Saturday, April 15, 2017

அமெரிக்காவின் யுத்தப் பசி

People's Democracy
தலையங்கம்
சிரியாவின் விமானத்தளம் ஒன்றின் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுத்திருப்பதன் மூலம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் இதர ஜனாதிபதிகளைப் போலவே, சர்வதேச சட்டங்களைக் காலில் போட்டு மிதிப்பதற்கோ, சுதந்திரமான நாடுகளின் இறையாண்மையை மீறுவதற்கோ தானும் தயங்காத நபர் என்பதைக் காட்டிவிட்டார். சிரிய அரசாங்கத்திற்கும் அதன் ஆயுதப் படைகளுக்கும் எதிராக முதல் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதன் மூலம், டிரம்ப் குறித்து கற்பிதம் செய்யப்பட்டிருந்த பல செய்திகளை, போலியானவை என்று அவரே முன்வந்து சிதறடித்துவிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் இதே டிரம்ப், இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்களில் மிகப்பெரிய அளவிற்கு அமெரிக்கா செலவு செய்து வருவதாகக் கூறினார்; இதனைக் கட்டுப்படுத்திட வேண்டுமானால் ‘‘ஆட்சி மாற்றம்’’ அவசியம் என்றும் கூறி வந்தார். உண்மையில், 2013இல் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக சிரியாவின் மீது குற்றம்சாட்டி, அதன்மீது ஒபாமா அரசாங்கம் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டபோது, அவ்வாறு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என டிரம்ப் எச்சரித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால், இப்போது சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்காக டிரம்ப் கூறியுள்ள காரணம் என்ன தெரியுமா? சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள கான் ஷேக்குன் நகரத்தின்மீது ரசாயன ஆயுதமான சரின் எனும் விஷவாயுவை சிரியாவின் ராணுவத்தினரே பிரயோகித்து, மக்களைக் கொன்றார்கள் என்பதுதான். அந்த நகரம் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்பட்டுவந்த அல்-ஷாம்ஸ் என்னும் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த விஷவாயு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 70 பேர் இறந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டது.
சிரியாவின் படைகள்தான் தனது சொந்த மக்கள் மீதே இந்த ரசாயன வாயுவை பயன்படுத்தின என்று மேற்படி தீவிரவாதக் குழுக்கள் கூறியதை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் அப்படியே ஏற்றுக் கொண்டு பேசுகின்றன. சர்வதேச ஒப்பந்தங்களின்படி, சரின் வாயுவை ரசாயன ஆயுதமாகப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாயுவை நகரத்திற்குள் பயன்படுத்தினால், அது கொடுங்குற்றமாகக் கருதப்படும். ஆனால், இந்த ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தியதற்கு யார் பொறுப்பு என்று நிறுவிட விசாரணை எதுவும் நடைபெறவில்லை. தங்கள் ஆயுதப்படையினர் கான் ஷேக்குன் நகரத்தில் இந்த விஷவாயுவைப் பயன்படுத்தவில்லை என்று சிரியா அரசாங்கம் உறுதியாக மறுத்துள்ளது. தீவிரவாதக் குழுக்கள் தங்களின் பதுங்குமிடத்தில் ஒளித்து வைத்திருந்த - மரணத்தை விளைவித்திடும் மேற்படி விஷவாயு, விமானப்படை நடவடிக்கைகளின் போது வெளியாகி மக்களைப் பாதித்திருக்கக்கூடும் என்று சிரியாவின் விமானப்படையினர் ஊகிக்கின்றனர்.மேற்கத்திய நாடுகள் தங்கள் ஊடகங்கள் மூலமாக என்னதான் தம்பட்டம் அடித்தபோதிலும், சிரியா அரசாங்கத்தின் கூற்றையும் பரிசீலனை செய்ய வேண்டியதும் அதன்மூலம் உண்மையை வெளிக்கொணர சுயேச்சையான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டியதும் அவசியமாகும்.
ஏனெனில் இதேபோன்று ஒரு சம்பவம் 2013 ஆகஸ்ட்டில் நிகழ்ந்துள்ளது.அந்த சமயத்தில் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் புறநகர்ப்பகுதியில் உள்ள கௌதா என்னுமிடத்தில் சரின் வாயு தாக்குதல் நடைபெற்றது. அந்த சமயத்திலும் இதேபோன்று தீவிரவாதக்குழுக்களும், மேற்கத்திய நாடுகளும் சிரியாவின் பஷார் அல் அசாத் அரசாங்கத்திற்கு எதிராக கூக்குரல் எழுப்பின. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவும் சிரிய அரசாங்கத்திற்கு எதிராக ராணுவத் தாக்குதல்கள் தொடுத்திட வேண்டும் என்றார்.
ஆனால், சர்வதேச அளவில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் அதிலிருந்து பின்வாங்க வேண்டியிருந்தது. பின்னர் நடைபெற்ற புலனாய்வுகளிலிருந்து, சரின் வாயு கௌதாவில் உள்ள அல் ஷாம் பயங்கரவாதக் குழுவால் சில துருக்கிய அதிகாரிகள் கைக்கூலிகளாக இருந்து உதவியதன் மூலமாக பெறப்பட்டவை என்று தெரியவந்தது. இதே அல் ஷாம் பயங்கரவாதக் குழுதான், இப்போது தாக்குதலுக்கு உள்ளான கான் ஷேக்குன் நகரத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. இந்தக் கொடூரமான தாக்குதலுக்குப்பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் உண்மையான கயவர்கள் யார் என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு இதழியலாளரான செய்மூர் ஹெர்ஷ் என்பவர், தன்னுடைய மதிநுட்பமான புலனாய்வின் மூலமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். இந்தத் தாக்குதல் தொடர்பாக பஷார் அல் அசாத் அரசாங்கத்தின் மீது மேற்கத்திய நாடுகள் பழிபோடுவதை நம்ப மறுப்பதற்கு மற்றுமொரு முக்கியமான காரணமும் உண்டு. தற்போதுள்ள நிலையில் சவூதி அரேபியா, கத்தார், துருக்கி மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டுவந்த பயங்கரவாதக் கும்பல்களுக்கும், அசாத் அரசாங்கத்திற்கும் இடையே நடைபெறும் ராணுவ மோதலில் தற்போது அசாத் அரசாங்கத்தின் கைகளே ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில், அநேகமாக சிரியாவின் அனைத்துப் பெரிய நகரங்களும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நிலையில், தன் சொந்த மக்கள் மீதே சிரியா அரசாங்கம் ரசாயனத் தாக்குதலைத் தொடுத்தது என்று கூறுவதை நம்புவது என்பது மிகவும் குறுகிய பார்வை மட்டுமல்ல; முட்டாள்தனமுமாகும்.
மேலும் 2013 நிகழ்வுக்குப்பின்னர் சிரியா, .நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, தன்னிடமிருந்த அனைத்து ரசாயன ஆயுதங்களையும் .நா.மேற்பார்வையின்கீழ் அழித்துவிட்டது. இதனை .நா. அமைப்பான ரசாயன ஆயுதங்கள் தடைக்கான அமைப்பு 2014 ஜூனில் உறுதிப்படுத்தியுள்ளது.எனவே, இத்தகைய பின்னணிகள் உள்ள நிலையில், சிரியா மீது தற்போது டிரம்ப் அரசு ராணுவத் தாக்குதல் தொடுத்தது என்பது, வலுவான யுத்தத்தை விரும்பும் தாராளவாத ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. இவர்கள்தான் அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியிலும் ஊடகங்களிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள். இதுவரை டிரம்பைஎதிர்த்து வந்த இந்ததாராளவாதஊடகங்கள் இப்போது அவரை மேலும், துதிபாடத் துவங்கிவிட்டன.சிரியாவில் ஜனாதிபதி அசாத் ஆட்சியதிகாரத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா முன்பு கோரி வந்த கோரிக்கையை இப்போது டிரம்ப் மீண்டும் எழுப்பத்துவங்கிவிட்டார்.
யார் அமெரிக்காவில் ஜனாதிபதியாக இருந்தாலும், அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளின் நலன்களை உயர்த்திப் பிடித்துத்தான் ஆக வேண்டும். அமைதியை உருவாக்குபவர் என்று புகழப்பட்ட ஜனாதிபதி ஒபாமா, ஆட்சிக்கு வந்தபின் லிபியா மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்தார். அது கடாபி அரசாங்கம் வீழ்வதற்கு இட்டுச் சென்றது. சவூதி அரேபியா மற்றும் கத்தார் மூலமாக சிரியாவில் இயங்கி வந்த பயங்கரவாதக் கும்பல்களுக்கு ஆயுதங்களும், நிதி உதவியும் அளித்தார் ஒபாமா. ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் நாடுகளுக்குஅந்நாடுகளிலிருந்து மீண்டும் துருப்புகளை வாபஸ் வாங்கிக்கொள்வேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டுஅதிக துருப்புக்களை அனுப்பினார். அமெரிக்க அரசு ஓர் ஏகாதிபத்திய ஏகபோக அரசு என்பதையும், தன் உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக யுத்தப் பசியுடனேயே எப்போதும் அலைந்திடும் என்பதையும், சிரியா ராணுவத் தாக்குதல், மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டி இருக்கிறது.
சிரியாவில் உள்ள அரசாங்கத்திற்கு எதிராக ஒரு மூர்க்கத்தனமான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதன் மூலம், டிரம்ப் தான் முன்பு அளித்திருந்த உறுதிமொழியிலிருந்தும் பின்வாங்கியுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் பிரதான ஆபத்து என்றும் அதனை எதிர்த்துப் போரிட ரஷ்யாவுடன் ஒத்துழைத்திடுவேன் என்றும் இதற்கு முன்பு டிரம்ப் கூறியிருந்தார். இப்போது டிரம்ப் அரசாங்கம், அசாத் அரசாங்கத்திற்கு ரஷ்யா அளித்துவரும் ஆதரவை முடித்துக்கொள்ள வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறது.சிரியாவில் தற்போதுள்ள எதார்த்த நிலை என்னவெனில், சிரிய அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவத் தலையீடு எதுவாக இருந்தாலும், அது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கும் இதர இஸ்லாமிய தீவிரவாதக்குழுக்களுக்குமே உதவிடும். அசாத் அரசாங்கத்தையோ அல்லது அதற்கு ஆதரவாக நிற்கும் ரஷ்யா மற்றும் இரானையோ இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலமாகப் பணிய வைத்துவிடலாம் என நினைப்பது மிகவும் சந்தேகம்தான்.
ஏப்ரல் 12, 2017
தமிழில்: . வீரமணி


No comments: