Sunday, June 7, 2009

குடியரசுத் தலைவர் உரை:தின்பண்டத்தின் ருசி சாப்பிடும்போது தெரிந்துவிடும்




திர்பார்த்ததைப் போலவே, பதினைந்தாவது மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து, நடைபெற்றுள்ள நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர், ஐமுகூ அரசாங்கம் வரவிருக்கும் காலங்களில் செய்ய இருப்பதாகக் கூறியிருக்கும் படாடோபமான உறுதிமொழிகளைப் பட்டியலிட்டிருக்கிறார். இப்போது கூறப்பட்டிருக்கும் திட்டங்களில் பல, முந்தைய அரசாங்கத்தால் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டவைகள்தான். இப்போது ஆட்சிபீடத்தில் ஏறி இருக்கும் அரசாங்கம் சென்ற ஐந்தாண்டு காலத்தில் தாங்கள் கூறியிருந்த உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றைச் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்வது போலவே குடியரசுத் தலைவர் உரை அமைந்திருக்கிறது. சென்ற அரசு டமாரம் அடித்துக்கொள்ளும் தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம், பாரத் நிர்மான் போன்ற திட்டங்கள் தங்கள் இலக்கினை எய்திடவில்லை என்பதிலிருந்து இது உறுதிப்படுத்தப்படுகிறது. உதாரணமாக, தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கப்பட வேண்டும். ஆனால் 48 நாட்கள்தான் வேலை அளிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் வேலைக்காகப் பதிவு செய்துள்ள 10 கோடி பேரில் சுமார் 50 சதவீதத்தினருக்குத்தான் வேலை அளித்திருக்கிறார்கள். அதேபோன்று, கிராமப்புறங்களுக்கு மின்சாரம் அளிப்பதற்கான இலக்கிலும் 27 சதவீத அளவிற்குத்தான் வேலைகள் நடந்திருக்கின்றன. விவசாயத் துறையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது தொடர்பாக குடியரசுத் தலைவர் பெரிய அளவிற்குப் பேசியிருக்கிறார். ஆயினும் பாசன விரிவாக்கத் திட்ட இலக்கில் 56 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உலகப் பொருளாதார மந்தத்தின் பாதிப்புகள் நம் நாட்டைப் பாதிக்கவில்லை என்று தொடர்ந்து அரசு கூறிவருகிறது. குடியரசுத் தலைவர் தன் உரையில், ‘‘உலகப் பொருளாதார மந்தத்தால் உலகில் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் திருப்திகரமாக உள்ளது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு, நாம் இப்பகுதியில் பலமுறை சொல்லிவந்துள்ளபடி, முந்தைய அரசாங்கம் கட்டுப்பாடற்ற முறையில் நிதித் தாராளமய நடவடிக்கைகளில் ஈடுபட்டதை, இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்தியதுதான் காரணமாகும். குறிப்பாக அரசு மேற்கொள்ளவிருந்த வங்கிச் சீர்திருத்தம், ‘‘ஓய்வூதியத் துறையைத் தனியாரிடம் தாரைவார்த்தல்’’ முதலானவற்றை இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்தி வைத்திருந்தன. அவ்வாறு தடுக்காமல் விட்டிருந்தால் இன்றைய தினம் கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்கள் எதிர்கால வாழ்விற்காக சேமித்து வைத்திருந்த பணம் எல்லாம் காணாமல் போய் அவர்கள் வாழ்வே சூறையாடப்பட்டிருந்திருக்கும்.

குடியரசுத் தலைவர் தன் உரையில் அரசாங்கம் ‘‘சமூகத்தின் உள்ளீடான வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தின் உள்ளீடான வளர்ச்சி (“inclusive growth in society and inclusive growth in economy)’’ ஆகியவற்றில் உறுதிபூண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த இலக்கை அரசாங்கம் 2004இலேயே நிர்ணயித்தது. கடந்த ஐந்தாண்டுகளில் இதுதொடர்பாக அரசு கண்ட முன்னேற்றம் என்ன? உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவுகள் எத்தகைய பாதிப்புகளை நம்மீது சுமத்தியிருந்தாலும், அரசு கடைப்பிடித்த தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளானது இரு விதமான இந்தியர்களை உருவாக்கி இருக்கிறது என்பது உண்மை. ஒருசில ‘ஒளிர்கின்ற’ இந்தியர்களையும், (‘SHINING’ Indians) மீதம் கோடானுகோடி ‘உழல்கின்ற’ இந்தியர்களையும் (‘Suffering’ Indians) இது உருவாக்கி இருக்கிறது. அரசாங்கத்தின் சொந்த மதிப்பீட்டின்படியே, நாட்டு மக்களில் 78 சதவீதத்தினர் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான வருவாயிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அதே சமயத்தில். நாட்டில் 36 ‘டாலர் பில்லியனர்கள்’ உருவாகியிருக்கிறார்கள். இவர்களின் சொத்து மதிப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)யில் 25 சதவீதமாகும். ஒவ்வொரு நாளும் மருந்து இருந்தால் தடுக்கப்படக்கூடிய நீரினால் உண்டாகும் நோய்களுக்கு மருந்து உட்கொள்ளாமல் ஆயிரம் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன. நம் நாட்டின் 56 சதவீதம் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு ஊசிகள் போடப்படுவதில்லை. 40 சதவீதக் குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. 70 சதவீதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக ரத்தச்சோகையுடன் காணப்படுகின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரசின் தேசிய குடும்ப சுகாதார சர்வேயிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். நம் நாட்டில் வாழும் மக்களில் 70 சதவீதத்தினருக்கு சுகாதாரமான கழிப்பிடங்கள் கிடையாது. மூன்றில் இரு பகுதியினருக்குக் சுத்தமான குடிதண்ணீர் கிடையாது. நம் நாட்டின் கர்ப்பிணிப் பெண்களில் மூன்றில் இரு பங்கினர் ரத்தச் சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் எதிர்கால இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவே நம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நிலை. வாய்ச்சொல் உறுதிமொழிகள் எதுவும் இத்தகைய மிக பரிதாபகரமான உண்மையான நாட்டின் நிலைமையை மாற்றிவிட முடியாது. மாறாக, இதற்கு பொது முதலீட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்துவது தேவை. ஆனால் இதனைச் செய்ய அரசு தயாராக இல்லை என்பதையே கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன.

ஆயினும், நிலைமையைச் சமாளிப்பதற்கு, வள ஆதாரங்களைப் பெருக்குவதற்கு என்ன செய்ய இருப்பதாக, குடியரசுத் தலைவர் அறிவித்திருக்கிறார்? பொதுத்துறை நிறுவனங்களை மிகப் பெரிய அளவிற்குத் தனியாரிடம் தாரைவார்க்கப் போகிறோம் என்று கூறியிருக்கிறார். ஆயினும் அரசாங்கத்தின் பங்குகள் 51 சதவீதத்திற்குக் குறையாமல் பார்த்துக் கொள்வார்களாம். கடந்த ஐந்தாண்டு காலமாக இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் அரசாங்கத்தால் செய்ய முடியாது தடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகள் இப்போது முன்னுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. திவாலாகிப்போன ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ நிறுவனத்தை அமெரிக்க அரசாங்கம் தேசியமயமாக்கி இருக்கும் தருணத்தில் இந்திய அரசு இவ்வாறு அறிவித்துள்ளது. வள ஆதாரங்களை உயர்த்த வேண்டியது அவசியம்தான். ஆனால் அதனை யாரால் அளித்திட முடியுமோ, அவர்களின் லாபத்திலிருந்து ஒரு பகுதியை நாட்டின் கட்டுமானப் பணிகளுக்காக வசூலித்திட வேண்டும். அதற்கு மாறாக, பொதுத்துறையைக் கொன்றழிப்பதன் மூலம் அதனைச் செய்திடக் கூடாது. ஐமுகூ அரசாங்கத்தின் முதல் நான்கு ஆண்டு காலத்தில், இந்தியாவில் உள்ள பத்து உயர் கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களின் மதிப்பை இரு மடங்குக்கும் மேலாக உயர்த்தியுள்ளன. இவை அரசாங்கத்திற்கு 33 சதவீதம் கார்பரேட் வரி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் இவற்றில் ஒரு நிறுவனம் கூட அரசாங்கத்திற்கு இவ்வரியை செலுத்திட வில்லை. இவர்களில் இரண்டே இரண்டு நிறுவனங்கள் மட்டும்தான் 30 சதவீதம் அளவைத் தாண்டியிருக்கிறது. மீதமுள்ளவைகளில் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 20 சதவீத அளவைத் தாண்டியிருக்கிறது. மற்றவை எல்லாம் மிக மிகக் குறைவாகவே செலுத்தி இருக்கின்றன. இவ்வாறு வரி செலுத்தாமல் அனுமதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தி, அவர்களிடமிருந்து வசூல் செய்து நாட்டின் வள ஆதாரங்களைப் பெருக்கிட வேண்டுமேயொழிய, நாட்டின் பொதுச் சொத்துக்களை அழித்திடக் கூடாது.

பொதுத்துறை-தனியார்துறை-கூட்டு (PPP-Public Private Partnership), நாட்டின் உள்கட்டமைப்பு வசதியை வளர்ப்பதற்கான ‘‘முக்கிய கூறு’’ என்று அறிவித்திருப்பன் மூலம் தனியார் தங்கள் சொத்துக்களையும் லாபத்தையும் அதிகரித்துக்கொள்ள வகை செய்திருப்பது, குடியரசுத் தலைவரின் உரையில் உள்ள மிக மோசமான பகுதியாகும். பொதுத்துறை-தனியார்துறை-கூட்டுத் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கக்கூடிய அதே சமயத்தில், அவை மக்கள் மத்தியில் பெரும் சுமையினை ஏற்றிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தனியார் விமானத் தளங்களில் வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரில் அவை அடிக்கும் கொள்ளையைக் குறிப்பிடலாம். இவ்வாறு, எதிர்காலம் மக்களுக்குத் தாங்க முடியாத அளவிற்கு சுமையை ஏற்றக்கூடிய அளவிற்கு வரும் என்றே தோன்றுகிறது.
(அமெரிக்க அதிபர் ஒபாமா சொல்லியிருப்பதுபோலவே,) குடியரசுத் தலைவர், அரசாங்கம் முதல் நூறு நாட்களில் அமல்படுத்த இருக்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். இதில் முதலாவது, நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் மகளிர்க்கான இடஒதுக்கீட்டுச் சட்டுமுன்வடிவினை அமல்படுத்துவதற்கான உறுதிமொழியாகும். குறைந்தபட்சம் இப்போதாவது, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, கிடப்பில் போடப்பட்டு வந்த இச்சட்டமுன்வடிவிற்கு விடிவுகாலம் ஏற்படும் என்று நம்புவோம்.

இந்தியாவின் அயல்துறைக் கொள்கை குறித்து குடியரசுத்தலைவர் உரையாற்றுகையில், உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும், குறிப்பாக நம் அண்டை நாடுகளுடன், நட்புறவுகள் பேணப்படும் என்று கூறியிருக்கிறார். இப்பிரிவில் குறிப்பிடத்தக்க முறையில் விடுபட்டுள்ள ஒரு வாசகம் என்னவெனில் அது ‘‘அணிசேரா இயக்கம்’’ (Non-aligned movement) என்பதாகும். உண்மையில், அவரது ஒருமணி நேர பேச்சில் அணிசேராமை என்ற சொல் ஓரிடத்தில் கூட வரவில்லை. இந்த அரசானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான தன் போர்த்தந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவே விழைகிறது என்பது குடியரசுத் தலைவரின் உரை மூலமாக மேலும் தெளிவாகிறது.
படாடோபமான முறையில் திட்டங்களை அறிவிப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கம் என்றைக்குமே சளைத்ததில்லை. அவற்றை எந்த அளவிற்கு அவை அமல்படுத்துகின்றன என்பதில்தான் அவற்றின் உண்மையான வர்க்க குணம் வெளிப்படும். ‘வறுமையே வெளியேறு’ என்று இந்திரா காந்தி முன்வைத்த முழக்கத்தை நினைவு கூறுங்கள். பிற்காலத்தில் நாட்டில் மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் மோசமாகியதை அடுத்து மக்கள், ‘‘வறுமையே வருக வருக’’ என்று கிண்டலடித்தைக் கண்டோம்.
வரவிருக்கும் காலம் நாட்டு மக்கள் தங்களையும் தங்கள் வேலையையும் கடுமையான போராட்டங்கள் மூலமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். உண்மையில், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் இப்போராட்டங்களுக்கு நம்மையும், நாட்டு மக்களையும் தயார் செய்திடுவதே இப்போது நம்முன் உள்ள வேலையாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

1 comment:

ரங்குடு said...

இந்திய மக்கள் காங்கிரசார் செய்த ஊழல்களை மறந்து விட்டு அவர்களுக்கு வாக்களித்தால்தான் பொருளாதாரம் திடமாக இருக்கும் / வளரும் என்று ஒரு அறியாமையில் வாக்களித்திருக்கின்றனர்.

இந்தியப் பொருளாதாரம் ஒன்றும் உலகப் பொருளாதாரத்திலிருந்து முற்றிலும் காக்கப் பட்டது அல்ல.

உலகப் பொருளாதார வீழ்ச்சியுடன், இந்தியப் பொருளாதாரமும் வீழ்வது தவிர்க்க முடியாதது.

உலக நாடுகள் பொருளாதார வளர்ச்சி அடந்த போது இந்தியா மிகத் தாமதமாகத்தான் உலக அரங்கிற்கு வந்தது. அதன் வளர்ச்சி மிகவும் கடைசியில் ஏற்பட்டது. அது போலவே இந்தியப் பொருளாதாரம் வீழ்வது தாமதமாகத்தான் ஏற்படும்.

இது மன்மோஹன் சிங்கிற்கோ, மான் டெக் சிங் அலுவாலியாவுக்கோ தெரியாததல்ல. எப்படியாவது அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ந்து விடும், நாமும் சமாளித்து விடலாம் என்ற மாயையில் அவர்களும் இருக்கிறார்கள்.

பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது, காங்கிரஸ் இந்த நாட்டையே கொள்ளை யடித்து சக்கையைத் துப்பிவிடும் போது தான் நமக்கு முழிப்பு வரும்.

வேண்டுகோள்: இந்த வோர்ட் வெரிபிகேசனை எடுத்து விடுங்கள். இன்னும் சற்று அதிகமான பின்னூட்டங்களைக் காணலாம்.