Sunday, April 27, 2014

நாட்டுக்கும் மக்களுக்கும் பாஜக முன்கூட்டியே விடுத்துள்ள மிரட்டல்


பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்
பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் அதன் இரட்டைவேடம் நன்கு வெளிப்பட்டுள்ளது. அதன் உயர்மட்டத் தலைவர்கள் வளர்ச்சி’’ குறித்தும், நல்ல அரசாங்கத்தை நடத்திடுவோம்; வேலைவாய்ப்பை அளித்திடுவோம் என்றும் பகட்டாகப் பேசிவருகிறார்கள். ஆனால் அவர்களின் உள்ளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் மதவெறி, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரங்களில் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.பாஜக/ஆர்எஸ்எஸ் தலைவர்களின் சமீபத்திய பேச்சுக்களும், அவர்கள் தங்கள் வாயிலிருந்து கொட்டக்கூடிய வார்த்தைகளும் அவர்களுடைய இந்து மதவெறி குணத்தை நன்கு தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
பீகாரில் நவாடா தொகுதியில் போட்டியிடும் பாஜக வின் தலைவரும், வேட்பாளருமான கிரிராஜ் சிங், தேர்தல் பிரச்சாரத்தின் போது,“மோடியைத் தடுத்து நிறுத்த விரும்பும் அனைவரும் தங்கள் ஆதரவுக்காக பாகிஸ்தானைப் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். வரவிருக்கும் நாட்களில், அத்தகைய நபர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை. ஏனெனில் அவர்கள் இடம் பாகிஸ்தானில் இருக்கும்.’’ இந்துத்துவாவை விமர்சிக்கும் அனைவரையும் தேச விரோதிகள் என்றும், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்றும் முத்திரை குத்துவது சங் பரிவாரக் கும்பலின் பழைய உத்திதான்.
இவ்வாறு பாகிஸ்தானைக் குறிப்பதுகூட, முஸ்லிம் இனத்தினரைக் குறி வைத்துத்தான். ஏனெனில் முஸ்லிம்கள் பாகிஸ்தான் பக்கம்தான் விசுவாசமாக இருப்பார்கள் என்கிற முறையில் எப்போதும் அவர் களை பாஜகவினர் கேலி செய்து கொண்டிருப்பார்கள். அவரது பேச்சை பாஜக ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளபோதிலும், கிரிராஜ் சிங் தான் கூறிய வற்றை இதுவரை மறுதலித்திடவில்லை.இந்தப் பேச்சைத் தொடர்ந்து மோடி யின் வலதுகரமாகச் செயல்படும் அமித் ஷா உத்தரப் பிரதேசம், முசாபர்நகரில் ஒரு வாரம் முன்னதாகக் கூறியது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். அமித் ஷா தன்னுடைய வெறித்தனமான பேச்சில், “நம் இனத்தினர் மீது ஏற்படுத்தப்பட்ட அவமதிப்புக்குப் பழிதீர்க்கும் தருணம் இதுவே.
நம்முடைய தாய்மார்களையும் சகோதரிகளையும் மோசமாக நடத்தி யவர்களுக்கு இத்தேர்தல் பதில் அளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திட வேண் டும்.’’ என்று பேசியிருக்கிறார். வகுப்புக் கலவரங்கள் மிகவும் மோசமாக நடை பெற்ற ஜாட் சாதியினர் அதிகமாகவுள்ள பகுதியில் பேசியுள்ள அமித் ஷாவின் மேற்கூறிய பேச்சு அவர்கள் மத்தியில் மதவெறியைக் கிளப்பி நம் கவுரவத்தைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும்’’ என்பதேயாகும்.பாஜக தலைமை அமித் ஷாவின்பேச்சுக்கு வக்காலத்து வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அமித் ஷா வாக்களிப்பதன்மூலம்தான் பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று கூறி யிருக்கிறாராம். இவ் வாறு பாஜக தலைமை அவரது பேச்சுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறது. நரேந்திர மோடியும்கூட அமித் ஷாவுக்கு வக் காலத்து வாங்கியிருக்கிறார்.
சிறுபான்மையினருக்கு எதிராகவும் மற்றும் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும் இத் தகைய வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்து களத்தில் ஈடுபட்டுள்ள ஒட்டுமொத்த ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பிரச்சாரத்தின் ஒரு பகுதியேயாகும். ஆர்எஸ்எஸ் குழுக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை அளித்து வருகின்றன. அத்துண்டுப் பிரசுரங்களில், “நாட்டை கெடுநோக்குள்ள எதிரிகளிடமிருந்து காத்திட, இந்துக்களே வெளியே வந்து, 100 சதவீதம் வாக்களியுங்கள்,’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன.ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஓர் அங்க மாக இருக்கக்கூடிய விசுவ இந்து பரி சத் அமைப்பின் தலைவரான பிரவீன் தொகாடியா, இந்தத் தேர்தல் பிரச்சார வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார். குஜராத்தில் பவானகர் என்னுமிடத்தில் முஸ்லிம் வணிகர் ஒருவர் வீடு வாங்கியதற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில், “இந்த வீடு 48 மணிநேரத்திற்குள் காலி செய்யப்பட வேண் டும், இல்லாவிடில் இந்த வீட்டை இந்துக்கள் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்வார்கள்,’’ என்று பேசியிருக்கிறார். இந்துக்கள் வாழும் பகுதியில் வீடு வாங்கமுஸ்லிம்களுக்கு உரிமை இல்லை என்று தொகாடியா பேசியிருக்கிறார். தொகாடியாவின் இந்தப் பேச்சுக்கும் ஆர்எஸ்எஸ் வக்காலத்து வாங்கி யிருக்கிறது. தங்களுக்குக் கிடைத்த அவ ருடைய பேச்சின் வீடியோவில் அவர் அவ்வாறு கூறியதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறியிருக்கிறது. ஆயினும் தொகாடியா முஸ்லிம்களை மிரட்டியிருப்பது போலத்தான் தற்போதைய மோடியின் குஜராத் காணப்படுகிறது. அகமதாபாத்தில், வதோதரா மற்றும் சில நகரங்கள் பல அபார்ட்மெண்டுகளில் முஸ்லிம்கள் வீடுகள் வாங்க முடியாது. அவைஇந்துக்களுக்கு மட்டுமே விற்பனை செய்கின்றன. கடந்த பல ஆண்டு களாகவே முஸ்லிம்களைத் தனியே பிரித்து வைப்பது என்பது அங்கே நடைமுறையில் இருந்து வருகிறது.
இத்தகைய மதவெறிப் பிரச்சாரத் திற்குத் தலைமை தாங்குபவரே நரேந்திர மோடிதான். ஆயினும் அதனை மறைத்துக்கொண்டுதான் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி யைக் கொண்டு வருவேன் என்றும், வலுவான முறையில் அரசாங்கத்தை நடத்துவேன் என்றும் சரடு விட்டுக் கொண்டிருக்கிறார். ஆயினும், மக்கள் மீதுவெறுப்பை உமிழும் இத்தகைய மதவெறிப் பிரச்சாரத்தை மூடி மறைத்துவிட முடியாது. மோடியின் முன்னிலை யிலேயே, ராம்தாஸ் காதம் என்கிற சிவசேனையின் தலைவர் ஒருவர், மும்பை யில் ஏப்ரல் 21 அன்று நடந்த கூட்டம் ஒன்றில், மோசமாக நடந்துகொள்ளும் முஸ்லிம்கள் நரேந்திர மோடியால் உரிய படிப்பினையைக் கற்றுக்கொள்வார்கள் என்று பேசியிருக்கிறார். இந்த எடுத்துக்காட்டுகள் எல்லாம் நமக்குக் காட்டுவதென்ன? இவை ஏதோஒருசில தனிநபர்களின் கருத்துக்கள் அல்ல. மாறாக, பாஜக மற்றும் நரேந்திர மோடியின் அரசியல் மேடையின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாகும். இவ்வாறு பாஜக/ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் நாட்டுக் கும் நாட்டுமக்களுக்கும் முன்கூட்டியே மிரட்டல் விடுத்துள்ளன.
-தமிழில்: ச.வீரமணி



No comments: