இன்றியமையாப் பண்டங்களின் விலைகள் தொடர்ந்து கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது. சமீபத்தில மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் தலைநகரில் நடத்திய பேரணி/ஆர்ப்பாட்டம், மீண்டும் ஒருமுறை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட, ஐக்கிய முற்போக்கு அரசு மிக மோசமான முறையில் தோல்வி கண்டுவிட்டது என்பதை உயர்த்திப்பிடித்தது.இவ்வாறு எகிறிக்கொண்டே செல்லும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் மூன்று முக்கிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கோரி வருகிறது. முதலாவதாக, வேளாண் செலவினம் மற்றும் விலைகளுக்கான அடையாளம் காட்டியுள்ள 24 இன்றியமையாப் பண்டங்களை ஊக வர்த்தகத்தில் ஈடுபடுத்துவதைத்தடை செய்ய வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழுவும் கூட, 25 வேளாண் பண்டங்கள் குறித்து, ஊக வர்த்தகத்தைத் தடை செய்திட வேண்டும் என்று தனியே கோரியிருக்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் அதிகாரமட்டத்திலான ஆய்வானது, மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாகியிருப்பதுதான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்று கூறியிருப்பது பிழையானதாகும். ஊக வர்த்தகத்தில் மிகவும் விரிவான முறையில் ஏற்படும் ஊகமே இன்றியமையாப் பண்டங்களின் விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணமாகும். இத்தகு ஊக வணிகத்தினால், உணவு தான்யங்களின் விலைகள் உலக அளவில் உயர்ந்து கொண்டு செல்கிறது. இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தின் விளைவாக, மத்திய அரசு, பயறு மற்றும் பருப்பு வகைகள், அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றினை, ஊக வர்த்தகச் சந்தையிலிருந்து நீக்கி இருக்கிறது. ஆயினும், சமையல் எண்ணெய் உட்பட மற்ற அனைத்து இன்றியமையா இனங்களையும் ஊக வர்த்தகத்திலிருந்து தடை செய்தாலொழிய, இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட முடியாது.
இரண்டாவதாக, மாநிலங்களுக்கு பொது விநியோக முறையில் அளித்து வந்த உணவு தான்யங்களின் விநியோகத்தைக் கடுமையான முறையில் வெட்டிச் சுருக்கிட மத்திய அரசு தீர்மானித்திருப்பதும், இப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல், விலைவாசியை மேலும் கடுமையாக உயர்த்திவிட்டது. நாம் இப்பகுதியில் முன்பே சுட்டிக்காட்டியிருப்பது போல, கேரளாவிற்கு அளித்து வந்த உணவு தான்யத்தின் அளவு மிகப் பெரிய அளவில் - சுமார் 82 சதவீதத்திற்கும் அதிகமாகவும், மேற்கு வங்க மாநிலத்திற்கு 44 சதவீத அளவிற்கும் வெட்டப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்திற்கு, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 139 லட்சம் டன் உணவு தான்யங்களின் விநியோகம் வெட்டப்பட்டிருக்கிறது. கேரளாவில், 49 லட்சத்து 40 ஆயிரம் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு 1 லட்சத்து 13 ஆயிரத்து 420 டன்கள் அரிசி வழக்கமாக விடுவித்து வந்தது. ஆனால், அது இப்போது 21 ஆயிரத்து 334 டன்கள் என்ற அளவிற்கு - சுமார் 90 சதவீத அளவிற்கு - கடுமையான முறையில் வெட்டப் பட்டிருக்கிறது. கேரளம், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் மாதம்ஒன்றுக்கு 35 கிலோ அரிசி கொடுக்கிறது. இதற்கு 1 லட்சத்து 72 ஆயிரத்து 900 டன்கள் அரிசி தேவை. ஆனால், மத்திய அரசு வெறும் 20 ஆயிரம் டன்களுக்கும் கொஞ்சம் அதிகமான அளவில் அரிசியை விடுவித்திருக்கிறது.
திரிபுரா மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்டு வந்த உணவு தான்யங்களின் அளவும் கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட்டிருக்கிறது. அரசின் இத்தகு நடவடிக்கையானது, பொது விநியோக முறையை சின்னபின்னமாக்கி, உணவுப் பாதுகாப்பை இடருக்கு உட்படுத்திடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ‘பல மாநில அரசுகள் தங்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகளைச் சரிவரப் பயன்படுத்தாததால்தான் இவ்வாறு பொருள்களின் விநியோகம் குறைக்கப்பட்டிருக்கிறது’ என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறது. சில மாநிலங்களைப் பொறுத்து இது உண்மையாக இருக்கலாமே ஒழிய, இடதுசாரிகள் தலைமையில் உள்ள எந்த மாநிலமும் இந்த வகையறாவின் கீழ் வர வாய்ப்பே இல்லை. இன்னும் சரியாகச் சொல்வதெனறால், பொது விநியோக முறை மிகவும் சிறப்பாகச் செயல்படுவதே இடதுசாரிக் கட்சிகள் தலைமையில் உள்ள மாநிலங்களில்தான். பிரதமரைச் சந்தித்த, இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் தூதுக்குழு, இம்மாநிலங்களுக்கு எப்போதும் விநியோகித்து வந்த உணவு தான்யங்களின் அளவு மீண்டும் வழங்கப்படுவதற்குத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்திருக்கிறது.மூன்றாவதாக, நாட்டு மக்களில் மிகப் பெரும்பான்மையோரின் வருமானத்தில் பெரும்பான்மையான பங்கை விழுங்கிடும் இவ்விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட வேண்டுமானால், அதற்கு பொது விநியோக முறையின் கீழ் வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு என்றும் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு என்றும் பிரிக்காது இன்றியமையாப் பண்டங்களை அனைவருக்கும் அளித்திட வேண்டும். மாறாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது, பொது விநியோக முறையின் கீழ் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களை முற்றிலுமாக ஒழித்திட வேண்டும் என்பகைக் குறியாகக் கொண்டு, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் உணவு தான்யங்களை விநியோகிக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னப்படுத்திவிடும். இது, நாட்டு மக்களின் பெரும்பகுதியினருக்கு உணவுப் பாதுகாப்பின்மையை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே உயர்ந்துள்ள பண்டங்களின் விலையை மேலும் மோசமான முறையில் உயர்த்திடும்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட வேண்டும் என்று மத்திய அரசு உண்மையிலேயே கருதுமானால், மேற்கண்ட மூன்று நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் விலைவாசியைக் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, இடதுசாரிக் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்ப்பு ஒரு தொடக்கம் மட்டுமே. வரவிருக்கும் காலங்களில் இது மேலும் தீவிரமாகும்.
தமிழில்: ச. வீரமணி
No comments:
Post a Comment