புதுடில்லி, மார்ச் 4-
‘வறுமைக் கோட்டுக்குக் கீழ்’, ‘வறுமைக்கோட்டுக்கு மேல்’ என்று மோசடியான பாகுபாடுகளைச் சொல்லி நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கு பொது விநியோக முறையை இல்லாது ஒழித்திடும் அரசின் செயலைக் கண்டித்தும், அனைவருக்கும் எவ்விதப் பாகுபாடுமின்றி பொது விநோயக முறையில் உணவுப் பொருள்களை வழங்கக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது.
தலைநகர் புதுடில்லியில் உள்ள மாவலங்கார் அரங்கத்திற்கு அருகில் செவ்வாயன்று காலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஏழைகளை ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி நிராகரித்திடும் மோசடியான வறுமைக்கோட்டுக்குக் கீழ் குறியீட்டை எதிர்த்து தேசிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் சுபாஷினி அலி தலைமை வகித்தார். சிறப்பு மாநாட்டை புதுடில்லி, ஜவஹர்லால் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் உத்சா பட்நாயக் துவக்கி வைத்து உரையாற்றினார். பின்னர் மாநாடுத் தீர்மானத்தை முன்மொழிந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘மத்திய அரசாங்கம் மிகவும் மோசடியான முறையில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களை அடையாளப்படுத்தி, பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு பொது விநியோக முறையிலான குடும்ப அட்டைகள் தராமல் நீக்கியுள்ளது. இதனால் நாட்டில் பெரும்பகுதி ஏழை வறிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு தான்யங்கள், பொது சுகாதாரம், கல்வி, ஓய்வூதியம், வீட்டு வசதித் திட்டங்கள் மற்றும் ஏராளமான அரசுத் திட்டங்களின் பயன்கள் கிடைத்திட வில்லை. சமீபத்தில் வெளியான தேசிய மாதிரி சர்வே அறிக்கையானது, கிராமப்புறங்களில் உள்ள தலித் குடும்பங்களில் 61 சதவீதம், பழங்குடியினர் குடும்பங்களில் 55 சதவீதம், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களில் 52 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டைகளைப் பெறவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ், வறுமைக்கோட்டுக்கு மேல் என்று குறியீடு நிர்ணயித்திருப்பது ஒரு மோசடி என்று இச்சிறப்பு மாநாடு கருதுகிறது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் தூண்டுதலால் அரசு மக்களுக்கு அளிக்கும் மான்யங்களை குறைப்பதற்காக இவ்வாறு மோசடியான முறையில் மத்திய அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. திட்டக் கமிஷன் மதிப்பீட்டின்படி நாட்டில் 22 சதவீத மக்களே வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள். அரசின் புள்ளி விவரங்கள் அனைத்தும் தவறானவைகளாகும். வறுமை குறைந்து விட்டது என்கிற அரசின் கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். திட்டக்கமிஷன் மதிப்பீடுகள் மோசடியானவை என்று நாங்கள் கூறுகிறோம். 1979ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கலோரி அடிப்படையிலான வறுமைக்கோட்டின் மீது அவ்வாறு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்படி, தற்போதைய வறுமைக்கோடு என்பது ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 327 ரூபாய் கிராமப்புறத்திலும், 454 ரூபாய் நகர்ப்புறத்திலும் வருமானத்திற்குக் கீழ் உள்ளவர்கள் மட்டுமே. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் ஆண்களுக்கு 3800 கலோரி அளவும், பெண்களுக்கு 2925 கலோரி அளவும் உணவு தேவை என்று கூறியிருக்கிறது. ஆனால் இதனையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அரசு வறுமைக்கோட்டை நிர்ணயித்திருக்கிறது. மேலும் இது காலாவதியாகிப்போன ஒன்று.
அத்தியாவசியப் பொருள்கள் பலவற்றின் விலை விஷம்போல் உயர்ந்திருக்கிறது. ஆனால் 1999-2000இல் இருந்த விலைவாசியை வைத்து வறுமைக்கோடு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் விநியோகம் செய்ய வேண்டிய குடும்ப அட்டைகள் குறித்து திட்டக்கமிஷன் தான்தோன்றித்தனமாக எண்ணிக்கையை நிச்சயித்திருக்கிறது. இதன் விளைவாக உண்மையில் வறுமைக்கோட்டுக் கீழ் உள்ள பெரும்பாலோருக்கு குடும்ப அட்டைகள் கிடைக்கவில்லை. பல மாநிலங்களில் குடும்ப அட்டைகள் மிகவும் குறைவாகவே விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. திட்டக்கமிஷன் கணக்கீட்டை விட அதிகமான அளவிலேயே மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள் என்று அரசின் பல்வேறு ஆய்வுகள் மெய்ப்பித்திருக்கின்றன.
சமீபத்திய அர்ஜூன் சென் குப்தா குழு அறிக்கையானது, முறைசாராத் தொழிலாளர்களில் 77 சதவீதத்தினரும், தலித் மற்றும் பழங்குடியினரில் 88 சதவீதத்தினரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 80 சதவீதத்தினரும், முஸ்லீம்களில் 84 சதவீதத்தினரும் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் உள்ளவர்கள் என்று கூறியிருக்கிறது. சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார சர்வேயின்படி, மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளில் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை, போதிய எடையின்றி இருப்பதாகக் கூறியிருக்கிறது. அவர்கள் போதுமான அளவு உண்ணாததே இதற்கெல்லாம் காரணமாகும். நம் நாட்டில் பெரும் பகுதி மக்கள் ஏழைகளாகவும், போதிய போஷாக்கின்றியும் உழன்றுகொண்டிருக்கும் நிலையில், அவர்களை மேலும் மோசமான முறையில் பாதிக்கக்கூடிய வகையில், ‘‘வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள்’’ என்றும், ‘‘வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள்’’ என்றும் பிரிப்பது கொடுமையிலும் கொடுமையாகும். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதற்கு வகை செய்யும் இழி செயலாகும். மேற்படி அதே சர்வேயின்படி 59 சதவீத மக்களுக்கு நிரந்தர வீடு கிடையாது, 58 சதவீதத்தினருக்கு குடிதண்ணீர் வசதி கிடையாது, 55 சதவீதத்தினருக்கு கழிப்பிட வசதி கிடையாது, 32 சதவீதத்தினருக்கு மின்வசதி கிடையாது. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் அரசு வறுமைக்கோடு சம்பந்தமாக அளித்திடும் புள்ளி விவரங்கள் அனைத்தும் யதார்த்த உண்மைகளுக்கு சம்பந்தமில்லாதவை என்பது தெளிவாகும்.
எனவே, ஏழைகளை இவ்வாறு பிரித்து அவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதை ஒருபோதும் அனுமதியோம். இதனை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறோம். ‘‘வறுமைக்கோட்டுக்குக் கீழ்’’ குறித்த திட்டக் கமிஷனின் மோசடியான கருத்தாக்கத்தை கடுமையாக எதிர்க்கிறோம்.திட்டக்கமிஷன் நாட்டு மக்களின் வறுமை நிலை குறித்து உண்மையான முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், நாட்டு மக்கள் அனைவருக்கும் எவ்வித பேதமுமின்றி பொது விநியோக முறையில் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்றும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்கிற நிலைபாட்டினை வைத்து சுகாதாரம், கல்வி, ஓய்வூதியம், மற்றும் அரசுத் திட்டங்கள் பலவற்றிலிருந்து அப்புறப்படுத்தப்படுவதை நீக்கிட வேண்டும் என்றும் கோருகிறோம்.இவ்வாறு சுதா சுந்தரராமன் பேசினார். பின்னர் தீர்மானத்தின் மீது பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த பிரதிநிதிகளும் உரையாற்றினார். மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நிறைவுரையாற்றினார்.மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சட்ட உதவி மைய மாவட்ட செயலாளர் ஆர். ராஜலட்சுமி தலைமையில் புவனேஸ்வரி, ஆதிலட்சுமி, பேபி, ஞானம், விஜயகுமாரி, சுமதி, பானுமதி முதலானோர் வந்திருந்தார்கள்.
(தொகுப்பு: ச.வீரமணி.)
No comments:
Post a Comment