Tuesday, April 18, 2017

தில்லியில் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம் அனைத்து விவசாய சங்கங்களின் போராட்டமுமாகும்: கே.வரதராசன்





புதுதில்லி. ஏப்ரல் 19/
தில்லியில் ஐயாகண்ணு தலைமையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் அனைத்து விவசாய சங்கங்க்ளின் போராட்டமுமாகும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே. வரதராசன் கூறினார்.
தலைநகர் தில்லியில் உள்ள நாடாளுமன்ற வீதியில் ஐயாக்கண்ணு தலைமையில் நடைபெறுகிற போராட்டத்தை வாழ்த்தி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத்தலைவர் கே. வரதராசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தில்லியில் நீங்கள் நடத்துகிற போராட்டம், தமிழக விவசாய இயக்கத்தின் போராட்டங்களில் வரலாற்றில் இடம் பெறக்கூடிய போராட்டமாகும். வறட்சியினால் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குத் தேவையான நிவாரணம், விவசாயிகளுக்கு வழங்கிய கடன்கள் ரத்து,  விவசாய விளைபொருள்களுக்கு நியாயவிலை என்று நீங்கள் வைத்திருக்கிற அனைத்துக் கோரிக்கைகளுமே உங்கள் கோரிக்கைகள் மட்டுமல்ல, எங்களது சங்கம் உட்பட தமிழகத்தில் இயங்கும் அனைத்து சங்கங்களும் வைத்திருக்கிற கோரிக்கைகளுமாகும். ஆகவே நீங்கள் நடத்துகிற போராட்டம், அனைத்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும் ஆதரிக்கிற போராட்டமாகும், அனைத்து சங்கத்தினரும் வரவேற்கிற போராட்டமாகும்.
அடுத்ததாக, விவசாயிகள் வாங்கியிருக்கிற சில ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்வதற்கு மனம் இல்லாத மோடி சர்க்கார், இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை சில நூறு கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், இந்திய முதலாளிகளுக்கும், அள்ளிக் கொடுக்கிறது. அவ்வாறு அவர்களுக்கு ஏன் அவர்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்கிறீர்கள் என்று கேட்டார், அது இந்தியாவின் வளர்ச்சிக்காக அவ்வாறு தள்ளுபடி செய்கிறோம் என்கிறார்கள். ஆனால் இந்திய மக்களுக்கு உணவு உற்பத்தி செய்து உணவு அளித்திடும் விவசாயிகள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே, அவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை என்றால் அது இந்தியாவின் தளர்ச்சியாகிவிடும் என்கிறார்கள்.
நாடாளுமன்றத்திலேயே இந்த அரசு பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. உரம், பூச்சிமருந்துகள், விலை உட்பட விவசாயப் பொருள்களுக்கு அளிக்கப்பட்டு வருகிற மான்யங்கள் நிறுத்தப்பட்டுவிடும் என்கிறார்கள்.
விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு ஆகும் செலவினங்களைவிட 50 சதவீதம் அதிகரித்தும் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயிக்க வேண்டும் என்கிற எம்.எஸ்.சாமினாதன் அறிக்கையை அமல்படுத்த முடியாது என்று பகிரங்கமாகவே அறிவிக்கிறார்கள்.
இவ்வாறு இந்த அரசாங்கம் விவசாயிகள் விரோத அரசாங்கமாகவே தன்னை பகிரங்கமாகவே அறிவித்துக் கொண்டிருக்கிறது.  அதனால்தான் பிரதமர் மோடி, உங்களைப் பார்ப்பதற்குக் கூடநேரம் இல்லாமல் இருக்கிறார்.
பிரதமர் மோடி இவ்வாறு உங்களைப் பார்க்க மறுக்கிற அதே சமயத்தில், தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?  நீங்கள் தில்லிக்கு வந்ததே தவறு என்று சொல்கிறார்கள். உங்கள் கோரிக்கைகளை எல்லாம் மாநில அரசுதான் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நம்மைப்பொறுத்தவரையில், மாநில அரசு – மத்திய அரசு ஆகிய இரண்டுக்கும் பொறுப்பு உண்டு என்றாலும், மத்திய அரசுக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. இதை நன்கு உணர்ந்துதான் நீங்கள் இங்கே வந்து போராடிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக உங்களை எங்கள் சங்கம் சார்பாக வாழ்த்துகிறேன்.
உங்கள் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் துணை நிற்கும். நண்பர் ஐயாகண்ணு பேசும்போது, தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இதை எங்கள் சங்கம் சார்பில் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். வரும்  ஏப்ரல் 25ஆம் தேதி தமிழகம் ஸ்தம்பிக்கும் விதத்தில் நடைபெறும் போராட்டமாக அமைந்திடும் என்று கூறி உங்கள் போராட்டத்தை மீண்டும் வாழ்த்தி விடைபெறுகிறேன்.
இவ்வாறு கே. வரதராசன் பேசினார்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜூகிருஷ்ணனும் உடன் சென்றிருந்தார்.

(ந.நி.)

No comments: