Monday, September 7, 2015

இனியும் நம்மை நாம் பீற்றிக்கொள்ள முடியாது




இந்தியா, பாகிஸ்தானில் சன்னி தீவிரவாதிகளால் ஷியா மற்றும் கிறித்துவ சிறுபான்மையினர் கொல்லப்படுவதுபோன்று பாகிஸ்தானும் அல்ல, நாத்திக இடுகையாளர்கள் (atheist bloggers), அடிப்படைவாதிகளால் கொல்லப்படுவது போன்று வங்க தேசமும் அல்ல, என்று இதுகாறும் நமக்கு நாமே மிகவும் பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டு வந்தோம். ஆனால் இனியும் அவ்வாறு நம்மை நாம் பீற்றிக்கொள்ள முடியாது.  இதில் நாட்டில் கொல்லப்பட்டவர்களின் அளவு முக்கியமல்ல. ஆனாலும் அத்தகைய வெறுப்பை உமிழும் மிருகங்கள் தலைதூக்கி இருக்கின்றன என்பதும், அவை நாட்டில் பல பகுதிகளில் முன்னேறிக்கொண்டிருக்கின்றன என்பதுமே நம்மை கவலை கொள்ளச் செய்திருக்கின்றன.
கன்னட அறிஞர் எம்எம் கல்புர்கி, ஞாயிறு அன்று கர்நாடக மாநிலம், தர்வாத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  2013 ஆகஸ்ட்டில் பகுத்தறிவாளர் நரேந்திர நரேந்திர தபோல்கரும், பிப்ரவரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான கோவிந்த் பன்சாரேயும் சுட்டுக்கொல்லப்பட்டபின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்போது மூன்றாவது நபராக கல்புர்கி அதேபோன்று சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இவர்கள் மூவருமே மூடப் பழக்க வழக்கங்கள் மற்றும் சாதீய நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டார்கள்,  சமூக சமத்துவத்தைப் போதித்தார்கள், சமூக வரலாற்றை மாற்று கோணத்தில் முன்வைத்திட முனைந்தார்கள்.   இவர்கள் மூவருமே தீவிரவாதக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார்கள். இதில் மிகவும் திகைப்பூட்டும் செய்தி என்னவெனில், கர்நாடக மாநிலம், பண்ட்வாலில், பஜ்ரங் தளம் என்னும் அமைப்பின் சக கன்வீனராக இருக்கும் புவித் ஷெட்டி என்னும் நபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கல்புர்கி கொலை செய்யப்பட்டதை வரவேற்றிருப்பதுடன், “முன்பு யுஆர் ஆனந்தமூர்த்தி, இப்போது அது எம்எம் கல்புர்கி. இந்துயிசத்தைக் கிண்டல் செய்வோர்க்கு இவ்வாறு நாய்களின் மரணம்தான்.’’ என்று எழுதியிருப்பதுடன், அடுத்து எழுத்தாளர் கேஎஸ் பகவான் என்பவரை அச்சுறுத்தும் விதத்தில், “அடுத்து நீங்கள்தான்’’ என்று அச்சுறுத்தி இருக்கிறார்.
சமூக முன்னேற்றத்திற்காகவும், பொதுவாழ்வு மேன்மையுறவும் அல்லும் பகலும் அயராது பாடுபடும் இத்தகைய மேதைகளை இழக்கும் கொடுமையைத் தடுத்துநிறுத்திட மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமும், அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும். சிவானந்த் கனவி என்னும் எழுத்தாளரின் கூற்றின்படி, கல்புர்கி, ஒன்பதாம் நூற்றாண்டு கன்னட கவிதைகளின்  நுட்ப வேறுபாடுகள் குறித்தும், பன்னிரண்டாம் நூற்றாண்டின் வச்சனா இலக்கியத்தின் புரட்சிகரத் தன்மைகள் குறித்தும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்றுத்தந்திருக்கிறார். தன் சொந்த ஆய்வுக் கட்டுரைகள் நான்கு தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். மற்ற எழுத்தாளர்கள் எழுதிய ஏழு தொகுதிகளைத் தொகுத்து அளித்திருக்கிறார். பிஜப்பூர் அடில்ஷாஹி மன்றத்தில் 18ஆம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் எழுதப்பட்ட உலக வரலாற்றை கன்னடத்தில் மொழியாக்கம் செய்து ஏழு தொகுதிகள் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.  இவ்வாறு இவரே ஒரு பல்கலைக்கழகம் போன்று செயல்பட்டதால், அறிவிலிகளால் அவரது மேதைமையை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.  கல்புர்கி, பன்சாரே மற்றும தபோல்கர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நம் நாட்டின் சுதந்திர சிந்தனையாளர்களுக்கு ஆழமான அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.  இச்சம்பவங்கள் ஆட்சியாளர்களுக்கு ஒரு சவாலாக எழுந்துள்ளன.  நம் நாட்டின் சுதந்திரத்தையும், நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பினையும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்துவோம் என்று ஆட்சியாளர்கள் மெய்ப்பித்திட வேண்டும்.
(நன்றி: தி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு தலையங்கம், 1-9-15)
(தமிழில்: ச.வீரமணி)


No comments: