Saturday, August 18, 2018

எங்களிடையேயான உறவு விசேஷமான ஒன்று: சீத்தாராம் யெச்சூரி



சீத்தாராம், இந்த கலாட்டாவிற்கெல்லாம் நீங்கதான் காரணம் என்று நினைக்கிறேன், என்னிடம் பேசும்போது தமிழில் பேசுறீங்க, சந்திரபாபு நாயுடுவிடம் பேசும்போது தெலுங்கில் பேசுறீங்க, ஜோதிபாசுவிடம் பேசும்போது வங்கமொழியில் பேசுறீங்க, முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ்வுடன் பேசும்போது இந்தியில் பேசுறீங்க. ஒருத்தரிடம் நீங்க என்ன பேசுகிறீர்கள் என்பதை மற்றவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. இவ்வாறு ஒவ்வொருவரிடமும் அவரவர் மொழியில் பேசுவதுதான் இங்கே குழப்பத்திற்கே காரணம். இதை நீங்கதான் தீர்த்து வைக்கணும்,என்று கலைஞர் கூறுவார்.
கடந்த பல ஆண்டு காலத்தில் நான் பலமுறை கலைஞர் கருணாநிதியுடன் பல விஷயங்களைப் பேசி இருக்கிறேன். எங்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றம் என்பது உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் இருப்பதுபோல பாசத்துடனும் நேசத்துடனும் நகைச்சுவையுணர்வுடனும் அமைந்திருக்கும்.
1997 ஏப்ரலில் ஒருநாள். அப்போது மத்தியில் ஐமுகூ அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபின்னர், எச்.டி. தேவகவுடாவை உடனடியாகப்  பிரதமராகத் தேர்வு செய்த சமயம். பிரதமரைத் தேர்வு செய்துவிட்டோம். ஆனாலும், கேபினட் அமைச்சர்களை இறுதிப்படுத்துவதில் கருத்துவேறுபாடுகள் இருந்தன.
தேவ கவுடாவை, பிரதமர் பொறுப்பில் அமர்த்தும் சமயத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற முந்தைய விவாதங்களில் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் கலந்துகொண்டார், ஆயினும் அவர் அதில் ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன்னமேயே சுர்ஜித், ருஷ்யாவிற்குச் செல்ல வேண்டியிருந்ததால், தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களின்போது எங்கள் கட்சியின் சார்பாக நான் கலந்துகொள்ளப் பணிக்கப்பட்டேன். அந்த சமயத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்துத்தான் கலைஞர் மேலே கூறியவாறு வேடிக்கையுடன் குறிப்பிட்டார்.
கலைஞரை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். ஆரம்பத்தில் கொஞ்சம் இடைவெளி இருந்தது. பின்னர் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். ஓர் அரசியல்வாதியாக அவருடைய ஆளுமை, ஓர் எழுத்தாளராக, கவிஞராக மற்றும் திராவிடச் சிந்தனைகளை முன்னெடுத்துச்செல்பவராக அவருக்கிருந்த திறமைகள் எனக்கு மிகவும் நன்றாகவேத் தெரியும். அவருடைய திரை வசனங்கள் பலவற்றில்  வாழைப்பழத்திற்குள் மருந்தை வைத்துக் கொடுப்பதுபோல, நகைச்சுவைக்குள் கருத்துக்களை நுட்பமாகக் கலந்திருப்பார்.
   அதேபோன்றதோர் இன்முக நகைச்சுவையை நானும் முதன்முறையாக மேலே கூறிய விவாதங்களின்போது எதிர்கொண்டேன், அனுபவித்தேன். அந்த அனுபவத்திற்குப் பின்னர், கலைஞர் மிகவும் இக்கட்டான பேச்சுவார்த்தைகளுக்கிடையே பதற்றமான நிலைமைகள் இருக்கும் சமயங்களில், கலைஞர் இதுபோன்று நயமான நகைச்சுவை அஸ்திவாரங்களை ஏவுவதை நானும் உய்த்துணர்ந்துகொண்டேன்.
எங்களிடையே இத்தகைய நகைச்சுவையுடன் இருந்த கருத்துப்பரிமாற்றங்கள்தான், எங்களுக்கிடையே ஒரு விசேஷமான உறவுமுறையை பிற்காலங்களில் ஏற்படுத்தியதற்குக் காரணம் என்று நம்புகிறேன்.  ஓர் இளநிலை அரசியல்வாதியாக இருந்த என்னை மிகவும் நேசித்தார். தென்னிந்திய அரசியலில் ஒரு முதுபெரும் ஜாம்பவனாகத் திகழ்ந்த அவரை, நுணுக்கமாக ஆய்வு செய்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.  1996க்கும் 1998க்கும் இடையே ஐக்கிய முன்னணிக் காலத்தின்போது, கலைஞர் கருணாநிதியும், திமுகவும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் தலைமை தாங்கப்படும் சங் பரிவாரத்தின் நாட்டைப் பிளவுபடுத்தும் இந்துத்துவா சித்தாந்தத்தை எதிர்ப்பதில் உறுதியுடன் இருந்தார்கள். ஆட்சியிலிருந்து பாஜகவை அகற்றும் உறுதியான உறுதிப்பாட்டுடன் எங்கள் கூட்டணி உருவானது.
ஆயினும் 1998க்குப்பின்னர் எங்கள் அரசியல் வெவ்வேறு திசைகளில் மாறிய சூழ்நிலையில் நாங்கள் ஒருவரையொருவர் எதிரெதிரே இருந்துதான் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.
ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஓராண்டு கழித்து, கவிழ்ந்தபின்னர், திமுக, அடல் பிகாரி வாஜ்பாயி தேசிய தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி பக்கம் நகர்ந்தது. அப்போதும்கூட எங்களிடையேயான தனிப்பட்ட தொடர்பு நீடித்தது. நான் சென்னைக்கு வரும் ஒவ்வொருதடவையும் அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் சூரியனுக்குக் கீழேயுள்ள அநேகமாக அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.
இதுபோன்று கருத்துப்பரிமாற்றங்களின்போது, அவருடைய இந்துத்துவா எதிர்ப்பு, வகுப்புவாத அரசியல் எதிர்ப்பு நீர்த்துப்போயிருப்பதைக்குறித்தும்கூட விவாதித்திருக்கிறோம். இதுதொடர்பாக நான் கேள்வி கேட்டபோது, அவர் ஒரு நிகரற்ற காரணத்தை (a unique reasoning) அதற்காக என்னிடம் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஒரு நீண்டகாலத்திற்கு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருந்ததுடன் ஒப்பிட்டு, மக்களின் தீர்ப்பின்மீது மகத்தான பிடிப்பினை இடதுசாரிகள் வைத்திருக்கக்கூடிய அளவிற்கு, சித்தாந்த உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தக்கூடிய நிலையில் திமுக இல்லை என்கிற கருத்து கருணாநிதி கொண்டிருந்தார். எங்களுடைய நிலை ஒருவிதமான தட்பவெப்ப நிலையுடன் கூடிய அரசியலாகும். (Ours is a kind of seasonal politics.) நாங்கள் எங்களுடைய அரசியலையும் அமைப்பின் நலன்களையும் பாதுகாத்திடக் கடினமாகப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்,(We have to struggle hard to protect our political and organisational interests,)என்று அவர் கூறினார்.
ஆயினும், 2004 வாக்கில், அவர் தன்னுடைய ஒரிஜினல் சித்தாந்த நிலைக்குத் திரும்பவேண்டிய தேவையை உணர்ந்தார். தோழர் சுர்ஜித்துடன் தொடர்ந்து மேற்கொண்ட கருத்துப்பரிமாற்றங்களால் தூண்டப்பட்டு, அவர் மீண்டும் பிளவுவாத மற்றும் பாசிஸ்ட் இந்துத்துவா அரசியலுக்கு எதிராகப் போராடும் ஓர் உக்கிரமான போராளியாக மாறினார்.
தோழர் சுர்ஜித், காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியிடம் கலைஞரை கூட்டணிக்கு மீளவும் அழைக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ள வைத்தார். 2004இல் பாஜகவிற்கு எதிராக ஒரு பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்காக இம்மூன்று தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது நானும் உடன் இருந்தேன். இதுதான் பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாக மாறியது. இக்கூட்டணி 2004இலிருந்து 2014வரை ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை அளித்தது. இந்த ஆண்டுகளில் அவருடனான கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்ந்தன. அந்த சமயங்களில் எல்லாம் எங்கள் கருத்துப்பரிமாற்றங்கள் அரசியல் மற்றும் அரசின் கொள்கைத்திட்டங்களோடு மட்டும் நின்றுவிடாமல் இலக்கியம், மொழி மற்றும் சமூகவியல் போன்று பல்வேறு பொருள்கள் குறித்தும் அமைந்திருக்கும்.
இவ்வாறு விரிவான எங்கள் விவாதங்களுக்கு மத்தியில், அவர் என்னை கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உரையாற்றிட என்னை அழைத்தபோது, சிறப்பாகச் சொல்லவேண்டியதொரு விஷயமும் நடந்தது. அவர் இம்மாநாட்டில் பேச வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டபோது, தமிழ் இலக்கியத்துடன் எனக்கு அந்த  அளவிற்கப் பரிச்சயம் கிடையாது என்றும் எனவே இத்தகையதொரு சிறப்பான அறிஞர்கள் கூடும் ஓர் இடத்தில் நான் தனிமைப்பட்டுவிடலாம் என்று அவரிடம் கூறினேன். அதற்கு கலைஞர் மறுமொழி என்ன தெரியுமா? இந்த செம்மொழி மாநாடு நடைபெறுவது என்பது தமிழ் இலக்கியம் பற்றி மட்டுமல்ல, இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து உருவான பல்வேறு இனங்களின் விரிவான கலாச்சாரத்தின் பிரச்சாரம் பற்றியதுமாகும், என்று தெரிவித்தார். அதற்கு என்னால் எவ்விதமான மறுப்பும் சொல்ல முடியவில்லை.
அப்போது கோயம்பத்தூருக்கு வந்த பயணம் கூட நினைவுகூரத்தக்க ஒன்று. நான் தில்லியிலிருந்து சென்னை வந்த விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகிவிட்டது. அதனால் என்னால் கோவைக்குச் செல்லும் விமானத்தைப் பிடிக்க முடியவில்லை. எனவே, கலைஞரிடம் என் பயணத்தை ரத்து செய்திடுமாறு பரிந்துரைத்தேன். ஆனால் கலைஞர் அதனைச் செய்யவில்லை. மாறாக, முதலமைச்சருக்கான ஹெலிகாப்டரில் சென்னையிலிருந்து, கோவைக்கு வானூர்திவழியாக என்னை வரவழைத்தார். நானும் சமூகத்தின் அடித்தளத்திற்கும் மேல்கட்டமைப்புக்கும் இடையேயான ஒரு கண்ணியாக மொழி பார்க்கப்பட வேண்டும் என்கிற மார்க்சியக் கண்ணோட்டத்தை அப்போது சமர்ப்பித்து உரை நிகழ்த்தினேன். (I made the presentation on the Marxian perspective of seeing language as the link between the base and the superstructure.) பின்னர் அந்த உரை முரசொலியிலும் வந்தது, கலைஞரால் ஒரு சிறுபிரசுரமாகவும் வெளியிடப்பட்டது.
எங்களிடையேயான கருத்துப்பரிமாற்றங்கள் அவருடைய இறுதிநாட்கள் வரையிலும் தொடர்ந்தன. நான்கு  ஆண்டுகளுக்கு முன்புவரையிலும்கூட கடந்த காலங்களில் எப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோமோ அப்படிப் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் அப்போது கலைஞரே கவித்துவத்துடன் கூறியதுபோல, அவர் விடும் மூச்சு அதனை நிறுத்திவிடலாம், ஆனாலும் அவருடைய வாழ்க்கையும் அரசியலும் விட்டுச்சென்றுள்ள செய்தி, எப்போதும் நீண்டு நிலைத்து நிற்கும். (The breath may have stopped but the message of his life and politics shall remain for long.)
(சீத்தாராம் யெச்சூரி, வெங்கிடேஷ் ராமகிருஷ்ணனிடம் கூறியதிலிருந்து)
(தமிழில்: ச. வீரமணி)
            


No comments: