People's Democracy Editorial
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் இந்திய அரசுக்கு எதிராகக் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். இது சென்ற வாரத்தில் மிகவும் தெளிவாக வெளிக்கொண்டுவரப்பட்டது. ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது மக்கள் மிகவும் குறைந்த அளவில் பங்கேற்றதைப் பார்த்தோம். வெறும் 7.12 சதவீத மக்களே வாக்கெடுப்பில் கலந்துகொண்டார்கள். இவ்வாறு மிகவும் குறைவான அளவில் மக்கள் பங்கேற்றதற்கு அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதோ அல்லது மிரட்டப்பட்டதோ காரணமல்ல, மாறாக மக்கள் பிரதானமாக தேர்தலில் பங்கேற்க மறுத்ததே காரணமாகும். 2016இல் மக்கள் எழுச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் மேற்கொண்டுவந்த சுழற்சியான எதிர்ப்புக் கிளர்ச்சிகளும் அவற்றுக்கு எதிராக, பாதுகாப்புப் படையினரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான அடக்குமுறைகளும் முடிவே இல்லாமல் தொடர்ந்தன. கடந்த இரண்டு நாட்களாக புல்வாமா அரசினர் கல்லூரியில் மாணவர்கள்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுதும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினரின் தாக்குதலில் 54 மாணவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். அரசு நிர்வாகம் அனைத்துக் கல்லூரிகளையும், பள்ளிக் கூடங்களையும் மூடிவிட்டது. இருந்தபோதிலும் மாணவர்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாணவிகளும் வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பெல்லட் குண்டும் பிடிவாதமும்
மோடி அரசாங்கம் கிளர்ச்சிகளை அடக்க ஒரேயொரு வழியைத்தான் பின்பற்றுகிறது. அதாவது அதிக அளவு ராணுவத்தைப் பயன்படுத்தி அடக்கிட முயற்சிக்கிறது. பெல்லட் குண்டுகள் விளைவித்த நாசம் குறித்து நன்கு தெரிந்தும்கூட, மத்திய அரசு இப்போதும் கூட, ‘பெல்லட் குண்டுகள் கடைசி ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்’ என்று கூறிக்கொண்டிருக்கிறது. ராணுவத்தின் பொறுப்பை ஏற்ற ஜெனரல் ராவாத், தான் பதவியேற்றவுடனேயே, ராணுவத்தின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர் எவராக இருந்தாலும் அவர்கள் பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் என்றே கருதப்படுவார்கள் என்றார். அதனைத்தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினரும், பாதுகாப்புப் படையினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டசமயத்தில், அவர்கள் மீது கல்லெறிகளில் ஈடுபட்ட பல இளைஞர்கள் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு சாவும் மேலும் கிளர்ச்சிகளுக்கு இட்டுச்சென்றன. அப்போது தங்கள் கைகளில் கற்களைத் தவிர வேறெதுவும் இல்லாது போராடும் பதின்பருவத்தினருக்கு எதிராக ராணுவமும் மத்திய துணை ராணுவப் படையினரும் மிகவும் வெறுக்கத்தக்க முறையில் மிகவும் கொடூரமானவிதத்தில் தாக்குதல்களைத் தொடுக்கின்றனர். பாதுகாப்புப்படையினர் மேற்கொள்ளும் அத்துமீறல்களை நியாயப்படுத்துவதிலேயே மத்திய அரசு குறியாக இருக்கிறது. சமீபத்தில், பரூக் தார் என்றொரு இளைஞன் ராணுவ ஜீப் ஒன்றின் முன் பகுதியில் உட்காரவைக்கப்பட்டு கயிற்றால் கட்டப்பட்டு பலகிராமங்கள் வழியே ஓட்டிச்செல்லப்பட்ட காணொளி ஒன்று வெளியானது. ராணுவத்தினருக்கு எதிராகக் கல்லெறியப்படுவதைத் தடுத்திடுவதற்காக இவ்வாறு செய்தோம் என்று சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரி கூறினார். அப்பாவி மக்கள் இவ்வாறு மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டதை நியாயப்படுத்தி அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி இது ராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என்று நீதிமன்றத்தில் பதில் அளித்திருக்கிறார்.
பாஜகவின் சமூக வலைதள பிரச்சாரம்
காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல்ரீதியாக நடவடிக்கை எடுக்காதது, பாதுகாப்புப் படையினரை அதீதமாகச் சார்ந்திருத்தல் மற்றும் ஒடுக்குமுறை ஆகிய அனைத்தும் சேர்ந்து காஷ்மீர் மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவை நடைமுறையில் அறுத்தெறிந்துள்ளது. ஸ்ரீநகர் இடைத்தேர்தலை மக்கள் பகிஷ்கரித்திருப்பது இத்தகைய முறிவின் அடையாளமேயாகும். மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் தன்னுடைய குறுகிய இழிந்த இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்எடுத்துச் செல்வதற்காக காஷ்மீர் மக்கள்மீது ராணுவத்தினரை ஏவும் தந்திரத்தைப் பின்பற்றி வருகிறது. நாட்டின் இதர பகுதிகளில் உள்ள மக்கள் மத்தியில் இந்து தேசியவெறியைக் கிளப்புவதற்கு, காஷ்மீர் பிரச்சனையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. அங்கே அரசுக்கு எதிராகப் போராடுகிற அனைவருமே பயங்கரவாதத்திற்கு உதவுகிறவர்கள் என்றும், பாகிஸ்தானின் கைக்கூலிகள் என்றும் சித்தரிக்கிறது. உண்மையில், சமூகவலைத்தளங்களில், பாஜக ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தது. அது என்ன தெரியுமா? ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்ததன் காரணமாக, கல்லெறிபவர்களுக்கு அதனைத் தூண்டுபவர்களால் பணம் கொடுக்க முடியவில்லை என்றும் அதன்காரணமாக கல்லெறி நிகழ்வுகள் கணிசமான அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்றும் அதன் பிரச்சாரங்கள் கூறிக்கொண்டிருந்தன. காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறையும், அவர்களின் அடிப்படை உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதல்களும் பயங்கரவாதத்தையும், பாகிஸ்தானின் சூழ்ச்சிகளையும் நசுக்குவதற்கான மோடி அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கை என்று சித்தரிக்கப்படுகின்றன.
பிடிபி - பாஜக பொதுத்திட்டப்படி...
காஷ்மீர் மக்கள், மோடி அரசாங்கத்தின் உண்மையான குணத்தையும் அது எதற்காக செயல்படுகிறது என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பிடிபி-பாஜக கூட்டணி தன்னுடைய பொதுத் திட்டத்தில் உறுதியளித்துள்ளபடி, காஷ்மீரில் செயல்படும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்படாதவரை, காஷ்மீர் மக்கள் அரசின் வன்முறை கருவிகளின் மூலம் ஏவப்படும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை என்று தீர்மானித்திருக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொடூரமான ஒடுக்குமுறை எவ்வித தயவுதாட்சண்யமுமின்றி கண்டிக்கப்பட வேண்டியதாகும். மோடி அரசாங்கம், தன்னுடைய குறுகிய பிளவுவாத மற்றும் தீவிர தேசியவாத (hலயீநச-யேவiடியேடளைவ) நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக காஷ்மீரை அழிப்பதற்கு அனுமதித்திட முடியாது. காஷ்மீர் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் அனைத்து அரசியல்கட்சிகளுடனும் மற்றும் பிரிவுகளுடனும் உடனடியாகப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிட வேண்டும் என்றும் நாட்டில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளும் கோர வேண்டும். காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை கொடூரமான முறையில் நசுக்கிட நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற உணர்வை காஷ்மீர் மக்கள் மத்தியில் உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
(ஏப்ரல் 17, 2017)தமிழில் : ச.வீரமணி
No comments:
Post a Comment