Monday, August 6, 2018

தண்ணீரைத் தனியார்மயமாக்குவதற்குப் பின்னணியில் உள்ளவர்கள் -ஆர். அருண்குமார்



நம் நாட்டில் பருவமழை பல்வேறுவிதமான உணர்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் வசிப்பவர்கள் மழை மேகங்களைக் கண்டாலே அதனை மிகவும் ஆர்வத்துடன் பார்த்துவிட்டு, மழை பெய்யும்போது  ஆனந்தக் கூத்தாடி அதனை வரவேற்பார்கள். அதே சமயத்தில் நகரங்களில் வசிப்பவர்களோ அதனை ஆவலுடன் பார்த்தாலும், மழை வந்தபின்னர், பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்று பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துவதால், மழை பெய்வது எப்போது நிற்கும் என எதிர்பார்க்கத்தொடங்கிவிடுவார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், தண்ணீரை எப்படி மேலாண்மை செய்வது என்பதுதான் மழைக்காலங்களில் நம் அணுகுமுறையையும் தீர்மானித்துக்கொண்டிருக்கிறது. நம் நாட்டில் தொடர்ந்து இருந்து வந்த அரசாங்கங்கள் தண்ணீரை மேலாண்மைசெய்வதில் தாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம் என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவேதான், இதில் தங்களுக்கிருந்துவந்த பொறுப்பை, தனியாரிடம்அவுட்சோர்சிங்முறையில் தருவதற்குத் தீர்மானித்து, நமக்கு சொல்லமுடியாத அளவிற்குத் துன்பங்களைத் தந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில், மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின்படி, உலக மக்கள் தொகையில் 18 சதவீதத்திற்கும் அதிகமாக வாழ்பவர்கள் உள்ள அதே சமயத்தில், உலகில் புதுப்பிக்கவல்ல தண்ணீர் வளங்களில் 4 சதவீத அளவிற்கு மட்டுமே இந்தியா பெற்றிருக்கிறது. இது தண்ணீரை மிகவும் மதிப்புமிக்க வளமாக மாற்றி இருக்கிறது. ஆனால், அரசாங்கம் தண்ணீரை, ஒருமதிப்புமிக்க பண்டமாக’ (‘precious commodity’-ஆக) பாவித்து, தனியார் நிறுவனங்களுக்கு அதனை அளித்து தங்கள் நிதிஆதாரங்களைவளப்படுத்திக் கொள்ளமுடியுமே என்று பார்க்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம், 2025ஆம் ஆண்டு வாக்கில் தண்ணீரின் வர்த்தக வாய்ப்புகள் சுமார் ஒரு டிரில்லியன் டாலர்களுக்கு (சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்களுக்குச்)  சென்றடையும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ் வாய்ப்புகளைத் தனியார் பயன்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.  இத்தகு திசைவழியில் அரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்திட எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும். அதில் சமீபத்திய உதாரணம்தான், கோயம்பத்தூர் மாநகராட்சி மேற்கொண்டுள்ள தீர்மானமாகும். 2018 ஜூனில் ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, கோவை மாநகராட்சி,  தண்ணீர் வர்த்தகத்தை மேற்கொண்டிருக்கிற சூயஸ் என்னும் பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனம் ஒன்றை, ‘ஒட்டுமொத்த நகரத்திற்குள்ளும் தண்ணீர் விநியோக முறையை மேலாண்மை செய்து, இயக்கிடுவதற்குத்தேர்வு செய்திருக்கிறது. இந்தியாவில், தங்களுக்குக் கிடைத்த, ‘தண்ணீர் சேவைகள் ஒப்பந்த வெற்றிஎன இதனை, சூயஸ் நிறுவனம் களிபேருவகையுடன் கூறிக்கொண்டிருக்கிறது. 26 ஆண்டுகளுக்கு சூயஸ் நிறுவனம், 2,961 கோடி ரூபாய்க்கு, 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அந்நிறுவனம், கோயம்பத்தூரின்  அனைத்துக் குடிமக்களுக்கும்ஒரு நாளின் 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும்தரமான தண்ணீர் சேவையைத் தந்திட வேண்டும்.
உலகம் முழுவதும் பல நாடுகளில் தண்ணீர் சேவைகளை வழங்கிவரும் மாபெரும் கார்ப்பரேட்டுகள் மூன்று. இதில் இந்த சூயஸ் நிறுவனமும் ஒன்று. நம் நாட்டில், இது தன்னுடைய செயல்பாடுகளை தில்லியில் 2012இல் துவக்கியது. மேலும் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவிலும் தன்னைச் சம்பந்தப்படுத்திக்கொண்டிருக்கிறது.  இந்த நிறுவனம், நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் ‘5.5 பில்லியன் லிட்டர்கள் (550 கோடி லிட்டர்கள்) குடிதண்ணீரை, ஒவ்வொரு நாளும் 44 மில்லியன் (4 கோடியே 40 லட்சம்) குடியிருப்புகளுக்கும் அதிகமாக வழங்கி வருவதாகக் கூறுகிறது. இவ்வாறு இது தன்னைப் பீற்றிக்கொள்ளம் அதே சமயத்தில், மத்திய தணிக்கைத்துறைத் தலைவர் (CAG—Comptroller and Auditor General) தன்னுடைய அறிக்கையில், சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியை பிழையாக நிர்வகித்த காரணத்தால்தான், 2015இல் மிக மோசமான வெள்ளச் சேதம் ஏற்பட்டது என்றும் இவ்வாறு மிக மோசமான முறையில் பேரிடர் ஏற்பட்டதற்கு இந்த நிறுவனமே காரணம் என்றும் இதனைத் தண்டித்திருக்கிறது. இந்த நிறுவனம் இவ்வாறு கெட்டபெயர் எடுத்திருந்தபோதிலும்கூட, அது,  தமிழ்நாடு அரசையோ அல்லது கோவை மாநகராட்சியையோ இத்தகையதோர் இலாபகரமான ஒப்பந்தத்தை இதற்கு வெகுமதியாக அளிப்பதைத் தடுத்து நிறுத்திடவில்லை.
உண்மையில், இந்தியாவில் இதுபோன்று வெகுமதி அளிக்கப்பட்டிருக்கும்  தண்ணீர் விநியோகிக்கும் தனியார் நிறுவனம்  சூயஸ் மட்டும் அல்ல. இதேபோன்று வேறுசில நிறுவனங்களும் உண்டு. வியோலியா வாட்டர் இந்தியா (லிமிடெட்), ஜஸ்கோ, விஷ்வா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், எம்எஸ்கே பிராஜக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட், ஆரஞ்சு சிட்டி வாட்டர் பிரைவேட் லிமிடெட் (ஓசிடபிள்யுஎல்), ரேடியஸ் வாட்டர் லிமிடெட் (ஆர்டபிள்யுஎல்) போன்று (Veolia Water (India) Ltd, Jusco, Vishwa Infrastructure Ltd, MSK Projects (India) Ltd, Orange City Water Private Ltd (OCWL), Radius Water Limited (RWL),) மேலும் சில தனியார் பெரும் நிறுவனங்களும் இருக்கின்றன. இவ்வாறு பெரிய நிறுவனங்களுடன் தண்ணீர் துறையில் சம்பந்தப்பட்டுள்ள மேலும் சில சிறிய நிறுவனங்களும் அரசின் தாராளமான நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டு வருகின்றன. இவ்வாறு தண்ணீர் விநியோகம் சம்பந்தமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசு சாரா நிறுவனமான மந்தான் அத்யான் கேந்திரா (Manthan Adhyan Kendra) என்னும் அமைப்பு, இவ்வாறு சம்பந்தப்பட்டுள்ள தனியார் அமைப்புகள் 300க்கும் மேலாக இருக்கின்றன என்று கூறுகிறது.
தனியார் தண்ணீர் நிறுவனங்களும் நம் நாட்டில் அவற்றின் செயல்பாடுகளும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதே துவங்கிவிட்டன. சர்வதேச நிதியம் (IMF), உலக வங்கி போன்ற சர்வ தேச நிதி நிறுவனங்கள், அவை கடன் கொடுக்கும் போது மத்திய அரசுக்கும் மற்றும் பல்வேறு மாநில அரசுகளுக்கும் விதித்துள்ள  நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, இவ்வாறு கட்டளைகளைத் திணித்திருக்கின்றன. அத்தகைய கட்டளைகளுக்கு அடிபணிந்து, மத்திய மாநில அரசுகள் இவற்றைச் செயல்படுத்திட முயற்சிக்கின்றன. உலக வங்கி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் (Smart City project), ஜேஎன்என்யுஆர்எம் (JNNURM) போன்றவற்றின் மூலமாக நகராட்சி சீர்திருத்தங்களை உத்தரவாதப்படுத்துவதில் உலக வங்கி உன்னிப்பாகச் செயல்பட்டுவருகிறது.  இக்கட்டளைகளை மத்திய அரசு, கர்நாடகா நகராட்சி சீர்திருத்தத் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், ஆந்திரப் பிரதேசம் நகர்ப்புற சீர்திருத்தம் மற்றும் நகராட்சி சேவைகள் திட்டம், குஜராத் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், மேற்கு வங்க நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் மற்றும் பஞ்சாப் போன்ற பல்வேறு மாநிலங்களிலும் உள்ள அரசுகள் இவற்றை முனைப்பாகச் செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள் அனைத்துமே, சில சேவைகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திட வேண்டும் என்பதையும், அதற்கு ஈடாக அவற்றிடமிருந்து லெவி கட்டணங்களை வசூலித்துக்கொள்ளலாம் என்றும் வரையறுத்திருக்கின்றன.
உலக வங்கி, 1992ஆம் ஆண்டுநீர் வளங்கள் மேலாண்மையை மேம்படுத்துதல்’ (‘Improving Water Resources Management’) என்று தலைப்பிட்டுள்ள தன்னுடைய ஆவணத்தில், ஏன் வளர்முக நாடுகள் தண்ணீரைத் தனியாருக்குத் தாரைவார்த்திட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. தண்ணீர் வரி விகிதங்கள் (water tariff rates), பல வளர்முக நாடுகளில்சந்தை விகிதத்தைவிட மிகவும் குறைவாக இருக்கின்றனஎன்று இங்கே நம் வங்கிகள் கூறுவதுடன், “அப்போதுதான் இவற்றுக்காகச் சேவை செய்துகொண்டிருக்கும் தனியார் நிறுவனங்கள் நிலையான இலாபத்தை ஈட்டுவதற்கு, இவ்வாறு உயர்த்துவது அவசியம்” என்றும் கூறுகின்றன.  இதே தத்துவம், மத்திய அரசு 450 மில்லியன் டாலர்கள் அடல் புஜல் யோஜனா (Atal Bhujal Yojana)விற்காக, கடன் பெற்றபோது அளிக்கப்பட்ட 2018 மே மாதத்தில் வெளியிடப்பட்டுள்ள திட்ட மதிப்பீடு ஆவணத்திலும் (Project Appraisal Document (May 2018)) மீளவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. (இத்திட்டமானது தண்ணீர் வரியை அதிகப்படுத்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.)
நகராட்சி சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவினங்களுக்காகவும், நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சியில் தனியார் துறையை ஈடுபடுத்துவதற்கான செலவினங்களுக்காகவும்  மக்களிடமிருந்தேசெலவுத்தொகையை வசூலித்திட வேண்டும்என்கிற கருத்தாக்கம் (concept of ‘cost recovery’), 1992-97 எட்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திலேயே துவங்கிவிட்டது. 2002 தேசிய தண்ணீர்க்  கொள்கை நிறைவேற்றப்பட்டபின்னர், தண்ணீர் துறையைத் தனியாருக்குத் தாரை வார்த்திடுவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த ஆவணம் மிகவும் தெளிவாகவே வரையறுத்திருக்கிறது. “எங்கெல்லாம் இயலுமோ அங்கெல்லாம், பல்வேறுபட்ட பயன்பாடுகளுக்காகவும், தண்ணீர் வளத் திட்டங்களை திட்டமிடுவதற்கும், வளர்ப்பதற்கும், மேலாண்மை செய்வதற்கும் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்திட வேண்டும்,” என்றும், “அவ்வாறு பல்வேறு உபயோகங்களுக்காக வசூலிக்கப்படும் தண்ணீர் கட்டணங்கள், தண்ணீர் சேவையை வழங்குவதற்கும் அவற்றை மேலாண்மை செய்வதற்கும் அளிக்கப்படுகிற சேவைகளுக்கு ஆகும் செலவினத்தை ஆரம்பத்தில் ஓரளவுக்கு ஈடுகட்டும் விதத்திலும், பின்னர் மூலதனச் செலவினங்களின் ஒரு பகுதியைச் சரிக்கட்டும் விதத்திலும் அமைந்திட வேண்டும்,” என்றும் குறிப்பிட்டிருக்கிறது. 2012இல் நிறைவேற்றப்பட்ட தேசியத் தண்ணீர் கொள்கையும், இதே கருத்தாக்கத்தைத்தான், வேறு பாஷையில் வலியுறுத்திக் கூறியிருக்கிறது.
உலக வங்கியின் கட்டளைக்கிணங்கத்தான், பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பு நோக்கம் வாகனங்கள் (SPVs—Special Purpose Vehicles) என்னும் அமைப்புகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவற்றின் பணிகள் என்ன தெரியுமா? மாநில அளவில் ஆட்சியில் அரசியல் கட்சிகள் மாறினாலும்கூட, நிர்வாகம் அவற்றின் கட்டுப்பாட்டிற்குச் சென்றாலும் கூட, அது உள்ளாட்சி அமைப்புகளாக இருந்தாலும் சரி, அல்லது மாநில அளவில் இருந்தாலும் சரி, அவற்றின் தலையீடு எதுவுமின்றி, தாங்கள் விதித்துள்ள சீர்திருத்தங்கள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை உத்தரவாதப்படுத்துவதே இவற்றின் பணிகளாகும். 1993இல் நிறுவப்பட்ட, கர்நாடகா நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நிதிக் கழகம் (KUIDFC- Karnataka Urban Infrastructure Development and Finance Corporation) என்பது, நம் நாட்டில் இவ்வாறு முதலாவதாக அமைக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றாகும். இப்போது, அநேகமாக இதுபோன்ற அமைப்புகளை அனைத்து மாநிலங்களும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இவை முழுக்க முழுக்க நிர்வாகம் மற்றும் முறைப்படுத்தும் அமைப்புகள்தான் என்றும், இவைதிட்ட முடிவுகளையும், அதற்கு நிதிகளை எங்ஙனம் செலவிடுவது என்பதையும், திட்டங்களை மேற்பார்வையிடுவதையும், முன்னேற்றத்தைச் சீர்படுத்துவதும், எல்லாவற்றிற்கும் மேலாக திட்டத்திற்கான ஒட்டுமொத்த கட்டணத்தையும் முறைப்படுத்துவதும்இவற்றின் வேலைகள் என்றும் கூறுகின்றன.
இவ்வாறு அமைக்கப்படும்சிறப்பு நோக்கம் வாகனங்கள்எந்தவிதத்திலும் தாங்கள் செயல்படும் இடங்களில் அமைந்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி கவுன்சில்களுக்குப் பதில்சொல்ல வேண்டிய தேவையில்லை. இவை தன்னாட்சி நிறுவனங்களாகும். இப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக ஓர் உயர்ந்த இடத்திற்கு இவை எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றன. இத்திட்ட வழிகாட்டும் நெறிமுறைகளின்படி, இத்தகையசிறப்பு நோக்கம் வாகனங்கள்’, ‘2013ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின்கீழ், நிறுவப்பட்டுள்ள லிமிடெட் கம்பெனிகளாகும்.’ இவ்வாறுசிறப்பு நோக்கம் வாகனங்கள்நிறுவப்பட்டதன் மூலம், உலக வங்கி, தன்னுடைய கட்டளைகளின் கீழ் அமைக்கப்படும் நிறுவனங்களின் செயல்பாடுகள், எவ்விதமானஅரசியலுக்கும் உட்படாது’, ‘வணிகரீதியில் மட்டுமே செயல்படுவதாகஅமைந்திட வேண்டும் என்று விரும்புகிறது. இதனால்தான், கோயம்பத்தூரில் தண்ணீர் விநியோகத்தைத் தனியாருக்குத் தாரைவார்த்திடும் முடிவை, சிறப்பு அலுவலரால், பொதுமக்களிடமோ அல்லது மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடமோ (மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.) கலந்தாலோசனை எதுவும் பெறாமலேயே மேற்கொள்ளப்பட்டதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.
இந்திய அனுபவமும், ஏன் உலக அனுபவமும் கூட, தனியாரால் மேற்கொள்ளப்படும் தண்ணீர் விநியோகம் தரமான சேவைகளை அளிப்பதற்கோ அல்லது 24×7 மணி நேரமும் சேவையை உத்தரவாதப்படுத்துவதற்கோ உதவிட வில்லை. ஜாம்ஷெட்பூர், மைசூர், நாக்பூர், மற்றும் இதர மாநகரங்களிலுமிருந்து வரும் அனுபவங்கள் இதனைச் சரி என்று மெய்ப் பித்திருக்கின்றன.  தனியார் நிறுவனங்கள் நம்மை எப்படியெல்லாம் ஏமாளிகளாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை உலகம் முழுதுமுள்ள மக்கள் தற்போது உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே கடந்த பதினைந்து  ஆண்டுகளாக 35 நாடுகளில் 180 மாநகரங்கள் மற்றும் நகரங்களில் தண்ணீர் சேவைகளை மீளவும்நகராட்சிகளின்’ (‘remunicipalisation’) கட்டுப்பாட்டிற்கே கொண்டுவர வேண்டும் என்று நிர்ப்பந்தித்திருக்கிறார்கள். பிரான்சிலும் கூட, அதாவது சூயஸ் மற்றும் வியோலியா போன்ற நிறுவனங்களின் சொந்த நாட்டிலேயே, மக்கள் தனியார்மயத்திற்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள். அரசும், 41 மாநகரங்களில் தண்ணீர் விநியோகத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இதில் மிகவும் ஆர்வத்தை அளிக்கக்கூடிய அம்சம் என்னவெனில், உலக வங்கியும் கூட தன்னுடைய 2005ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில், “இந்தத்துறையில் சிறப்பாகச் செயல்படுவதில் பொதுத்துறையில் செயல்பட்டவர்களுக்கும், தனியார்துறையில் செயல்பட்டவர்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க அளவிற்கு வித்தியாசம் எதுவும் இருப்பதாக புள்ளிவிவர  அடிப்படையில் தெரியவில்லை,” என்று ஒப்புக்கொண்டிருக்கிறது. இருந்தாலும்கூட, உலக வங்கி, அரசாங்கங்கள் இப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் தனியார் துறை பயனடைவதற்கே இத்துறையைத் தாரை வார்த்திட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிப்பதைத் தொடர்கிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியின் அனுகூலங்களைப் பயன்படுத்திக்கொண்டு, சர்வதேச நிதி நிறுவனங்கள் தங்கள் தாக்குதலை புதுப்பித்து, தண்ணீர் விநியோகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை உந்தித்தள்ளிக்கொண்டிருக்கின்றன. கிரீஸ், போர்த்துக்கல், இத்தாலி மற்றும்  அயர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள மக்கள் இம்முயற்சிகளுக்கு எதிராக வீறுகொண்டு எழுந்து அவர்களை இத்திட்டத்தைக் கொண்டுவருவதிலிருந்து பின்வாங்க வைத்திருக்கிறார்கள். இதற்கு முன் பொலிவியாவில் கொச்சம்பம்பாவிலும், அமெரிக்காவில் அட்லாண்டாவிலும் நடைபெற்ற போராட்டங்களைப் போலவே, இந்தப் போராட்டங்களும், மக்கள் போராட்டங்களின் எதிர்ப்பின் வல்லமையை உலகுக்குப் பறைசாட்டிக் கொண்டிருக்கின்றன. இவை, கோயம்பத்தூரில் தண்ணீர் விநியோகத்திற்காகவும், இதர சேவைகளுக்காகவும் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளை உறுதியுடன் எதிர்த்துநின்று முறியடித்திட நமக்கு உத்வேகத்தை அளித்திடும்.
(தமிழில்: .வீரமணி)


No comments: