Saturday, July 11, 2015

வியாபம்: பாஜகவின் புதுவகை ஊழல்


·       
·         புயலைக் கிளப்பும் மரணங்கள்
மத்தியப் பிரதேசத்தில் நடந்துவரும் ‘வியாபம்‘ ஊழல் அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் அதனால் ஆதாயம் அடைந்தவர்களும் தொடர்ந்து மரணம்அடைந்து வருவதன் காரணமாக அதிர்ச்சியளிக்கக்கூடிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது. வியாவசிக் பரிக்சா மண்டல் (வியாபம்)என்பது தொழிற்கல்வி தேர்வு வாரியமாகும். இது உயர்கல்வி மற்றும் அரசுப் பணிகளுக்கான சேர்க்கைக்கு தேர்வுகள் நடத்தி ஆட்களைத் தேர்ந்தெடுத்துவருகிறது.
46 அல்ல... 146 பேர் பலி
2013 ஜூலையில் வெளிச்சத்திற்கு வந்தவியாபம் ஊழல் தற்போது இதில் சம்பந்தப்பட்டோரைக் கொன்று குவித்துவரும் ஊழலாகப் பரிணமித்திருக்கிறது. இந்த ஊழலைவிசாரித்துவரும் சிறப்பு அதிரடிப்படையினரின் கூற்றுப்படி, இதுவரை இதில் குற்றஞ்சாட்டப்பட்ட 24 பேர் “இயற்கைக்கு மாறாக அகால மரணம்’’ அடைந்திருக்கிறார்கள். மேலும் இந்த ஊழலுடன் ஏதாவது ஒருவிதத்தில் சம்பந்தப்பட்ட மேலும் 22 பேர் மிகவும்விசித்திரமான முறையில் இறந்திருக்கிறார்கள். இதன்மூலம் இவ்வூழலுடன் சம்பந்தப்பட்ட இறந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. நடைமுறையில் ஒவ்வொரு நாளும் புதிய மரணச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் இந்த ஊழலுடன் சம்பந்தப்பட்டவர்களில் 146க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.
முன்னெப்போதும் இல்லாத புதுவகை ஊழல்
தேர்வு எழுதும் மாணவர்களைக் `காப்பி’ அடிக்க அனுமதித்தல், தேறாதவர்கள் என்று கணிக்கப்படும் மாணவர்களுக்குப் பதிலாக புத்திசாலியானவர்களைத் தேர்வு எழுத வைத்தல், வெற்று விடைத்தாள்களில் அதிக மதிப்பெண்களை நிரப்பிக் கொள்ளுதல் என்கிறவகையில் ஊழல் நடந்து வந்திருக்கிறது. இந்த ஊழலில் பலநூறு கோடி ரூபாய்கள் சம்பந்தப் பட்டிருக்கிறது. இவ்வூழலில்சம்பந்தப்பட்ட நபர்களின் பட்டியல் ஆளுநர் மாளிகையிலிருந்து, கீழ்மட்ட அரசு ஊழியர்கள்வரை நீள்கிறது. இதுபோன்றதொரு ஊழல் இதற்குமுன்னெப்போதும் நடந்ததில்லை.
கடலில் மூழ்கியிருக்கும் பனி மலை
இவ்வூழலை விசாரித்து வரும் சிறப்பு அதிரடிப் படை,ஆளுநர் ராம் நரேஷ் யாதவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்தது. ஆனால் அரசமைப்புச் சட்டத்தின்படி,வழக்குகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட நபர்களின்கீழ் ஆளுநரும் வருவதால், உயர்நீதிமன்றம் அவர் மீதான வழக்கை ரத்துசெய்து விட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆளுநரின் மகன்களில் ஒருவர்,லக்னோவில் அவரது இல்லத்தில் விசித்திரமான சூழ்நிலையில் இறந்துகிடந்தார்.பாஜக முன்னாள் கல்வி அமைச்சர் குற்றம்சாட்டப்பட்ட நபராக சிறையில் இருக்கிறார். முதலமைச்சர் சிவராஜ் சௌகானும் இந்தஊழலில் உடந்தை என்று குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இரு உயர்மட்ட ஆர்எஸ்எஸ்பேர்வழிகளும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். இப்போதுவரைக்கும் 1800 பேர் இந்தஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆயினும், மாநிலத்தில் நிலவும் கருத்தோட்டத்தின்படி, இதுவரை வெளிவந்திருப்பது கடலில் மூழ்கியிருக்கும் பனிமலையின் முனை அளவு மட்டும்தான்.
சிபிஐ விசாரணை
பாஜக மாநில அரசு இவ்வழக்கை, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திற்கு (சிபிஐ-க்கு)ப் பரிந்துரைக்க இதுவரை மறுத்துவந்தது. தற்சமயம், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரின் புலனாய்வு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு குறித்துப் புலனாய்வு மேற்கொண்ட - தில்லியைத் தளமாகக் கொண்ட செய்தியாளர் ஒருவரும்,தன் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட ஜபல்பூர்மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரும்மரணம் அடைந்ததற்குப் பின்னர், நாடுதழுவிய அளவில் எழுந்துள்ள கண்டனக்குரல், முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகானை, வழக்கை மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்திற்கு அனுப்பிட உயர்நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்வதாகக் கூறக் கட்டாயப்படுத்தி இருக்கிறது. (தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது).
உச்சநீதிமன்ற கண்காணிப்பு வேண்டும்
ஆனால் இது போதுமானதல்ல. மத்தியக்குற்றப் புலனாய்வுக் கழகத்தின் கீழான விசாரணை உச்சநீதிமன்றத்தால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும். இல்லையேல், மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் சிபிஐ விசாரணையில் தலையிடக் கூடும். மேலும், சிவ்ராஜ் சௌகானும் முதல்வர் பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டியது அவசியம். ஏனெனில், அப்போதுதான், பாரபட்சமற்ற முறையிலும் நேர்மையாகவும் புலன் விசாரணையை நடத்திட முடியும். முதல்வர் பதவியில் இருக்கும் அவரது தற்போதைய நடத்தைஅவர்மீது நம்பிக்கையை ஏற்படுத்திடவில்லை.
எனவே, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூலை 16 அன்று மத்தியப் பிரதேசத்தில் மாநிலம் தழுவிய அளவில் கடையடைப்பு நடத்திட இடதுசாரிக் கட்சிகளும் இதர எதிர்க் கட்சிகளும் அறைகூவல் விடுத்திருக்கின்றன.வியாபம் ஊழல், மத்தியப்பிரதேசத்தில் பாஜக அரசாங்கத்தின் அரவணைப்புடன்தான் தழைத் தோங்கி வளர்ந்திருக்கிறது. தினந்தோறும் எவரையாவது கொன்றுகுவித்துவரும் இந்த ஊழலால் பாஜக மற்றும் அதன் மாநில அரசாங்கம் கறைபடிந்ததாக மாறிவிட்டது.மத்தியில் மோடி தலைமையிலான ஆளும்கட்சியும் அதன் அமைச்சர்களும் மற்றும்மாநிலங்களில் உள்ள அதன் முதலமைச்சர்களும் ஊழல் மற்றும் உறவினர்களுக்குச் சலுகை போன்றவற்றால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும்போது, மோடி அரசாங்கம் இவையெல்லாம் வழக்கமாக நடைபெறுபவைதான் என்று வெறுமனே பாவனை செய்து கொண்டிருக்கமுடியாது.
(ஜூலை 8,2015)
தமிழில்: ச.வீரமணி



No comments: