பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்ப்பா?
தபன் சென் மாநிலங்களவையில் கண்டனம்
புதுதில்லி, ஜூலை 25-
அதிகமான அளவில் லாபம் ஈட்டித்தரும் பொதுத்துறை தொலைபேசி நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மற்றும் மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட்(எம்டிஎன்எல்) நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது, அரசாங்கம் இதனை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தபன் சென் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திங்கள் அன்று பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் தபன்சென் பேசியதாவது:
“மத்திய அரசு இலாபம் ஈட்டித்தரும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களையும்
மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரை வார்த்திட நிட்டி ஆயோக்
(NITI Aayog) அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுத்திருப்பதை அவையின் கவனத்திற்குக் கொண்டு
வருகிறேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டெலிகாம் கம்பெனிகள் மீண்டும் லாபத்தில் இயங்கத் தொடங்கியபின்னர் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. 2014-15ஆம் ஆண்டில் இவற்ன் லாபம் 671 கோடி ரூபாயாகும். 2015-16இல் இது 2400 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு இவை லாபத்தில் இயங்கத் தொடங்கி இருக்கிற சமயத்தில் இவற்றை விற்பனை செய்திட மத்தியஅரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.
மேலும் கிராமப்புற தொலைபேசி சேவைக்காக, இந்நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய 12,040 கோடி ரூபாயையும் அளிக்க அரசு மறுத்துள்ளது.
“இந்தியாவில் உற்பத்தி செய்க’’ என்ற முழக்கத்தை முழங்கிக் கொண்டே, பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கான நடவடிக்கைகளிலும் அரசு இறங்கி இருக்கிறது.
இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனைசெய்திட வேண்டும்.
பிஎஸ்என்எல் தனியாரிடம் தாரை வார்க்கப்படுமானால் அதற்கு எதிராக நாடு முழுதும் கடும் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் நடைபெறும்.
இவ்வாறு தபன்சென் கூறினார்.
(ந.நி.)
No comments:
Post a Comment