சென்னை, ஜூன் 7-
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவும், தமிழ் மக்கள் சம உரிமையுடன் அமைதியாக வாழவும், அவர்களுக்கு புதுவாழ்வு ஏற்படவும் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் பங்காற்றிட வேண்டும். குறிப்பாக இந்திய அரசு முக்கிய பங்காற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் சென்னையில் ஜூன் 5-6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன், மாநிலச் செயலாளர் என். வரதராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஆர். உமாநாத், டி.கே. ரங்கராஜன் எம்.பி., ஏ.கே. பத்மநாபன், ஜி. ராமகிருஷ்ணன், உ.வாசுகி, பாப்பா உமாநாத் மற்றும் மாநில செயற்குழு - மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
"இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நீடித்து தொடர்ந்து நடந்த ஆயுத மோதலில், எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் மற்றும் அவ்வியக்கத்தை சார்ந்தவர்கள், அப்பாவித் தமிழ்மக்கள் உள்ளிட்டு பல்லாயிரக்கணக்கானோர் துயரமான முடிவுக்கும் கடுமையான பாதிப்புகளுக்கும் உள்ளாக நேரிட்டுள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக சொல்லொணா துயர வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளை ஒடுக்குவது என்ற பெயரால் இலங்கை அரசு தொடுத்த தாக்குதலில் அப்பாவி தமிழ் மக்கள் பல்லாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடைசி கட்டத் தாக்குதலில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இத்தகைய மனித உரிமைகளை மீறியத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, விசாரணைக்கும் உட்படுத்திட வேண்டும்.
ராணுவ நடவடிக்கைகள், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாதிக்கப்பட் டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும், துயர் துடைப்பு மற்றும் மறுவாழ்வுக் கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வது, இலங்கை அரசின் அவசர - அவசியக் கட மையாகும். மேலும், மோதலுக்கு காரணமான இனப்பிரச்னைக்கு அதிகார பகிர்வு, சுயாட்சி உரிமை அடிப்படையில் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை உடனடியாக துவக்குவதும் இலங்கை அரசின் கடமையா கும். இதனை முன்னிறுத்தி உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ள இலங்கை அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு வலி யுறுத்துகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, இலங்கையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை இலங்கை அரசு உடனடியாக கூட்ட வேண்டும். இலங்கையில் தமிழ்மக்கள் அமைதியாக வாழவும், அவர்களுக்கு புது வாழ்வு ஏற்படவும் உத்தரவாதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இலங்கைத் தமிழ்மக்களின் கோரிக் கைகளை இலங்கை அரசு செவிமடுக்கத் தவறியதன் விளைவாகவே எல்டிடிஇ உருவானது என்பதை கணக்கில் கொண்டு, சிங்கள மக்களுக்கு இணையாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக் கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கச் செய்வது உறுதிப் படுத்தப்பட வேண்டும்.
நிவாரண முகாம்களில் உள்ள மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களுக்கு குடிநீர், உணவு, உடை, சுகாதாரம், மருத் துவம் போன்ற அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைக்காத நிலையும், காயமடைந்தோர், நோயுற்றோருக்கு உரிய சிகிச்சை கிடைக்காத நிலையும் உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு போதிய உணவும், தேவைப்படும் அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சையையும் முன்னுரிமை அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்தப்பணிகளை ஐ.நா. அமைப்பின் நேரடி கண்காணிப்புடன் செய்வதை உறுதிப்படுத்தப்படவேண்டும்.
தற்போது வீடுகளை, உடைமைகளை இழந்து முகாம்களில் உள்ள தமிழ்மக்களுக்கு மறு வாழ்வுக்கான நிவாரணம் அளிப்பதோடு, அவர்களின் சொந்த வாழ்விடங்களிலேயே வீடுகள் கட்டித்தருவதோடு உடனடி வருமானத்திற்கான வேலைவாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தமிழர் பகுதிகளில் உள்ள கெடுபிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். விசாரணை யின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித்தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சிறப்பு பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையின் ஆட்சி மொழியாக சிங்களமும், தமிழும் சம உரிமையுடன் உணர்வுப் பூர்வமாகவும், உண்மையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும். இலங்கை அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள அரசுப் பணிகளில் தமிழ்மக்களுக்கு சம உரிமையும், உரிய பிரதிநிதித் துவமும் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நேர்மையான முறையில் அதிகாரப்பரவல் குறித்த செயல்திட்டத்தை அனைத்து தமிழர்கள் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமலாக்கிட வேண்டும்.
மேற்கண்ட வகையில் இலங்கை தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வுகாண இலங்கை அரசும், இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங் களும், தமிழ் மக்களின் தலைவர் களும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கையில் சிங்கள - தமிழ் மக்களிடையே இணக்கமான இயல்பு வாழ்க்கைத் திரும்பிடும் வகையில் இலங்கைப் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவும், தமிழ் மக்கள் சம உரிமையுடன் அமைதியாக வாழவும் - அவர்களுக்கு புதுவாழ்வு ஏற்படவும் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் பங்காற்றிட வேண்டும். குறிப்பாக, இந்திய அரசு முக்கிய பங்காற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வலியுறுத்துகிறது."
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment