Thursday, April 7, 2011
ஊழல் பேர்வழிகளைத் தோற்கடிப்பீர்
இந்த இதழ் வாசகர்களின் கைகளை அடையும் சமயத்தில், அநேகமாக நாட்டில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் நெருங்கிக் கொண்டிருக்கும். அஸ்ஸாமில் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கும்.
மிகப் பெரும்பாலோரால் எதிர்பார்க்கப்பட்டபடி, ஒவ்வொரு மாநிலத்தின் பிரத்யேக பிரச்சனைகளுடன், ஆட்சியாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ள ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சாரத்தில் பிரதானமாக இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணி காங்கிரசின் உதவியை முழுமையாகப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற அன்பளிப்புத் திட்டங்கள் (உண்மையில் 50 விழுக்காட்டுக் குடும்பத்தினருக்குக் கூட இவை போய்ச் சேரவில்லை) திமுக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒவ்வொரு குடும்பத்தினரின் விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது. தமிழ் நாட்டு அளவில் நடைபெற்றுள்ள பல்வேறு ஊழல்களுடன், ஊழல்களில் அரசியாகத் திகழும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலானது, உயர் மட்ட அளவில் நடைபெறும் ஊழல்களை மையக் கருவாகக் கொண்டு வந்திருக்கிறது.
ஆயினும், ஊழல் என்பது தமிழ்நாட்டோடு மட்டும் சுருங்கிவிடவில்லை. சமீப காலத்தில் வெளிப்பட்டுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஸ் வீட்டுவசதி சங்க ஊழல், ஆன்ட்ரிக்ஸ்-ஐஎஸ்ஆர்ஓ ஊழல், வாக்காளர்களுக்குப் பணம் தருதல், சட்டவிரோதமாகக் கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்ற ஊழல் போன்று அடுக்கடுக்காக நடைபெற்ற பல்வேறு ஊழல்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ-2 அரசாங்கத்தை உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழல் பேர் வழிகளுக்குப் பாதுகாப்பு அளித்திடும் ஒன்றாகக் குறைத்து விட்டது. இவர்களின் கேவலமான செயல்பாடுகள் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையைத் தான் நமக்கு நினைவு படுத்துகின்றன. ஆயினும், தற்போதைய சூழ்நிலைக்கும் அக்கதைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. அலிபாபா இல்லாத நிலையில் 40 திருடர்களும் வெறித்தனமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு ஊழல் பேர்வழிகள் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்ததன் மூலம் பெரும்பான்மை மக்களுக்குப் போய்ச்சேரவேண்டிய நலத்திட்டங்கள் பலவற்றை முடக்கியது மட்டுமல்லாமல், இப்போது தேர்தல் சமயத்தில் அவ்வாறு தாங்கள் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு அதே மக்களுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களது வாக்குகளை வாங்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தக் கேவலமான செயல் தமிழ்நாட்டில் கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக மத்திய டெலிகாம் துறையின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் தலைவர்களில் ஒருவருமான ஆ.ராசா தற்சமயம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு திமுக தலைவரும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருமான மு.க. அழகிரி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றிருக்கிறார். தேர்தல் வெற்றிக்கு பணபலத்தைப் பயன்படுத்துவதில் பேர்போன இவர், எங்கே தான் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுவிடுவோமோ என்ற ஐயுறவுக்கு ஆட்பட்டிருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களிலும் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்று சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, பல கோடி ரூபாய்கள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. உண்மையில், தேர்தல் ஆணையமானது, காவல்துறை வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் அதனைத் தடுத்து நிறுத்திட உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. சமீபத்தில், ஒரு தனியார் ஆம்னி பஸ்ஸில் பல கோடி ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டதைக் கைப்பற்றி இருக்கிறார்கள். நம்பிக்கை இழந்த நிலையில் உள்ள திமுக தேர்தல் வெற்றியை எந்த வகையிலாவது வாங்கிட வேண்டும் என்பதற்காக அனைத்துவிதமான வேலைகளிலும் வெறித்தனமாக இறங்கி யிருக்கிறது.
இவ்வாறு ஊழல் என்பது நம் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பிற்கே கடும் பாதிப்பைக் கொண்டுவந்திருக்கிறது. மக்கள் தாங்கள்அளிக்கும் வாக்குக்குப் பணம் கொடுப்பதன் மூலம், ஊழல் வாக்காளர்களாக மாற்றுவதன் மூலம் அவர்கள் ஜனநாயகபூர்வமாகத் தங்கள் வேட்பாளரைத் தேர்வு செய்யும் வாய்ப்பைச் சீர்குலைக்கிறார்கள். நாட்டின் உயர் மட்ட அளவில் ஊழலுக்குத் துணை போகிறவர்கள் திமுக-வினர் மட்டுமல்ல, காங்கிஸ் கட்சியினரும்தான் ஆவார்கள். எனவே இவ்விரு கட்சியினருமே நடைபெற விருக்கும் தேர்தல்களில் ஓரங்கட்டப்பட வேண்டியவர் களாவர்.
மேலும் இதில் ஒரு முக்கிய அம்சம் அடங்கியிருக்கிறது. இவ்வாறு உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழலை ஒரு நாடு எப்படித் தடுத்திட முடியும்? ஊழலைத் தடுப்பது என்பது ஓர் அறநெறிப் பிரச்சனை மட்டுமல்ல. இது மாபெரும் ஒழுக்கக்கேடு என்பது உண்மைதான். இவ்வாறு கேவலமாக சேர்க்கப்பட்ட செல்வமும், சட்டவிரோதமான கறுப்புப் பணமும் வெளிநாடுகளில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைக் கைப்பற்றி நம் நாட்டு மக்களுக்குத் தரமான வாழ்க்கையைத் தரக்கூடிய வகையில் செலவிட வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் கொள்ளையிடப்பட்ட தொகை மட்டுமே நம் நாட்டில் (வறுமைக் கோட்டிற்குக் கீழும், வறுமைக் கோட்டிற்கு மேலும் உள்ள அனைத்துக்) குடும்பங்களுக்கும் இரு ஆண்டுகளுக்கு முழுமையாக உணவுப் பாதுகாப்பினை அளித்திடப் போதுமானவை என்பதை இப்பகுதியில் பலமுறை நாம் குறிப்பிட்டிருக்கிறோம். அல்லது, இந்தத் தொகையை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு செலவளித்திட முடியும் என்றும் எழுதியிருக்கிறோம். கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்திட ஒவ்வோராண்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய் வீதம் ஐந்தாண்டுகளுக்கு, நாடு முழுதும் புதிய பள்ளிகளைக் கட்டுவதற்காகவும், புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்காகவும், மதிய உணவுத் திட்டத்திற்காகவும் செலவு செய்திட வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் இவ்வாறு மாபெரும் அளவில் ஊழல்கள் புரிந்ததன் காரணமாக, இவையனைத்தும் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.
ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், ஊழல் புரிவதற்கு இதற்கு முன்னெப்போதும் இல்லாத பல்வேறு வழிகளை, ‘சட்டவிரோத முதலாளித்துவத்தின்’ (`crony capitalism) மூலமாக வகுத்துத் தந்திருக்கிறது. மக்கள் அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் தரமான வாழ்க்கைத் தரத்தை அளிக்கக்கூடிய விதத்தில் வளங்கள் நிறைந்த நாடுதான் நம் நாடு. ஆயினும், சாமானிய மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிக்க முடியாத வகையில் ஆட்சியாளர்களின் ஊழல்கள் இந்த வளங்கள் அனைத்தையும் கொள்ளை கொண்டுவிட்டது. ஆட்சியாளர்களின் லஞ்ச லாவண்யங்கள், நாடு தன்னிடம் உள்ள அபரிமிதமான சக்தியைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு முடக்கிவிட்டது.
நம்முடைய அமைப்பில் புரையோடிப் போயுள்ள இந்தக் கேடுகெட்ட நிலைமையை எப்படிச் சரி செய்வது என்கிற முக்கியமான கேள்வியை நம்முன் கொண்டு வந்திருக்கிறது. நாற்பது திருடர்களின் கொட்டத்தை அடக்கக்கூடிய விதத்தில் அலிபாபா என்னும் நிர்வாக எந்திரத்தை உருவாக்கிட வேண்டியிருக்கிறது. மக்களுக்குப் பதில் சொல்லும் கடப்பாட்டிலிருந்து அரசாங்கமும் ஆட்சியாளர்களும் தப்பிவிடக் கூடாது. ஊழலில் திளைக்கும் இழிபிறவிகளுக்கு அதற்கான தண்டனைகளை அளிக்காமல் தப்ப விடக்கூடாது. மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் இந்த மனோபாவத்தையே சமூக ஆர்வலர்களில் ஒரு பிரிவினர் லஞ்ச ஊழலுக்கு எதிராகத் தற்போது நடத்தி வரும் கிளர்ச்சிகள் பிரதிபலிக்கின்றன. அத்தகையதோர் நிர்வாக எந்திரமான லோக்பால் குறித்த உள்ளடக்கம் தொடர்பான விவாதங்கள் இதுவரை வெளியாகியுள்ள அனைத்து ஊழல்கள் குறித்த குற்றப் பொறுப்புக்களையும் விசாரிக்காமல் விட்டுவிடக் கூடாது. இவ்வாறு நடைபெற்றுள்ள ஊழல்களின் மூலம் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பத்திரப்படுத்தப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மீளவும் இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளிலிருந்து திசைதிருப்பக் கூடிய வகையில் இது அமைந்துவிடக் கூடாது. லஞ்ச ஊழல்கள் மூலம் கொள்ளையடித்த வர்களையும், வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைப் பத்திரப்படுத்தியுள்ளவர்களையும் கடுமையாகத் தண்டித்திட வேண்டும் என்று தனியே கூறத் தேவையில்லை. வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் லோக்பால் சட்டமுன்வடிவை நிறைவேற்றிட வேண்டும். அதற்கு முன்னதாக அது தொடர்பாக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மிகவும் முக்கியமாக மக்கள் மத்தியில் விரிவான வகையில் ஒரு பொருள்பதிந்த விவாதம் நடத்தப்பட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
போங்க பாஸ் ! நமக்கு நிறைய வேளை இருக்குதுங்க ...........
Post a Comment