Saturday, May 28, 2011

உணவுப் பாதுகாப்பு உதிர்கிறதா?



தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act) கொண்டுவரப்படும் என்று ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் அறி வித்து ஈராண்டுகள் ஓடிவிட்டன. குடியரசுத் தலைவர் 15ஆவது மக்களவைத் தேர்த லுக்குப்பின் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப் பினர்களின் கூட்டு அமர்வில் தன் முதல் உரையை நிகழ்த்துகையில், ‘தன்னுடைய அரசாங்கம்’ அடுத்த முதல் நூறு நாட்க ளுக்குள் அத்தகையதோர் சட்டத்தை நிறை வேற்றும் என்று அறிவித்திருந்தார். நம் நாட் டில் நிலவும் வறுமையின் கொடுமை குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த போதிலும், இத்தகையதோர் சட்டத்தை நிறை வேற்றுவதில் அரசுத்தரப்பில் தொடர்ந்து சாக்குப்போக்குகள் சொல்லப்படுகின்றன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள பொது நல மனு ஒன் றில் திட்டக் கமிஷன் தன்னையும் ஒரு பிரதி வாதியாக இணைத்துக் கொண்டு, ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. அதில், நகர்ப் புறத்தில் இருப்பவர்களுக்கு நாளொன்றுக்கு 20 ரூபாயும், கிராமப்புறத்தில் இருப்பவர் களுக்கு 15 ரூபாயும் அவர்களின் அத்தியா வசியத் தேவைகளுக்காக அளிக்கப்படுமா யின், அவர்களை வறுமையிலிருந்து அகற்றிட அது போதுமானது என்று குறிப்பிட்டிருக் கிறது. இதன் உட்பொருள் என்னவெனில், கொண்டுவரப்பட இருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிற தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் இதற்கு மேல் வருமானம் உடைய எவரும் வரமாட்டார்கள் என்பதாகும்.

திட்டக் கமிஷனின் அபிப்பிராயத்தின்படி, நகரங்களில் வாழ்பவர்களில் எவரேனும் மாதத்திற்கு 578 ரூபாய் வருமானம் உடைய வர்களாக இருந்தால், அவர்கள் ஏழைகள் என்று அதிகாரபூர்வமாகக் கருதப்பட மாட் டார்கள். அதன் அறிக்கையின்படி, இந்தத் தொகையில் அவர்கள் வாடகை மற்றும் பயணச் செலவிற்காக அளித்திடும் 31 ரூபாய், அவர்கள் கல்விக்காகச் செலவிடும் 18 ரூபாய், மருந்துகள் வாங்குவதற்காகச் செலவிடும் 25 ரூபாய், மற்றும் காய்கறிகளுக்காகச் செல விடும் 36.5 ரூபாயும் அடக்கம். ஏளனம் செய் கிறார்களா? அல்லது ஏமாற்றுகிறார்களா? உண்மையில், இரண்டையுமேதான் செய்கிறார்கள்.

திட்டக் கமிஷன் அளித்துள்ள மேற்படி புள்ளிவிவரங்களை, அது அளித்துள்ள மற் றொரு புள்ளி விவரத்திலிருந்தே எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஒருவர் உயிர்வாழ்வதற்கு நாள்தோறும் குறைந்தபட்சம் 2,400 கலோரி கள் உணவு உட்கொள்ள வேண்டும் என்று வரையறுத்திருக்கிறது. இதற்கு ஒவ்வொரு வரும் நாளொன்றுக்கு 44 ரூபாய் செலவிட வேண்டும். இந்தச் செலவினத்தில் அவர்க ளின் உறைவிடம், உடை, கல்வி, போக்குவரத் துச் செலவினங்கள் சேர்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

திட்டக் கமிஷன், தன்னுடைய ஆய்வின் அடிப்படையில், நம் மக்கள் தொகையில் வறுமை விகிதம் 33 விழுக்காடு என்று முடிவு செய்திருக்கிறது. தேசிய ஆலோசனைக் கவுன்சில் வறுமை விகிதம் 46 விழுக்காடு என்று பரிந்துரைத்தி ருக்கிறது. ‘‘நம் நாட்டின் மக்கள் தொகை யில் 77 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட வருமானம் இன்றி வாடிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்கிற அர்ஜுன் சென்குப்தா மதிப்பீட்டைவிட இவ்விரண்டு மதிப்பீடுகளுமே மிகவும் குறைவானவைகளாகும்.

இத்தகைய பாசாங்குத்தனமான வரை யறைகள் நம் நாட்டில் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்கிற அரசின் பொறுப்பை எள்ளிநகையாடுவதோடு மட்டுமல்லாமல், உண்மையில் அவை அர சாங்கம் மூர்க்கத்தனமாகப் பின்பற்றும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் உண்மையான நோக்கத்தினையும் மூடி மறைக்கின்றன. அதாவது இரு வேறு இந்தியர் களுக்கும் இடைவெளி மேலும் அதிகமாகி இருக்கிறது. நாட்டில் பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்ப ட் டிருக்கிறார்கள்.

இதேசமயத்தில், சென்ற வாரம் கூடிய மத்திய அமைச்சரவையானது நாட்டின் ஒட்டு மொத்த மக்கள்தொகையையும் அதன் பொரு ளாதாரம், சாதி மற்றும் மத அடிப்படைகளின் பின்னணியில் தேசிய அளவில் சர்வே செய்திட ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்தி யப் பதிவுத் தலைவர் அவர்களிடம், மக்களின் சாதி மற்றும் மதப் பின்னணி குறித்துக் கணக்கெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும் அதே சமயத்தில், கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்துடன் இணைந்து, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பினை மேற்கொள்ள ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக் குக் கீழ் உள்ளவர்கள் குறித்த கணக்கு சென்ற முறை 2002இல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தடவை இதில் நகர்ப்புறங்களும் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கிறது. நகர்ப்புறங் களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் களைக் கண்டறிய மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொள்ளுமாறு அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. அதாவது, முதலா வது காரணியாக இருப்பிடத்தையும், இரண்டா வது காரணியாக கல்வியின்மை, நீண்டகாலம் நீடித்திருக்கிற இயலாமை, குடும்பத்தலைவ ராகப் பெண் இருத்தல் முதலான சமூகப் பல வீனங்களையும் மூன்றாவது காரணியாக முறைசாராச் தொழில், நிரந்தரமற்ற தொழில், குறைந்த ஊதியம் உடைய தொழில் போன்ற வேலைவாய்ப்புக் குறைபாடுகளையும் எடுத் துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறது.

கிராமப்புறங்களில் வறுமையைக் கண்ட றியும் பணி வேறு விதத்தில் செய்யப்பட இருக் கிறது. கிராமப்புறங்களில் மக்கள்தொகை மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட இருக்கின் றன. (தொலைபேசி இணைப்புகள், குளிர் பதன சாதனங்கள் (சநகசபைநசயவடிசள), ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானம் உடையவர்கள் போன்ற) உயர் பணக்காரக் குடும்பங்கள் ஒதுக்கப்பட்டு விடும். புராதனப் பழங்குடி இனத்தைச் சேர்ந் தவர்கள், ஆதரவற்றவர்கள், மலம் சுமப்பவர் கள் போன்று அடிமட்டத்தில் உள்ளவர்கள் இயல்பாகவே இணைத்துக்கொள்ளப்படு வார்கள். இரண்டுக்கும் இடைப்பட்டவர் களைப் பொறுத்துத்தான் பிரச்சனை. இவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று கருதப்பட வேண்டுமானால் ஏழு வித மான இயலாமையைப் பெற்றிருக்க வேண் டும். இந்த ‘‘ஏழு விதமான இயலாமை’’ குறித்துத்தான் குறிப்பிடத்தக்க அளவில் குழப்பங்கள் இருந்து வருகின்றன.

நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய தகவல் களின்படி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள கணக்கிடும் முறையின்படி, ஓர் ஐந்துபேர் கொண்ட குடும்பம் ஒன்று, ஓராண் டிற்கு 27 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருமா னம் ஈட்டும் என்றால், அது தானாகவே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பப் பட்டியலிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது எனக் கருதப்படும். அதாவது மாதத் திற்கு 447 ரூபாய்க்கும் மேல் வருமானம் உடைய குடும்பம் ஏழைகளின் பட்டியலி லிருந்து நீக்கப்படப் போதுமானது. ‘கிராமப் புறங்களில் ஒரு நாளைக்கு 15 ரூபாய் வருமா னம் உடையவர் வறுமைக்கோட்டிற்கு மேல் வாழ்பவர் என்று மதிப்பிடப் போதுமானது’ என் கிற திட்டக் கமிஷனின் மதிப்பீட்டுடன் இது மிகச் சரியாக ஒத்துப்போகிறது.

இவ்வாறு, மத்திய அமைச்சரவையால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் குறித்து கொண்டுவரப்பட்டிருக்கும் கணக் கீடானது, திட்டக் கமிஷனால் முன்வைக்கப் படுகிற ஏளனத்திற்குரிய மோசடியான கணக் கீட்டையே மீளக் கூறுகிறது. மேலும் இத்த கைய மதிப்பீடு குறித்து எந்த மாநில அரசுக் கேனும் சந்தேகம் வந்தால், அது திட்டக்கமி ஷனுடன் கலந்து பேசி அதனைச் சரிசெய்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. இந்தக் கணக் குகள் அடிப்படையில்தான் மத்திய அரசு, மாநிலங்களுக்கு பொது விநியோக முறை யிலும், கொண்டுவரப்பட இருக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் உணவு தானி யங்களை ஒதுக்கீடு செய்ய இருக்கிறது. என வே, பொது விநியோக முறையின் கீழ் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உணவு தானியங் களை விநியோகிப்பதில் தற்போதுள்ள பிரச்ச னைகள் எதிர்காலத்திலும் தொடரும் என்பது மட்டுமல்ல, மாநில அரசுகளுக்கு மேலும் சிரமங்களைத் தந்திடும் என்பது தெளிவு.

நம் நாட்டில் உருப்படியான முறையில் உணவுப் பாதுகாப்பு எதுவும் ஏற்படுத்த முடியு மானால் அது, பொது விநியோக முறையை வலுப்படுத்தி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் (அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தாலும் சரி அல்லது வறுமைக் கோட்டுக்கு மேல் இருந்தாலும் சரி) மாதம் ஒன்றுக்கு 35 கிலோ கிராம் உணவு தானியங்களை கிலோ 2 ரூபாய் வீதம் அளிப் பதை உத்தரவாதம் செய்வதில்தான் இருக் கிறது. இதற்குப் பதிலாக, இவ்வாறு மோசடி யான கணக்குகளை மத்திய அரசு கூறுமா னால், அது மக்களை மோசடி செய்கிறது என் றே அர்த்தம். மேலும் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு அளிக்கக்கூடிய அள விற்கு நாட்டில் போதிய அளவிற்கு வளங்கள் இல்லை என்று ஒரு வாதம் முன் வைக்கப் படுகிறது. இதுவும் மோசடியான ஒன்றேயா கும். நாட்டில் நடைபெற்றுள்ள மற்றெல்லா ஊழல்களையும் விட்டுவிடுங்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள பணம் மட்டுமே நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஓர் அர்த்தமுள்ள உணவுப் பாதுகாப்பினை அளிப்பதற்குப் போதுமானதை விட அதிகமாகும்.

இவ்வாறு மிகப் பிரம்மாண்டமான முறை யில் ஆட்சியில் உள்ளவர்கள் கொள்ளை யடித்த பணத்தை மீண்டும் கைப்பற்றி, அவற் றை மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன் னேற்றுவதற்குப் பயன்படுத்தக்கூடிய வகை யில், வலுவான மக்கள் கிளர்ச்சிகள் நடத்தி, ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்திற்கு வலு வான நிர்ப்பந்தங்களை அளித்திட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

No comments: