Saturday, May 3, 2008

மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல்கள் பிற்போக்குக் கும்பல் மீண்டும் தோல்வியுறுவது உறுதி




மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடங் கியதை அடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணிக்கு எதிராக நந்திகிராமத்தில் ஒன்று சேர்ந்த அனைத்துப் பிற்போக்கு சக்திகளின் மகா கூட்டணி, இப்போது மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும், வெளியில் என்ன வேடமணிந்தாலும், ஸ்தல மட்டத்தில், காங்கிரஸ் -திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக வினருக்கிடையே ‘மஹாஜோட்’ என்னும் மகா கூட்டணிக்கான முயற்சிகள் எப்போதும் நடைபெறுவது வழக்கம். இடது முன்னணிக்கு எதிராக இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நிற்பது வாடிக்கை. ஆயினும், இவை தலைகீழாக நின்றாலும் கூட, இடது முன்னணியை வீழ்த்துவதில் பரிதாபகரமான முறையில் படுதோல்வியையே எப்போதும் சந்தித்து வந்திருக்கின்றன. இந்தத் தடவையும், இந்த மகா கூட்டணி மிகப் பெரிய அளவில் கருக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்து மதவெறி அமைப்பான ஆர்எஸ் எஸ் /பாஜக மற்றும் சில முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் இவற்றுடன் மாவோயிஸ்ட்டுகளும் மற்றும் அந்நிய நாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் சில அரசு சாரா நிறுவனங்களும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணிக்கு எதிராகக் கைகோர்த்திருக்கின்றன. இந்த ‘மகாகூட்டணி’க்கு, நந்திகிராம் நிகழ்வுகளின் போது பிற்போக்கு சக்திகளுக்கு உறு துணையாக இருந்த அதே ‘கார்ப்பரேட் ஊடகங்கள்’ கணிசமான அளவிற்கு இப்போதும் உதவி செய்து வருகின்றன. இவர்களுடைய விரக்தி எந்த அளவிற்குச் சென்றிருக்கிறது என்றால், இத்தகைய கூட்டணி ஏன் தேவை என்பது குறித்து மக்களிடம் நயமாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்று கூட இவர்கள் கவலைப்படவில்லை, மாறாக, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கு எதிராக கொலைபாதகத் தாக்குதல்களில் இறங்கக்கூடிய அளவிற் குச் சென்றிருக்கின்றன. இத்த கைய தாக்குதல்களை தங்களை ‘மாவோயிஸ்டுகள்’ என்று சொல்லிக் கொள்பவர்கள் நாம் எதிர் பார்த்தபடியே முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டில் மட்டும், ‘மாவோயிஸ்ட்டு’களால் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 13 பேர் குறிவைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 2006 மார்ச்சி லிருந்து 2007 முடிய மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 19 முன்னணி ஊழியர்கள் இக்கொலைகாரக் கும்பலால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

‘மாவோயிஸ்ட்டுகள்’ இவ்வாறு பிற்போக்கு சக்திகளுக்காகக் கொலை செய்திடும் கூலிப்படையாக செயல்பட்டு வருகிறார்கள். அவசரநிலைப் பிரகடனம் தோற்கடிக்கப்பட்டபின், இடது முன்னணி மாபெரும் அளவில் வெற்றிவாகை சூடியதை அடுத்து, மேற்கு வங்கத்தில் மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறை கொண்டுவரப்பட்டது. இதனைப் பின்பற்றியே பின்னர் பிரதமராக வந்த ராஜீவ் காந்தி, இம்முறையை நாடு முழு துக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் விரிவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் வழக்கமாக இரு சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடைப் பட்ட காலத்தில் நடத்துவது வழக் கம். இவ்வாறு நடத்துவதன் மூலமாக, மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கருத்தை அறிந்து கொள்வதற்கும், கொள் கைகளில் மாற்றம் ஏதும் மக்கள் விரும்பினால் அதனை மக்களுக்கு ஆதரவாக மேற்கொள்வதற்கும் இது பயன்படும் என்ற முறையில் இவ்வாறு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முப்பதாண்டு காலமாகவே பிற்போக்கு சக்திகள் ‘மகா கூட்டணி’ அமைத்து போட்டியிட்டு வந்த போதிலும் அவற்றால் கடந்த காலங்களில் வெற்றிபெற முடியாது தோல்வியைத் தழுவியது போலவே இம்முறையும் மண்ணைக் கவ்வும் என்பது திண்ணம்.

கடந்த முப்பதாண்டுகளில் மேற்கு வங்கத்தில் நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மூலம் அதிகாரங்களைப் பரவலாக்கியதனால் ஏற்பட்டுள்ள ஆதாயங்களைப் பாதுகாத்திட நடைபெற்ற போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பலியாகி இருக்கிறார்கள். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் இந்தப் பிற்போக்கு சக்தி களால் 159 மார்க்சிஸ்ட் ஊழியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1967இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நக்சலைட்டுகள் (இன்றைய ‘மாவோயிஸ்ட்டுகள்’), ‘‘மக்கள் யுத்தம்’’ என்ற கோஷத்தை முன்வைத்துப் பிரிந்து சென்ற போது, மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மிகவும் அரக்கத்தனமான முறையில் அரை பாசிச அடக்கு முறை ஏவிவிடப்பட்டதையும், அதில் ஆயிரக்கணக்கான தோழர்கள் உயிர்ப்பலியானதையும், பல்லாயி ரக்கணக்கானோர் தங்கள் இல்லங்களிலிருந்து புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதையும் இந்த கேடுகெட்ட பிற்போக்குக் கூட்டணி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆயினும், 1977இல் ஜனநாயகம் மீண்டும் மலர்ந்தபின், அத்தகைய அரை பாசிச அடக்கு முறையைக் கண்டு அஞ்சாத மேற்கு வங்க மக்கள், தங்கள் முழு நம்பிக்கையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் இடது முன்னணி மீதும் மீண்டும் அளித்தார்கள். கடந்த முப்பதாண்டு காலமாக கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிற்போக்குக் கூட்டணியின் சூழ்ச்சிகளைத் தவிடுபொடியாக்கி, இடது முன்னணி அரசாங்கத்தால் ஏற்பட்ட ஆதாயங்களை மக்கள் கண்ணின் மணிபோல் காத்து வருகிறார்கள். நந்திகிராமத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து அந்நிய நாடுகளின் உதவி பெறும் அரசு சாரா அமைப்புகள் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுவதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கு எதிராக, பிற்போக்கு சக்திகள் கொலைபாதகத்தாக்குதல்களைத் தொடுத்த போதெல்லாம் இவை வாய்மூடி மௌனம் சாதித்ததை நாமறிவோம். இவை பிற்போக்கு சக்திகளின் மகா கூட்டணியின் அட்டூழியங்களை நியாயப்படுத்தத்தான் முயற்சிக்கும் என்பதில் நமக்கு எவ்வித ஆச்சரியமும் கிடையாது.

இவ்வாறு கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் முற்போக்கு சக்திகள் முன்னேறுவதை சீர் குலைத்திட இத்தகைய பிற் போக்கு சக்திகள் முயற்சிப்பது என்பது புதிய விஷயம் ஒன்றும் அல்ல. மாமேதைகள் மார்க்சும் ஏங்கெல்சும் நமக்கு அளித்திட்ட ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யின் எழுச்சி கொள்ளச் செய்யும் தொடக்கப் பத்தியிலேயே, வளர்ந்தோங்கி வரும் கம்யூனிஸ்ட் சக்திக்கு எதிராக ஐரோப்பாவில் அணிதிரண்ட அனைத்துப் பிற்போக்கு சக்திகளின் புனிதக் கூட்டணி குறித்துக் கூறியிருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை நிலைமைகள் மாறவில்லை.

இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணியை மக் கள் மகத்தான முறையில் ஆதரிப்பதை அடுத்து, இங்கும் அதே போன்று அனைத்துப் பிற்போக்கு சக்திகளும் ஒன்று சேர்ந்திருக் கின்றன. இதற்கு முன் நடைபெற்ற அரசியல் போராட்டங்கள் அனைத்திலும் எவ்வாறு மேற்கு வங்க மக்கள் வீராவேசமாகப் போரிட்டு வெற்றிவாகை சூடினார்களோ அதேபோன்று, மிகவும் முக்கிய மான காலகட்டத்தில் நடைபெறு கின்ற இந்தப் பஞ்சாயத்துத் தேர் தல்களிலும் இடது முன்னணியை மகத்தான முறையில் வெற்றி பெறச் செய்வார்கள் என்பது உறுதி.

தமிழில்: ச. வீரமணி

No comments: