Saturday, March 29, 2008

வரலாற்றின் திருப்புமுனையாக சிபிஎம் மாநாடு அமையும்

மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் அகில இந்திய மாநாடு கோயம்பத்தூரில் துவங்கியுள்ளது.எந்த ஒரு கம்யூனி°ட் கட்சிக்கும், குறிப்பிட்ட கால இடைவெளியில் - மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியைப் பொறுத்தவரை மூன்றாண்டு கால இடைவெளியில் - கூடும் ‘கட்சி காங்கிர°’ என்னும் அகில இந்திய மாநாடு, கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கான முடிவுகளை மேற்கொள்வதற்கான உச்சபட்ச அமைப்பாகும். அகில இந்திய மாநாடுதான், அடுத்த மாநாடு நடைபெறும் வரை உச்சபட்ச முடிவுகளை மேற்கொள்வதற்கான மத்தியக் குழுவைத் தேர்ந்தெடுக்கும். இயல்பான சூழ்நிலைகளில், மூன்று மாதங்களுக்கொரு முறை கூடும் மத்தியக்குழுவானது கூட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் செயல்படுவதற்காக ஒரு பொதுச்செயலாளரையும், ஓர் அரசியல் தலைமைக்குழுவையும் தேர்வு செய்கிறது. கட்சியின் அகில இந்திய மாநாடு, ஒரு மத்திய கண்ட்ரோல் கமிஷனையும் தேர்வு செய்கிறது. இது கட்சியில் ஒழுங்கு நடவடிக்i எடுக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்தால் அவற்றை விசாரித்து, முடிவுகளை வழங்கும்.கட்சி காங்கிரசின் பிரதிநிதிகள் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் உள்கட்சி ஜனநாயக வழிமுறைக்கு இணங்கத் தெரிவு செய்யப்படுகிறார்கள். கட்சி °தாபனத்தின் அடிப்படைப் பிரிவுகளாக இருக்கின்ற ஒவ்வொரு கிளையும் ஒரு பிரதிநிதியை தனக்கு அடுத்த வட்டக்குழு அல்லது வட்டாரக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கிறது. இந்த வட்டக்குழு அல்லது வட்டாரக்குழு மாநாடு நடத்தி மாவட்ட மாநாட்டுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறது. மாவட்ட மாநாட்டுப் பிரதிநிதிகள் மாநில மாநாட்டுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்கிறார்கள். நிறைவாக மாநில மாநாட்டுப் பிரதிநிதிகள் அகில இந்திய மாநாட்டுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மாநாடுகளில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையாது, கட்சி உறுப்பினர் எண்ணிக்கையின் வலுவின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு கட்சி காங்கிரசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளே, கட்சியின் தலைமை மற்றும் கட்சியின் அற்புதமான செயல் வீரர்களுமாவார்கள்.கட்சியின் அகில இந்திய மாநாடானது, சென்ற மாநாட்டுக்குப் பின் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளின் மீது கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலம் - பலவீனம் இரண்டையும் மதிப்பீடு செய்து, அடுத்த மூன்றாண்டு காலத்திற்கான உத்திகளையும் வரையறுத்திடும். முக்கியமாக, சென்ற மாநாட்டில் வடித்தெடுக்கப்பட்ட அரசியல் நிலை மற்றும் உத்திகள் குறித்து ஆய்வு செய்யும் அதே சமயத்தில், அடுத்த கட்சி காங்கிர° நடைபெறும் வரையிலான அரசியல் நிலை மற்றும் உத்திகளையும் தீர்மானித்திடும். இவை அனைத்தும் அரசியல் தீர்மானம் மற்றும் அரசியல் - °தாபன அறிக்கை மீது பிரதிநிதிகளின் விவாதத்தினைத் தொடர்ந்து நிறைவேற்றப்படும் முடிவுகளின் அடிப்படையில் அமைந்திடும்.கட்சியின் அமைப்புச் சட்டத்தின்படி அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் வரைவு, மத்தியக்குழுவால் உருவாக்கப்பட்டு, மாநாடு நடைபெறுவதற்கு இரு மாதங்களுக்கு முன்பே, கட்சி அணிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சி உறுப்பினரும், வரைவு தீர்மானத்தின் மீது திருத்தங்களை மத்தியக்குழுவிற்கு நேரடியாக அனுப்புவதற்கு உரிமை படைத்தவர்களாவார்கள். இந்தத்தடவை, மத்தியக் குழுவானது இவ்வாறு கட்சி உறுப்பினர்களிடமிருந்து 4,061 திருத்தங்களையும், 713 ஆலோசனைகளையும் பெற்றிருக்கிறது. இதுவன்னியில், தனியாக கட்சி காங்கிர° பிரதிநிதிகளும் மாநாட்டில் தங்கள் திருத்தங்களைத் தர உரிமை உண்டு. மத்தியக்குழு, கட்சி காங்கிர° நடைபெறுவதற்கு முன்பு வந்துள்ள அனைத்து திருத்தங்கள் மற்றும் ஆலோசனைகள் ஏற்புடையனவா, அல்லவா என்பது குறித்து ஓர் அறிக்கையை மாநாட்டில் முன்வைக்கும். இது ஒரு முக்கியமான அறிக்கையாகும். ஏனெனில் கட்சி அணிகளின் சிந்தனையோட்டத்தையும், கடந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கட்சியின் அரசியல் நிலை எந்த அளவிற்கு அமல்படுத்தப் பட்டிருக்கிறது அல்லது இல்லை என்பதையும், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய கட்சியின் திசை வழி எப்படி இருக்கவேண்டும் என்பதையும் இது பிரதிபலிக்கிறது. உறுப்பினர்களால் அனுப்பப்படும் திருத்தங்களை, கட்சியின் நிலைபாட்டிற்கு எதிரான ஒன்றாகக் கருதிடாமல், உறுப்பினர்களின் கூட்டு முயற்சியின்மூலம் கட்சியின் நிலைபாட்டை வெளிப்படுத்தும் ஒரு காரணியாகவே மார்க்சி°ட் கட்சி இதனைப் பார்க்கிறது. அடுத்து, கட்சி காங்கிர° மேற்கொள்ளும் நடைமுறை உத்திகளை, அதன் இறுதி இலட்சியத்துடன் சரியான முறையில் பொருத்துவதே மிகவும் முக்கியமானது. மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் இறுதி லட்சியம் என்பது, கட்சித் திட்டத்தில் இன்றைய கட்டம் குறித்து வரையறை என்பதன் கீழ் கூறப்பட்டுள்ளதுபடி, மக்கள் ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதென்பதாகும். இது, பின்னர் சோசலிசப் புரட்சியை நிறைவு செய்வதை நோக்கிச் மாறிச் செல்வதற்கான இடைக்கட்டமாக அமைந்திடும். மக்கள் ஜனநாயகப் புரட்சி முதலாளித்துவத்திற்கு முந்தைய பொருளாதார உற்பத்தி முறைகளின் மிச்ச சொச்சங்களை, முக்கியமாக நிலப்பிரபுத்துவத்தை, அழித்தொழித்திடவும், சுதந்திர இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுவித்திடவும் கோருகிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்காக நடைபெற்ற போராட்டத்தின்போதே இந்தப் பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆயினும், பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் இந்தியாவின் ஆளும் வர்க்கங்கள் - இந்தப் பணிகள் நிறைவுறும்போது உருவாகும் மக்கள் எழுச்சியானது, முதலாளித்துவத்திடமிருந்தே விடுதலையைப் பெற்றுத்தந்துவிடுமோ என்று பிரதானமாகப் பயந்து, ஒரு பக்கத்தில் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டு, மறுபக்கத்தில் நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டு சேர்ந்து கொண்டு விட்டது. மக்கள் ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதென்பது, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகபோக மூலதன எதிர்ப்புப் பணிகளை முழுமையாக எய்துவதன் மூலமே சாத்தியமாகும். பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் இன்றைய இந்திய அரசை, தொழிலாளா வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் அரசாக மாற்றியமைப்பதன் மூலமே இது சாத்தியமாகும். மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் திட்டத்தின்படி, மக்கள் ஜனநாயக முன்னணியால் - ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் பெரு முதலாளிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த அனைத்து வர்க்கங்களின் முன்னணியால் - மட்டுமே இதனை எய்திட முடியும். தொழிலாளர் வர்க்கம், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் புரட்சிகர ஒற்றுமையே இத்தகு வர்க்க முன்னணியின் கருவாக இருந்திடும். இதற்கான செயல்முறையை வர்க்கப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்துவதன் மூலமும் அதனைத் தொடர்ந்து முன்னுக்கு வருகின்ற அரசியல் போராட்டங்களின் அடிப்படையிலுமே முன்னெடுத்துச் செல்ல முடியும். மக்கள் ஜனநாயக முன்னணியை பலப்படுத்துவதற்கு, மக்கள் ஜனநாயக முன்னணி அமைவதை நோக்கி இட்டுச் செல்லக்கூடியவகையிலும், மக்கள் ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக எய்தக் கூடிய வகையிலும் கொண்டுசெல்லத்தக்க வகையில், இப்போது இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவேண்டும் என்று கட்சித் திட்டம் கூறுகிறது. ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள், தங்கள் வர்க்க ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்வதற்காக, இத்தகு புரட்சிகர நடைமுறை வெற்றி பெறுவதைத் தடுத்திட அனைத்து முட்டுக்கட்டைகளையும் போட முயல்வது இயற்கையே. ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலமாக இந்திய மக்களை விடுவிப்பதற்குப் பதிலாக, இந்தியப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் அந்த சக்திகள் வலுவடையக் கூடிய வகையிலேயே இந்திய ஆளும் வர்க்கங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே, மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் பணி என்பது, வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்தும் அதே வேளையில் இத்தகு ஆளும் வர்க்கத்தின் கொள்கைளையும் இடைவிடாது எதிர்த்திட வேண்டும் என்பதையும் முக்கியமான ஒன்றாகக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் வகுப்புவாதமும் புரட்சிக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்வதற்கு கூடுதல் அச்சுறுத்தலாக முன்வந்துள்ளதைப் பார்க்க வேண்டும். நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பினைப் பாதுகாத்திட வேண்டுமானால், இந்தியாவின் வளமான வேற்றுமைப் பண்புகளின் ரத்தமும் சதையுமாக உள்ள மதச் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்திட வேண்டுமானால், வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்திட வேண்டுமானால், மிகவும் முக்கியமாகச் செய்யவேண்டியது மதவெறியை எதிர்த்து முறியடித்திட வேண்டும். கம்யூனி°ட்டுகளைப் பொறுத்தவரை, கூடுதலாக ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது, புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒற்றுமையை வலுப்படுத்த நாம் முயற்சிக்கும்போது, மதவெறி சக்திகள் அத்தகைய ஒற்றுமையை தங்களுடைய மதவெறி பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக, சீர்குலைத்திட முயற்சிக்கின்றன. எங்கெல்லாம் மதவெறி சக்திகள் வலுவாக இருக்கின்றனவோ அங்கெல்லாம் சுரண்டப்படும் வர்க்கங்களை வர்க்க ரீதியாகத் திரட்டுவது என்பதும் கடினமான ஒன்று. எனவே, மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால், மதவெறி சக்திகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டங்களை நடத்துவதென்பது அவசியமாகிறது. ஆளும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டங்களையும், மக்கள்இயக்கங்களையும் இரக்கமற்ற முறையில் ஒடுக்கிட, வர்க்கச் சுரண்டலைத் தீவிரப்படுத்திட முனையும்போது, கம்யூனி°ட்டுகள் மற்றும் இடதுசாரி இயக்கத்திற்கு உரிய அரசியல் இடத்தை அளிப்பதற்கு மறுக்கின்றன அல்லது எந்த அளவுக்கு சாத்தியமோ அந்த அளவுக்குக் குறைத்திட முயற்சிக்கின்றன. மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளுக்கு தேசிய அரசியலிலும், மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் உள்ள அந்த°தானது, ஆளும் வர்க்கங்கள் மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிராக முன்னெடுத்துச் சென்ற வர்க்கப் போராட்டத்தின் மூலம் அடைந்திட்ட வெற்றிகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுவதை விரும்பாத அதே சமயத்தில், இந்திய சமூக வாழ்க்கையின் துல்லியமான நிலைமைகள் நாட்டில் பல்வேறு விதமான அரசியல் கட்சிகள் உருவாவதற்கும் செயல்படுவதற்கும் வழிவகுத்திருக்கின்றன. எண்ணற்ற முரண்பாடுகளின் விளைவாகவே, பல்வேறு விதமா ஆளும் வர்க்க கட்சிகள் ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்டிருப்பதை அரசியல் வானில் பார்க்க முடிகிறது. 1978இல் நடைபெற்ற மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் 10ஆவது அகில இந்திய மாநாடு, அவசரநிலைப் பிரகடனம் தோல்விகண்டதை அடுத்து, இத்தகைய ஆளும் வர்க்க கட்சிகளுக்கிடையே முரண்பாடுகள் கூர்மையாக முன்வந்த போது, ஒரு பக்கத்தில் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்திடுவதென்றும், மறு பக்கத்தில் ஆளும் வர்க்க கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு, புரட்சிகர இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதென்றும் தீர்மானித்தது. இத்தகைய உத்திகளைக் கடைப்பிடிப்பதன் அடிப்படையில்தான் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி தேசிய அரசியலில் குறிப்பிடத்தக்கதொரு சக்தியாக இன்றையதினம் வளர்ந்திருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், வர்க்கப் போராட்டங்களையும் இடதுசாரி சக்திகளையும் திறமையாக ஒன்றிணைத்து வலுப்படுத்துவதன் மூலமே மக்கள் ஜனநாயகத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். அதே சமயத்தில், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் மற்றும் இந்தியாவை ஏகாதிபத்தியம் தன்னுடைய ‘‘இளைய பங்காளியாக’’ மாற்ற முயலும் முயற்சிகளுக்கு எதிராகவும், இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பினை மதவெறியர்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்திடவும், நவீன தாராளமயக் கொள்கைகளினால் ஏவப்பட்டுள்ள பொருளாதாரத் தாக்குதல்களிலிருந்தும் மக்களைத் தற்காத்துக் கொள்ளச் செய்திடவும், மக்கள் நலஞ் சார்ந்த மாற்றுக்காகப் பாடுபடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சக்திகளின் ஒற்றுமையையும் வலுப்படுத்திட வேண்டியதும் அவசியமாகும். நாட்டின் நலன்களையும் நாட்டு மக்களையும் பாதுகாத்திட வேண்டுமானால், மாற்றுக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல ஒரு மூன்றாவது அரசியல் மாற்று தேவைப்படுகிறது. வரவிருக்கும் மூன்று ஆண்டு காலத்திற்கு மேற்கொள்ளவேண்டிய உத்திகள் குறித்து தீர்மானிக்க வேண்டியதே மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் 19ஆவது அகில இந்திய மாநாட்டின் நிகழ்ச்சிநிரலின் முக்கிய கருப்பொருளாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பணிகளை முழுமையாக எய்தும் திசைவழியில், நாட்டையும் நாட்டு மக்களையும் அழைத்துச் செல்வதென்பது, மாநாட்டில் வகுக்கக்கூடிய உத்திகளையே தவிர்க்கமுடியாத வகையில் சார்ந்திருக்கிறது.

தமிழில்:ச. வீரமணி

Sunday, March 23, 2008

இடதுசாரிக் கட்சிகளின் கருத்தொற்றுமை - செயல் ஒற்றுமையேஇடதுசாரி இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குக் காரணம்

ஹைதராபாத், மார்ச் 23-
இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் இருந்த கருத்தொற்றுமையும், செயல் ஒற்றுமையுமே, கடந்த மூன்றாண்டுகளில் நமக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குக் கணிசமான காரணிகளாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
ஆந்திர மாநிலம் தலைநகர் ஹைதராபாத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மாநாட்டை வாழ்த்தி பிரகாஷ்காரத் உரைநிகழ்த்தும்போது இவ்வாறு கூறினார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:
‘‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாட்டின் பங்கேற்றுள்ள அனைத்துப் பிரதிநிதிகளுக்கும், விருந்தினர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பில் என் இதயங்கனிந்த தோழமை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பொதுவான வரலாற்றிற்கு நம் இரு கட்சிகளுமே இணையாக பங்களிப்பினைச் செய்துள்ளது. இவ்வாறு, நம் இருவருக்கும் இடையே தனி பிணைப்புண்டு. இந்தப் பிணைப்புதான் சமீபகாலங்களில் உறுதியாக முன்னுக்கு வந்து, நாட்டின் இடதுசாரி சக்திகள் எதிர்கொண்ட சவால்களை இணைந்து நின்று எதிர்த்திட துணைபுரிந்திருக்கிறது. இன்று, மாவீரன் தியாகி பகத்சிங் தூக்கிலிடப்பட்ட 77ஆவது நினைவுதினமாகும். சோசலிசத்தைத் தழுவிக்கொண்ட, ஏகாதிபத்திய எதிர்ப்பு இளம் போராளிகளில் முன்னணியில் நின்ற ஒப்புயர்வான இளைஞர்களில் பகத்சிங்கும் ஒருவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவருடைய பாரம்பர்யம்தான், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியான நிலைபாட்டினை எடுத்திட, நம் இரு கட்சிகளுக்குமே தத்துவ வல்லமையைத் தந்திருக்கிறது.
ஹைதராபாத்தில் நாம் இங்கே கூடியிருக்கும் அதே சமயத்தில், உலக முதலாளித்துவ முறையானது கடும் சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார நிலைமை மந்த நிலைமையை நோக்கி வெகு வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. அதன் ஆழத்தை இதுவரை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. முதலாளித்துவ உலகில் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியானது மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீதிக்கு வந்துள்ளார்கள்.உலக நிதி மூலதனம் குறித்தும், ஏகாதிபத்திய உலகமயம் குறித்தும் கம்யூனிஸ்ட்டுகளாகிய நமக்கு எந்தவிதப் பிரேமையோ மாயையோ கிடையாது. இந்தியாவில் திணிக்கப்பட்டு வந்த நவீன தாராளமயக் கொள்கைகளை நாம் விடாப்பிடியுடன் எதிர்த்தே வந்திருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், நாம் மத்திய அரசின் முழுமையான மூலதனக் கணக்கு நாணய மாற்றுக்கு நாம் அளித்துவந்த எதிர்ப்பின் காரணமாகவே, உலகமய நிதி மூலதனத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, அதே வேகத்தில் நம் நாட்டையும் தாக்காது நம் நாட்டைப் பாதுகாத்திருக்கிறது என்பது இங்கு நாம் குறித்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். நிதி நெருக்கடியின் அழிவிளைவுகளிலிருந்து கணிசமான அளவிற்கு நம் நாட்டைப் பாதுகாத்திருக்கிறோம் என்றால் அதற்கு, நாம் நம் நாட்டில் கட்டுப்பாடற்ற முறையில் மூலதன இறக்குமதியை அனுமதிக்காததே காரணமாகும்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மூன்று ஆண்டுகளுக்கு முன் தங்கள் அகில இந்திய மாநாடுகளை நடத்தின. கடந்த மூன்றாண்டுகளில் நாம் நடந்து வந்தப் பாதையைச் சற்றே திரும்பிப் பார்த்தோமானால், இடதுசாரி இயக்கம், மிகவும் வலுவான முறையிலும் ஆக்கபூர்வமாகவும் முன்னேறியிருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். இடதுசாரி இயக்கம் மதச்சார்பின்மையைப் பாதுகாத்திடவும், பிரிவினைவாத மற்றும் மிகவும் கேடுபயக்கவல்ல பாஜக/ஆர்எஸ்எஸ் மதவெறி அரசியலுக்கும் எதிராக உறுதியாக நின்றிருக்கிறது. நாட்டில் மதவெறிக்கு எதிராக உறுதியானப் போராட்டத்தை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், மதவெறி அரசியலையை தனிமைப்படுத்தி, மக்களை மதச்சார்பற்ற மாண்புகளைப் பாதுகாக்கும் வண்ணம் அணிதிரட்டியும் இருக்கிறோம். இதனை மேற்குவங்கம், கேரளம், திரிபுராவில் நன்கு காண முடியும்.
வரவிருக்கும் காலங்களில், இந்துத்வா சக்திகளுக்கு எதிராக அரசியல்ரீதியாகவும், தத்துவார்த்தரீதியாகவும் நம் போராட்டத்தினை நாம் மேலும் இரட்டிப்பாக்கிட வேண்டும். அதன் மூலம் அது மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான பாதையை முற்றிலுமாக அடைத்திட வேண்டும்.
கடந்த மூன்றாண்டு காலமாக, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அனைத்து அம்சங்களிலும் இடதுசாரி இயக்கம் முன்னின்று மக்களைக் காத்திருக்கிறது. அது, விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்துள்ள விவசாய நெருக்கடியாக இருந்தாலும் சரி, விவசாயத் தொழிலாளர்களுக்கும் நாட்டுப்புற மக்களுக்கும் வேலையில்லா நிலைமை ஏற்பட்டபோதும் சரி, பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகளும் சிறுதொழில் பிரிவுகளும் மூடப்பட்டு தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டபோதும் சரி, பெண்களின் வேலை நிலைமைகள் மோசமாகிக்கொண்டிருக்கும் போதும் சரி, தலித் மற்றும் பழங்குடியினர் பொருளாதார நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையிலும் சரி, மக்களின் வாழ்க்கைத்தரத்தை விஷம்போல் ஏறிவரும் விலைவாசி உறிஞ்சிடும் நிலையிலும் சரி - இடதுசாரி இயக்கம் மக்களின் நலன்களைக் காப்பதற்காக முன்னணியில் நின்றதோடு மட்டுமல்லாமல், மக்களின் நலன்களைக் காத்திட மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து போராடியும் வந்துள்ளது.
தீண்டாமைக் கொடுமை, சாதிய ஒடுக்குமுறை, பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்திடவும் இடதுசாரி இயக்கத்தின் போராட்டம் கடந்த காலங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் மக்களுக்குக் கேடுபயக்கும் பல கொள்கைகளைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறது. அது, நிதித்துறையின் கட்டுப்பாட்டை அந்நிய மூலதனத்திற்கு ஒப்படைக்க இருந்த முயற்சியாக இருந்தாலும் சரி, அல்லது சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் நடவடிக்கையாக இருந்தாலும் சரி, அல்லது, ஓய்வூதிய நிதியை தனியாரிடம் தாரை வார்த்திட மேற்கொண்ட முயற்சியாக இருந்தாலும் சரி, அல்லது, தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி - அனைத்திலும் இடதுசாரிக் கட்சிகள் உறுதியுடன் நின்று அவற்றைத் தடுத்து நிறுத்தி, மக்களைக் காத்திருக்கின்றன.
நிறைவாக, இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் இடதுசாரி இயக்கம் பாதுகாப்பு அரணாக நின்றிருக்கிறது. பாஜக பாணி தேசியவாதிகள் வெட்கங்கெட்ட முறையில் அமெரிக்காவைத் தங்களின் ‘‘இயற்கையான பங்காளிகள்’’ என்று வாய்கூசாமல் சொல்லிய அதே சமயத்தில், தற்போதைய ஆட்சியாளர்களும் ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் போர்த்தந்திரக் கூட்டணியை மேற்கொள்ள ஆவலுடன் முயற்சித்த அதேசமயத்தில், இடதுசாரி இயக்கம் மட்டுமே அமெரிக்காவுடன் எவ்விதப் போர்த்தந்திர கூட்டணியையும் உறுதிபட எதிர்த்து நின்றிருக்கிறது. இவ்வாறாக நம் எதிர்ப்பை - அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் போர்த்தந்திரம் - என அனைத்து முன்னணியிலும் உறுதிபட மேற்கொண்டு, நாட்டின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பாதுகாத்து வந்திருக்கிறோம். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிக் கட்சிகள் முன்னணியில் இருந்து வருகிறது. அமெரிக்காவுடனான, மத்திய அரசின் ராணுவக் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும் நாம் நம் போராட்டத்தைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளோம். அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாக இந்தியாவை மாற்ற முயற்சிக்கும் அனைத்து முயற்சிகளுக்கு எதிராகவும் இடதுசாரி இயக்கம் வலுவாகப் போராட வேண்டிய நிலையில் உள்ளது.
இந்தியாவின் 1.1 பில்லியன் (110 கோடி) மக்கள், சமீப காலத்தில் ஏராளமான பில்லியனர்களை உருவாக்கிவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக செல்வத்தைப் பெற்றிருக்கும் பணக்காரர்களில் இநதியாவில் 48 பேர் இருக்கிறார்கள். அதாவது ஒரு பில்லியனர் என்றால் அவருக்கு சுமார் 4000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து இருக்கிறது என்று பொருள். நாட்டில் 77 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உழைக்கும் மக்களின் ஊதியம் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட இல்லாத நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் குறிக்கோள் இவ்வாறு பில்லியனர்களை உருவாக்கும் ஒன்றாக நிச்சயம் இருந்திட முடியாது.
எனவே, மாற்றுப் பாதைக்கான போராட்டத்தை நாம் முன்னிலும் சக்தியுடனும் வீர்யத்துடனும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். வரவிருக்கும் காலங்களில் உழைக்கும் மக்களின் போராட்டத்தையும் வர்க்கப்போராட்டத்தையும் மேலும் கூர்மையாகவும் தீவிரமாகவும் கொண்டு சென்றிடுவோம். இதன் அடிப்படையில்தான் இடதுசாரி இயக்கமும் வலுப்பட்டு வளரும்.
இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் இருந்த கருத்தொற்றுமையும், செயல் ஒற்றுமையுமே, கடந்த மூன்றாண்டுகளில் நமக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குக் கணிசமான காரணிகளாகும். இவ்வாறான ஒற்றுமையை ஏற்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட அணுகுமுறையும் ஒருங்கிணைப்பும் முக்கியமான பங்களிப்பினைச் செய்திருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை, சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பதென்பது அப்படி ஒன்றும் இயல்புமீறிய ஒன்றல்ல. ஆனாலும், இடதுசாரி ஒற்றுமையைச் சீர்குலைக்கும் காரியம் எதனையும் செய்திடக் கூடாது. அதனைத்தான் ஏகாதிபத்திய வட்டாரங்களும், ஆளும் வர்க்கங்களும் விரும்புகின்றன. இடதுசாரி ஒற்றுமையை அடித்தளமாகக் கொண்டு, நம் எதிர்கால முன்னேற்றம் அமைந்திடும். இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உளப்பூர்வமாக உழைத்திடும் என்று, எங்கள் கட்சியின் சார்பில் அகிலஇந்திய மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். அதேசமயத்தில், நாட்டில் உள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பதற்கும் நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு மக்கள் முன், ஒரு மூன்றாவது மாற்றை உருவாக்கி முன்னிறுத்த வேண்டிய தேவையும் இடதுசாரி இயக்கத்தின் தோள்கள் மீது விழுந்துள்ளன.அகில இந்திய மாநாடு அனைத்து வெற்றிகளையும் பெற்றிட வாழ்த்துகிறேன். நம் இரு கட்சிகளும் மேலும் ஒற்றுமையுடன் மேலும் ஒத்தக் கருத்துக்களுடன் ஒன்றிணைந்து முன்னேறுவோம்.’’
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
(ச. வீரமணி)

Friday, March 21, 2008

குடியரசு தலையங்கம்:பகத்சிங்





(தந்தை பெரியார் அவர்கள் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதும், ‘குடியரசு’ வார இதழில் எழுதிய தலையங்கம்)

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டாதார்கள் யாருமே இல்லை. அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்துவிட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம்.இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொருபுறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜப் பிரதிநிதி மதிரு. இர்வின் பிரபுவைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு. காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கை தூக்கிலிடக்கூடாது என்கின்ற நிபந்தனை இல்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல், அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறுகின்றன.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும்படி தேச மகா ஜனங்களுக்கும் கட்டளையிடுவது, திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்களும் நடைபெற்றன.ஆனால் இப்போது வெகு சீக்கிரத்தில் அதே மக்களால் ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்கின்ற கூச்சல்களும், திரு, காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக்கொடிகளும் அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன. இவைகளையெல்லாம் பார்க்கும்போது, அரசியல் விஷயமாய்ப் பொது ஜனங்களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவது ஒரு கொள்கை யாருக்காவது உண்டா என்று சந்தேகிக்க வேண்டியதாகவுமிருக்கிறது.

எது எப்படி இருந்தபோதிலும், திரு. காந்தியவர்களின் உப்பு சத்தியாக்கிரக கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே, இக்கிளர்ச்சி மக்களுக்கோ, தேசத்திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடல்லாமல் தேசத்தின் முற்போக்குக்கும், கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும் எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம். நாம் மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்கு காரணமே, பகத்சிங் போன்றவர்கள் செய்யுங்காரியங்களை கெடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியுமிருக்கின்றார். போதாக்குறைக்கு அக்கம்பக்கத்து தேசத்தவர்களில் உண்மையான சமதர்மக் கொள்கையுடைய தேசத்தார்களும் ‘‘திரு. காந்தியவர்கள் ஏழைகளை வஞ்சித்து விட்டார், சமதர்மக் கொள்கைகளை ஒழிக்கவே தன்காரியங்களைச் செய்கின்றார், திரு. காந்தி ஒழியவேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும்’’ என்று ஆகாயமுட்டக் கூப்பாடு போட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் நமது தேசிய வீரர்கள், தேசபக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல், பலாபலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதுபோலவும், பந்தயங்கூறிக்கொண்டு பாறையில் முட்டிக்கொள்வது போலவும் தலை கிறுகிறுத்துக் கண் தெரியாமல் கூத்தாடினார்கள், அதன் பயனாய் சிறை சென்று வீரர்களை ‘‘வாகை மாலை சூடி’’ திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள். பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பார்த்துவிட்டு, ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்று கூப்பாடும் போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

நிற்க, நம்மைப் பொருத்தவரை நாம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பகத்சிங் அவர்கள் இந்த மாதிரி பொருப்பும் கவலையும் அற்ற மூட மக்களும், மட மக்களும் பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்கு கௌரவம் கிடை;ததால் போதுமென்கின்ற சுயநல மக்களும் உள்ள நாட்டில் உயிருடன் வெகுகாலம் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு வினாடிதோரும் வேதனைப் பட்டு இவர்களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர் தன் உயிரை விட்டு மறைய நேர்ந்தது, பகத்சிங்கிற்கு மெத்த ‘‘சாந்தி’’ என்றும், நன்மை யென்றுமே கருதுதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடைய முடியவில்லையே என்றுதான் கவலைப்படுகின்றோம்.

ஏனெனில் ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பதுதான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல. ஆனாலும் காமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்த வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோமாயினும் பகத்சங் கொள்கைக்கு காலமும் இடமும், நடப்பும் விரோதமாயில்லை என்றே சொல்லுவோம். ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக்கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்துவிட்டதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம், அதுவேதான் உலகத்தின் சாந்தநிலைக் கொள்கையாகும். நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக்கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள்தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்து கொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்துகொண்டபடியேதான் நடந்து இருக்க வேண்டியதென்று நாம் சொல்லுவதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம். ஆதலால் இப்போது நாம் அவரை ஒரு உண்மையான மனிதர் என்று சொல்லுவோம்.

இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்தவரை திரு பகத்சிங்கிற்கு பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது:-‘‘பொதுஉடைமைக் கட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்துகொண்டுதானிருக்கும். எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்துவிடாது. அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும்’’என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்றியும் அவர் கடவுள் விஷயத்திலோ எல்லாம் கடவுள் செயல் என்பதிலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கையுடையவர் என்றும் கருதிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்துக்கொள்கையானது எந்த சட்டத்தின்படியும் குற்றமாக்கக்கூடியது அல்லவென்றும் ஆவதாயிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொல்லுவோம். ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டுவிடாது என்று உறுதிகொண்டிருக்கின்றோம். அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப்பூர்வமாய் யாதொரு தனிமனிதனிடமாவது, தனி வகுப்புகளிடமாவது, தனி தேசத்தார்களிடமாவது துவேஷம் இல்லாமலும் எந்த தனி மனிதனுடைய திரேகத்திற்கும் துன்பமுண்டு பண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக்கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத்தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டும் என்பதிலும் அடங்கி இருக்கின்றது. தீண்டாமை ஒழிவதாயிருந்தால் எப்படி மேல்ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்து தானாக வேண்டும், அதுபோலவேதான் ஏழ்மைத்தன்மை ஒழிவதாயிருந்தால் முதலாளித் தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்துதானாக வேண்டும். ஆகவே இந்தத் தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத்தன்மை பொதுஉடமைத் தன்மை என்பவைகளை ஒழிய வேறில்லை. இந்தக் கொள்கைகள்தான் திரு பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக்கொள்கைகளை நியாயமானவை யென்றும், அவசியமானவை என்றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தீயம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே இல்லை. ஆனால் இந்தக் கொள்கைக்காரர்கள் காங்கிரசுக்கு ஜே, காந்திக்கு ஜே என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாயிருக்கின்றது.

திரு. காந்தியவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம். அந்த உண்மை இன்றுதான் மக்களில் சிலராவது கண்டுபிடித்து காந்தீயம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும் துணிவையும் அடைந்திருக்கின்றார்கள். இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியாகும். திரு பகத்சிங் தூக்கிலிடப்பட்டு உயிர்துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. அன்றியும் பகத்சிங்கை தூக்காமல் இருந்திருந்தால் காந்தீயத்திற்கும் இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்றுகூடச் சொல்லுவோம். சுபமாக, தானாகவே நோய்கொண்டு அவஸ்தைப் பட்டு செத்துச் சாம்பலாகி இருக்க வேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு ஏன் உலகமக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்கு பயன்படத்தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மனமார, வாயாரா, கையார பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம் !! பாராட்டுகின்றோம் !!!

இதே சமயத்தில் ந்மது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து மாகாணத்திற்கு 4 பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகின்றோம்.---

(பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள குறுந்தகட்டிலிருந்து, வெளிக்கொணர்ந்திருப்பவர்: ச. வீரமணி)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக



ன்றியமையாப் பண்டங்களின் விலைகள் தொடர்ந்து கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது. சமீபத்தில மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் தலைநகரில் நடத்திய பேரணி/ஆர்ப்பாட்டம், மீண்டும் ஒருமுறை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட, ஐக்கிய முற்போக்கு அரசு மிக மோசமான முறையில் தோல்வி கண்டுவிட்டது என்பதை உயர்த்திப்பிடித்தது.இவ்வாறு எகிறிக்கொண்டே செல்லும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் மூன்று முக்கிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கோரி வருகிறது. முதலாவதாக, வேளாண் செலவினம் மற்றும் விலைகளுக்கான அடையாளம் காட்டியுள்ள 24 இன்றியமையாப் பண்டங்களை ஊக வர்த்தகத்தில் ஈடுபடுத்துவதைத்தடை செய்ய வேண்டும். நாடாளுமன்ற நிலைக்குழுவும் கூட, 25 வேளாண் பண்டங்கள் குறித்து, ஊக வர்த்தகத்தைத் தடை செய்திட வேண்டும் என்று தனியே கோரியிருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் அதிகாரமட்டத்திலான ஆய்வானது, மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாகியிருப்பதுதான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்று கூறியிருப்பது பிழையானதாகும். ஊக வர்த்தகத்தில் மிகவும் விரிவான முறையில் ஏற்படும் ஊகமே இன்றியமையாப் பண்டங்களின் விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணமாகும். இத்தகு ஊக வணிகத்தினால், உணவு தான்யங்களின் விலைகள் உலக அளவில் உயர்ந்து கொண்டு செல்கிறது. இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தின் விளைவாக, மத்திய அரசு, பயறு மற்றும் பருப்பு வகைகள், அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றினை, ஊக வர்த்தகச் சந்தையிலிருந்து நீக்கி இருக்கிறது. ஆயினும், சமையல் எண்ணெய் உட்பட மற்ற அனைத்து இன்றியமையா இனங்களையும் ஊக வர்த்தகத்திலிருந்து தடை செய்தாலொழிய, இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட முடியாது.

இரண்டாவதாக, மாநிலங்களுக்கு பொது விநியோக முறையில் அளித்து வந்த உணவு தான்யங்களின் விநியோகத்தைக் கடுமையான முறையில் வெட்டிச் சுருக்கிட மத்திய அரசு தீர்மானித்திருப்பதும், இப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல், விலைவாசியை மேலும் கடுமையாக உயர்த்திவிட்டது. நாம் இப்பகுதியில் முன்பே சுட்டிக்காட்டியிருப்பது போல, கேரளாவிற்கு அளித்து வந்த உணவு தான்யத்தின் அளவு மிகப் பெரிய அளவில் - சுமார் 82 சதவீதத்திற்கும் அதிகமாகவும், மேற்கு வங்க மாநிலத்திற்கு 44 சதவீத அளவிற்கும் வெட்டப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்திற்கு, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 139 லட்சம் டன் உணவு தான்யங்களின் விநியோகம் வெட்டப்பட்டிருக்கிறது. கேரளாவில், 49 லட்சத்து 40 ஆயிரம் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு 1 லட்சத்து 13 ஆயிரத்து 420 டன்கள் அரிசி வழக்கமாக விடுவித்து வந்தது. ஆனால், அது இப்போது 21 ஆயிரத்து 334 டன்கள் என்ற அளவிற்கு - சுமார் 90 சதவீத அளவிற்கு - கடுமையான முறையில் வெட்டப் பட்டிருக்கிறது. கேரளம், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் மாதம்ஒன்றுக்கு 35 கிலோ அரிசி கொடுக்கிறது. இதற்கு 1 லட்சத்து 72 ஆயிரத்து 900 டன்கள் அரிசி தேவை. ஆனால், மத்திய அரசு வெறும் 20 ஆயிரம் டன்களுக்கும் கொஞ்சம் அதிகமான அளவில் அரிசியை விடுவித்திருக்கிறது.

திரிபுரா மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்டு வந்த உணவு தான்யங்களின் அளவும் கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட்டிருக்கிறது. அரசின் இத்தகு நடவடிக்கையானது, பொது விநியோக முறையை சின்னபின்னமாக்கி, உணவுப் பாதுகாப்பை இடருக்கு உட்படுத்திடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ‘பல மாநில அரசுகள் தங்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகளைச் சரிவரப் பயன்படுத்தாததால்தான் இவ்வாறு பொருள்களின் விநியோகம் குறைக்கப்பட்டிருக்கிறது’ என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறது. சில மாநிலங்களைப் பொறுத்து இது உண்மையாக இருக்கலாமே ஒழிய, இடதுசாரிகள் தலைமையில் உள்ள எந்த மாநிலமும் இந்த வகையறாவின் கீழ் வர வாய்ப்பே இல்லை. இன்னும் சரியாகச் சொல்வதெனறால், பொது விநியோக முறை மிகவும் சிறப்பாகச் செயல்படுவதே இடதுசாரிக் கட்சிகள் தலைமையில் உள்ள மாநிலங்களில்தான். பிரதமரைச் சந்தித்த, இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் தூதுக்குழு, இம்மாநிலங்களுக்கு எப்போதும் விநியோகித்து வந்த உணவு தான்யங்களின் அளவு மீண்டும் வழங்கப்படுவதற்குத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்திருக்கிறது.மூன்றாவதாக, நாட்டு மக்களில் மிகப் பெரும்பான்மையோரின் வருமானத்தில் பெரும்பான்மையான பங்கை விழுங்கிடும் இவ்விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட வேண்டுமானால், அதற்கு பொது விநியோக முறையின் கீழ் வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு என்றும் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு என்றும் பிரிக்காது இன்றியமையாப் பண்டங்களை அனைவருக்கும் அளித்திட வேண்டும். மாறாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது, பொது விநியோக முறையின் கீழ் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களை முற்றிலுமாக ஒழித்திட வேண்டும் என்பகைக் குறியாகக் கொண்டு, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் உணவு தான்யங்களை விநியோகிக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னப்படுத்திவிடும். இது, நாட்டு மக்களின் பெரும்பகுதியினருக்கு உணவுப் பாதுகாப்பின்மையை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே உயர்ந்துள்ள பண்டங்களின் விலையை மேலும் மோசமான முறையில் உயர்த்திடும்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட வேண்டும் என்று மத்திய அரசு உண்மையிலேயே கருதுமானால், மேற்கண்ட மூன்று நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் விலைவாசியைக் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, இடதுசாரிக் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்ப்பு ஒரு தொடக்கம் மட்டுமே. வரவிருக்கும் காலங்களில் இது மேலும் தீவிரமாகும்.

தமிழில்: ச. வீரமணி

Tuesday, March 18, 2008

பொது விநியோக முறையில் பாரபட்சம் காட்டாதே--இடதுசாரிக் கட்சிகள் டில்லியில் தர்ணா


புதுடில்லி, மார்ச் 18-
பொது விநியோக முறையில் எவ்விதப் பாகுபாடும் காட்டாது அனைவருக்கும் உணவுப் பொருள்களை வழங்கக்கோரி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தர்ணா போராட்டம் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சி சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
பொது விநியோக முறையானது, உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றின் கட்டளைக்கிணங்க மத்திய அரசால் படிப்படியாக சிதைக்கப்பட்டு வருகிறது. பொது விநியோக முறையில் அளிக்கப்படும் குடும்பதாரர்களின் எண்ணிக்கையை வெட்டிச் சுருக்குமாறு உலக வங்கி - சர்வதேச நிதியத்தின் கட்டளைக்கிணங்க மத்திய அரசு பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை வாங்குவோரை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளோர் என்று பிரித்து நாட்டில் மிகப் பெரும்பாலோனோருக்கு பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை வழங்காது குறைத்துள்ளது. இதனால் இதுநாள் வரை பொது விநியோக முறை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த மேற்கு வங்கம், கேரளம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பொது விநியோக முறையில் இதுவரை அளித்து வந்து உணவுப் பொருள்களின் அளவையும் மத்திய அரசு கடுமையாக வெட்டிச் சுருக்கியுள்ளது. கேரள மாநிலத்திற்கு இதுவரை அளித்து வந்த அரிசியின் அளவில் 80 சதவீதத்தையும், மேற்கு வங்கத்திற்கு இதுவரை அளித்து வந்த கோதுமையின் அளவில் 50 சதவீதத்தையும் இவ்வாறு வெட்டிச் சுருக்கி இருக்கிறது. மத்திய அரசின் இத்தகு நடவடிக்கையைக் கண்டித்தும், பொது விநியோக முறையில் எவ்விதப் பாகுபாடும் காட்டாது அனைத்துக் குடும்பத்தினருக்கும் அத்தியவாசியப் பண்டங்களை அளித்திட வலியுறுத்தியும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளபடிம 25 வேளாண் பண்டங்களுக்கு முன்பேர ஊக வர்த்தக முறையைத் தடை செய்திடக் கோரியும், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விலை உயர்த்தப்படாமல் இருப்பதற்காக எண்ணெய் இறக்குமதிக்கு சுங்கம் மற்றும் கலால் வரிகளை ரத்து செய்யக்கோரியும், அத்தியாவசியப் பண்டங்களைப் பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஒழித்துக்கட்டப்பட்ட இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தின் பல்வேறு முக்கிய ஷரத்துக்களை மீண்டும் கொண்டுவரக் கோரியும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் செவ்வாய் காலை புதுடில்லி, நாடாளுமன்ற வீதியில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதபிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அபானிராய் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிருந்தாகாரத், விஜயராகவன், து. ராஜா, அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, மேற்கு வங்க சிபிஎம் மாநில செயலாளர் பிமன் போஸ், மற்றும் இடதுசாரிக் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பின்னர் சீத்தாராம் யெச்சூரி, தேவபிரத பிஸ்வாஸ், முகமது சலீம் தலைமையில் பிரதமரின் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப் பட்டது.
--

Monday, March 17, 2008

பொது விநியோக முறையைச் சீர்குலைத்திடும் மத்திய அரசு:சீத்தாராம் யெச்சூரி

புதுடில்லி, மார்ச் 17-
பொது விநியோக முறையை சீர்குலைத்திடும் மத்திய அரசைக் கண்டித்து, செவ்வாய் அன்று காலை மேற்கு வங்கம் மற்றும் கேரள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று மதியம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:மத்திய அரசு, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வறுமைக் கோட்டுக்கு மேல் என்று மக்களை மோசடியாகப் பிரித்து, மாநிலங்களுக்கு பொது விநியோக முறையில் அனுப்பி வந்த அத்தியாவசியப் பொருள்களின் அளவை கடுமையாகக் குறைத்து விட்டது. கேரளாவிற்கு அனுப்பி வந்த அரிசியின் அளவில் 80 சதவீதமும், மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வந்த கோதுமையின் அளவில் 50 சதவீதமும் இவ்வாறு குறைத்து விட்டது. இதனால் அம்மாநிலங்களில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த பொது விநியோக முறை சீர்குலைந்து போயுள்ளது. பொது விநியோக முறையில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களைத் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி செவ்வாய் அன்று காலை நாடாளுமன்ற வீதியில் மேற்கு வங்கம், கேரளம் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களின் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது.
அடுத்ததாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்திய அரசு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ள யுஎஸ் ட்ரென்டன் என்னும் போர்க்கப்பல் குறித்து மத்திய தணிக்கை அதிகாரி கடுமையாக அறிக்கை அளித்துள்ளது குறித்து எழுப்பப்பட்டது. இந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையாலேயே காலாவதியாகிப்போன ஒன்று என்று ஒதுக்கித்தள்ளப்பட்டதாகும். அங்கேயே இக்கப்பலில் விபத்தில் பல கடற்படை வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கப்பலை, அதிக விலை கொடுத்து இந்திய அரசு வாங்க வேண்டிய அவசியம் என்று என்று மத்திய தணிக்கை அதிகாரி வினா எழுப்பியிருக்கிறார். அதையேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எழுப்புகிறது. அதுமட்டுமல்ல, இந்தக் கப்பலை நாம் நியாயமான காரியங்களுக்குத்தான் பயன்படுத்துகிறோமா என்று அமெரிக்க எந்த நேரத்திலும் வந்து சோதனை செய்யுமாம். இவ்வாறு நம் நாட்டின் இறையாண்மையை அடகுவைத்து விட்டு இந்தக் கப்பலை வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றுதான் கேட்க விரும்புகிறோம்.எனவே இப்பிரச்சனையை இரு அவைகளிலும் நாங்கள் எழுப்பினோம்.
அடுத்ததாக, இரு அவைகளிலும் நாங்கள் எழுப்பிய பிரச்சனை, மிகவும் லாபகரமாக இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை அரசு முடக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதைக் குறித்ததாகும். பிஎஸ்என்எல் கடந்த ஆறு மாத காலமாக தன்னிடம் மொபைல் போன் கேட்டு பதிவு செய்து வைத்துள்ள 4 கோடியே 55 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு கொடுக்க முடியாத நிலையினை அரசு ஏற்படுத்தி இருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து 2 கோடியே 25 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் இன்று வரை 1 கோடியே 35 லட்சம் இணைப்புகள்தான் தர முடிந்திருக்கிறது. தற்சமயம் புதிதாக எந்த இணைப்பும் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் தர முடியவில்லை. இதனால் நாட்டில் முதல் நிலையில் இருந்த இந்நிறுவனம் இன்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. எனவே இப்பிரச்சனையில் அரசு உடனடியாகத் தலையிட்டு நிலைமைகளைச் சீர் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக பிரதமருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.பிஎஸ்என்எல் பிரச்சனையில் திமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.பொது விநியோக முறையை மாநில அரசுகள் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாததினால்தான் அத்தியாவசியப் பொருள்களின் அளவைக் குறைத்திருக்கிறோம் என்று மாநிலங்களவையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டிருப்பதுபோல் தெரிகிறதே என்று ஒரு செய்தியாளர் வினவியபோது, ‘‘நாட்டிலேயே தென் மாநிலங்கள் நான்கும், மேற்கு வங்கமும் திரிபுராவும் பொது விநியோக முறையில் சிறந்து விளங்குவதாக அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றும், ‘‘வறுமைக்கோட்டுக்குக் கீழ் / வறுமைக்கோட்டுக்கு மேல் என்கிற மோசடியான புள்ளிவிவரத்தின் அடிப்படையில்தான் அரசு இவ்வாறு அத்தியாவசியப் பொருள்களின் அளவைக் குறைத்திருக்கிறது’’ என்றும், அரசின் அளவுகோலின்படி ‘வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள்’ மிகவும் குறைவு என்றும், ஆனால் தென் மாநிலங்களிலும், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவிலும் பொது விநியோக முறையில் ‘வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கும்’ அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன என்றும் எனவேதான் பிரச்சனை எழுந்துள்ளது என்றும் விளக்கினார்.

Thursday, March 13, 2008

பாசிஸ்ட்டுகளின் கோழைத்தனம்



ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவன் மீது 2008 மார்ச் 9 அன்று திடீரென்று தாக்குதலைத் தொடுத்ததன் மூலம், தங்களுடைய சுயமான பாசிஸ்ட் குணத்தை தோலுரித்துக் காட்டிவிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், மத்திய உள்துறை அமைச்சர் அளித்திட்ட அறிக்கையின்படி, தாக்குதல் புரிந்தோர் ஏகே கோபாலன் பவனுக்கு அருகில் உள்ள இந்து மகா சபையில், காவல்துறையினரிடம் எவ்வித அனுமதி வாங்காமலும், அல்லது தகவல் தராமலும் கூடியுள்ளனர். அவர்களில் ஒருசிலர் ஏகேஜி பவனுக்கு ஆர்ப்பாட்டம் செய்திட செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் விவாதித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில், ஒரு கும்பல் தங்களுடைய சொந்தக் கார்களில் கற்கள், செங்கற்கள் முதலானவற்றை நிரப்பிக்கொண்டு, ஏகேஜி பவனை நோக்கி வந்து, திடீரென்று தாக்குதலைத் தொடங்கியுள்ளது, கற்களை அலுவலகம் நோக்கி வீசத் தொடங்கியது. ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மத்தியக் குழு அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்ததை மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் தடுத்தபோது, அவர்களைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் ஹரிசிங் காங், வி. சீனிவாசராவ், ஜோகேந்திர சர்மா, குமார் சிரால்கர், புஷ்பிந்தர் கிரேவால் ஆகிய ஐந்து மத்தியக் குழு உறுப்பினர்களும் அடங்குவர். இந்தத் தாக்குதலில் சொத்துக்களுக்கு ஏராளமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களையும் அடித்து நொறுக்கினார்கள்.

இத்தாக்குதலானது முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று என்பதும், பாஜகவினர் தனியார் கார்களில் கற்கள் மற்றும் செங்கற்களுடன் மத்தியக்குழு அலுவலகத்தை அடித்து நொறுக்கவும் தடுக்க வரும் தோழர்களைத் தாக்கிடவும் முன்னேற்பாட்டுடன் வந்திருக்கிறார்கள் என்பதும் தெளிவுபடத் தெரிகிறது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 14 பேர்களில், இருவர் பாஜகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆறு பேர் தற்போது நகர்மன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள். ஏகேஜி பவனுக்குப் பக்கத்தில் உள்ள இந்து மகா சபாவில் ஒன்றுகூடி, டில்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள பாஜக-வின் தலைவராலும், டில்லி மேயராலும் தலைமைதாங்கி இவ் வன்முறைக் கும்பல் வந்திருக்கிறது.அதே இரவு, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த குண்டர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில செயலாளர், விஜேகே நாயரின் வீட்டிற்குள் வலுவந்தமாக நுழைந்திருக்கின்றனர். அங்கிருந்த அவரது மனைவியை அச்சுறுத்தி, வீட்டையே அடித்து நொறுக்கி நிர்மூல்யமாக்கி இருக்கின்றனர். மறுநாள், ஆர்எஸ்எஸ் குண்டர்கள் டேராடூன், நாகர்கோவில், ஆகிய இடங்களில் உள்ள கட்சியின் அலுவலகங்களுக்குச் சென்று தாக்குதல் தொடுத்திருக்கின்றனர். ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தில் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் சுந்தரய்யா விஞ்ஞான் கேந்திரத்தையும் சேதப்படுத்தி, தீ வைத்துக் கொளுத்திட முயற்சித்திருக்கின்றனர்.

இவ்வாறு பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக, கொலைவெறித்தாண்டவமாட முன்வந்திருக்கிறது.கம்யூனிச எதிர்ப்பு தாக்குதல்களை மூடிமறைப்பதற்காக ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் வெளியில் சொல்லும் காரணம், கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் தற்சமயம் நடந்து வரும் நிகழ்ச்சிப் போக்குகளாகும். கேரளாவில் இடது முன்னணி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கண்ணூரில் கொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் எத்தனை பேர் என்பதையும் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் எவை எவை என்பதையும் தனியே பட்டியலிடப்பட்டு, ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’யின் இதே இதழில் வேறொரு பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் தலைமையில் வன்முறைச் சம்பவங்கள் நiபெறுவது கண்ணூருக்குப் புதிய செய்தி ஒன்றுமல்ல. ஆயினும், சென்ற சட்டமன்றத் தேர்தலில், மதவெறி சக்திகள் மீண்டும் ஒருமுறை சட்டமன்றத்திற்குள் நுழைய மேற்கண்ட முயற்சிகள் படுதோல்வி அடைந்ததை அடுத்து, (சுதந்திரத்திற்குப்பின் கேரள மாநிலம் உருவானதிலிருந்து, சட்டமன்றத்திற்குள் ஓரிடத்தைக்கூட அவர்களால் பிடிக்க முடியவில்லை) அவர்கள் தங்களுடைய கம்யூனிச எதிர்ப்பு தாக்குதல்களை, மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராகத் தீவிரப்படுத்தி இருக்கின்றனர். சமீப காலங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை வேகமாகச் சரிந்து கொண்டு வருகிறது. இவ்வாறு அரசியலில் தாங்கள் வெகு வேகமாக ஓரங்கட்டப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள விரக்தியின் விளைவாகவே, வழக்கமான தங்களுடைய கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கையை, மேலும் தீவிரமாக்கி கொலைவெறித் தாண்டவமாட முன்வந்திருக்கின்றனர்.

மார்க்சிஸ்ட்டுகள் மீது இவ்வாறு வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம், அவர்களை அச்சுறுத்தி, மிரட்டி பணியவைத்துவிடலாம் என்று ஆர்எஸ்எஸ் கருதுமானால், அதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறில்லை. பாசிஸ்ட்டுகளின் வன்முறை மற்றும் தாக்குதல்களை எதிர்த்து முறியடித்துத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. 1972க்கும் 1977க்கும் இடையில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஏவப்பட்ட அரைப் பாசிசத் தாக்குதல்களின்போது, நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தோழர்களைப் பலிகொடுத்துள்ளோம். அந்தத் தாக்குதல்களை முறியடித்து மீண்டதோடு மட்டுமல்லாமல், முன்பிருந்ததை விட மேலும் பலமடங்கு வலுவடைந்து, அதன்பின் மாநிலத்தில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் மாபெரும் வெற்றியினை மார்க்சிஸ்ட் கட்சி ஈட்டி வந்திருக்கிறது. உலக அளவிலும், கம்யூனிசத்தை அழித்திடப்போகிறோம் என்று ஓலமிட்டுக்கொண்டு, சோவியத் ஒன்றியத்திற்கெதிராக, ஏவப்பட்ட ஹிட்லரின் பாசிசத் தாக்குதலை, கம்யூனிஸ்ட் செம்படை முறியடித்தது மட்டுமல்ல, ஹிட்லரின் ரெய்ச்ஸ்டாக் கோட்டையின் மீது செங்கொடியை உயர்த்தி உலகையே விடுவித்தது.

அதேபோன்று, இந்தியாவில், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான தாக்குதலும், முறியடிக்கப்படும். இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்படுத்தப்படக்கூடிய வகையில், ஆர்எஸ்எஸ்/பாஜக பாசிச மதவெறிக் கும்பல், அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்படும்.

தமிழில்: ச. வீரமணி

Tuesday, March 4, 2008

அனைவருக்கும் பொது விநியோகமுறையை அமல்படுத்தக்கோரிஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சிறப்பு மாநாடு

புதுடில்லி, மார்ச் 4-
‘வறுமைக் கோட்டுக்குக் கீழ்’, ‘வறுமைக்கோட்டுக்கு மேல்’ என்று மோசடியான பாகுபாடுகளைச் சொல்லி நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கு பொது விநியோக முறையை இல்லாது ஒழித்திடும் அரசின் செயலைக் கண்டித்தும், அனைவருக்கும் எவ்விதப் பாகுபாடுமின்றி பொது விநோயக முறையில் உணவுப் பொருள்களை வழங்கக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது.
தலைநகர் புதுடில்லியில் உள்ள மாவலங்கார் அரங்கத்திற்கு அருகில் செவ்வாயன்று காலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஏழைகளை ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி நிராகரித்திடும் மோசடியான வறுமைக்கோட்டுக்குக் கீழ் குறியீட்டை எதிர்த்து தேசிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் சுபாஷினி அலி தலைமை வகித்தார். சிறப்பு மாநாட்டை புதுடில்லி, ஜவஹர்லால் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் உத்சா பட்நாயக் துவக்கி வைத்து உரையாற்றினார். பின்னர் மாநாடுத் தீர்மானத்தை முன்மொழிந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘மத்திய அரசாங்கம் மிகவும் மோசடியான முறையில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களை அடையாளப்படுத்தி, பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு பொது விநியோக முறையிலான குடும்ப அட்டைகள் தராமல் நீக்கியுள்ளது. இதனால் நாட்டில் பெரும்பகுதி ஏழை வறிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு தான்யங்கள், பொது சுகாதாரம், கல்வி, ஓய்வூதியம், வீட்டு வசதித் திட்டங்கள் மற்றும் ஏராளமான அரசுத் திட்டங்களின் பயன்கள் கிடைத்திட வில்லை. சமீபத்தில் வெளியான தேசிய மாதிரி சர்வே அறிக்கையானது, கிராமப்புறங்களில் உள்ள தலித் குடும்பங்களில் 61 சதவீதம், பழங்குடியினர் குடும்பங்களில் 55 சதவீதம், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களில் 52 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டைகளைப் பெறவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ், வறுமைக்கோட்டுக்கு மேல் என்று குறியீடு நிர்ணயித்திருப்பது ஒரு மோசடி என்று இச்சிறப்பு மாநாடு கருதுகிறது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் தூண்டுதலால் அரசு மக்களுக்கு அளிக்கும் மான்யங்களை குறைப்பதற்காக இவ்வாறு மோசடியான முறையில் மத்திய அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. திட்டக் கமிஷன் மதிப்பீட்டின்படி நாட்டில் 22 சதவீத மக்களே வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள். அரசின் புள்ளி விவரங்கள் அனைத்தும் தவறானவைகளாகும். வறுமை குறைந்து விட்டது என்கிற அரசின் கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். திட்டக்கமிஷன் மதிப்பீடுகள் மோசடியானவை என்று நாங்கள் கூறுகிறோம். 1979ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கலோரி அடிப்படையிலான வறுமைக்கோட்டின் மீது அவ்வாறு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்படி, தற்போதைய வறுமைக்கோடு என்பது ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 327 ரூபாய் கிராமப்புறத்திலும், 454 ரூபாய் நகர்ப்புறத்திலும் வருமானத்திற்குக் கீழ் உள்ளவர்கள் மட்டுமே. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் ஆண்களுக்கு 3800 கலோரி அளவும், பெண்களுக்கு 2925 கலோரி அளவும் உணவு தேவை என்று கூறியிருக்கிறது. ஆனால் இதனையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அரசு வறுமைக்கோட்டை நிர்ணயித்திருக்கிறது. மேலும் இது காலாவதியாகிப்போன ஒன்று.
அத்தியாவசியப் பொருள்கள் பலவற்றின் விலை விஷம்போல் உயர்ந்திருக்கிறது. ஆனால் 1999-2000இல் இருந்த விலைவாசியை வைத்து வறுமைக்கோடு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் விநியோகம் செய்ய வேண்டிய குடும்ப அட்டைகள் குறித்து திட்டக்கமிஷன் தான்தோன்றித்தனமாக எண்ணிக்கையை நிச்சயித்திருக்கிறது. இதன் விளைவாக உண்மையில் வறுமைக்கோட்டுக் கீழ் உள்ள பெரும்பாலோருக்கு குடும்ப அட்டைகள் கிடைக்கவில்லை. பல மாநிலங்களில் குடும்ப அட்டைகள் மிகவும் குறைவாகவே விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. திட்டக்கமிஷன் கணக்கீட்டை விட அதிகமான அளவிலேயே மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள் என்று அரசின் பல்வேறு ஆய்வுகள் மெய்ப்பித்திருக்கின்றன.
சமீபத்திய அர்ஜூன் சென் குப்தா குழு அறிக்கையானது, முறைசாராத் தொழிலாளர்களில் 77 சதவீதத்தினரும், தலித் மற்றும் பழங்குடியினரில் 88 சதவீதத்தினரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 80 சதவீதத்தினரும், முஸ்லீம்களில் 84 சதவீதத்தினரும் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் உள்ளவர்கள் என்று கூறியிருக்கிறது. சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார சர்வேயின்படி, மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளில் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை, போதிய எடையின்றி இருப்பதாகக் கூறியிருக்கிறது. அவர்கள் போதுமான அளவு உண்ணாததே இதற்கெல்லாம் காரணமாகும். நம் நாட்டில் பெரும் பகுதி மக்கள் ஏழைகளாகவும், போதிய போஷாக்கின்றியும் உழன்றுகொண்டிருக்கும் நிலையில், அவர்களை மேலும் மோசமான முறையில் பாதிக்கக்கூடிய வகையில், ‘‘வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள்’’ என்றும், ‘‘வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள்’’ என்றும் பிரிப்பது கொடுமையிலும் கொடுமையாகும். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதற்கு வகை செய்யும் இழி செயலாகும். மேற்படி அதே சர்வேயின்படி 59 சதவீத மக்களுக்கு நிரந்தர வீடு கிடையாது, 58 சதவீதத்தினருக்கு குடிதண்ணீர் வசதி கிடையாது, 55 சதவீதத்தினருக்கு கழிப்பிட வசதி கிடையாது, 32 சதவீதத்தினருக்கு மின்வசதி கிடையாது. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் அரசு வறுமைக்கோடு சம்பந்தமாக அளித்திடும் புள்ளி விவரங்கள் அனைத்தும் யதார்த்த உண்மைகளுக்கு சம்பந்தமில்லாதவை என்பது தெளிவாகும்.
எனவே, ஏழைகளை இவ்வாறு பிரித்து அவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதை ஒருபோதும் அனுமதியோம். இதனை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறோம். ‘‘வறுமைக்கோட்டுக்குக் கீழ்’’ குறித்த திட்டக் கமிஷனின் மோசடியான கருத்தாக்கத்தை கடுமையாக எதிர்க்கிறோம்.திட்டக்கமிஷன் நாட்டு மக்களின் வறுமை நிலை குறித்து உண்மையான முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், நாட்டு மக்கள் அனைவருக்கும் எவ்வித பேதமுமின்றி பொது விநியோக முறையில் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்றும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்கிற நிலைபாட்டினை வைத்து சுகாதாரம், கல்வி, ஓய்வூதியம், மற்றும் அரசுத் திட்டங்கள் பலவற்றிலிருந்து அப்புறப்படுத்தப்படுவதை நீக்கிட வேண்டும் என்றும் கோருகிறோம்.இவ்வாறு சுதா சுந்தரராமன் பேசினார். பின்னர் தீர்மானத்தின் மீது பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த பிரதிநிதிகளும் உரையாற்றினார். மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நிறைவுரையாற்றினார்.மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சட்ட உதவி மைய மாவட்ட செயலாளர் ஆர். ராஜலட்சுமி தலைமையில் புவனேஸ்வரி, ஆதிலட்சுமி, பேபி, ஞானம், விஜயகுமாரி, சுமதி, பானுமதி முதலானோர் வந்திருந்தார்கள்.
(தொகுப்பு: ச.வீரமணி.)

Monday, March 3, 2008

ஹைடு சட்டம் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்பதை ஏற்பதற்கில்லை--சீத்தாராம் யெச்சூரி

புதுடில்லி, மார்ச் 3-

இந்திய அமெரிக்க ராணுவம் சாரா அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்க இயற்றியுள்ள ஹைடு சட்டம் இந்தியாவுக்குப் பொருந்தாது என்கிற இந்திய அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கூற்றை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்களன்று மதியம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. அடுத்து, இன்று மக்களவையில் அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தன்னிச்சையாக ஓர் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். அதில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு பத்திகள் இருக்கின்றன. அதில் அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ள விளக்கங்களிலும் அரசின் நிலைபாட்டிலும் புதிதாக ஒன்றுமில்லை. அரசாங்கம் அதன் நிலைபாட்டினைத் தெரிவித்திருக்கிறது. இடதுசாரிக் கட்சிகளும் தங்களுடைய சொந்த நிலைபாட்டினை இங்கே திரும்பவும் வலியுறுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரை, சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் நடைபெறும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே ஓர் எழுத்துபூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அதன்படி, அரசாங்கம் சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம். பேச்சுவார்த்தைகளின் முடிவை ஐமுகூ அரசாங்கம் - இடதுசாரிக் கட்சிகளின் குழுவில் சமர்ப்பித்து, அக்குழு எடுத்திடும் முடிவின் அடிப்படையிலேயே மேல்நடவடிக்கையை அரசு தொடர வேண்டும். எனவே, அவ்வாறு ஐமுகூ அரசு - இடதுசாரிக் கட்சிகளின் குழுவின் முடிவு எதுவும் எடுக்காது, அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தொடரும் என்று நாங்கள் கருதவில்லை. இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலைபாட்டில் உறுதியாக இருக்கின்றன.

அதேபோன்று அமைச்சர் ஹைடு சட்டம் குறித்து விளக்கியுள்ள பத்தியைப் பொறுத்தவரை, ‘ஹைடு சட்டத்தின் தாக்கங்கள் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்கிற அரசின் புரிதலோடு நாங்கள் ஒத்துக்போகவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். பிரணாப்முகர்ஜி அந்த அறிக்கையில், ‘‘ஹைடு சட்டம் அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கும் நாடாளுமன்ற அமைப்புகளுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஷரத்து’’ என்று கூறியிருக்கிறார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அமெரிக்க நாடாளுமன்றமானது அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்தியாவுடன் ராணுவம் சாரா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு, ஒரு சில நிபந்தனைகளுடன், அதிகாரம் அளித்திருக்கிறது. எனவேதான் அந்த நிபந்தனைகள் இந்தியாவைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் கூறுகிறோம். அந்த நிபந்தனைகள் நம் நாட்டின் அயல்துறைக் கொள்கையில் தலையிடுகின்றன, நம் நாட்டின் இறையாண்மையில் தலையிடுகின்றன, இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்திலும் தலையிடுகின்றன. அந்த நிபந்தனைகள் குறித்து கடந்த காலங்களில் நாம் விரிவாக விவாதித்திருக்கிறோம். எனவேதான் அந்த நிபந்தனைகள் இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல என்றும், ஹைடு சட்டம் இந்தியாவைக் கடுமையாகப் பாதிக்கும் ஒரு சட்டம் என்று நாம் கூறுகிறோம். இத்தகைய நிபந்தனைகளை உள்ளடக்கிய ஹைடு சட்டத்துடன் போடப்படும் எந்த ஒப்பந்தமாக இருந்தாலும், அது நம் நாட்டின் இறையாண்மை மீது ஏவப்படும் நேரடித் தாக்குதலாகும்.

நம்மைப் பொறுத்தவரை, இந்தியாவின் அயல்துறைக் கொள்கைக்கு ஹைடு சட்டம் ஆபத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவின் இறையாண்மைக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கிறது, மேலும் இந்தியாவை அமெரிக்காவுடனான ஒரு ராணுவக் கூட்டாளியாக மாற்றுவதற்கும் முயற்சிக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ற வகையில் மாற்ற முயற்சிக்கிறது.

இந்திய அமெரிக்க ராணுவம் சாரா அணுசக்தி ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை அரசாங்கம் இடதுசாரிக் கட்சிகளுடன் ஏற்படும் கருத்தொற்றுமை அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார். இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை இப்பிரச்சனையில் அரசாங்கத்துடன் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்திட விரும்புகிறோம்.

தற்சமயம் அமெரிக்காவில் ஜனாதிபதிக்கான தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்றுதான் நாம் நம் அரசாங்கத்தைக் கேட்கிறோம். எனவே, இந்திய அரசு இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் நடைமுறைப்படுத்தும் பணியைத் தொடரக்கூடாது என்கிற எங்கள் நிலைபாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

(தொகுப்பு: ச.வீரமணி)

அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியா தொடரக்கூடாது-சிபிஎம்

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியா தொடரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

‘‘நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அயல்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ‘‘அயல்துறைக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சிப் போக்குகள்’’ குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும் சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் மேற்படி அறிக்கையில், ஹைடு சட்டத்தின் பிரயோகம் குறித்தும், ராணுவம் சாரா அணுசக்தி ஒத்துழைப்பு குறித்தும் அமெரிக்க அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள சில அறிக்கைகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்து, ‘ஹைடு சட்டம் அமெரிக்காவுக்கு மட்டுமே பயன்படத்தக்கது’ என்றும், இந்தியாவின் உரிமைகள் இருதரப்பு 123 ஒப்பந்தத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அவ்வாறு அமெரிக்க அதிகாரி என்று குறிப்பிடுவது, அமெரிக்க அரசின் அயல்துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ் அவர்களைத்தானே தவிர வேறு யாரையுமல்ல. அவர்தான் பிப்ரவரி 14 அன்று அயல்துறை விவகாரங்கள் குழுவின் பிரதிநிதிகள் அவையில் ‘‘ஹைடு சட்டத்திற்கு முரணாக அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியாவிற்கு ஆதரவாக நாங்கள் இருந்திட மாட்டோம்’’ என்றும், ‘‘ஹைடு சட்டத்துடன் முழுமையாக ஒத்துப்போய்த்தான் ஆக வேண்டும்’’ என்றும் மிரட்டியிருந்தார். இதுதான் ஹைடு சட்டம் குறித்து, அமெரிக்க அரசாங்கத்தின் தெளிவான நிலைபாடு. ஹைடு சட்டத்திற்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று திரும்பத் திரும்ப சொல்வது இந்திய அரசுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. இதனை நம்புவார் யாருமில்லை. ஹைடு சட்டமோ அல்லது ஹைடு சட்டத்தின் ஷரத்துக்களின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தமோ 2006 ஆகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் பிரதமர் அளித்திட்ட உறுதிமொழிகளுக்கு உட்பட்டவைகளாக இல்லை. நாட்டில் விரிவான அளவில் அரசியல் கட்சிகளுடனான கருத்தொற்றுமையைக் ‘‘கோர’’ அரசாங்கம் முயலும் என்று அரசு, நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது விந்தையிலும் விந்தையாகும். நாடாளுமன்றத்தின் 2007 குளிர்காலக் கூட்டத் தொடரில் 123 ஒப்பந்தம் விவாதிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறிய கருத்துக்களை அரசாங்கம் முதலில் மதித்து நடந்திட வேண்டும். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அரசின் நிலைபாட்டிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு கிடையாது என்பதை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். இது தொடர்பாக அரசியல் கருத்தொற்றுமை ஏற்படவே இல்லை. எனவே, இந்த ஒப்பந்தத்தை அரசு மேலும் தொடரக் கூடாது.’’

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.