அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, ஏப்ரல் 29 அன்று புதுடில்லிக்கு வருகை தரும் ஈரான் அதிபர் மஹமூத் அஹமதி னெஜாத் அவர்களிடம், இந்தியா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தக்கூடிய அளவிற்கு முரட்டுத்துணிச்சல் ஏற்பட்டிருப்ப தானது, அமெரிக்கா, இந்தியாவைத் தன் ‘‘இளைய பங்காளி’’யாகக் கருதுவதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறது. அமெரிக்க அரசின் சார்பில் இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ள கருத்துக்கள், நட்புரீதியான முறையிலான அறிவுரையாக எடுத்துக்கொள் ளப்படுவதற்கில்லை, மாறாக உலகத்தின் போலீஸ்காரன் என்று தன்னைத் தானே நியமித்துக்கொண்டுள்ள ஏகாதிபத்திய அரக்கத்தனத்தின் தொனிதான் அதில் பிரதிபலிக்கிறது. அமெரிக்கா ஆசைப்படும் வகையில் நடந்து கொள்ள ஈரானிய அதிபருக்கு அறிவுறுத்துமாறு இந்தியாவை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியா மற்ற நாடுகளுடன் எப்படித் தன் உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவதானது அமெரிக்கா, மற்றொரு நாட்டின் உள்விவகாரத்தில் முழுமையாகத் தலையிடுவதற்கு ஒப்பானதாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தியாவின் உள்விவகாரங்களிலும் மற்றும் நம் நாட்டின் அயல்துறைக் கொள்கை நிலைபாட்டின்மீதும் இத்தகைய மிகத்தெளிவான தலையீடுகளை, நம் நாட்டின் இறையாண்மையின் மீது தொடுக்கப்பட்ட அவமானமாகக் கருதி, தீர்மானகரமான முறையில் நிராகரித்திட வேண்டும். ‘‘இந்தியாவும் ஈரானும் புராதனக் காலந்தொட்டே பல நூறாண்டு கால மாக நல்லுறவுடன் இருந்து வந்திருக்கின்றன’’ என்று கூறி, அமெரிக்காவின் கருத்துக்களை இந்தியா மிகவும் சரியாகவே மறுதலித்திருக்கிறது. எனவே, எதிர்காலத்திலும் எவரின் வழிகாட்டுதலுமின்றி இரு நாடுகளும் அனைத்து அம்சங்களிலும் தங்கள் உறவுகளை முழுமையாக பேணி வளர்த்துக்கொள்ள முடியும்.
அமெரிக்காவின் ஹைடு சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலமாக, இந்தியாவை அமெரிக்காவின் போர்த்தந்திர உத்திகளுக்குச் சரியாகப் பொருந்தக்கூடிய வகையில் மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது என்று இடதுசாரிக் கட்சிகள் எழுப்பிய அச்ச உணர்வை, இந்தியா மீது செல் வாக்கு செலுத்த அல்லது இந்தியாவை நிர்ப்பந்தித்திட அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள மேற்படி முயற்சிகள் மீண்டும் ஒருமுறை சரியானது தான் என்று மிகத்தெளிவாக மெய்ப்பித்திருக்கிறது.
அமெரிக்காவின் நிலைபாட்டுடன் “முழுமையாக ஒத்துப்போகக்கூடிய” வகையில்தான் இந்தியாவின் அயல் துறைக் கொள்கை அமைந்திட வேண்டும் என்று ஹைடு சட்டத்தில் வெளிப்படையாகவே கூறப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் குறிப்பாக தெற்காசியாவிலும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவம் மற்றும் உளவு நடவடிக்கைகளுடன் இந்தியாவையும் பெரிய அளவில் சிக்கவைப்பதற்கு அமெரிக்கா இவ்வாறு முயற்சித்து வருகிறது. இந்தப் பின்னணியில், அமெரிக்காவின் தலையீட்டை நிராகரித்ததோடு மட்டும் இந்தியா இருந்துவிடக் கூடாது. ஈரான் அதிபரின் பயணத்தை, இந்திய - ஈரான் எரிவாயு குழாய் திட்டத்தினை மேலும் கொண்டுசெல்வதற்கு, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும். இத்திட்ட மானது மிக மலிவான எரிசக்தி ஆதாரம் மட்டுமல்ல, இந்தியாவுக்கு அவசியத்தேவையாக உள்ள எரிசக்தித் தேவைக்கு மிகப்பெரிய அளவில் உதவிடும் திட்டமுமாகும். உண்மை யில், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது, இந்தியா மீது எவ்வித நிபந் தனைகளும் விதிக்காத ஒரு திட்டமுமாகும். இந்தியாவின் விரிவடைந்து வரும் எரிசக்தித் தேவைகளுக்கு இத்திட்டம் மிகப்பெரிய அளவில் உதவிடும். எனவே எவ்விதக் காலதாமதமும் செய்யாது ஐ.மு.கூட்டணி அரசு குழாய் வழித்திட்டத்தை உடனடியாகத் தொடர்ந்திட வேண்டும். ஈரான் அணுசக்தித் திட்டம் குறித்து ஈரான் அதிபரிடம் இந்தியா கேட்க வேண்டும் என்று அமெரிக்கா கோரியிருப்பதைப் பொறுத்தவரை, ஈரான் ஏற்கனவே அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பதை மனதில் கொள்ள வேண் டும். எனவே, ஈரான் அந்த ஒப்பந்தத் தினால் ஏற்பட்டுள்ள அனைத்து உரிமைகள் மற்றும் கடமைகளுக்கும் கட்டுப்பட்டதாகும். எனவே அது பாதுகாப்புத்துறை சார்ந்த அணுசக்தி ஆயுதத் திட்டங்களை மேற்கொள் வதை விட்டொழித்திடும் அதே சமயத்தில் ராணுவம் சாரா அணுசக்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு உரிமையைப் பெற்றிருக்கிறது. ஈரான், பாதுகாப்புத்துறை சார்ந்த அணு சக்தித் திட்டங்களைத்தான் பின்பற்று கிறதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு அதற்காக அமைக்கப்பட்டி ருக்கும் சர்வதேச அமைப்புக்குத்தான் உண்டு. ஈரான் அணுஆயுதங்களை வைத்திருக்கவும் இல்லை, அதற்கான வல்லமையும் அதற்கில்லை என்று சர்வதேச அணுசக்திக் கழகம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. சர்வதேச அணுசக்திக் கழகம், இராக் சம்பந்தமாகவும் இதுபோன்ற கருத்துக்களை இதற்கு முன்பு சொல்லியிருக்கிறது. ஆயினும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானுக்கு எதிராக யுத்தத்தை ஏவுவதையோ அல்லது தன்னுடைய பொய் புனைசுருட்டுக் கதைகளின் அடிப்படையில் ராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்ளப்போவ தைத் தடுத்திடவோ அல்லது பின்னுக்கு தள்ளவோ முடியாது. இராக் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன் அமெரிக்கா அளந்துவிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் வடிகட்டிய பொய் என்பது இப்போது உலகத்தின் முன்பு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. இப்போது அதேபோன்ற கட்டுக்கதைகளை ஈரான் தொடர்பாகவும் அமெரிக்கா அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது, இராக்கைத் துவம்சம் செய்ததுபோலவே ஈரானையும் ஏறிமிதித்திட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா, அமெரிக்காவின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் ஒரு நாடாக ஒருபோதும் மாறி விடக் கூடாது. அமெரிக்காவின் கருத்துக்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுதலித்திருக்கும் அதே வேகத்தில், இந்தி யாவுக்கான அமெரிக்கத் தூதருக்கு அழைப்பாணை அனுப்பி, அதனைப் பதிவு செய்வதுடன், இந்தியாவின் உள்விவகாரங்களிலும் அயல்துறைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதிலும் இவ்வாறு அத்துமீறி தலையிடுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது என்று திட்டவட்டமான வார்த்தைகளில் அறிவித்திடவும் வேண்டும்.
தமிழில்: ச. வீரமணி
No comments:
Post a Comment