குஜராத் மாநிலத்தில் உனா என்னுமிடத்தில் ஏழு தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர்களின் ஆடைகளை உருவிவிட்டு, மிக மோசமாக அடித்து நகரில் ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர். அண்மையில் தலித்துகள் மீது ஏவப்பட்டுள்ள இந்த அக்கிரமச் செயல் நாட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த நிகழ்வு குஜராத்தில் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பசு வதைக்கு எதிராக இந்துத்துவாவின் பிரச்சாரமும், இது தொடர்பாக முஸ்லீம்களையும், தலித்துகளையும் குறி வைத்துத் தாக்குவதும் நாடு முழுதும் நடந்து கொண்டிருக்கிறது என்றபோதிலும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மிகவும் வெறித்தனமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான தலித்துகள் நால்வரும், ஒரு விவசாயி, தன்னுடைய இறந்த மாட்டின் தோலை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அதனைச் செய்வதற்காகச் சென்றபோது, இவ்வாறு தாக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தோல் வர்த்தகம் செய்திடும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீது தாக்குதல் தொடுத்தவர்கள் “பசு பாதுகாப்புக்குழு’’வின் உறுப்பினர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதல், 2012ஆம் ஆண்டில் ஹரியானாவில் ஜஜ்ஜர் என்னுமிடத்தில் ஐந்து தலித்துகள் காட்டுமிராண்டித்தனமான முறையில் கொல்லப்பட்டதை நினைவுபடுத்துகிறது. அந்தத் தாக்குதல், விசுவ இந்து பரிசத்தின் ஆட்களின் தூண்டுதலின் பேரில் நடைபெற்றது. கால்நடை மற்றும் தோல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லீம்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது என்பது சமீப காலங்களில் நாடு முழுதும் பல்வேறு பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. பசு பாதுகாப்புக் குழு என்ற பெயரின் கீழ் முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக இத்தாக்குதல்களைச் செய்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் தாத்ரி என்னுமிடத்தில் இக்லாக் என்பவர் கொல்லப்பட்ட கொடூரம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் கால்நடை வர்த்தகர்கள் இருவர் கொல்லப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்ட கொடுமைகள் ஆகிய இரண்டும் சமீபத்திய அதிர்ச்சி அளிக்கக்கூடிய உதாரணங்கள் ஆகும்.
உனா நிகழ்வு, பாஜக/ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் “தலித்துகளின் நண்பன்’’ என்று மிகவும் எச்சரிக்கையாகக் கட்டி எழுப்பிய சித்திரத்தை, சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டது. மத்திய பாஜக அரசாங்கம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 125ஆவது பிறந்த நாளை மிகவும் படாடோபமாக அனுசரித்தது. அதே சமயத்தில், மகாராஷ்ட்ராவில் உள்ள பாஜக அரசாங்கமோ மும்பை, தாதரில், டாக்டர் அம்பேத்கரின் அலுவலகம் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்குவதற்குத் தலைமை தாங்கி இருக்கிறது.
குஜராத் முழுவதும் தலித்துகளின் கிளர்ச்சிகள் என்பவை பாஜக ஆட்சியின்கீழ் உள்ள மாநிலத்தில் ஒடுக்கப்பட்டுள்ள தலித்துகள் இதுநாள்வரை அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்துள்ளதன் வெளிப்பாடாகும். இக்கிளர்ச்சி நடவடிக்கைகளின்போது 20க்கும் மேற்பட்ட தலித்துகள் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்திருப்பது அவர்களின் மத்தியில் எந்த அளவிற்கு விரக்தி ஆழமாக இருந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஆயினும், தலித்துகள் கிளர்ச்சிகளை தீவிரப்படுத்தி இருப்பதும், இதுபோன்ற அட்டூழியங்களை இனியும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்கிற செய்தியை நாடு முழுதுக்கும் அனுப்பியிருப்பதும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் இத்தகு துணிவுமிக்க போராட்டத்திற்கு நாடு முழுதும் உள்ள ஜனநாயக சக்திகள் பக்கபலமாக இருந்திட வேண்டும்.
உனாவில் கொடூரமானமுறையில் தலித்துகளைத் தாக்கிய கயவர்களை மாநில அரசு கைது செய்தால் மட்டும் போதாது. பசு பாதுகாப்புக் குழுக்களை கலைத்திடவும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் மற்றும் தலித் விரோத, முஸ்லீம் விரோத உணர்வுகளை ஊட்டி வளர்த்திடும் வெறிபிடித்த வகுப்புவாத அமைப்புகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
(தமிழில்: ச.
வீரமணி)
No comments:
Post a Comment