Sunday, April 30, 2017

பதில் கொடு தொழிலாளர் வர்க்கமே

{இந்த ஆண்டு மே தினத்தை மாபெரும் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களுக்கு இடையே கொண்டாடுகிறோம்.இந்த தருணத்தில், மனிதனை மனிதன் சுரண்டுவதிலிருந்து விடுவித்து சுரண்டலற்ற ஒரு சமூகத்தை, சோசலிச அமைப்பை உருவாக்குவதற்கு சிஐடியு மீண்டும் உறுதி எடுத்துக்கொள்கிறது.ஏகாதிபத்தியத்தையும் உலகின் பல நாடுகளில் அதன் மூர்க்கத்தனமான தலையீடுகளையும் எதிர்த்துப் போராட இம்மேதினத்தில் உறுதிஎடுத்துக் கொள்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பது சுரண்டலுக்கு எதிரான வர்க்கப்போராட்டத்தின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் (WFTU-World Federation of Trade Unions) பங்களிப்புகள் இக்காலகட்டத்தில் மிகவும் சிறப்பாக இருந்தன. அதன் 17ஆவது மாநாட்டின் அறைகூவலின்படி உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்து தொழிலாளர் வர்க்கத்தை விடுவித்திடவும் அது மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என்று சிஐடியு சபதம் ஏற்கிறது.) 
இன்றைய உலக நிலைமை என்ன?
உலக பொருளாதார நெருக்கடி தீர்வேதும் இல்லாமல் இன்றைய தினமும் தொடர்கிறது. வளர்ச்சிக்கு வழியேதும் இல்லை. ஏதேனும் வளர்ச்சி இருந்தாலும் அதன் ஆதாயத்தை முழுமையாக முதலாளிகள் கபளீகரம் செய்துவிடுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், குறிப்பாக இளைஞர்கள் வேலையின்மை மிகவும் மோசமான அளவில் இருக்கிறது. சமத்துவமின்மை மிகவும் ஆபத்தான அளவினை எட்டிக்கொண்டிருக்கிறது. உலகில் உள்ள பாதி மக்கள்தொகையினரிடம் உள்ள செல்வம் அளவிற்கு உலகில் உள்ள வெறும் எட்டு பணக்காரர்கள், பெரும் சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறார்கள்.
ஆளும் வர்க்கத்தினர் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக பல்வேறுவிதங்களில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தங்கள் லாபத்தை அதிகப்படுத்துவதற்காக தொழிலாளர் வர்க்கத்தின் மீதும், உழைக்கும் மக்கள் மீதும் அவர்கள் இதுநாள்வரை பெற்றுள்ள உரிமைகள்மீதும் வாழ்வாதாரங்கள்மீதும் கடும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர்.
உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் என்பது உலகின் பல நாடுகளில் சாமானிய மற்றும் ஏழை மக்களின் மத்தியில் பல வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டு வருவதையும் பார்க்கிறோம். பிரிட்டன் போன்ற நாடுகளில் அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் மாறியுள்ளன. ஐரோப்பிய யூனியனில் இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ், ஆஸ்திரியா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் வலதுசாரிகள் தலைதூக்கி இருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகள் பலவற்றில், குறிப்பாக அமெரிக்காவில், புலம்பெயர்ந்து வந்தவர்கள் மீதும், புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.
மனிதகுல முன்னேற்றத்திற்கு அபூர்வமாகக் கிடைக்கும் மனிதவளங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாததன் விளைவே இப்பொருளாதார நெருக்கடி இன்னமும் முழுமையாகத் தீர்க்கப்படாததற்குக் காரணம் என்பது இப்போது நன்கு தெளிவாகி இருக்கிறது. இயற்கை வளங்களை எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி சுரண்டுதல், அவ்வாறு சுரண்டுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமே, பல லட்சக்கணக்கான பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்குமே என்று கிஞ்சிற்றும் கவலையே இன்றி சுரண்டுதல் ஆகியவை, “நிலையான வளர்ச்சி என்பது முதலாளித்துவ அமைப்பின் மூலம் முடியாதுஎன்பதை தெள்ளத்தெளிவாக்கி இருக்கிறது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மகத்தான முன்னேற்றங்கள் மூலம் ஏற்பட்டுள்ள பயன்கள் மக்கள் திரளில் பெரும்பகுதியினருக்கு குறிப்பாக ஏழை மக்களுக்குச் சென்றடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. உலகில் கோடானுகோடி மக்கள் வறுமையிலிருந்தும், எழுத்தறிவின்மையிலிருந்தும், நலிவுற்றிருப்பதிலிருந்தும், வீடுகளின்றியும் இதர அடிப்படை வசதிகள் எதுவுமின்றியும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.
மூன்று ஷிப்டுகளை
நான்கு ஷிப்டுகள் ஆக்குக!
வேலைவாய்ப்பை அதிகரித்திட, நாளொன்றுக்கு நான்கு ஷிப்டுகள் என்று மாற்றியமைத்து, தொழிலாளர்களின் வேலைநேரம் வாரத்திற்கு 35 மணிகளாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்று சிஐடியு கோருகிறது. ஏனெனில், இன்று உலகம் முழுவதும் உள்ள வேலையின்மையைச் சரிசெய்திடுவதற்கு, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உள்ள வேலையின்மையைப் போக்குவதற்கு இது மிகவும் அவசியமாகும்.
ஒரு வலுவான முற்போக்கான மற்றும் இடதுமாற்று இல்லாத சூழலில் நம் நாடான இந்தியா உட்பட பல நாடுகளில் வலதுசாரிகள், பத்தாம்பசலிகள், பிற்போக்காளர்கள் மற்றும் இன-நிற வெறியர்கள் தலைதூக்கி இருப்பதை ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. வேலையின்றி விரக்தியுற்றிருக்கும் இளைஞர்கள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்குள் ஆசைகாட்டி இழுத்துச் செல்லப்படுகிறார்கள். மக்களின் கோபத்தைத் திசைதிருப்புவதற்காக, வலதுசாரி சக்திகள், மக்கள் மத்தியில் சகோதரச்சண்டைகளை உருவாக்குகின்றன. இவர்கள் ஒன்றுபட்டு நின்று முதலாளித்துவ அமைப்பின் நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாகத்தான் நமக்கு இவ்வளவு பாதிப்பு என்பதைக் கண்டு அவற்றுக்கு எதிராக அணிதிரளாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
சுரண்டும் முதலாளித்துவ அமைப்பின் உண்மையான சொரூபத்தை தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் எடுத்துச்சென்று அவர்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்திட நம் சக்தி அனைத்தையும் ஒருமுகப்படுத்திடவும், முதலாளித்துவ அமைப்பை வேருடன் களைந்து எறிந்திட வேண்டியதன் அவசியத்தையும், அனைத்துவிதமான சுரண்டல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திட இறுதிப் போராட்டத்தை நோக்கி முன்னேறிடத் தயாராவதற்கும் சிஐடியு இம்மே நாளில் சபதம் ஏற்கிறது.
இந்தியாவில் நடப்பது என்ன?
இந்தியாவில் எதேச்சதிகார போக்குகள் அதிகரித்துவருவது குறித்தும், சமூகத்தில் சகிப்பின்மை அதிகரித்துவருவது குறித்தும், பகுத்தறிவு, அறிவியல் சிந்தனைகளை மற்றும் மதவெறிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்தும், ஆளும் கட்சியினரை எதிர்ப்பவர்கள் அனைவரையும் தேச விரோதிகள் என முத்திரை குத்தப்படுவது குறித்தும் சிஐடியு ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.
நாட்டில் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் போராட்டங்களுக்கு சிஐடியு ஆதரவினை அளிக்கிறது. பல்கலைக் கழகங்களில் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறும் மாணவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுவதைக் கண்டிக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், தலித்துகள் மற்றும் இதர பிரிவினர் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கு அவர்களுக்கு இருக்கின்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை உயர்த்திப் பிடிக்கிறது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் குண்டர்கள் மக்களின் வாழ்வாதாரங்கள் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் மனிதாபிமானமற்ற முறையில் தொடுத்திடும் தாக்குதல்களை தொடர்ந்து வீரத்துடன் எதிர்த்து நிற்கும் மேற்கு வங்க தொழிலாளர் வர்க்கத்திற்கும், இதர உழைக்கும் மக்களுக்கும் வீர வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மோடி தலைமையிலான அரசாங்கம் நம் நாட்டு நிறுவனங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வரிச் சலுகைகள் மூலமாகவும், தொழிலாளர் நலச் சட்டங்களையும், நாட்டின் மற்றும் பல சட்டங்களையும் முதலாளிகள் நலன்களுக்கு ஆதரவான முறையில் மாற்றி அமைத்திருப்பதன் மூலமாகவும் அவர்களுக்கு சலுகைகளுக்கு மேல் சலுகைகள் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. வரி ஏய்ப்பு செய்திட்ட, வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு கட்டாத நபர்களுக்கெல்லாம் சலுகைகள் அளித்துக்கொண்டிருக்கிறது. நாட்டில் அரசு தன் கட்டுப்பாட்டில் இருந்துவரும் செல்வாதாரங்களானபொதுத்துறை நிறுவனங்கள், நிலங்கள், சுரங்கங்கள், கடல்கள், மலைகள் , காடுகள் மற்றும் நம் மக்கள்என அனைத்தையும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் பேராசை பிடித்த லாப வேட்கைக்கு, அவர்களின் கட்டற்ற சுரண்டலுக்கு தாரைவார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நாட்டின் செல்வங்களை உற்பத்தி செய்த தொழிலாளர்கள், விவசாயிகளில் பெரும்பகுதியினரை மிகவும் மோசமான முறையில் அடிமை நிலைக்கும், வறிய நிலைக்கும் தள்ளிக்கொண்டிருக்கிறது. அவர்களின் நிலங்களை, வேலைகளை, உரிமைகளை மற்றும் வாழ்வாதாரங்களைப் பறித்துக் கொண்டிருக்கிறது. அனைத்துத் தொழிலாளர் நலச்சட்டங்களும் மிகவும் மோசமானமுறையில் தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. தொழிலாளர்கள் கடுமையாகப் போராடிப் பெற்ற சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. வருங்கால வைப்பு நிதி, ஊழியர் வைப்பு நிதி (PF and ESI) போன்ற தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் அளிக்கப்பட்டிருந்த பயன்பாடுகள் கூட அழிக்கப்பட்டு வருகின்றன. .சி.டி.எஸ்., மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (MGNREGA), மதிய உணவுத்திட்டம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட செலவினங்களை கடுமையாக வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் நாளடைவில் முழுமையாக இல்லாதொழித்திட வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும். பொதுத்துறை நிறுவனங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கைகழுவிக் கொண்டிருக்கின்றன. தனியார்மயமும், ஒப்பந்தமுறையும் தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அளித்துவந்த ஒதுக்கீடுகளை மறுக்கின்றன. விவசாய நெருக்கடியும், விவசாயிகள் தற்கொலைகளும் எவ்விதமான தீர்வும் அரசால் அளிக்கப்படாத நிலையில் தொடர்கின்றன.
நாட்டின் சுதந்திரப் போராட்டக் காலத்தின்போது, மிகவும் எச்சரிக்கையுடன் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் பங்கேற்காது ஒதுங்கி இருந்தது ஆர்எஸ்எஸ் இயக்கம்தான், இன்றைய தினம், நாட்டுப்பற்று குறித்தும், தேசப்பற்று குறித்தும் சான்றிதழ்கள் வழங்கும் உரிமையைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் அரசியல் அங்கமான பாஜக, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும், நாட்டின் சொத்துக்களையும் கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருக்கும் தேச விரோதக் கொள்கையை கேள்விக்கு உள்ளாக்குபவர்களைத்தான், அவற்றை எதிர்ப்பவர்களைத்தான் தேச விரோதிகள் எனக் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறது.
மேலும் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சித்திட்டங்களுக்கு இரையாகி, நம் நாட்டின் சுயேச்சையான அயல்துறைக் கொள்கையையே ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு முன் சரண் செய்து, சமரசம் செய்துகொண்டிருக்கக்கூடிய இன்றைய மோடி தலைமையிலான அரசாங்கம்தான், தாங்கள் மட்டும்தான் தேசப்பற்றாளர்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஆசியா பசிபிக் பிராந்தியத்தின் மேலாதிக்கத்தை நிறுவ தன் போர்த்தந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாகி, அதனுடன் கடல்வழி மற்றும் வான்வழி போர்த்தந்திர ஆதரவு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள மோடி தலைமையிலான அரசாங்கம்தான் நாட்டின் பெருமையை உயர்த்திப்பிடிப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பது நம் காலத்தின் மாபெரும் கேலிக்கூத்தாகும்.
மே தினமான இன்று...
பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை வகுப்புவாதமும் அடிப்படைவாதமும் ஒன்றை மற்றொன்று ஊட்டி வளர்த்திடும் என்று சிஐடியு, உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது. இரண்டுமே மக்களை பிளவுபடுத்தும், மக்களின் ஒற்றுமையை சிதைத்திடும், உண்மையான பிரச்சனைகளிலிருந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பிடும், தங்கள் வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்கான அவர்களுடைய போராட்டங்களை பலவீனப்படுத்திடும், இறுதியாக இரண்டுமே சுரண்டும் வர்க்கங்களுக்கு உதவிடும். இந்துத்துவா சக்திகளின் மதவெறி நடவடிக்கைகள், சிறுபான்மை அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் ஆபத்தை அதிகரித்திடும் என்றும் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், இத்தகு சூழ்நிலையில், மதவெறி, இனவெறி, சீர்குலைவு சக்திகளுக்கு எதிராக நடத்திடும் போராட்டமும், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், அவற்றை உயர்த்திப்பிடித்திடும் அரசியல்கட்சிகளுக்கு எதிராகவும் நடத்திடும் போராட்டமும் பின்னிப்பிணைந்தவைகளாகும். இவற்றுக்கெதிராக தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையையும், மக்களின் ஒற்றுமையையும் பாதுகாத்து, விரிவுபடுத்தி, ஒருமுனைப்படுத்தி போராட வேண்டும் என்கிற உறுதியை, சிஐடியு மீண்டும் வலியுறுத்துகிறது.
உழைக்கும் மக்களின் அனைத்துப்பிரிவினரையும் ஒன்றுபடுத்த வேண்டிய மாபெரும் பணி நம் தோள்களின் மீது ஏற்றப்பட்டிருக்கிறது என்பதில் சிஐடியு உணர்வுப்பூர்வமாக இருக்கிறது.
தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரின் உண்மையான எதிரி, முதலாளித்துவ வர்க்கமும், அதன் அரசியலும், அந்த அமைப்பை உயர்த்திப்பிடித்திடும் சக்திகளும்தான் என்பதை அடையாளம் கண்டு, இந்த சுரண்டல் அமைப்பை மாற்றுவதற்கான போராட்டத்திற்கு உழைக்கும் மக்கள் தயாராக வேண்டும் என்று சிஐடியு அழைப்பு விடுக்கிறது.
2017 மேதினமான இன்று, சிஐடியு தன்னுடைய பதாகையை அனைத்துவிதமான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும். சர்வதேச ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாகவும், தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்கிறது.
முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் ஒழிக!
ஏகாதிபத்தியம் தலைமை தாங்கும் நவீன தாராளமய உலகமயம் ஒழிக!
சோசலிசம் வாழ்க!
உலகத் தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக!
தமிழில்: . வீரமணி

 
Bottom of Form

No comments: