Sunday, April 17, 2011

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைக் கேலி செய்வதை அனுமதிக்க முடியாதுஅண்ணா ஹசாரே உண்ணாவிரதம் மற்றும் லோக்பால் சட்ட முன்வடிவு ஆகியவை தொடர்பாக ஐமுகூ-2 அரசாங்கத்திற்கு இருந்து வந்த முட்டுக்கட்டை கடைசியாக நீங்கி விட்டதுபோல் ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. லோக்பால் வரைவுச் சட்ட முன்வடிவை ஏற்படுத்துவதற்காக, கூட்டுக் குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எது எப்படி இருந்தபோதிலும், சமீப காலங்களில் மாபெரும் மெகா ஊழல்கள் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், ஊழலுக்கு எதிராக ஒரு வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இவை ஏற்படுத்தியுள்ளன.

லோக்பால் சட்டத்திற்கான கருத்தாக்கம் 1969இல் மறைந்த மொரார்ஜி தேசாய் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் குழுவால் பரிந்துரைக்கப் பட்டது. மாநிலங்கள் அளவில் லோகாயுக்தா நிறுவனங்களுடன் இது இணைக்கப்படுவதாக இருந்தது. ஆயினும், பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புகள் வந்த நிலையில் இச்சட்டமுன்வடிவானது மிக நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

1996இல் தேவகவுடா தலைமையில் மத்தியில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைந்த சமயத்தில் இடதுசாரிக் கட்சிகள் அதனை ஆதரிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை முன்வைத்தன. இதற்கான ஒரு சட்டமுன்வடிவும் உருவாக்கப்பட்டது. ஆனால் அது பல அம்சங்களில் முழுமையாக அமையாமல் இருந்தது. மிகவும் ஆட்சேபத்திற்குரிய அம்சம், இதன் அதிகார வரம்பெல்லைக்குள் பிரதமரின் அலுவலகத் தையும் சேர்க்காமல் இருந்ததாகும். பிரதமரின் அலுவலகத்தையும் சேர்த்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆயினும், அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கங்களின் ஸ்திரமற்ற தன்மைகளின் காரணமாக, இந்தச் சட்டமுன்வடிவானது வெளிச்சத்திற்கு வரவேயில்லை. பின்னால் ஆறாண்டு காலம் ஆட்சியில் அமர்ந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமும் இதன்மீது நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு, லஞ்ச ஊழலுக்கு எதிரான சட்டமுன்வடிவைக் கொண்டு வராமல் நாட்டு மக்களுக்குத் துரோகம் இழைத்தது.
மீண்டும் ஒருமுறை இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக, ‘‘லோக்பால் சட்டமுன்வடிவு சட்டமாக நிறைவேற்றப்படும்’’ என்ற உறுதிமொழி, 2004இல் ஐமுகூ-1 அரசாங்கத்திற்கான குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பின்னர், ஒரு சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்டு, நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, அதன் பரிந்துரைகளுடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு முன் வைக்கப்பட்டது. ஆயினும் இதுவும் கூட திருப்திகரமாக அமைந்திடவில்லை. ஒரு பொருள்பொதிந்த சட்டமாக இதனை மாற்றக்கூடிய விதத்தில் பல முக்கியமான ஷரத்துக்களைச் சேர்க்க வேண்டிய தேவை இருந்தது. அதே சமயத்தில், பல சமூக ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு ஜன் லோக்பால் சட்டமுன்வடிவு என்கிற ஒரு வரைவினை உருவாக்கினார்கள். அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு இவ்வரைவுதான் அடிப்படையாக அமைந்திருந்தது. இப்போது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் வரைவுக் குழுவானது இவ்விரு சட்டமுன்வடிவுகளின் வரைவுகளையும் நிச்சயமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அதே சமயத்தில், குறைந்தபட்சம் சமீப காலத்தில் முன்வந்துள்ள இரு முக்கிய அம்சங்கள் குறித்து பரிசீலனை செய்திட வேண்டியதும் அவசியமாகும்.

நாட்டின் சட்டங்களை உருவாக்கும் இடமான நாடாளுமன்றத்திற்குள் தாங்கள் ஏன் நுழையவில்லை என்று அண்ணா ஹசாரேயிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர், மக்களை மிகவும் கேலி செய்யும் விதத்தில் மிகவும் மோசமான விதத்தில் பதிலளித்திருக்கிறார். அதாவது, தான் ‘‘எந்தக்காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’’ என்றும், தான் ‘‘போட்டியிட்டால், ஜாமீன்தொகையை இழந்துவிடுவேன்’’ என்றும், ஏனெனில், ‘‘சாதாரண வாக்காளர்கள் விழிப்புணர்வு இல்லாதவர்கள்’’ என்றும், ‘‘அவர்கள், வேட்பாளர்கள் அளித்திடும் நூறு ரூபாயையோ அல்லது ஒரு பாட்டில் மதுவையோ அல்லது ஒரு புடiவையோ பெற்றுக்கொண்டு தங்கள் வாக்குரிமையை அவர்களுக்கு அளித்துவிடுவார்கள்’’ என்றும் கூறி சாமானிய மக்களை அவமதித்திருக்கிறார். வாக்காளர்கள் மீதான இத்தகைய ஏளனமான வசவுகள் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புமுறையை அவர் அவமதித்திருப்பதானது உண்மையில் கவலையளிக்கக்கூடிய ஒன்றாகும்.

நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்புக்கு ஆபத்து ஏற்பட்ட சமயங்களில் எல்லாம், இதே வாக்காளர்கள்தான் அவற்றை உயர்த்திப்பிடித்து, நவீன இந்தியாவின் மாண்பினைக் கண்ணின் கருவிழியைக் காப்பதுபோல் காத்து நின்றிருக்கிறார்கள். இந்திராகாந்தியின் அவசரகால ஆட்சியைத் தோற்கடித்து, நாட்டில் ஜனநாயகத்தை வீறார்வத்துடன் மீண்டும் நிறுவியது இதே வாக்காளர்கள்தான். மக்கள் மத்தியில் உள்ள இத்தகைய ஜனநாயக உணர்வானது
இந்தியாவின் எதார்த்த நிலைமைகளுடன் பின்னிப்பிணைந்ததாக இப்போது மாறியிருக்கிறது. இவ்வாறான ஜனநாயக அமைப்புமுறைதான் நாட்டில் சமூக ஆர்வலர்கள் செயல்படுவதற்கும், இவ்வாறு உண்ணாவிரதங்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்புகளை அளித்திருக்கிறது.
நமது நாட்டில் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட சமயத்தில், 2004இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடித்ததன் மூலம் அவர்களால் படாடோபமாக அறிவிக்கப்பட்ட ‘‘ஒளிரும் இந்தியா’’ என்கிற கருத்தாக்கத்தை இதே வாக்காளர்கள் தரைமட்டமாக்கி, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்கள். இத்தகைய வாக்காளர்கள் இன்றி, இன்றைய இந்தியா நிச்சயமாகக் கிடையாது. இவர்கள்தான் நாட்டில் மகத்தான போராட்டங்களும் உண்ணா விரதங்களும் நடைபெறுவதற்கு உந்துசக்தியாக இருந்து வருகிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற நீண்ட நெடிய விவாதங்களின்போது, நவீன இந்தியாவின் மூலவர்கள் இந்தியாவானது வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவோர் மூலம் ஆளப்பட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதன்மூலம் அவர்கள் ‘‘ஒரு நபர் - ஒருவாக்கு, ஒரு வாக்கு - ஒரு மதிப்பு’’ என்னும் விதியை உருவாக்கினார்கள் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். அரசியலமைப்புச் சட்டம், மக்கள் விருப்பத்தின் மையக்கருவாகவே அமைந்திருக்கிறது. இதனை அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை, ‘‘இந்திய மக்களாகிய, நாம்,...’’ என்று தொடங்கி, ‘‘இதன்மூலம் நாமே இயற்றி, சட்டமாக்கி, நமக்கு நாமே அளித்துக்கொண்டுள்ள அரசியலமைப்புச் சட்டம்’’ என்று மிகவும் செம்மாந்து வரையறுத்துள்ளது. இதன்மூலம் பிரகடனப் படுத்தப்படும் முக்கியமான செய்தி என்ன வெனில், நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்திற்கும் மேலானவர்கள், முதன்மையானவர்கள் மக்கள்தான் என்பதேயாகும். இத்தகைய மக்களை ஏளனமாகக் குறிப்பதும், அவமதிப்பதும் நம் அரசியலமைப்புச் சட்டத்தையே கீழறுக்கும் அபாயங்களுக்கு இட்டுச்செல்லும். இதனை அனுமதித்திட முடியாது.

அண்ணா ஹசாரே இவ்வாறு மக்களை மட்டமாகக் கருதி கருத்துக்கூறியுள்ள அதே சமயத்தில், மத்திய மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சரோ லோக்பால் சட்டமுன்வடிவிற்கு எதிராக அதற்கிணையாக ஏளனமான கருத்து ஒன்றினை உதிர்த்திருக்கிறார். ‘‘ஓர் ஏழைக் குழந்தை கல்விக்காக எவ்விதமான வசதியும் இல்லாதிருந்தால், பின் அதற்கு லோக்பால் சட்டமுன்வடிவு எவ்விதத்தில் உதவிடும்?’’ என்று கேட்டிருக்கிறார்.
உதாரணத்திற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்துக் கொள்வோம். மத்திய தலைமைத் தணிக்கைத்துறைத் தலைவர் (சிஏஜி) மதிப்பிட்டுள்ள 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்தால் வசூலிக்கப்பட்டிருந்தால், நம் நாட்டில் 6 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்கக்கூடிய விதத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி இருக்க முடியும். உண்மையில், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டத்தின் குறிக்கோள் இதுதான். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் மத்திய மாநில அரசுகள் இதனை நிறைவேற்ற தங்களிடம் போதுமான வாய்ப்பு வசதிகள் இல்லையென்று கூறிவருவதால் இது எவ்வித அசைவுமின்றி நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே வெறும் தாளாகவே இன்னமும் இருந்து வருகிறது.

கல்விக்கான திட்டம் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய நிலையம், நம் நாட்டில் தேவையான பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கும், ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கும், மதிய உணவு, பாடப் புத்தகங்கள், சீருடைகள் போன்றவை வழங்குவதற்கும் ஓராண்டிற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் என்ற விதத்தில் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்குச் செலவிட வேண்டி யிருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது. அதாவது ஐந்தாண்டுக் காலத்திற்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று குறிப்பிட்டிருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தடுத்தி நிறுத்தியிருந்தோமானால், நம் நாட்டில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளையும் பள்ளிக்கு அனுப்பி அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்திருக்க முடியும். நம் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை சிறந்த முறையில் ஏற்படுத்த முடியாத வண்ணம் நாட்டில் நடைபெற்றுள்ள மெகா ஊழல்கள் அவர்களின் வாழ்க்கையையே கொள்ளை கொண்டு விட்டன.

இதேபோன்றுதான், தேசிய ஆலோசனைக் கவுன்சில், நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் - வறுமைக்கோட்டுக்குக் கீழ்/வறுமைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்துக் குடும்பத்தினருக்கும் - மாதத்திற்கு 35 கிலோ உணவு தான்யங்களை கிலோ ஒன்றிற்கு 3 ரூபாய் வீதம் அளித்திட வேண்டுமானால் அரசுக்குக் ஓராண்டிற்குக் கூடுதலாக 88 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறது. (காங்கிரஸ் கட்சியானது சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல்களையொட்டி, உணவு தான்யங்களை கிலோ ஒரு ரூபாய் என்ற வீதத்தில் அளிப்போம் என்று வாக்குறுதி அளித்திருப்பது வேறு விஷயம்.) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தடுத்து நிறுத்தப் பட்டிருக்குமாயின், அரசுக்கு வரவேண்டிய 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படாமல் சரிசெய்யப்பட்டிருக்குமாயின், பின்னர் அடுத்த ஈராண்டுகளுக்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தி இருக்க முடியும். இவ்வாறு ஊழல்கள் நடைபெறாதவாறு தடுக்கப்பட்டிருந்தால் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கியிருக்க முடியும்.
ஆயினும், லோக்பால் சட்டமுன்வடிவிற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழு தன் வரைவை நாடாளுமன்றத்தில் பரிசீலனைக்காகத் தாக்கல் செய்யும் வரை நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சட்டங்களை உருவாக்கும் இடம் நாடாளுமன்றம்தான். நாடாளுமன்றத்தில் மட்டுமே அவற்றை நிறைவேற்ற முடியும். லஞ்ச ஊழல்களை அனைத்து முனைகளிலும் தடுக்கக்கூடிய விதத்தில் ஒரு வலுவான மற்றும் வெளிப்படையான சட்டத்தை நிறைவேற்றிட இடதுசாரிக் கட்சிகள் உறுதிபூண்டிருக்கிறது.

(தமிழில்: ச. வீரமணி)

1 comment:

vignaani said...

We drag the name of BJP in such contexts without fail: True, they did not do anything to bring the Bill to the Parliament. But, in the same breath, did the Left government in West Bengal in its 37 years bring any legislation comparable to the Lok Ayuktha of Karnataka? Or, did the left calitions in Kerala in any of its three 5-year stints since. Of course, we do have all respect to Comrade Achytanandan for his crusade on corruption, not sparing Karunakaran, Balakrishna Pillai or even Comrade Pinaraye Vijayan.