Friday, September 4, 2015

வரலாறு படைத்திட்ட வேலைநிறுத்தம்




(People’s Democracy தலையங்கம்)
மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேச்சையான தேசிய சம்மேளனங்கள் அறைகூவலுக்கு இணங்க செப்டம்பர் 2 அன்று நடைபெற்ற அகில இந்திய பொது  வேலை நிறுத்தத்திற்கு நாடு முழுதும் உள்ள தொழிலாளர்கள் மத்தியிலிருந்து அபரிமிதமான ஆதரவு கிடைத்திருக்கிறது.   இந்த வேலைநிறுத்தத்தில் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். பல மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நசுக்குவதற்காக காவல்துறையினர் ஏவப்பட்டுள்ளனர்.  மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் தன்னுடைய காவல்துறையையும் தன் குண்டர் படையையும்  பயன்படுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை மிருகத்தனமாகத் தாக்கி இருக்கிறது.  இத்தாக்குதல்களைத் தொழிலாளர்கள் துணிவுடன் எதிர்த்துநின்று முறியடித்து, வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.  2015 மே 26 அன்று புதுதில்லியில் நடைபெற்ற மத்தியத் தொழிற் சங்கங்களின் தேசிய சிறப்பு மாநாடு வேலை நிறுத்தத்திற்கான அறைகூவலை விடுத்திருந்தது. 
மத்தியத் தொழிற்சங்கங்களால் முன் வைக்கப்பட்ட 12 அம்சக் கோரிக்கைகள் தொழிலாளர்களின் அடிப்படைக் கோரிக்கைகளான, குறைந்தபட்ச ஊதியம், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புப் பயன்பாடுகள், தொழிற்சங்க உரிமைகள், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றுடன் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்ப்பது போன்று  பல்வேறு பிரச்சனைகளையும் உள்ளடக்கி இருந்தன.  சாமானிய மக்களின் உயிர்ப்பிரச்சனைகள் சிலவற்றையும் இக்கோரிக்கைகள் உள்ளடக்கி இருந்தன.
வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு ஒருசில நாட்களுக்கு முன், பாரதீய மஸ்தூர் சங்கம், அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளுக்குத் திருப்தி தெரிவித்து,  வேலை நிறுத்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. ஆனால், இதர மத்திய தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாமல், வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துச் செல்வது எனத் தீர்மானித்தன.
 1991இல் தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதற்குப்பின்னர், இப்போது நடைபெற்ற வேலைநிறுத்தம், 16ஆவது வேலை நிறுத்தமாகும்.  2009க்குப் பின்னர் அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேச்சையான தேசிய சம்மேளனங்களும் இணைந்த கூட்டு மேடை அறிவித்த  நான்காவது வேலைநிறுத்தமுமாகும். இதற்கு முந்தைய அறைகூவல் என்பது, 2013 பிப்ரவரி 20-21 தேதிகளில் நடைபெற்ற இரு நாள் பொது வேலைநிறுத்தமாகும்.
தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் உரிமைகள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை முறியடிக்கக்கூடிய விதத்தில் செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளதால் இது மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும்.   கோரிக்கை சாசனத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள கோரிக்கைகளில் மிக முக்கியமான ஒன்று, தொழிலாளர்நலச் சட்டங்களில் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களுக்கு எதிரானதாகும். நவீன தாராளமயம் தொழிலாளர்களின் உரிமைகளை, “நிச்சயமற்றதாக, நிரந்தரமற்றதாகமாற்றியிருப்பதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது. நிரந்தரத் தொழிலாளி என்று எவரும் கிடையாது, அதற்கு மாற்றாக ஒப்பந்தத் தொழிலாளி என்றும் தற்காலிகத் தொழிலாளி என்றும் அவர்களை மாற்றி, அதன்மூலம் வேலை பாதுகாப்பிற்கு முடிவுகட்டி தொழிலாளர்களைப் பாதுகாப்பற்றவர்களாக மாற்றி அமைத்திருக்கிறது. எளிதில் வளைந்துகொடுக்கக்கூடிய தொழிலாளர்’’ (““flexibility of labour””) என்று தாராளமயம் அதற்குப் பெயர்சூட்டி இருக்கிறது. இதற்கு, தொழிலாளர் சந்தையில் இருந்துவரும் ஒழுங்குமுறைகளை நீக்க வேண்டியது அவசியம்.  நாட்டில் அமலில் இருந்து வந்த தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிலாளர்களை வேலையளிப்பவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு டிஸ்மிஸ் செய்வது, பதவிஇறக்கம் செய்வது, தொழிற்சாலைகளையே மூடிவிடுவது போன்றவற்றிலிருந்து சில பாதுகாப்புகளை அளித்து வந்தது. அத்தகைய தொழிலாளர்நலச் சட்டங்களையே ஒழித்துக்கட்ட மோடி அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.
மோடி அரசாங்கம், தொழிலாளர்நலச் சட்டங்களில் தொழிலாளர் நலன்களுக்கு எதிரானவிதத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதில்  மிகவும் குறியாக இருக்கிறது. முதலில் பாஜக தன்னுடைய மாநில அரசாங்கங்கள் மூலமாக இந்தத் திருத்தங்களைச் செய்திட முனைந்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள பாஜக அரசாங்கம் முன்கை எடுத்து இதனைச் செய்தது. அதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசாங்கங்கள் இதனைச் செய்துள்ளன. இந்தத் திருத்தங்கள் மூலம், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நிறுவனங்களில் பணியாற்றும் மூன்றில் இரு பங்கு தொழிலாளர்களும், ஊழியர்களும் தொழிலாளர்நலச் சட்டங்களின் வரையறைகளிலிருந்து வெளித்தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
தொழிலாளர்நலச் சட்டங்களை இவ்வாறு திருத்துவதன் மற்றுமொரு முக்கியமான நோக்கம், தொழிற்சங்கங்களைப் பலவீனப்படுத்துவதும், தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்படுவதை மிகவும் சிக்கல் நிறைந்ததாக மாற்றுவதுமாகும். இவர்கள் முன்மொழிந்துள்ள திருத்தங்களின்படி, ஒரு தொழிற்சாலையில் ஒரு சங்கம் அமைக்கப்பட வேண்டுமானால், அங்கே பணியாற்றும் தொழிலாளர்களில் அல்லது ஊழியர்களில் குறைந்தபட்சம் 10 சதவீதம், அல்லது குறைந்தது 100 தொழிலாளர்கள், இதில் எது குறைவோ அது, விண்ணப்பதாரர்களாக இருந்திட வேண்டும். இப்போது அந்த எண்ணிக்கை 7 ஆகும். இதன் மூலம் சங்கம்கோரி விண்ணப்பிப்பவர்களை வேலையளிப்ப வர்கள் பழிவாங்குவது மிகவும் எளிது. இதன்மூலம் சங்கம் அமைக்கப்படுதலையே வேலையளிப்பவர்கள் மிக எளிதாகத் தடுத்துநிறுத்திட முடியும். அதேபோன்று சட்டவிரோத வேலைநிறுத்தங்களுக்கு கடும் தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் வேலை நிறுத்தங்களை மிக எளிதாக சட்டவிரோதமானவை என்று அறிவித்திடமுடியும். தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதன் மூலமாக, “முதலாளிகளின் வேலைகளை எளிமைப் படுத்துவதை’’ உத்தரவாதப்படுத்துவதே மோடி அரசாங்கத்தின் விருப்பமாகும்.  தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஒருபோதும் அனுமதியோம் என்று மோடி அரசாங்கத்தை எச்சரிக்கை செய்யும் விதத்தில், தொழிலாளி வர்க்க இயக்கத்திடமிருந்து  வேலைநிறுத்தத்திற்கு வியக்கத்தக்க விதத்தில் ஆதரவு கிட்டியிருக்கிறது.
வேலைநிறுத்தம் உயர்த்திப்பிடித்த மற்றுமொரு முக்கியமான பிரச்சனை, இன்சூரன்ஸ், ராணுவம் மற்றும் ரயில்வே துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்து அவற்றைத் தனியாருக்குத் தங்குதடையற்றவிதத்தில் தாரை வார்த்திடும் அரசின் நடவடிக்கைக்கு எதிரானதாகும்.  நிலக்கரித் தொழிலை தேசியமயமாக்கியதை ஒழித்துக்கட்டும் விதத்தில், நிலக்கரி சுரங்கங்களைத் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு மோடி அரசாங்கம் ஏற்கனவே தாரை வார்த்துவிட்டது.   பொதுத்துறை வங்கிகள் சிலவற்றின் பங்குகளை 51 சதவீதத்திற்கும் கீழே குறைத்திடவும் மோடி அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. தாராளமயக் கொள்கைகளின் முக்கிய அம்சமே பொதுத்துறை நிறுவனங்களை ஒட்டுமொத்தத்தில் கைகழுவுவதாகும். இத்தகைய அரசின் தனியார்மய முயற்சிகளுக்கு இவ்வேலைநிறுத்தத்தை மகத்தானவகையில் வெற்றிபெறச் செய்திருப்பதன்மூலம் தொழிலாளி வர்க்கம் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறது.
தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் இதர பிரிவினர் தங்கள் எதிர்ப்பியக்கங்களை நடத்தி இருப்பது ஊக்கம் அளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றன.  மோடி அரசாங்கத்தின் நாசகரக் கொள்கைகளை எதிர்த்து, முறியடிக்கக்கூடிய விதத்தில் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை இவ்வேலைநிறுத்தம் உயர்த்திப் பிடித்திருக்கிறது. செப்டம்பர் 2 வேலைநிறுத்தம், நாட்டில் ஒன்றுபட்ட வெகுஜனப் போராட்டங்களின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படக்கூடிய அளவிற்கு ஒரு முக்கிய நிகழ்வாகும்.
(செப்டம்பர் 2, 2015)
(தமிழில்: ச.வீரமணி)

No comments: