Wednesday, April 30, 2008

மே தின சபதம் ஏற்போம்

இன்று மே தினம். உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தால் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்படக்கூடிய தினம், மே தினமாகும். இந்த மேதினம் கொண்டாடப்படுவது எவ்வாறு தொடங்கியது, அது இந்தியாவில் முதன்முதலில் எப்போது கொண்டாடப்பட்டது என்பதைச் சற்றே ஆராய்வோம்..18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தொழிலாளிகள் வர்க்கமாய் திரளாத சூழலில் முதலாளித்துவம் தனது கொடுங்கரங்களால் தொழிலாளிகளை மொத்தமாக சுரண்டி கொழுத்தது. அப்போது தொழிலாளிகளின் சராசரி ஆயுட் காலம் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமேயாகும். தொழிற்புரட்சி கண்ட இங்கிலாந்தில் தொழிலாளிகளின் நிலை படு பாதாளத்தில் இருந்தது. வயது வித்தியாசம், பால் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் 16 மணி நேரம், 18 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. மூன்று வயது குழந்தைகள் கூட 12 மணி நேரம் உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். சோர்ந்து தூங்கிவிடும் குழந்தைகளுக்கு சாட்டையடியே கூலியாகக் கிடைத்தது. தொழிலாளிகளின் இத்தகைய நிலையை எதிர்த்து 1836இல் “சாசன இயக்கம்” உருவானது.
இந்த இயக்கமே உலகின் பெருந்திரள் தொழிலாளிகளை கொண்ட முதன்மையான அரசியல் இயக்கமாக உருவெடுத்தது.10 மணி நேர வேலை, அனைவருக்கும் வாக்குரிமை, பாராளுமன்றத்தில் ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் பங்கேற்பு முதலிய கோரிக்கைகளை முன்வைத்து 10 லட்சம் கையெழுத்துக்களைப் பெற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. ஆனால் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இதைத் தள்ளுபடி செய்து விட்டது. சாசன இயக்கத்தினர் இரண்டாவது முறையாக 30 லட்சம் கையெழுத்துக்களை பெற்று மீண்டும் சமர்ப்பித்தனர். தொழிலாளிகளின் ஒன்றுபட்ட போராட்டம் வளர்ந்து வருவதை கண்ட பிரிட்டன் முதலாளித்துவ வர்க்கம் பெயரளவுக்கு 1847இல் 10 மணிநேர சட்டத்தை கொண்டு வந்தது. இது தொழிலாளிகளின் தொடர்ச்சியான இயக்கத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.1850களில் மார்க்சும், ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது, சாசன இயக்கத்தினருடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டி வந்தனர். மார்க்° - ஏங்கெல்° முயற்சியால், “கம்யூனி°ட் புரட்சிக்காரர்களின் சர்வதேசக் கழகம்” உருவாக்கப்பட்டது. 1856இல் ஆ°திரேலியாவில் உள்ள மெல்போன் - விக்டோரியாவில், கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள்தான் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக் கங்களை இணைத்து “அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு “ 1886 மே 1, அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது”. இவ்வியக்கமே ‘மே தினம்’ பிறப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.இந்த சமயத்தில், மார்க்சும் - ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது பிரான்°, ஜெர்மன் மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். 1847ஆம் ஆண்டு “நீதியாளர் கழகம்” என்ற பெயரில் செயல் பட்டு வந்த அமைப்பு, மார்க்° - ஏங்கெல்சுடன் தொடர்பு கொண்டு, அவர்களை தங்களது அமைப்பில் இணையும்படி கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படை யில் மார்க்சும் - ஏங்கெல்சும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டதோடு, இவ்வமைப்பின் பெயரை “கம்யூனி°ட் லீக்” என்று மாற்றினர். அத்துடன் நீதியாளர் கழகத்தின் உறுப்பினர் அட்டைகளில் “அனைத்து மனிதர்களும் சகோதரர்களே” என்ற கோஷம் இடம் பெற்றிருந்ததை அகற்றி விட்டு, “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்ற புரட்சிகரமான முழக்கத்தை முன்வைத்தனர்.கம்யூனி°ட் லீக்கின் அறைகூவலுக்கு ஏற்ப உருவாக்கப் பட்டதே மார்க்° - ஏங்கெல்சின் “கம்யூனி°ட் கட்சி அறிக்கை.” மார்க்சும், ஏங்கெல்சும் இத்துடன் நிற்காமல், 1864இல் முதல் அகிலம் என்று அழைக்கப்பட்ட, சர்வதேச தொழிலாளர் அமைப்பை ஏற்படுத்தினர். இவ்வமைப்பு உலகின் பல நாடுகளில் உள்ள தொழிலாளர் இயக்க பிரதிநிதிகளை உள்ளடக்கி இருந்தது. 1865இல் ஜெனிவாவில் நடைபெற்ற முதலாம் அகிலத்தின் மாநாட்டு பிரதிநிதிகளிடையே உரையாற்றிய மார்க்°,“...வேலை நிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புகளின் போது முதலாளிகள் வெளி நாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதி செய்யக்கூடாது; எட்டு மணிநேர வேலைதான் வேண்டும்; குழந்தைகளுக்கும் குறைந்த வயதினருக்கும் வேலை நேரத்தைக் குறைத்திட வேண்டும்....” என்று தொழிலாளி வர்க்கத்தின் அக்கால நிலைமைக்கு ஏற்ப கோரிக்கைகளை முன்வைத்தார். இக்கோரிக்கைகளை வென்றெடுக்க உலகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பாடுபட முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அத்துடன் “...சட்டப்பூர்வமான வேலை நேரம் என்பது அடிப்படையானது; இதில் முன்னேற்றம் இல்லாமல், வேறு சமூக முன்னேற்றம் காண்பது அரிது...” என்று கூறி 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை உலகளவில், தொழிலாளர் இயக்கங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று முழங்கினார்.8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம். இவையே தொழிலாளிகளின் முதல் தேவையாக இருந்தது. ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு,’ தொழிலாளர்களிடையே ஓங்கி வளர்ந்த போராட்ட உணர்வை நெறிப்படுத்தி, ஒருங்கிணைத்தது. அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் வேண்டுகோளான 8 மணிநேர வேலை கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய முறையில் நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் 1886 மே 1 அன்று பேரெழுச்சியோடு துவங்கின.தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. சிக்காகோவில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.8 மணி நேர வேலைக்கான இயக்கம் அமெரிக்காவில் வீறு கொண்டு எழுந்தது. 1886 மே 3- அன்று “மெக்கார்மிக் ஹார்வ°டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் ஆக°ட் °பை° எழுச்சி மிகு உரையாற்றினார். கூட்டம் அமைதியாக நடை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், பெரும் போலீ° படை கூட்டத்தை முற்றுகையிட்டதோடு, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டது. 4 தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.இச்செய்தி நகரெங்கும் பரவியதையொட்டி, சிகாகோ மக்கள் பெரும் கோபாவேசத்திற்கு ஆளாயினர். இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று கண்டனக் கூட்டம் நடத்தி மிகத் துரிதமாக தொழிலாளர்கள் திட்டமிட்டனர். 1886 மே 4 ஹே மார்க்கெட் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் மெக்கார்மிக்கில் நடைபெற்ற சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தது. ஆக°ட் °பை° , ஆல்பர்ட் பார்சன்°, சாமுவேல் பீல்டன் பேசத் துவங்கும் போது, போலீசார், கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து, அனைவரையும் கலைந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். இந்த சமயத்தில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது; இதில் ஒரு போலீ°காரர் பலியானார். உடனே போலீ° படை கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்றைக்கும் வெளி வராத மர்மமாகவே இருக்கிறது. தொழிலாளர்களின் இரத்தத்தால் ஹே மார்க்கெட் சதுக்கமே சிவந்தது. போலீசார் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் எந்தக் கட்டத்திலும் போலீஸார் மீது வெடிகுண்டை வீசியது யார் என்று நிரூபிக்கப்பட வில்லை.இவ்வழக்கின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ”நம்முடைய நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு, இது போன்றவர்களை தூக்கி லேற்றுவதுதான் முன்னுதாரணமாக இருக்கும்” என்று கூறி 7 பேருக்கு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்புக் கூறினார்.அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது. 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலி°ட் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது” 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஏங்கெல்ஸ் உட்பட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காரல் மார்க்° வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிகாகோ சதியை கண்டித்து, 1890 மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்தே மே முதல் நாள் மே தினம் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னையில் சிங்காரவேலர் இந்தியாவிலேயே முதன் முதலில் 1923இல் மேதினத்தை கொண்டாட திட்டமிட்டார். அந்த அடிப்படையில் 1923 மே 1 அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில் சிங்காரவேலர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமிசர்மா தலைமையிலும் மே தினக் கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய சிங்காரவேலர், 8 மணி நேர வேலையை சட்டமாக்கவேண்டும் என்று அறைகூவினார். அதன் பின் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களிலும் மே தினம் தொழிலாளர் வர்க்கத்தால் மிக எழுச்சியோடு நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மே தினமும், உலகத் தொழிலாளிகளை எழுச்சிக் கொள்ளச் செய்யும் - அடிமை விலங்குகளில் இருந்து விடுவிக்கும். நாமும் மேதினி சிறக்க இம் மேதினத்தில் சபதமேற்போம்...
ச.வீரமணி

No comments: