Sunday, March 23, 2008

இடதுசாரிக் கட்சிகளின் கருத்தொற்றுமை - செயல் ஒற்றுமையேஇடதுசாரி இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குக் காரணம்

ஹைதராபாத், மார்ச் 23-
இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் இருந்த கருத்தொற்றுமையும், செயல் ஒற்றுமையுமே, கடந்த மூன்றாண்டுகளில் நமக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குக் கணிசமான காரணிகளாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
ஆந்திர மாநிலம் தலைநகர் ஹைதராபாத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மாநாட்டை வாழ்த்தி பிரகாஷ்காரத் உரைநிகழ்த்தும்போது இவ்வாறு கூறினார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:
‘‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாட்டின் பங்கேற்றுள்ள அனைத்துப் பிரதிநிதிகளுக்கும், விருந்தினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பில் என் இதயங்கனிந்த தோழமை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பொதுவான வரலாற்றிற்கு நம் இரு கட்சிகளுமே இணையாக பங்களிப்பினைச் செய்துள்ளது. இவ்வாறு, நம் இருவருக்கும் இடையே தனி பிணைப்புண்டு. இந்தப் பிணைப்புதான் சமீபகாலங்களில் உறுதியாக முன்னுக்கு வந்து, நாட்டின் இடதுசாரி சக்திகள் எதிர்கொண்ட சவால்களை இணைந்து நின்று எதிர்த்திட துணைபுரிந்திருக்கிறது. இன்று, மாவீரன் தியாகி பகத்சிங் தூக்கிலிடப்பட்ட 77ஆவது நினைவுதினமாகும். சோசலிசத்தைத் தழுவிக்கொண்ட, ஏகாதிபத்திய எதிர்ப்பு இளம் போராளிகளில் முன்னணியில் நின்ற ஒப்புயர்வான இளைஞர்களில் பகத்சிங்கும் ஒருவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவருடைய பாரம்பர்யம்தான், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியான நிலைபாட்டினை எடுத்திட, நம் இரு கட்சிகளுக்குமே தத்துவ வல்லமையைத் தந்திருக்கிறது.
ஹைதராபாத்தில் நாம் இங்கே கூடியிருக்கும் அதே சமயத்தில், உலக முதலாளித்துவ முறையானது கடும் சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார நிலைமை மந்த நிலைமையை நோக்கி வெகு வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. அதன் ஆழத்தை இதுவரை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. முதலாளித்துவ உலகில் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியானது மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீதிக்கு வந்துள்ளார்கள்.உலக நிதி மூலதனம் குறித்தும், ஏகாதிபத்திய உலகமயம் குறித்தும் கம்யூனிஸ்ட்டுகளாகிய நமக்கு எந்தவிதப் பிரேமையோ மாயையோ கிடையாது. இந்தியாவில் திணிக்கப்பட்டு வந்த நவீன தாராளமயக் கொள்கைகளை நாம் விடாப்பிடியுடன் எதிர்த்தே வந்திருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், நாம் மத்திய அரசின் முழுமையான மூலதனக் கணக்கு நாணய மாற்றுக்கு நாம் அளித்துவந்த எதிர்ப்பின் காரணமாகவே, உலகமய நிதி மூலதனத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, அதே வேகத்தில் நம் நாட்டையும் தாக்காது நம் நாட்டைப் பாதுகாத்திருக்கிறது என்பது இங்கு நாம் குறித்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். நிதி நெருக்கடியின் அழிவிளைவுகளிலிருந்து கணிசமான அளவிற்கு நம் நாட்டைப் பாதுகாத்திருக்கிறோம் என்றால் அதற்கு, நாம் நம் நாட்டில் கட்டுப்பாடற்ற முறையில் மூலதன இறக்குமதியை அனுமதிக்காததே காரணமாகும்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மூன்று ஆண்டுகளுக்கு முன் தங்கள் அகில இந்திய மாநாடுகளை நடத்தின. கடந்த மூன்றாண்டுகளில் நாம் நடந்து வந்தப் பாதையைச் சற்றே திரும்பிப் பார்த்தோமானால், இடதுசாரி இயக்கம், மிகவும் வலுவான முறையிலும் ஆக்கபூர்வமாகவும் முன்னேறியிருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். இடதுசாரி இயக்கம் மதச்சார்பின்மையைப் பாதுகாத்திடவும், பிரிவினைவாத மற்றும் மிகவும் கேடுபயக்கவல்ல பாஜக/ஆர்எஸ்எஸ் மதவெறி அரசியலுக்கும் எதிராக உறுதியாக நின்றிருக்கிறது. நாட்டில் மதவெறிக்கு எதிராக உறுதியானப் போராட்டத்தை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், மதவெறி அரசியலையை தனிமைப்படுத்தி, மக்களை மதச்சார்பற்ற மாண்புகளைப் பாதுகாக்கும் வண்ணம் அணிதிரட்டியும் இருக்கிறோம். இதனை மேற்குவங்கம், கேரளம், திரிபுராவில் நன்கு காண முடியும்.
வரவிருக்கும் காலங்களில், இந்துத்வா சக்திகளுக்கு எதிராக அரசியல்ரீதியாகவும், தத்துவார்த்தரீதியாகவும் நம் போராட்டத்தினை நாம் மேலும் இரட்டிப்பாக்கிட வேண்டும். அதன் மூலம் அது மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான பாதையை முற்றிலுமாக அடைத்திட வேண்டும்.
கடந்த மூன்றாண்டு காலமாக, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அனைத்து அம்சங்களிலும் இடதுசாரி இயக்கம் முன்னின்று மக்களைக் காத்திருக்கிறது. அது, விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்துள்ள விவசாய நெருக்கடியாக இருந்தாலும் சரி, விவசாயத் தொழிலாளர்களுக்கும் நாட்டுப்புற மக்களுக்கும் வேலையில்லா நிலைமை ஏற்பட்டபோதும் சரி, பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகளும் சிறுதொழில் பிரிவுகளும் மூடப்பட்டு தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டபோதும் சரி, பெண்களின் வேலை நிலைமைகள் மோசமாகிக்கொண்டிருக்கும் போதும் சரி, தலித் மற்றும் பழங்குடியினர் பொருளாதார நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையிலும் சரி, மக்களின் வாழ்க்கைத்தரத்தை விஷம்போல் ஏறிவரும் விலைவாசி உறிஞ்சிடும் நிலையிலும் சரி - இடதுசாரி இயக்கம் மக்களின் நலன்களைக் காப்பதற்காக முன்னணியில் நின்றதோடு மட்டுமல்லாமல், மக்களின் நலன்களைக் காத்திட மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து போராடியும் வந்துள்ளது.
தீண்டாமைக் கொடுமை, சாதிய ஒடுக்குமுறை, பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்திடவும் இடதுசாரி இயக்கத்தின் போராட்டம் கடந்த காலங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் மக்களுக்குக் கேடுபயக்கும் பல கொள்கைகளைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறது. அது, நிதித்துறையின் கட்டுப்பாட்டை அந்நிய மூலதனத்திற்கு ஒப்படைக்க இருந்த முயற்சியாக இருந்தாலும் சரி, அல்லது சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் நடவடிக்கையாக இருந்தாலும் சரி, அல்லது, ஓய்வூதிய நிதியை தனியாரிடம் தாரை வார்த்திட மேற்கொண்ட முயற்சியாக இருந்தாலும் சரி, அல்லது, தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி - அனைத்திலும் இடதுசாரிக் கட்சிகள் உறுதியுடன் நின்று அவற்றைத் தடுத்து நிறுத்தி, மக்களைக் காத்திருக்கின்றன.
நிறைவாக, இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் இடதுசாரி இயக்கம் பாதுகாப்பு அரணாக நின்றிருக்கிறது. பாஜக பாணி தேசியவாதிகள் வெட்கங்கெட்ட முறையில் அமெரிக்காவைத் தங்களின் ‘‘இயற்கையான பங்காளிகள்’’ என்று வாய்கூசாமல் சொல்லிய அதே சமயத்தில், தற்போதைய ஆட்சியாளர்களும் ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் போர்த்தந்திரக் கூட்டணியை மேற்கொள்ள ஆவலுடன் முயற்சித்த அதேசமயத்தில், இடதுசாரி இயக்கம் மட்டுமே அமெரிக்காவுடன் எவ்விதப் போர்த்தந்திர கூட்டணியையும் உறுதிபட எதிர்த்து நின்றிருக்கிறது. இவ்வாறாக நம் எதிர்ப்பை - அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் போர்த்தந்திரம் - என அனைத்து முன்னணியிலும் உறுதிபட மேற்கொண்டு, நாட்டின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பாதுகாத்து வந்திருக்கிறோம். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிக் கட்சிகள் முன்னணியில் இருந்து வருகிறது. அமெரிக்காவுடனான, மத்திய அரசின் ராணுவக் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும் நாம் நம் போராட்டத்தைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளோம். அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாக இந்தியாவை மாற்ற முயற்சிக்கும் அனைத்து முயற்சிகளுக்கு எதிராகவும் இடதுசாரி இயக்கம் வலுவாகப் போராட வேண்டிய நிலையில் உள்ளது.
இந்தியாவின் 1.1 பில்லியன் (110 கோடி) மக்கள், சமீப காலத்தில் ஏராளமான பில்லியனர்களை உருவாக்கிவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக செல்வத்தைப் பெற்றிருக்கும் பணக்காரர்களில் இநதியாவில் 48 பேர் இருக்கிறார்கள். அதாவது ஒரு பில்லியனர் என்றால் அவருக்கு சுமார் 4000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து இருக்கிறது என்று பொருள். நாட்டில் 77 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உழைக்கும் மக்களின் ஊதியம் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட இல்லாத நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் குறிக்கோள் இவ்வாறு பில்லியனர்களை உருவாக்கும் ஒன்றாக நிச்சயம் இருந்திட முடியாது.
எனவே, மாற்றுப் பாதைக்கான போராட்டத்தை நாம் முன்னிலும் சக்தியுடனும் வீர்யத்துடனும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். வரவிருக்கும் காலங்களில் உழைக்கும் மக்களின் போராட்டத்தையும் வர்க்கப்போராட்டத்தையும் மேலும் கூர்மையாகவும் தீவிரமாகவும் கொண்டு சென்றிடுவோம். இதன் அடிப்படையில்தான் இடதுசாரி இயக்கமும் வலுப்பட்டு வளரும்.
இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் இருந்த கருத்தொற்றுமையும், செயல் ஒற்றுமையுமே, கடந்த மூன்றாண்டுகளில் நமக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குக் கணிசமான காரணிகளாகும். இவ்வாறான ஒற்றுமையை ஏற்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட அணுகுமுறையும் ஒருங்கிணைப்பும் முக்கியமான பங்களிப்பினைச் செய்திருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை, சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பதென்பது அப்படி ஒன்றும் இயல்புமீறிய ஒன்றல்ல. ஆனாலும், இடதுசாரி ஒற்றுமையைச் சீர்குலைக்கும் காரியம் எதனையும் செய்திடக் கூடாது. அதனைத்தான் ஏகாதிபத்திய வட்டாரங்களும், ஆளும் வர்க்கங்களும் விரும்புகின்றன. இடதுசாரி ஒற்றுமையை அடித்தளமாகக் கொண்டு, நம் எதிர்கால முன்னேற்றம் அமைந்திடும். இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உளப்பூர்வமாக உழைத்திடும் என்று, எங்கள் கட்சியின் சார்பில் அகிலஇந்திய மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். அதேசமயத்தில், நாட்டில் உள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பதற்கும் நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு மக்கள் முன், ஒரு மூன்றாவது மாற்றை உருவாக்கி முன்னிறுத்த வேண்டிய தேவையும் இடதுசாரி இயக்கத்தின் தோள்கள் மீது விழுந்துள்ளன.அகில இந்திய மாநாடு அனைத்து வெற்றிகளையும் பெற்றிட வாழ்த்துகிறேன். நம் இரு கட்சிகளும் மேலும் ஒற்றுமையுடன் மேலும் ஒத்தக் கருத்துக்களுடன் ஒன்றிணைந்து முன்னேறுவோம்.’’
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
(ச. வீரமணி)

No comments: