புதுதில்லி, மே 8-
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பார்கள். தந்தை பெரியார் என்ன செய்து கிழித்து விட்டார் என்று கேட்பவர்கள் தமிழகத்தில் இன்றைக்கும் உண்டு. அவர்கள் வட மாநிலங்களுக்கு வந்து அங்கு தலித் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு எதிராக, கிராமப்புறங்களில் மட்டுமல்ல, பெருநகரங்களாக விளங்கக்கூடிய தில்லியிலேயே கூட தொடரும் தீண்டாமைக் கொடுமைகளைப் பார்த்தார்கள் என்றால்தான் தந்தை பெரியார் போன்றவர்கள் தீண்டாமைக்கு எதிராகத் தமிழகத்தில் மேற்கொண்ட இயக்கங்களின் அருமை புரியும்.
தமிழகத்தில் இன்றைக்கும் கிராமப்பகுதிகளில்தான் பல இடங்களில் தீண்டாமைக் கொடுமைகளைப் பார்க்க முடியும். நகர்ப்பகுதிகளில் வெளிப்படையாக அவ்வளவாகத் தெரியாது. ஆனால் தில்லி உட்பட வடநாட்டின் நகர்ப்பகுதிகளிலும் அவை மிகவும் கொடூரமாகத் தலைவிரித்தாடுகின்றன. சர்மா என்றும், யாதவ் என்றும் சாதியை மட்டும் பெயர்களில் குறிப்பிடும் பழக்கம் இன்றளவும் இங்கு உண்டு.
பகத்சிங் பிறந்த பஞ்சாப் மண்ணில் பிறந்த ஜஸ்பிரீத் சிங், ஒரு தலித் மாணவன். தான் ஒரு டாக்டராக வேண்டும் என்பதைவிடப் பெரிய ஆசை ஒன்றும் அவனுக்குக் கிடையாது. ஜஸ்பிரீத் சிங் சண்டிகாரில் உள்ள அரசினர் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தான். நான்காண்டுகள் படிப்பை முடித்து இறுதி ஆண்டு வரை வந்துவிட்டான். அதுவரை எந்தப் பாடப்பிரிவிலும் அவன் தவறியதே கிடையாது. நன்கு மதிப்பெண்கள் எடுத்து சிறந்த மாணவனாக முன்னேறி வந்தான். ஆயினும். இறுதியாண்டு வரும்போதுதான் மிகவும் கொடூரமான முறையில் பழிவாங்கப்பட்டான்.
அவனது துறைத் தலைவர் அவனிடம் ’’நீ உன் சாதிச் சான்றிதழை வைத்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்திருக்கலாம். ஆனாலும் டாக்டர் பட்டம் பெற்று உன்னை வெளியேற நான் விட மாட்டேன்.’’ என்று கூறினார். மருத்துவப் படிப்பில் மிகவும் முக்கிய பாடப்பிரிவான ‘கம்யூனிடி மெடிசன்’ என்னும் பாடப்பிரிவில் அவனை ‘பெயில்’ ஆக்கினார். அதன்பின் தான் ‘பாஸ்’ ஆகி வெளியேற முடியாது என்று தெரிந்து கொண்ட ஜஸ்பிரீத் சிங் தற்கொலை செய்து கொண்டான்.
இவ்விவரங்களை அவன் தன்னுடைய தற்கொலைக்கான காரணங்கள் குறித்து எழுதி வைத்துள்ள குறிப்பில் தெரிவித்திருக்கிறான். பின்னர் ஜஸ்பிரீத் சிங்கின் நண்பர்கள் இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, ஜஸ்பிரீத் சிங்கின் விடைத்தாள்களை மறு ஆய்வு செய்திட வைத்துள்ளனர். இதமைன மறு ஆய்வு செய்த ‘கம்யூனிடி மெடிசன்’ பாடப் பிரிவைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்கள், ஜஸ்பிரீத் சிங் மிக நன்றாகத் தேர்வு எழுதியிருப்பதைப் பார்த்து, அவனுக்கு ‘பாஸ்’ மார்க் வழங்கியுள்ளார்கள். ஆயினும் இன்றைய தினம் வரை இவ்வாறு ஜஸ்பிரீத் சிங் சாவுக்குக் காரணமான துறைத் தலைவர் மீதோ அல்லது அந்த நிர்வாகத்தின் மீதோ எந்த நடவடிக்கையும் அரசுத்தரப்பில் எடுக்கப்படவில்லை.
ஜஸ்பிரித் சிங்கின் சகோதரியும் தன் சகோதரனுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைத் தாங்கிக் கொள்ளாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதேபோன்று, பால் முகுந்த் என்னும் மாணவன் புதுதில்லி, எய்ம்ஸ் எனப்படும் ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தான். அவனும் தற்கொலை செய்து கொண்டான். பால் முகுந்ந் தற்கொலைக் குறிப்பு எதுவும் வைக்க வில்லை என்றபோதிலும், அவனது பெற்றோர், தன்னை ஆசிரியர்கள் சாதியைச் சொல்லி வேதனைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்றும், தான் டாக்டரானபின் இவர்களின் துன்புறுத்தல்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவேன் என்றும் கூறிக்கொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்.
‘இன்சைட் ஃபவுண்டேஷன்’ என்னும் தலித் மாணவர்கள் ஆய்வுக் குழு ஒன்று சமீபத்தில் புலனாய்வு மேற்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தலித் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 18 பேர் இவ்வாறு தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று கூறியிருக்கிறது.
தாங்கள் ஆய்வு செய்தபோது இறந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் பேட்டி கண்டு அவற்றை, ‘யு ட்யூப்’ இணைய தளத்தில் வெளியிட்டிருக்கின்றனர். ‘‘தகுதியின் மரணம்’’ (The death of Merit) என்னும் பெயரை தேடுபொறியில் தட்டச்சு செய்தால் இப்பேட்டிகளைக் காணலாம்.
(ச.வீரமணி)
2 comments:
பெரியாரின் மன்னிலே சாதிக் கொடுமை
இன்னும் ஆட்டம்போடும்போது ,வடமாநலங்களில் சாதிக்கொடுமை ருத்ரதாண்டவமே ஆடாமலா இருக்கும்.
வலிப்போக்கனின் கேள்வியை மறுமொழிவதை தவிர வேறு ஒன்றும் புதிதாக சொல்வதற்கில்லை.
Post a Comment