Tuesday, March 18, 2008

பொது விநியோக முறையில் பாரபட்சம் காட்டாதே--இடதுசாரிக் கட்சிகள் டில்லியில் தர்ணா


புதுடில்லி, மார்ச் 18-
பொது விநியோக முறையில் எவ்விதப் பாகுபாடும் காட்டாது அனைவருக்கும் உணவுப் பொருள்களை வழங்கக்கோரி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தர்ணா போராட்டம் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சி சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
பொது விநியோக முறையானது, உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றின் கட்டளைக்கிணங்க மத்திய அரசால் படிப்படியாக சிதைக்கப்பட்டு வருகிறது. பொது விநியோக முறையில் அளிக்கப்படும் குடும்பதாரர்களின் எண்ணிக்கையை வெட்டிச் சுருக்குமாறு உலக வங்கி - சர்வதேச நிதியத்தின் கட்டளைக்கிணங்க மத்திய அரசு பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை வாங்குவோரை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளோர் என்று பிரித்து நாட்டில் மிகப் பெரும்பாலோனோருக்கு பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை வழங்காது குறைத்துள்ளது. இதனால் இதுநாள் வரை பொது விநியோக முறை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த மேற்கு வங்கம், கேரளம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பொது விநியோக முறையில் இதுவரை அளித்து வந்து உணவுப் பொருள்களின் அளவையும் மத்திய அரசு கடுமையாக வெட்டிச் சுருக்கியுள்ளது. கேரள மாநிலத்திற்கு இதுவரை அளித்து வந்த அரிசியின் அளவில் 80 சதவீதத்தையும், மேற்கு வங்கத்திற்கு இதுவரை அளித்து வந்த கோதுமையின் அளவில் 50 சதவீதத்தையும் இவ்வாறு வெட்டிச் சுருக்கி இருக்கிறது. மத்திய அரசின் இத்தகு நடவடிக்கையைக் கண்டித்தும், பொது விநியோக முறையில் எவ்விதப் பாகுபாடும் காட்டாது அனைத்துக் குடும்பத்தினருக்கும் அத்தியவாசியப் பண்டங்களை அளித்திட வலியுறுத்தியும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளபடிம 25 வேளாண் பண்டங்களுக்கு முன்பேர ஊக வர்த்தக முறையைத் தடை செய்திடக் கோரியும், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விலை உயர்த்தப்படாமல் இருப்பதற்காக எண்ணெய் இறக்குமதிக்கு சுங்கம் மற்றும் கலால் வரிகளை ரத்து செய்யக்கோரியும், அத்தியாவசியப் பண்டங்களைப் பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஒழித்துக்கட்டப்பட்ட இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தின் பல்வேறு முக்கிய ஷரத்துக்களை மீண்டும் கொண்டுவரக் கோரியும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் செவ்வாய் காலை புதுடில்லி, நாடாளுமன்ற வீதியில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதபிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அபானிராய் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிருந்தாகாரத், விஜயராகவன், து. ராஜா, அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, மேற்கு வங்க சிபிஎம் மாநில செயலாளர் பிமன் போஸ், மற்றும் இடதுசாரிக் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பின்னர் சீத்தாராம் யெச்சூரி, தேவபிரத பிஸ்வாஸ், முகமது சலீம் தலைமையில் பிரதமரின் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப் பட்டது.
--

No comments: