Friday, September 25, 2015

வரலாற்றைத் திரிப்பதை அனுமதிக்கப் போகிறோமா? - சீத்தாராம் யெச்சூரி




வரலாற்றைத் திரிப்பதை அனுமதிக்கப் போகிறோமா?
பாஜக அரசாங்கமும், பிரதமர் நரேந்திர மோடியும் 2014 பொதுத்தேர்தலின்போது மக்களுக்கு அளித்திட்ட வாக்குறுதிகளில் ஒன்றே ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் நிறைவேற்றாது வஞ்சித்து விட்டார்கள் என்று குறைகூறிட முடியும். தற்போதைய அரசமைப்புச் சட்டத்தின் கீழான குடியரசுக்குப் பதிலாக, ஒரு வெறி பிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட்இந்து ராஷ்ட்ரம்என்கிற ஆர்எஸ்எஸ்- இன் திட்டத்தை நிறுவுவதற்காக, மதவெறியைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருப்ப திலேயே எவ்வித இரக்கமுமின்றி மிகவும் மூர்க்கத்தனமானமுறையில் நடவடிக் கைகளை மேற்கொண்டிருப்பதே அந்த ஒரேயொரு வாக்குறுதியாகும். வரும்வாரத்தின் இறுதியில், தில்லிப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறை சார்பில் ஓரு கூட்டம் நடைபெறவிருக் கிறது. வேதங்களின் காலம் “5,000 அல்லது 10,000 ஆண்டுகளுக்குப்பிந்தையது’’ என்றே வரலாற்றாசிரியர்களால் தற்போது கூறப்பட்டு வருகிறது.
இதனை இந்தக் கூட்டத்தில் மாற்றி அமைக்க இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மொழியியல் சாட்சிஇதுவரையில் வெளியாகியுள்ள வர லாற்றுச் சான்றுகளின்படி சிந்துச் சமவெளி நாகரிகம் என்பது சுமார் கி.மு.1800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது நிராகரிக்கப்பட்டு, அது சுமார் கி.மு. 1500 ஆண்டு களுக்கு முற்பட்டதுதான் என்பதும், ஆரியர் கள் இதற்குள் நுழைந்து செல்வாக்கு செலுத்தியது அப்போதுதான் என்பது மேயாகும். மொழிநூல் சார்ந்த சான்று களைப் பயன்படுத்தியும் மற்றும் வேதசமஸ்கிருதம், பழைய பாரசீகம் மற்றும் புராதன ஐரோப்பிய மொழிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும், பெரும்பான்மை யான அறிஞர்கள் ரிக் வேத ஆரியர்கள் வெளியேயிருந்து வந்தவர்கள் என்றே காட்டியிருக்கிறார்கள். ஆயினும், புகழ் பெற்ற வரலாற்றுப் பேராசிரியரான ரொ மிலா தாப்பர், “சமஸ்கிருத வேதத்தின் மொழியியல் சாட்சியமானது மேற்கு ஆசியாவிலிருந்து ஓர் இந்தோ-ஐரோப்பிய மொழி இந்தியாவிற்குள் வந்தது,
ஆனால் அது இந்தியா ஆரியர்களின் தாய்நாடு என்னும் கற்பிதத்தினை ஆதரித்திட வில்லைஎன்று நிறுவியிருக்கிறார். (பார்க்க: செமினார் 400, டிசம்பர் 1992). இவை அனைத்தையுமே துடைத்தெ றிய ஆர்எஸ்எஸ் கூட்டம் முடிவு செய் திருக்கிறது. வரலாற்றுச் சான்றுகளுக்குப் பதிலாக நம்பிக்கையையும், வரலாற்றுக்குப் பதிலாக புராணக் கட்டுக்கதைகளை யும், தத்துவ இயலுக்குப் பதிலாக புராணக்கதைகளின் தொகுப்பையும் பதிவுசெய் திட முடிவு செய்திருக்கிறது. செப்டம்பர் 19 அன்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில இந்திய பிரச்சார் பிரமுகர், மன்மோகன் வைத்யா, “பாரதப் பண்பாடுஎன்பது தொன்று தொட்டே அனைத்துநம்பிக்கையாளர்களையும், இனத்தின ரையும் ஒன்றாகவே கருதி வந்திருக்கிறது. எனவே நமக்கு மதச்சார்பின்மை என்கிற செயற்கை ஊசி ஏற்ற வேண்டிய தேவை யில்லை,”என்று கூறியிருக்கிறார்.
அப்படியெனில், நாட்டின் மதச் சிறுபான்மை யினராக இருக்கக்கூடிய முஸ்லீம்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிராகத் திரும்பத்திரும்ப மதவெறி வன்முறை வெறியாட் டங்கள் கட்டவிழ்த்து விடப்படுகிறதே, ஏன்? பாஜக-வின் 2014 தேர்தல் அறிக்கை, “இந்தியா உலகின் மிகவும் புராதன நாகரிகத்தைப் பெற்ற நாடு...’’ (புராதன நாகரிகங்களில் ஒன்று அல்ல) என்று தொடங்கு கிறது. நம் நாகரிக உணர்வின் தொடர்ச்சி இழை எப்போது விடுபட்டது என்பதைக் கண்டறிந்து, நம் ஒளிமயமான எதிர் காலத்திற்காக அதனை இந்திய ஆன்மா வின் வலுவான அம்சங்களுடன் பொருத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது,’’ என்றுகூறி, “எனவே ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரேதேசம்’’ என்று அறிக்கை முடிவடைகிறது. இவ்வாறு, பாஜக தேர்தல் அறிக்கை ஆர்எஸ்எஸ் கொள்கையை எதிரொலிப்ப துடன், நம் நாட்டின் வளமான பல்வேறு பண்பாடுகளின் சங்கமம் என்பதை மறு தலித்துள்ளது.
கோல்வால்கரின் மவுனம்
கோல்வால்கர், 1939 இல் எழுதிய, “நாம்அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்என்னும் நூலில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தத்துவார்த்த அடிப்படையைத் தெளிவாக்குகிறார். அவர் கூறுகிறார்: இந்துக்களாகிய நாம் - இந்த நிலத்தில் எட்டு அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, அயல் இனத்தினர் எவராலும் படையெடுத்து வந்து கைப்பற்றப்படு வதற்கு முன்பிருந்தே, விவாதத்திற்கு இடமில்லாது எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய விதத்திலும், எவரும் குறுக்கிடாத விதத்திலும், இருந்து வந்திருக்கிறோம். எனவே, இந்த நிலம், இந்துக்களின் இந்த நிலம் இந்துஸ்தான் என்று அறியப் படக்கூடிய விதத்தில் இருந்தது.’’ உண்மையில் சிந்து நதி ஓடும் பகுதியில் வாழ் பவர்கள் என்பதைக் காட்டுவதற்காக இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்த மக்களால் தான் இந்துஸ்தான் என்கிற பெயரே உரு வாவதற்கு சாத்தியக்கூறுகள் இருந்தன. இந்த உண்மை உட்பட புராதன இந்திய வரலாறு குறித்த பல்வேறு ஆய்வுகள் குறித்துகோல்வால்கர் வேண்டுமென்றே மவுன மாக இருந்துவிட்டார். இதனை நிறுவ வேண்டியது ஆர்எஸ்எஸ் அரசியல் குறிக்கோளுக்கு மிகவும்அவசியம். இல்லையெனில், இந்த பூமிக்குவந்த மற்றவர்களைப் போலவே ஆரியர் களும்/இந்துக்களும் அயல் இனத்தின ராகவே கருதப்பட்டுவிடுவார்கள். எனவேதான், ஆரியர்கள் இந்தியாவுக்கு, வேறெங்கிருந்தும் புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்ல, மாறாக இங்கேயே வாழ்ந்தவர்கள் என்று நிறுவ வேண்டியது அவர்களுக்குக் கட்டாயமாகிவிடுகிறது. இவர்களது கூற்றுக்கு எதிராக உள்ள வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும், “மேற்கத்திய அறிஞர்களின் இழிந்த கூற்றுக்கள்’’ எனக்கூறி தள்ளுபடி செய்துவிடு கின்றனர்.
நிராகரிக்க முடியாத திலகரின் கருத்து
ஆயினும், இவர் -ஆர்எஸ்எஸ் குரு, லோகமான்ய பால கங்காதர திலகரின் கருத்தை - அதாவது வேதங்களின் ஆர்க் டிக் மூலத்தின் கருத்தை - எதிர்க்க வேண்டி யிருந்தது. ஆயினும், கோல்வால்கர் ஒரு செல்வாக்குமிக்க தலைவரின் கருத்தை நிராகரித்திட இயலவில்லை. ஏனெனில் அவரும் ஓர் இந்து. எனவே, ஆர்க்டிக் மண்டலம் குறித்து எவரும் நம்பமுடியாத அளவில் புதிதாகக் கருத்துக்களைக் கூறு கிறார். அதாவது, ஆர்க்டிக் மண்டலம் என்பது ஆரம்பத்தில் உலகில் தற்போது பீகார் மற்றும் ஒரிசா என்று அறியப்படும் பகுதியில்தான் இருந்தது. பின்னர், அது வடகிழக்கே நகர்ந்து, பின்னர் சிலகாலம் மேற்குப் புறமாக நகர்ந்து, சில சமயங்களில் வடக்கே நகர்ந்து, இன் றைய நிலைக்கு வந்திருக்கிறது. நிலை மை இவ்வாறிருப்பதால், ஆர்க்டிக் மண்டலத்தை விட்டு நாம் விலகினோம் மற்றும்இந்துஸ்தானத்திற்கு வந்தோம் அல்லதுநாம் எப்போதும் இங்கேதான் இருக்கி றோம். ஆர்க்டிக் மண்டலம்தான் நம்மைவிட்டு வடக்கே வலமும் இடமுமாய் வளைந்து வளைந்து சென்றுவிட்டது. திலகர் காலத்தில் இந்த உண்மை கண்டறியப்பட்டிருந்தால், எவ்விதத் தயக்கமுமின்றி நாம் இதனை ஏற்றுக்கொண்டி ருப்போம். திலகரும்எவ்விதத் தயக்கமு மின்றி, “வேதங்களின் ஆர்க்டிக் இல்லம்’’ இந்துஸ்தானத்தில்தான் இருந்தது என்பதையும், மாறாக, இந்துக்கள் இந்த இடத்திற்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்லர் என்பதையும், மாறாக ஆர்க்டிக் மண்டலம்தான் இந்துக்களை இந்துஸ்தானத் திலேயே விட்டுவிட்டு குடிபெயர்ந்து சென்று விட்டது என்றும் இப்பிரச்சனைக் குத் தீர்வு காணக்கூடிய விதத்தில் முன் மொழிந்திருப்பார்.
நிலப்பரப்பு நகர்ந்தால் மக்கள் நகரமாட்டார்களோ
என்னே பைத்தியக்காரத்தனமான வாதம்! நிலவியல் அறிவியல் மற்றும் வான் வெளி அறிவியல் மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள இன்றைய சூழ்நிலையில் பலநூறு ஆண்டு காலத்தில் பூமியின் சுழற்சிஎவ்வாறு இருந்தது என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். இத்தகையஅறிவியல் முன்னேற்றங்கள் குறித்து கோல்வால்கர் அறியாமல் இருந்திருக் கலாம். ஆயினும், ஓர் எளிய கேள்வியைக் கேட்க விரும்புகிறோம். அவருடைய வாதத்தின்படியே ஆர்க்டிக் மண்டலம் பீகார் மற்றும் ஒரிசாவிலிருந்து நகர்ந்து சென்றுவிட்டது என்றால், அந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் மட்டும் அங்கேயே எப்படி இருப்பார்கள்? நிலப்பரப்பு நகரும்போது, அத்துடன் சேர்ந்து அனைத்துமே நகர்ந்துதானே ஆக வேண்டும். ஆர்எஸ்எஸ் விரும்பும்போது ஆர்எஸ்எஸ் விரும்பும் இடத் தில் போடப்படும்வரை அந்தரத்தில், அனைத்துப் பொருள்களும் அகற்றப்பட்ட வெற்றிடத்தில், மக்கள் தொங்கிக் கொண்டிருக்க முடியாது. ஆரியர்கள் இந்தியாவின் பூர்வ குடியினர் என்று நிறுவிடவும்’’, அவர்கள் வேறெங்கிலுமிருந்து வந்தேறியவர்கள் அல்ல என்று காட்டவும்தான் இத்தகைய நயவஞ்சக நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றன. எண்ணூறு ஆண்டு கால இந்திய வரலாறு என்பது முஸ்லீம்களின் படை யெடுப்புக்கு எதிரான ஒட்டுமொத்த இந்து தேசத்தின்நீண்ட நெடிய யுத்த காலம் என்பதுபோலவே சித்தரிக்கப்படுகிறது. எனினும், கோல்வால்கர், இறுதியில் இந்து தேசம் வெற்றிவாகை சூடியதாகவும், அதுபுதியதொரு எதிரியால், அதாவது பிரிட்டி ஷாரால், வென்றடக்கப் பட்டது என்றும் கூறுகிறார். 1857இல் பிரிட்டிஷாருக்கு எதிராக நடைபெற்ற முதலாவது இந்திய சுதந்திர யுத்தம், இந்து தேசத்தால், “நீண்ட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பெரிய யுத்தம்’’ என்று சித்தரிக்கப்படுகிறது. “1857 முயற்சி தோல் வியடைந்து விட்டது, ஆயினும் அவ்வாறு அவர்கள் தோல்வி அடைந்திருந்த போதிலும், உன்னதமான இந்து தேசப் பற்றாளர்கள் அனைவரும் நாடு பூஜிக் கக்கூடிய அளவிற்குப் பிரகாசமான அடையாளங்களாக மாறி விட்டார்கள்,’’ என் கிறார். உண்மை விவரங்களை எந்த அள விற்குத் திரித்துக்கூறுகிறார்கள்!
1857: முஸ்லிம்களுக்கு எதிரானதா?காலனிய ஆட்சிக்கு எதிரானதா?பிரிட்டிஷாருக்கு எதிரான இந்தக் கலகத்தை மேற்கொண்டது மொகலாய சக்கர வர்த்தி பகதூர் ஷா ஜஃபார் அல்லவா! அவருடைய படையில்தானே இந்து ராணியான ஜான்சி ராணி லட்சுமி பாய் இணைந்துநின்று வீரஞ்செறிந்த போராட்டத்தை மேற்கொண்டார். இந்த யுத்தம், இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த முஸ்லீம் களுக்கு எதிரான இந்துக்கள்யுத்தமா? அல்லது காலனிய ஆட்சிக்கு எதிராக இந் தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய யுத்தமா?ஆர்எஸ்எஸ் இயக்கமும் பிரதமர் மோடியும் தங்கள் நம்பிக்கையையே வரலாறாகத் திரித்துக் கூறிட அனைத்து முயற்சி களிலும் இறங்கி இருக்கிறார்கள். இதனை நிறைவேற்றும் நோக்கத்துடனேயே மதச்சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லீம்களுக்கு, எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறார் கள். தற்போது தங்கள் நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், எதிர்காலத் தைத் தங்களுக்கேற்ற விதத்தில் வடிவமைத்துக் கொள்வதற்காகவும் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். நம்முடைய நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை அவர் களின் குறிக்கோளுக்கு ஏற்றவிதத்தில் மாற்றி அமைப்பதில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு நாம் அனுமதிக்கப் போகி றோமா?
நன்றி: தி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, 22-9-15
தமிழில்: ச. வீரமணி

No comments: