Saturday, August 11, 2018

கேரளாவில் மழை சேதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்



புதுதில்லி, ஆக. 11-
கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்திடவும், நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியிருப்பதாவது:
தொடர்ந்து விடாது பெய்துவரும் கனமழையின் விளைவாக கேரளாவில் எட்டு மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெள்ளமும், சேதமும் ஏற்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இவற்றின் விளைவாக சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடிழந்துள்ளார்கள். 29 பேர் இறந்துள்ளார்கள். பல இடங்களில் சாலைகளும், வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
சேதாரத்தின் அளவு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்பது தெளிவாகத் தெரிந்த போதிலும், சேதாரத்தின் முழுமையான விவரங்கள் இன்னமும் மதிப்பிடப்படவில்லை.
மாநில அரசாங்கம் பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் புனரமைப்புக்கான பணிகளை முழுவீச்சுடன் செய்துகொண்டிருக்கிறது. மத்திய அரசும் அனைத்து அவசியமான உதவிகளையும் உடனடியாகச் செய்து தர வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். மக்களும் மற்றும் பல்வேறு அமைப்புகளும் ஏற்கனவே பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஒருமித்து மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்கள் பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்கேற்க வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு அறைகூவி அழைக்கிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
(ந.நி.)

No comments: