Friday, April 18, 2008

விலைவாசி உயர்வுக்கு எதிராகப்போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்




விஷம்போல் ஏறிவரும் விலைவாசிக்கு எதிராக, இடதுசாரிக் கட்சிகள் - ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நாடு முழுதும் கூட்டு இயக்கங்கள் தொடங்கி விட்டன. வேகமாக வீங்கிக் கொண்டிருக்கும் பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தக் கோரியும், குறிப்பாக அதனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கடுமையாக உயர்ந்துள்ள அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்திடக் கோரியும், 2008 ஏப்ரல் 16 முதல் 23 வரை, நாடு முழுதும் வெகுஜன இயக்கங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.
எதிர்ப்பியக்கத்தின் முக்கியமான கோரிக்கைகள் வருமாறு:
வறுமைக்கோட்டுக்கு மேல் என்றும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்றும் எவ்விதப் பாகுபாடும் காட்டாது அனைவருக்கும் பொது விநியோகமுறையை அமல்படுத்து; பொது விநியோக முறையின் கீழ் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உணவுப் பொருள்களில் ஏற்படுத்தியுள்ள வெட்டைச் சரிசெய்து, மீள முன்பு அளித்து வந்த அளவிற்கு உணவுப் பொருள்களை அளித்திடு. பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை உட்பட பதினைந்து அத்தியாவசியப் பொருள்களையும் பொது விநியோக முறையில் வழங்கிடு.
உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்மொழிந்துள்ளபடி 25 வேளாண் பொருள்களுக்கும் ஊக வர்த்தக முறையை (Future trading)த் தடை செய்.
எண்ணெய் இறக்குமதிக்கான சுங்கம் மற்றும் கலால்வரிகளை வெட்டு; பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைத்திடு.எ அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்திடு. அதற்கேற்ற வகையில் இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தை வலுப்படுத்தி, பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தைப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுத்திட மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கிடு.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மக்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட முடியாது, நாட்டின் பொருளாதார அடிப்படைகளையும் வலுப்படுத்திட முடியாது. விலைவாசி உயர்வுக்கு குறிப்பாக உணவு தான்யங்களின் உயர்வுக்கு உலக அளவில் அவற்றின் விலைகள் உயர்ந்திருப்பதுதான் காரணம் என்று அரசுத்தரப்பில் சமாதானம் சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் பணவீக்கத்தின் நிர்ப்பந்தம் காரணமாக இவ்வாறு விலைவாசி உயர்வு ஏற்பட்டிருப்பது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனாலும், எண்ணெய் விலைகளில் செங்குத்து உயர்வால், அது விவசாய நடவடிக்கைகளில் முக்கிய இடுபொருளாக இருப்பதால், அது விவசாய உற்பத்திச் செலவினங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும், உயிர் எரிபொருள்(bio-fuels) களுக்கு உலகம் முழுதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், உணவு தான்யங்களை மக்கள் நுகர்வுக்குப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கப்படுகிறது. உதாரணமாக, இந்த ஆண்டு அமெரிக்காவில் உற்பத்தியான சோளம் விளைச்சலில் 20 சதவீதம் உயிர் எரிபொருளாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு காருக்கு நிரப்பப்பட வேண்டிய உயிர் எரிபொருளுக்குப் பயன்படுத்தப்படும் சோளத்தின் அளவானது, ஓர் ஆரோக்கியமான நபருக்கு ஓராண்டு நுகர்வுக்குப் போதுமானதாகும்.
இதுபோன்று உணவுப் பொருள்கள் உயிர் எரிபொருளுக்குப் பயன்படுத்தப்படுவதும் பல நாடுகளில் விவசாய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்துதான் உலக அளவில் உணவு தான்யங்கள் விலை உயர்வுக்குக் காரணங்களாக அமைந்திருக்கின்றன. இவை அனைத்தும் கடந்த பல ஆண்டுகளாகவே உலகம் முழுதும் நடைபெற்று வந்தாலும், விலைவாசி உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது, உலக அளவில் உணவு தான்யங்களை ஊக வர்த்தக அடிப்படையில் விற்கும் நடைமுறை அமல்படுத்தப்படுவதாகும். 2008 பிப்ரவரி வாக்கில், கோதுமையின் விலையானது உலக அளவில் 92 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சோயாபீன்ஸ் 62 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் நிலையும் கிட்டத்தட்ட இதுவேதான்.ஏன் இவ்வாறு ஏற்படுகிறது? அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலைமைகள் இதற்கு முக்கிய காரணமாகும். அங்குள்ள பல நிதி நிறுவனங்கள் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. தங்கள் நஷ்டத்தை ஓரளவுக்குச் சரிக்கட்டுவதற்காக, உலக நிதிநிறுவன ஜாம்பவான்கள், உணவு தான்யங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் மீது ஊக வர்த்தக முறையை அமல்படுத்தி வருகின்றன. இதுவே அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் திடீரென்று உயர்வதற்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு உலக அளவிலான நிர்ப்பந்தங்கள் நம்மைத் தாக்காதவாறு நம்மை நாம் எப்படிப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே நம்முன் உள்ள முக்கிய பிரச்சனையாகும். கடந்த காலங்களில் நம் நாட்டில் உணவுப் பொருள்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தைப் பொறுத்தவரை, உலக ஊக வர்த்தகத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு, இருந்து வந்தது. ஆயினும், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, இந்த நடைமுறை நீர்த்துப்போகச் செய்யப்பட்டுவிட்டு, அநேகமாக கைவிடப்பட்டுவிட்டது. நம் நாட்டின் விளையும் உணவு தான்யங்களை பன்னாட்டு நிறுவனங்கள் வாங்குவதற்கும், சேமித்து வைத்துக் கொள்வதற்கும் அனுமதித்திருப்பதன் மூலமாக, அரசு உணவு தான்யங்களை கொள்முதல் செய்வதென்பதில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. 2005-06க்கும் 2006-07க்கும் இடையில் கோதுமை விளைச்சல் என்பது 69 மில்லியன் டன்களிலிருந்து 75 மில்லியன் டன்களாக உயர்ந்திருந்தாலும், அரசு அவற்றைக் கொள்முதல் செய்வது என்பது 2003-04இல் 16.8 மில்லியன் டன்களாக இருந்தது 2004-05இல் 14.8 மில்லியன் டன்களாகக் குறைந்து, 2005-06இல் அது வெறும் 11.1 மில்லியன் டன்களாக மேலும் குறைந்துவிட்டது. மிகவும் சரியாகச் சொல்வதென்றால், அரசு கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள், உலக அளவில் நடைபெறும் ஊக வர்த்தகத்தின் விளைவாக ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கத் தவறியது மட்டுமல்லாமல், நம் நாட்டில் உணவுப் பாதுகாப்பின்மையை மிகவும் ஆபத்தான நிலைக்குக் கொண்டு தள்ளியுள்ளது.உணவு தான்ய விற்பனையில் ஊக வர்த்தகத்தில் ஈடுபடும் பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள் தாங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக மேற்கொள்ளும் இழிநடவடிக்கைகளாகக் கீழ்க்கண்டவற்றைக் கூறலாம். அரசாங்கங்கள் தங்கள் மக்களைக் காப்பாற்றுவதற்காகவும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காகவும் உணவு தான்யங்களை போதுமான அளவிற்கு இருப்பு வைத்துக்கொள்ளாமல் செய்துவிடும். அடுத்து, விலைவாசி விண்ணைமுட்டும் சமயத்தில் பொருள்களை வெளிக்கொணரக் கூடிய வகையில் தனியார் வர்த்தகர்கள் போதுமான அளவிற்கு உணவுதான்யங்களை இருப்பு வைத்துக் கொள்வர். மூன்றாவதாக, ஏறும் விலைவாசியிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கங்கள் பொது விநியோக முறையை அமல்படுத்தக்கூடாது. ஏனெனில் அப்போதுதான் மக்களின் வயிற்றிலடித்து கொள்ளை லாபம் ஈட்ட முடியும். எனவேதான், நம் மக்களை சர்வதேச ஊக வர்த்தக நடைமுறையால் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்ற ஒரே வழி, அரசாங்கம் உடனடியாக அத்தியாவசியப் பொருள்கள் மீது ஊகவர்த்தக நடைமுறையை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், தன்னுடைய ஆட்சியின் இறுதி ஆண்டில் அடிஎடுத்து வைத்திருக்கிறது. இப்போதாவது அரசு, சாமானிய மக்கள் ஒரு நாகரிகமான வாழ்க்கை வாழக்கூடிய வகையில் தன்னுடைய பொறுப்புக்களை நிறைவேற்ற முன்வர வேண்டும். மேலே கூறப்பட்ட கோரிக்கைகளை அரசை நிறைவேற்ற வைக்கக்கூடிய அளவிற்கு வெகுஜன போராட்டங்களை வலுப்படுத்திடுவோம்.(தமிழில்: ச. வீரமணி)

No comments: