Thursday, August 9, 2018

தலித்துகள்/பழங்குடியினர் (வன்கொடுமைத்) தடைச்சட்டம் அரசமைப்புச்சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்படவேண்டும்


தலித்துகள்/பழங்குடியினர் (வன்கொடுமைத்) தடைச்சட்டம்
அரசமைப்புச்சட்டத்தின் ஒன்பதாவது  அட்டவணையில் சேர்க்கப்படவேண்டும்
மாநிலங்களவையில் கே.சோமபிரசாத் வலியுறுத்தல்


புதுதில்லி, ஆக. 10-
தலித்துகள்/பழங்குடியினர் (வன்கொடுமைத்) தடைச்சட்டம் அரசமைப்புச்சட்டத்தின் ஒன்பதாவது  அட்டவணையில் சேர்க்கப்படவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே. சோமபிரசாத் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வியாழன் அன்று மாலை 2018ஆம் ஆண்டு தலித்துகள்/பழங்குடியினர் (வன்கொடுமைத் தடைத்)திருத்தச் சட்டமுன்வடிவின்மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று கே. சோமபிரசாத் பேசியதாவது:
இந்தத் திருத்தச்சட்டமுன்வடிவு, முன்பிருந்த தலித்துகள்/பழங்குடியினர் (வன்கொடுமைத் தடைச்)சட்டத்தின் முந்தைய ஒரிஜினல்நிலை மீளவும் நிலைநிறுத்தப் படுவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கிறது. தலித்துகள் இந்திய சமூகத்தில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கிற மக்களிலேயே மிகவும் மோசமான நிலையில் அமுக்கி வைக்கப்பட்டிருப்பவர்கள் என்று நமக்குத் தெரியும். பல நூறு ஆண்டு காலமாக இந்தியாவில் நீடித்திருந்துவரும் சாதிய அமைப்பு முறைதான் இதற்குப் பிரதான காரணமாகும். நாடு சுதந்திரம் அடைந்து எழுபதாண்டுகளுக்குப் பின்னரும் கூட, இவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் பரிதாபகரமான நிலையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தலித்துகளில் 60 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு நிலம் கிடையாது. இவர்களின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்.
இவர்கள் பல்வேறுவிதமான பாகுபாடுகளை நாள்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சாதியப் பாகுபாடு இருந்துவருகிறது. கிராமங்களிலிருந்து, பெருநகரங்கள் வரை, குழந்தைகளின் நர்சரிப் பள்ளிகளிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை, உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் இவர்களை ஒதுக்கியே வைத்திட எப்போதும் முயற்சிக்கிறார்கள். இவர்களுக்கு விவசாய நிலம் வைத்துக்கொள்வதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. எல்லாரும் தண்ணீர் எடுக்கும் இடங்களில் இவர்கள் தண்ணீர் எடுப்பதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. வகுப்பறைகளில்   தலித் குழந்தைகள், இதர குழந்தைகளுடன் உட்காருவதற்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது. பொது சுடுகாடு, இடுகாடுகள் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. பொது இடங்களுக்கு வருவதற்கான அனுமதி இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்தியக் குடிமக்களால் அனுபவிக்கப்படும் அடிப்படை உரிமைகளில் 90 சதவீதம் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர்கள் மேல்சாதியினரால் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சமீப காலங்களில் கலப்புத் திருமணம் செய்த காரணத்திற்காக தலித்துகள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மீசை வளர்த்ததற்காக, திருமண
ஊர்வலத்தின்போது குதிரையில் சவாரி செய்ததற்காக, மிகவும் சுத்தமாக ஆடை அணிந்ததற்காக எல்லாம் அவர்கள்மீது அட்டூழியங்கள் ஏவப்பட்டிருக்கின்றன. இரண்டு நிமிடங்களுக்கொருமுறை ஒரு தலித், சாதியப் பிரச்சனைகள் காரணமாகத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். சராசரியாக, ஒவ்வொரு வாரமும் 13 தலித் பெண்கள் வன்புணர்வுக்கொடுமைக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இச்சட்டத்தை மிகவும் கடுமையானமுறையில் நீர்த்துப் போகச் செய்திருக்கிறது. நீதியைப் பெறுவதற்கான நடைமுறைகளில் மிகவும் முக்கியமான ஷரத்துக்களில் மாற்றங்களைச் செய்ததன் மூலமாக, நீதி கிடைப்பதென்பதே ஒன்று தாமதமாகும், இல்லையேல் மறுக்கப்படும். இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எவரொருவரும் நீதிமன்றத்தை நாடவில்லை. நீதிமன்றம், தாமாகவே முன்வந்து, இவ்வாறு இச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்தது. பாதிக்கப்பட்ட நபர்கள் எவருடைய கருத்தையும் கேட்டு, அது இவ்வாறு செய்திடவில்லை. இது இயற்கை நீதிக்கு எதிரானதாகும், சட்டக் கோட்பாட்டியிலுக்கு எதிரானதாகும். (This is against the principles of natural justice as well as jurisprudence.) உச்சநீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட மூன்று நிபந்தனைகளும் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும். இவை, தலித்துகள்/பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்திடுவதற்கே இட்டுச்செல்லும். குற்றமிழைக்கும் கயவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்திட காவல்துறையினர் தயாராக இல்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சம்பந்தமாக, இந்தச் சட்டம் மேலும் நன்கு வலுப்படுத்தப்பட வேண்டும்.
உங்கள் மூலமாக, இந்த அரசாங்கத்திற்கு என்னுடைய வேண்டுகோள் என்னவெனில், தலித்துகள்/பழங்குடியினர் (வன்கொடுமைத்) தடைச்சட்டம் அரசமைப்புச்சட்டத்தின் ஒன்பதாவது  அட்டவணையில் சேர்க்கப்படவேண்டும். அவ்வாறு செய்யப்படுவதன் மூலம் இந்தச் சட்டத்தை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்துவதிலிருந்து பாதுகாத்திட வேண்டும் என்பதேயாகும்.
இவ்வாறு கே. சோமபிரசாத் கூறினார்.
(ந.நி.)

No comments: