Saturday, June 6, 2009

குடியரசுத் தலைவர் உரை மீது சீத்தாராம் யெச்சூரி




புதுடில்லி, ஜூன் 6

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அப்போது அவர் கூறியதாவது:
‘‘குடியரசுத் தலைவர் தன் உரையில் மேற்கு வங்கத்தில் ‘அயிலா’ புயலால் அங்குள்ள மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான பாதிப்புகள்
குறித்து குறிப்பிட்டிருக்கிறார். ‘மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்திடும்’ என்று கூறியிருக்கிறார்.
ஜூன் 4ஆம் தேதிய விவரங்களின்படி அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 67.5 லட்சம். இறந்தோர் எண்ணிக்கை 137 ஆக உ யர்ந்துள்ளது. முழுவதும் மற்றும் பகுதி சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பயிரின் அளவு 2.8 லட்சம் ஏக்கர்களைத் தாண்டும். பாதிக்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாகும். உண்மையில் இது ஒரு தேசியப் பேரிடராகும். தற்சமயம் 4.38 லட்சம் மக்கள் 782 நிவாரண முகாம்களில் இருத்தி வைக்கப்பட்டுள்ளனர். 409 கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டுள்ளன. சேதத்தின் அளவு மற்றும் திடீரென்று இந்நிகழ்வு ஏற்பட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு மத்திய அரசு இதனை ஒரு தேசியப் பேரிடராக அறிவித்திட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு மாநில அரசுகளிடமிருந்து சர்சார்ஜ் வசூலிக்கும் பழக்கம் உண்டு. இப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க பயன்படுத்தப்பட்டுள்ள ராணுவ உதவிகளுக்கு அவ்வாறு சர்சார்ஜ் வசூலிப்பதையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக இப்பிரச்சனையை அரசியலாக்கும் போக்கு இருக்கிறது. மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள ஒருவரை சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாக ஆளும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து இத்தாக்குதல் வந்துள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளை அரசியலாக்குவதற்கு இது தருணம் அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்சனையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்ததாக, குடியரசுத் தலைவர் அவர்கள் தேர்தல்கள் என்பது ஜனநாயகத் திருவிழா என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் தங்களை யார் ஆள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திடும் விழா. ஆயினும் நாடு சுதந்திரம் அடைந்தபின் அமைந்த எந்த ஒரு அரசும், வாக்களித்த மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களிடமிருந்து ஆதரவினைப் பெற்றதாகக் கூற முடியாது. ஆம், ராஜிவ்காந்தி ஒருவர் மட்டுமே 48 சதவீத மக்களின் ஆதரவினைப் பெற்று பிரதமராக வந்தார். வேறெவரும் அந்த அளவிற்குக்கூட பெறவில்லை.
ஜனநாயகம் குறித்து நாம் பேசும்போது, பெரும்பான்மையோரின் ஆட்சி என்று நாம் கூறும்போது, இப்பிரச்சனையையும் நாம் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இதுகுறித்து நீங்கள் ஆழமாகப் பரிசீலிக்க முன்வந்தீர்களானால், ஒரு பகுதி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைப்படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
அடுத்ததாக, நாம் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் நம் அரசியலமைப்புச் சட்டம். தற்போது நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள், சட்டங்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாம்,
மத்திய மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்புகளாகவும் செயல்படுகின்றன. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் செயல்பட்டால்தான் சம்பந்தப்பட்ட அரசுகளின் மீது கண்காணிப்பினைச் செலுத்திட முடியும். சென்ற ஆண்டு நாடாளுமன்றம் வெறும் 46 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில் என்ன கண்காணிப்பை அரசு மீது செலுத்திட முடியும்?
எனவே, குறைந்தபட்சம் இத்தனை நாட்களாவது நாடாளுமன்றம் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்யக்கூடிய வகையில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். பல குழுக்கள், நாடாளுமன்றம் குறைந்தபட்சம் ஓராண்டில் 100 நாட்களாவது நடைபெற வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கின்றன. ஆனால் இதனை இதுநாள்வரை அமல்படுத்தப்பட முடியவில்லை., எனவே மேலே கூறியவாறு ஓராண்டில் 100 நாட்களாவது நாடாளுமன்றம் கூடுவதைக் கட்டாயப்படுத்தக்கூடிய வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
அடுத்ததாக, நீதித்துறை சீர்திருத்தம். இது இன்றைக்கு மிகவும் அவசியம். இந்தியாவில் உள்ள 21 உயர்நீதிமன்றங்களிலும் 30 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் 263 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் 3 லட்சம் விசாரணைக்கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாம் ஒரு ஜனநாயக அமைப்பைப் பெற்றிருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமே இல்லை.
எனவே நிலைமையைச் சரிசெய்திட தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
அடுத்ததாக, குடியரசுத் தலைவர் அவர்கள் கல்வி குறித்தும் அதன் விரிவாக்கம் குறித்தும் அதன் தரம் குறித்தும் உரை நிகழ்த்தியிருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் தரம், எண்ணிக்கை மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற முறையில் கூறியிருக்கிறார்கள். இதனை ஈடேற்ற வேண்டுமானால் அதற்கு வேண்டிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு தேவை. ஆனால் சென்ற முறை அரசு தான் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் உறுதிமொழி அளித்திருந்தபடி கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்திடவில்லை. அதேபோன்று இப்போதும் அரசு செய்திடக் கூடாது. குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதமும், பொது சுகாதாரத்திற்கு 3 சதவீதமும் ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(ச. வீரமணி)

No comments: