Sunday, July 31, 2016

குழந்தைகள் உரிமைகளுக்கும் துரோகம்


பதினான்கு வயது வரைக்குமான குழந்தை தொழிலாளர்கள் மீது ஏவப்படும் அனைத்து விதமான வடிவங்களுக்கும் தடை விதித்து, நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ள சட்டமுன்வடிவானது, உண்மையில் அதற்கு நேரெதிரானதே யாகும். இது குழந்தைத் தொழிலாளர்கள் மீது ஏவப்படுகின்ற கொடுமைகள் பலவற்றை சட்டரீதியாக்கி இருக்கிறது.நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்டுள்ள குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் முறைப்படுத்தல்) திருத்தச்சட்டமுன்வடிவு, ஒரு மிகவும் பிற்போக்குத்தனமான சட்டமாகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணற்ற ஆட்சேபணைகளை எழுப்பியபோதிலும் அவற்றை உதாசீனம் செய்துவிட்டு இதுநிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது பதி னான்கு வயது வரையிலான குழந்தைகள் மீது அனைத்து வடிவங்களிலான உழைப்பையும் தடை செய்கிற அதே சமயத்தில், இச்சட்டம் குடும்பம் அடிப்படையிலான வேலை’’களில் ஈடுபடுத்தப்படு வதையும், வயல்களில் மற்றும் வனங்களில் குடும்ப அடிப்படையிலான வேலை’’ செய்வதையும் அனுமதித்திருக்கிறது. குடும்பம் என்று வரையறுத்திருப்பது தந்தை - தாய் மட்டுமேயான குடும்பத்தைமட்டுமல்ல. தந்தை மற்றும் தாய் ஆகி யவர்களின் சகோதர, சகோதரிகளின் குடும்பங்களையுமாகும். குழந்தைகள் தங்கள் பள்ளி நேரத்திற்குப் பின்னரும்,விடுமுறைக் காலங்களிலும் இவ்வாறுஉதவி’’ செய்வதற்கு அனுமதிக்கப்பட்டி ருக்கிறார்கள்.
வஞ்சகமானது
இவ்வாறு குடும்ப நிறுவனங்களில்’’ வேலை செய்ய குழந்தைகளை அனுமதித்திருப்பதானது, தற்போது சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்பட்டுள்ள குழந்தைத் தொழிலாளர்களில் நான்கில் மூன்று பங்கினரின் பணிகளை சட்டரீதியானதாக மாற்றி இருக்கிறது. குடும்ப நிறுவனங்கள் என்பதே ஒரு வஞ்சகமான சொற்றொடராகும். பலஅமைப்புரீதியான தொழில் நிறுவ னங்களே வேலைகளை வெளியே ஒப்பந்தக்காரர்கள் மூலமாக அவுட்சோர்சிங்’’ முறையில் வேலை களைக் கொடுத்து வாங்கும் முறைக்கு மாறிக்கொண்டிருக்கும் போக்கு வந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், அத்தகைய ஒப்பந்தக்காரர்கள் இந்தசட்டத்திருத்தத்தினை மிக நன்கு பயன்படுத்திக்கொண்டுவிடுவார்கள். குழந்தைகளை குடும்ப அடிப்படை யில் வேலை வாங்குவது இனி சட்டரீதி யானதாகும். பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் பாதியிலேயே அதனை விட்டுவிடும் நிலைக்கு இது ஊக்கத்தைக் கொடுக்கும். மேலும், குழந்தைகள் பள்ளிநேரங்களுக்கு அப்பால் வேலை செய்வார்கள் என்றால், அது அவர்களின் உடல்நலத்தைக் கடுமையாகப் பாதிக்கும். இது அவர்களின் ஓய்வு நேரத்தையும் பொழுதுபோக்கு விளையாட்டுகளையும் பறித்துக் கொள்வதால் அவர்களின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாகும். மேலும் இந்தச் சட்டத்திருத்தமானது குழந்தைகள் ஒலி-ஒளி பொழுதுபோக்குத் தொழிலில் வேலை செய்வதற்கும் விதி விலக்கு அளித்திருக்கிறது. இத்தொழில் பிரிவுகளில் நீண்டநேரம் வேலை வாங்கப்படுவதன் மூலம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் ஆர்வமும் குன்றி விடும். மேலும், இவர்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது.
ஏழ்மையும் சாதியும்
இச்சட்டத்திருத்தத்தால் உடனடி யாகப் பாதிக்கப்படுவது ஏழைக் குழந்தைகளாவர். சத்துணவு இன்றி வாடும்ஏழைக் குழந்தைகள் இச்சட்டத்திருத்த த்தின் மூலம் இனி பள்ளிகளில் தொடர்ந்து படிப்பதென்பது சிரமத்திற்குள்ளா கிவிடும். மேலும், இந்தச் சட்டமானது, சாதி அடிப்படையிலான தொழில்கள் என்றென்றும் தொடர்வதற்கும் வழிகோலுகிறது. மண்பாண்டங்கள் செய்தல், நெசவுத் தொழில் மற்றும் தோல்பதனிடுதல் போன்ற சாதி அடிப்படை யிலான தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவார்கள். 1986ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இடர்விளைவிக்கும் தொழில்களுக்கான பட்டியலையும் மிகவும் பிற்போக்குத் தனமான முறையில் திருத்தி இருக்கிறது. 1986ஆம் ஆண்டு சட்டத்தில் 16 தொழில்களும் , 65 தொழில் நடைமுறை களும் ஆபத்து நிறைந்தவை என்று பட்டியலிடப்பட்டிருந்தன. இப்போது திருத்தப்பட்டுள்ள சட்டத்தில் அந்தப் பட்டியலில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் வரக்கூடிய மூன்றுதொழில்கள் (சுரங்கங்கள், எரிபொருள்கள்சம்பந்தப்பட்டவை மற்றும் வெடிப்பொரு ட்கள்) மற்றும் 29 நடைமுறைகள் மட்டுமேஇடம்பெற்றிருக்கின்றன. தோல் பதனிடுதல், ஜரிகைத் தொழில், வளையல்கள் செய்தல், கம்பளங்கள் தயாரித்தல் போன்ற இதுவரை ஆபத்து மிகுந்த தொழில்களாகக் கருதப்பட்டவை, இனிமேல் அவ்வாறு கருதப்படாமல், இவற்றில் குழந்தைகள் வேலைகளில் ஈடுபட இத்திருத்தம் வகை செய்கிறது. திருத்தப்பட்ட சட்டத்தின் மற்று மொரு முக்கியமான அம்சம், 14 வய துக்கும் 18 வயதுக்கும் இடையிலான குழந்தைகளை வாலிபப் பருவத்தினர் (adolescents) என்று வரையறுத்து, அவர்கள் ஆபத்து நிறைந்த தொழி ல்கள் அல்லாத அனைத்துத் தொழில்களிலும் வேலை செய்யலாம் என்று அனு மதித்திருப்பதாகும். இப்புதிய சட்டம் ஆபத்துமிகுந்த தொழில்களாக வெறும் மூன்றை மட்டும் வரையறுத்திருப்பதால், இனிமேல் வாலிபப் பருவத்தைச் சேர்ந்த வர்களை, இதற்கு முன்னர் ஆபத்து நிறைந்த தொழில்களாகக் கருதப்பட்ட, வளையல் செய்தல், ஜரிகைத் தொழில், கட்டுமானப் பணிகள் போன்றவற்றில் இனி ஈடுபடுத்திட முடியும்.
குழந்தை உழைப்பைச்சட்ட ரீதியாக்கும்
இப்புதிய திருத்தச் சட்டத்தில் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோரைத் தண்டித்திட வகைசெய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறுஇப்புதிய சட்டம் குழந்தைகளைத் தொழி லாளர்களாக ஈடுபடுத்துபவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, குடும்ப சூழ்நிலை காரணமாக அதற்குப் பலியாகிதங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோரைத் தண்டிக்க முன்வந்திருக்கிறது. இந்தச் சட்டத்திருத்தம் தான்தோன்றித்தனமாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கும், ஊழலில் ஈடுபடுவதற்கும் வழிவகுத்திடும்.நவீன தாராளமயக் கொள்கைகளின் கீழ் முறைப்படுத்தப்படாதவிதத்தில் இயங்கிடும் தகவல் தொழில்நுட்பத்துறை யிலும் குழந்தைகளை பெரிய அளவில்ஈடுபடுத்திட இத்திருத்தச் சட்டம் இப்போது அனுமதிக்கிறது. இந்தி யாவை உருவாக்குவோம்’’ என்ற முழக்கத்தின்கீழ்திறமைமிகு இந்தியாவை உருவாக்கு வோம் என்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறிக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கம், அவற்றிற்கு இந்தத் திருத்தச் சட்டம் எப்படி வழிவகுத்திடும் என்பதை விளக்கிட வேண்டும். இச்சட்டத்திருத்தம் குழந்தைகளை வேலையில் அமர்த்துவதை சட்ட ரீதியாக்கி இருக்கிறது, குழந்தைகளின் கல்வி மற்றும் உடல்நலத்திற்கு ஊறுவிளைவித்திருக்கிறது, சாதி ரீதியிலான சமத்துவமின்மை என்றென்றும் தொடரக்கூடிய விதத்தில் வழி வகுத்திரு க்கிறது. எனவே இத்தகு மோசமான சட்டம்குறித்து நாடாளுமன்றம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி தேவையான திருத்தங்களைச் செய்திட வேண்டும்.
(ஜூலை 27, 2016)
தமிழில்: ச. வீரமணி


No comments: