்பிய யூனியனை ஏற்றுக்கொள் வது என்பது ஐரோப்பிய மற்றும் சர்வதேச நிதி மூலதனம் மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகள் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதை அடிபணிந்து ஏற்றுக்கொள்வது போலாகும்’’ என்றே எப்போதும் கூறி வந்திருக்கின்றன.ஐரோப்பிய யூனியன் - நிதி மூலதனத்தின் பிணைப்பு என்பது ஜனநாயகத்திற்கும் தேசிய இறையாண்மைக்கும் விரோதமான ஒன்றே என்பதை கிரேக்க அனுபவம் காட்டுகிறது. நிதிமூலதனம் மற்றும் நவீன தாராளமய நிறுவனங்களின் இத்தகைய கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதென்பது ஒரு வலதுசாரி சமூக ஜனநாயக அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கே இட்டுச் செல்லும்.
சிரிசா அரசாங்கத்திற்கு இதுதான் நடந்திருக்கிறது. சிரிசாவிற்குள்ளேயே இயங்கிவரும் இடதுசாரி சக்திகள் வங்கிகளைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்திட வேண்டும் என்றும், யூரோவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் கோரி வருகின்றன. ஓர் அமைச்சர் உட்பட சிரிசாவைச் சேர்ந்த17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜூலை 10 அன்று நாடாளுமன்றத்தில் சிப்ராசின் கடன்மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்திட மறுத்துவிட்டார்கள். இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குள் மேலும் பலர் இதற்குஎதிராக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனாலும், அரசாங்கம் வலதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் செயல்படத் துவங்கியிருக்கிறது.
அதி தீவிரவலதுசாரிகளுக்கே ஆதாயம்
இவ்வாறு துரோகம் இழைக்கப்பட்டுள்ள போதிலும்கூட, கிரேக்க மக்கள் தங்கள் வீரம் செறிந்த எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறார்கள். இந்தப்புதிய தாக்குதல்களுக்கு எதிராக 24 மணி நேர பொது வேலைநிறுத்தத்திற்கு ஏற்கனவே அறைகூவல் விடுக்கப்பட்டுவிட்டது. வரவிருக்கும் காலங்களில் இடதுசாரி சக்திகளின் புதிய கூட்டணி (realignment) அமையும் என்று நம்பப்படுகிறது. ஐரோப்பாவில், ஆட்சியாளர்களின் சிக்கன நடவடிக்கைகள், தேசிய இறையாண்மை மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட மக்களின் அதிருப்தி உணர்வைப் பயன்படுத்திக் கொண்டுஅதிதீவிர வலதுசாரிகள் ஆதாயம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
பிரான்சில் உள்ள தேசிய முன்னணியாக இருந்தாலும் சரி அல்லது கிரீஸில் இயங்கிடும் கோல்டன் டான் (Golden Dawn) அல்லது பிரிட்டனில் இயங்கிடும் யூகிப் (UKIP) ஆக இருந்தாலும் சரி இதனை நன்கு காண முடிகிறது. ஐரோப்பிய யூனியனின் நவீன தாராளமய ஆளும் வட்டாரங்கள் திணித்திடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இடதுசாரிகள் போராடாவிட்டால், ஐரோப்பிய யூனியனின் பிடியிலிருந்து விடுதலை பெற அவர்கள் அறைகூவல் விடுக்காவிட்டால், அங்கே செயல்பட்டுவரும் வலதுசாரிகளை எதிர்த்து முறியடித்திட முடியாது. கிரேக்கத்திற்கு இன்று ஏற்பட்டுள்ளஅவலம் வேறெங்காவதும்கூட திரும்பவும் நிகழக்கூடும்.
தமிழில்: .வீரமணி


No comments: